கதைகள்

மொழியாள்… சிறுகதை – 83… அண்டனூர் சுரா

வாடகைவாசிகளுக்கென்று அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த பழைய காலத்து கூட்டுக்குடியிருப்பு கட்டடம் அது. வேகாத கற்களைக்கொண்டு கட்டடம் எழுப்பி, மலிவு விலை சிமென்ட்டால் பூசப்பட்டிருந்தது. சுவரின் நான்கு பக்கங்களிலும் கைரேகையைப் போல தாறுமாறான விரிசல்கள். விரிசல்களில் ஆல, அரசுக் கன்றுகள் வேர்விட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்தன. அது பார்க்க பாபிலோனியா தொங்கும் தோட்டம் போலிருந்தது. கட்டடத்தின் மேற்க்கூரை பாசி படர்ந்து, கறுத்து, தார் போல ஒழுகி காய்ந்துப் போயிருந்தது.

சென்னையில் மாப்பிள்ளைக்கு வரன் கிடைப்பதும் மும்பையில் கல்யாணமாகாத பிற மாநிலத்தவருக்கு வாடகை வீடு கிடைப்பதும் ஒன்று. யார் விட்ட சாபமோ, ஒரு மாதக் காலம் வீடு தேடி தெருத்தெருவாக அலைந்து கடைசியில் ஒரு தரகர் மூலமாக மும்பை நகரத்திற்கும் வெளியே சங்கர்தவல் பக்கம் இடிக்கப்படவேண்டிய ஒரு கட்டடத்தின் மேல்மாடியில் ஓர் அறை கிடைத்தது. அந்த அறை பார்க்க குடியிருப்புக்கான இடம் போலத் தெரிந்தாலும் உண்மையில் அது அந்தமான் செல்லுலார் சிறையை விடவும் பயங்கரமாக இருந்தது.
அறையில் மின்விசிறி இல்லை. உள்ளேயும் வெளியேயும் சுத்தமில்லை. காற்றோட்டமில்லை. சன்னல் இல்லை. பூதம் தன் விரல்களால் பிராண்டியதைப் போல சுவரெங்கும் வடுக்கள். தலைக்கும்மேல் தொங்கும் சுரைக்காயைப் போல ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் தொங்கிக்கொண்டிருந்தது. சுவிட்சை அழுத்தியதும் பல்பு வெளிச்சத்தை மஞ்சள் வெயிலைப் போல பாய்ச்சியது.

சிறைக்கைதியைப் போல இந்த அறைக்குள் தனியாக இருந்தாக வேண்டும் என்கிற பயம் என்னை மெல்ல அறுக்கத் தொடங்கியது. அறைக்குள் படுத்துக்கொண்டு மேற்கூரையைப் பார்க்கையில் ஆறுதலாக இருந்தது. எனக்கு முன்பாக பல்லிகளும், சிலந்திகளும் இந்த அறையில் குடியேறி குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன.
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வேலை பார்த்தால் இது மாதிரியான அறையில் தங்கக்கூடாது என்று இ.பி.கோ சட்ட விதி இருக்கிறதா என்ன? குறைந்த வாடகையில் வேறொரு அறை கிடைக்கும் வரை இந்த அறையில் தங்குவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அறைக்கு மாத வாடகை ஐயாயிரம் ரூபாய். முன்பணம் இருபத்து ஐயாயிரம். கழிப்பறையில் பீங்கான் கிடையாது. அறைக்குக் கதவு கிடையாது. வாரத்திற்கு இரண்டு நாள்தான் தண்ணீர் வரும். அத்தண்ணீரை அள்ளி வாயில் கொட்டினேன். அரபிக்கடலை குடிப்பதைப் போலிருந்தது.
கட்டடத்தின் தென்புறம் பெரிய குட்டை. அதற்குள் பாலித்தீன், குச்சிகள், குப்பை, மலஜலங்கள், தண்ணீர் பாட்டில்கள்,…என்று சகலமும் மிதந்துக்கொண்டிருந்தன. கரையைச் சுற்றிலும் மங்கிய போர்டுகள் நடப்பட்டிருந்தன. அதில் மராத்திய, ஆங்கில மொழிகளில் “தயவுசெய்து குளத்தை அசுத்தம் செய்யாதீர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. ஒருவேளை இப்படியான அறிவிப்புப் பலகையை நிறுத்தாமலிருந்தால் அசுத்தம் செய்யாமலிருப்பார்களோ என்னவோ!

விடிகாலையில் அப்பலகையின்கீழ் தலையில் பெரிய முண்டாசு கட்டியபடி மண்ணின் மைந்தர் அகலக்கால் வைத்து காலைக்கடனை கழித்துகொண்டிருந்தார். அவர் அருகினில் தலையையும், வாலையும் ஆட்டிக்கொண்டு இரண்டொரு நாய்கள் நின்றுக்கொண்டிருந்தன.
கட்டடத்தின் வட மற்றும் கிழக்குப் பகுதிகள் குறுகலான சாலை. மேற்குப் புறத்தில் கொச,கொசவென நெருக்கமான குடியிருப்புகள். குடியிருப்புகளைச் சுற்றிலும் நாசியைத் துளைக்கும் துர்நாற்றம் இருந்துகொண்டிருந்தது. தரகரிடம் வேறொரு அறை பார்க்கச் சொல்லியிருந்தேன். அவர் என் தொடர்பு எல்லைக்குள் தொடர்ந்து இருக்க தினந்தோறும் ‘ப’ விட்டமின் கொடுத்துகொண்டிருந்தேன். அதை கைநீட்டி வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டவர் இதைவிட நல்ல அறையொன்றைப் பிடித்துத் தருவதாக உறுதியளித்தார்.
நான் தங்கியிருந்த அறையை ஒட்டி செர்ரி மரமொன்று பூத்துக்குலுங்கி நின்றது. அதன் கிளைகளும் இலைகளும் அறையின் வாசற்படிவரை குடை விரித்திருந்தன. அனைவருக்கும் பேதமின்றி இறங்கும் குளிர் பகல், இரவு என்று பேதம் பார்க்காமல் தன் குளிமையை இறக்கிக்கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் யாரோ ஒருவர் குளிக்கும் சத்தத்தைக் கேட்கையில் என் மேனி சிலிர்த்தது.

செர்ரி மரத்தின் வேர்ப் பகுதியையொட்டி சதுர வடிவிலான தார்சு வீடு இருந்தது. அது துளசி மாடம் போல அடக்கமாகவும் ஒடுக்கமாகவும் அழகாகவும் இருந்தது. அதன் வாசல் சுத்தமாகக் கூட்டிப்பெருக்கி தண்ணீர்த் தெளித்து ரங்கோலி போடப்பட்டிருந்தது. அந்த வீடு பார்க்கத் துர்க்கையம்மன் சன்னதி போன்றிருந்தது. கையை உதட்டிற்குக் கொடுத்து ‘இச்’ கொட்டிக்கொள்ள எடுத்தேன். அக்கணத்தில் சந்திரக் கிரகணத்திலிருந்து விடுபடும் நிலவு போல ஒரு பெண் அவ்வீட்டிற்கும் வெளியேவந்து காட்சியளித்தாள்.

குறிஞ்சி மலர் போன்று உயர்ந்த இடத்து அரிதான பெண்ணாகத் தெரிந்தாள். அகலமான நெற்றி, நீண்டு வளைந்த பொன்னிறத்துப் புருவம், வளர்ந்து விகசிக்கிற பருவம். வயது பதினேழு, பதினெட்டு மதிக்கலாம். மேகம் போல மெல்லிய தாவணி உடுத்தியிருந்தாள். தலை குளித்து உச்சந்தலையில் நேர் வகிடு எடுத்து கூந்தலை வேகமாகப் பின்னிக் கொண்டிருந்தாள். அவளுக்கென்று சிறப்பாக அமையப்பெற்ற கண் சிறகுகள் ‘படக், படக்’ என்று அடித்தவண்ணமிருந்தன.

வஞ்சிக்கொடி போன்ற வளர்ந்த நளினம். மஞ்சள் கொன்றைப் பூவைப் போன்ற அழகு. கண்ணாடிமுன் நின்றுகொண்டு மூக்குத்தண்டும் இமைகளின் கூடுவாயும் கூடுமிடத்தில் சின்னதாக ஒரு பொட்டு வைத்தாள். மெய் எழுத்துகளின் மேல் வைத்தப் புள்ளி போல அப்பொட்டு இருந்தது.

ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் தன் தூரிகையால் தீட்டிய சித்திரம் போன்றிருந்தவளின் கண்களை அகல விரிய பார்த்தேன். அவள் எனக்கு பேரழகியாகவும் பிரமிப்பாகவும் தெரிந்தாள். காலனி அணிய வேண்டிய அவளது கால்களில் காலத்தை அணிந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக இயங்கிக்கொண்டிருந்தாள்.

பாத்திரங்களைத் தேய்த்துக்கழுவி கூரையின் மீது கவிழ்த்து வைத்தாள். அவளது ஆடையுடன் அவளது தாய், தந்தை ஆடைகளையும் துவைத்து பிழிந்து காயவைத்தாள். வீட்டின் ஒரு மூலையில் கூட்டி ஒதுக்கி வைத்திருந்த குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் கூடையில் அள்ளி தூரத்திலிருந்த ஒரு குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு வந்தாள். வரும் வழியில் ஒரு பாட்டி விற்றுக்கொண்டிருந்த முளைக் கீரைகளில் இரண்டு கட்டு வாங்கி வந்தவள் கீரையைக் கிள்ளி எடுத்து, சமைத்தாள். சமையலின் வாசனை என் சுவாசத்தை நறுமணமாக்கியது.

சற்றுநேரத்திற்குள் பாவாடை, சட்டையில் இருந்தவள் தாவணிக்கு மாறினாள். சாப்பாடு தட்டுடன் வாசலுக்கு ஓடிவந்தாள். தட்டைக் கழுவி வாய்க்கொப்பளித்து வாயிலிருந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்தவாறு மாடியில் நின்றுக்கொண்டிருந்த என்னை அறுபது டிகிரி கோணத்தில் பார்த்தாள். அவளைப் பார்த்ததும் எனக்குள் என்சைம் மாற்றம் நிகழ்ந்தது. இரத்த அழுத்தம் ஏறி, இறங்கியது. மறுபடியும் என்னைப் பார்ப்பாளென்று எதிர்பார்த்தேன். அவள் பார்க்கவில்லை! ஒரு பூ வடித்த பையில் புத்தகங்களுடன் மதிய உணவை எடுத்துக்கொண்டு ஒருவழிச் சாலையை மறுவி மறுபக்கம் ஓடினாள்.

என் பார்வை அவள் பின்னே ஓடியது. பின்னிய ஒற்றைச்சரக் கூந்தல் முதுகு வழியாக பிட்டம் வரைக்கும் அடித்துத் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சாரைப் பாம்பைப் போல தொங்கிக்கிடந்தது. இரண்டு அடிகள் வேகமாக எடுத்து வைத்தவள் சட்டென திரும்பி வாசலில் நின்றுகொண்டிருந்த அவள் அம்மாவிடம் கைக்காட்டினாள். சற்றுநேரத்தில் நீல வண்ணமடித்த கல்லூரி பேருந்து ஒன்று அவள் அருகினில் நின்றது. அதில் அவள் ஏறிக்கொண்டாள்.
சரியான மீட்டரில் வைக்கப்படாத வானொலியின் இரைச்சலைப் போன்று வீதிகளில் ஒரே கரைச்சல். தூரத்தில் ரயில் எஞ்சின் எழுப்பும் மேளதாளம். இடையிடையே ஆட்டோக்களின் முனங்கல்கள். வாகனங்களின் உறுமல்கள். இதெல்லாம் போதாதென்று மணிக்கொரு தடம் தூரத்தில் இருந்த ஒரு கோயில் கடிகாரம் பியானோவைப் போல நீண்ட ஒலி எழுப்பி காலத்தின் கழிவைக் காட்டிக்கொண்டிருந்தது.

அன்றைய தினம் முழுவதும் அந்தப் பெண்ணைப் பற்றியே என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. அவளுடைய முகலெட்சணம், அவள் விட்டுச்சென்ற வெட்டவெளி, காலம் இவை மூன்றையும் ஒருசேரப் பார்க்கையில் ஐன்ஸ்டீன் விளக்கிய சார்புநிலைத் தத்துவம் மனதிற்குள் பூதாகாரமெடுத்தது. நவீன அறிவியல் தத்துவங்களில் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாத தத்துவம் அது!

“ஒரு இளைஞன் அழகான பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருப்பானேயானால் ஒரு மணிநேரம் அவனுக்கு ஒரு நிமிடம் போல கழியும். அதே இளைஞன் எரியும் நெருப்புக்கு அருகில் உட்கார்ந்திருந்தால் ஒரு நிமிடத்தை ஒரு மணி நேரமாக உணர்வான்.” யாராலும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ளமுடியாத சார்புநிலை தத்துவத்தை அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் விளக்கியிருந்தார். அடடா! ஐன்ஸ்டீன் எவ்வளவு பெரிய தீர்க்கத்தரிசி! அவர் சொன்னதைப் போலவே காலம் தன் கழிமுகத்தைக் காட்டிவிட்டதே! அவளது அன்றாட நடை,உடை பாவனைகளைப் பார்த்துகொண்டு நின்றதில் இரண்டு மணி நேரம் கழிந்தது தெரியவில்லையே!

இதற்கும்முன்பு நான் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். கையைக்காட்டி ‘ஹாய்’ சொல்லியிருக்கிறேன். ஆனால் இவளைப் பார்க்கையில் மட்டுமேன் எனக்குள் நொதித்தல் வினை நிகழ்கிறது? யார் இவள்? அவளுக்கு நான் யார்? அவளுக்காக நான் ஏன் சஞ்சலப்பட வேண்டும்? மனதிற்குள் தனி ஊசலின் அலைவுகள். அவளைப் பற்றிய நினைவுகள் மனதிற்கு இதமாகவும் வதமாகவும் இருந்தது.

பொழுது மேற்கு வானில் சுருண்டு படுத்துகொள்ளும் நேரம் வந்திருந்தது. மாடியில் நின்றவாறு பார்வையைச் சாலையில் மேயவிட்டேன். சாலையில் பெண்களின் நடமாட்டம் அதிகமிருந்தது. சுடிதார், சேலை, ஜீன்ஸ், டி சர்ட் , மெடி,… என்று உடைகளில் பெண்கள் பவனி வந்தார்கள். மும்பை நகரத்து பெண்கள் பார்க்க வேடந்தாங்கல் பறவைகளைப் போல பிரமிப்பைக் கொடுத்தார்கள். ஒவ்வொரு பெண்ணையும் ஆசைதீரப் பார்த்து வழியனுப்பி வைத்தேன். நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. காலையில் நான் பார்த்து பிரமித்த அப்பெண், சாலையின் இருபுறங்களையும் பார்த்தவாறு வாகனங்களை மறுவி அவளது குடியிருப்பை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவளது தலை நிமிர்வதும் குனிவதுமாக இருந்தது.

இரண்டு கைகளையும் வீசி புள்ளி மான் போல நடையை எடுத்துவைத்து தாயைக் காணப்போகும் குழந்தையின் குதூகலிப்புடன் வாசலை நெருங்கியிருந்தாள். தூரத்திலிருந்து பார்த்ததைவிடவும் அருகிலிருந்து பார்க்கையில் அவள் அதிர்ஷ்ட லெட்சுமியைப் போலிருந்தாள். முகம் சாந்தமாகவும், பதுமையாகவும் இருந்தது.

மறுநாள், ஞாயிற்றுக் கிழமை. காலை முழுமையாக விடிந்திருந்தது. நான் விடிந்தும் செல்லத் தூக்கத்தில் மூழ்கிக்கொண்டிருந்தேன். கீழே குடியிருப்புகள் ஒரே களேபரமாக இருந்தது. இந்திய மொழிகளை ஒன்றுதிரட்டி கீழே கொட்டியதைப் போன்ற இரைச்சல். நான் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தேன். கண்களைத் தேய்த்துகொண்டே தெருவைப் பார்த்தேன். நேற்றுவரை தேவதையாக, மானாக, மயிலாக எனக்குள் உலாவிக்கொண்டிருந்தவள் ஒற்றையாளாக நின்றுகொண்டு தாவணிப் பாவாடையை மேலே தூக்கிச் சொறுகியபடி மூன்று முரட்டு பையன்களுடன் சண்டைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

நாக்கை மடக்கி, கண்களை உருட்டி, ஆக்ரோஷமாக நையப் புடைத்துக்கொண்டிருந்தாள். அவளது பேச்சுகளுக்கு முன் அந்த முரட்டுப் பையன்களின் மிரட்டல், ஆவேசப் பேச்சுகள் எடுபடவில்லை. அவர்களைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது. தன்னை மறந்து தொண்டைக்குள் சிரிக்கத் தொடங்கினேன். எனக்கும் பின்னால் யாரோ சிரிப்பதைப் போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். தரகர் நின்றுகொண்டிருந்தார். என் தோளின்மீது கை வைத்தபடி கேட்டார். “உனக்கு நெறிய மொழிகள் தெரியும் போலிருக்கே?”
“இம், தெரியும்” என்று சொல்வதைப் போல நெற்றியை ஏற்றி, இறக்கித் தலையாட்டி வைத்தேன்.
“என்னென்ன மொழிகள் தெரியும்?”

“தமிழ் , இங்கிலீஸ், தெலுங்கு, இந்தி, மராட்டி, மலையாளம்…”
“பரவாயில்லையே..” என்று மராட்டிய மொழியில் சொன்னவர், “தென்கோடியிலிருந்து வந்திருக்கிற உனக்கு இத்தனை மொழிகள் தெரிந்திருக்கு. எனக்கு மராட்டி மட்டும்தான் தெரியும்,..” என்றவாறு உதட்டைப் பிதுக்கினார்.
“ஏன் கேட்குறீங்க?” என்றேன்.

“அந்தப் பொண்ணு போடுற சண்டையை நான் வந்ததுகூட தெரியாம ரசித்து பார்க்குறீயே, அதான் கேட்டேன்…” என்றவர் சற்றுநேரம் என்னையும் அந்தப் பெண்ணையும் விழுங்குவதைப் போல மாறி மாறி பார்த்தவர், “அந்தப்பொண்ணு எதுக்காக அந்த முரடன்களிடம் சண்டை பிடிக்கிறாள்?” என்று கேட்டார்.
“அந்த முரடன்கள் அவளை கிண்டல் செய்திருக்காங்க..”

“அதற்காகவா இப்படி சண்டைப் பிடிக்கிறாள்..? பார்க்க அடக்கமான பெண்ணா தெரிகிறாளே?”
“அடக்கமாக பெண்தான். அதனாலேதான் இப்படிச் சண்டைப் பிடிக்கிறாள்.”
அந்த தரகர் என்னிடமிருந்து பார்வையை எடுத்து கீழே சண்டைப் பிடித்துக்கொண்டிருந்தவளை ஆழ்ந்து பார்த்திருந்துவிட்டு, “அவன்கள அசிங்கம் அசிங்கமா கெட்டக் கெட்ட வார்த்தையாலே திட்டித் தீர்க்கிற மாதிரி இருக்கே…” என்றவராய் முகத்தைச் சுழித்தார்.

நான், “ஆமாம், அப்படிதான்…” என்றவனாய் அவள் போட்டுக்கொண்டிருந்த சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அதைப்போயா இப்படி ரசிக்கிறே…?” என்றவராய் அந்த தரகர் நெற்றியில் அடித்துக்கொண்டார். அவளிடமிருந்து பார்வையை எடுத்து அவரைப் பார்த்து சொன்னேன். “கொச்சையா அசிங்கமாகத்தான் பேசுறாள். ஆனால் தமிழ்ல்ல அல்லவா பேசுறாள்” என்றேன்.

தரகர் என்னை நீண்டநேரம் பார்த்து நின்றுவிட்டு, “ உனக்கு வேற அறை தேவையில்ல. இங்கேயே தங்கிக்க..” என்றவராய் அறையை விட்டு வெளியேறினார். நான் என் மொழியாளைப் பார்க்கத் தொடங்கினேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.