கட்டுரைகள்

சொல்லித்தான் ஆகவேண்டும்!… சொல்-17… அரசியல் பத்தித்தொடர்… தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

தமிழ்ப் பொது வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது புத்திசாலித்தனமல்ல

தமிழ்த் தேசிய அரசியல் என்பது வெறுமனே வீர வசனங்கள் பேசுவதும் – ‘தாயகம்’, ‘சுயநிர்ணய உரிமை’, ‘இறைமை’ எனும் சொல்லாடல்களை நெட்டுருப்பண்ணிவைத்துக்கொண்டு அவற்றை உதட்டளவில் உச்சரிப்பதும் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று தமக்குத்தானே குறி சுட்டுவைத்துக் கொண்டும் அல்லது சில தமிழ் ஊடகங்களால் குறி சுடப்பட்டும் அப்பாவி மக்களை உணர்ச்சியூட்டியும் உசுப்பேற்றியும் தேர்தல் காலங்களில் வாக்கு வேட்டையாடுவதல்ல. இது மக்களை ஏமாற்றுகின்ற-வஞ்சிக்கின்ற ‘போலி’த் தமிழ்த் தேசியம் ஆகும்.

இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியம் என்பது உண்மையில் தமிழ்த் தேசிய இனத்தின் – இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களின் மொழி, கலை, இலக்கியங்கள், பண்பாடு, பொருளாதாரம், நிலம், இயற்கைச் சூழல் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுப்பதன் மூலம் அவர்களின் இருப்பைப் பேணுவதற்குரிய ஓர் அறிவார்ந்த அரசியல் பாதையை-வழிவரை படத்தை வகுப்பதாகும்.

தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றுத் தமிழ்த் தேசியம் என்கின்ற கருத்தியல் தமிழ் மக்களிடையே விதைக்கப்பெற்று வேரூன்றத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளது வரையிலான கடந்த எழுபத்தைந்து வருட காலமாகத் தமிழ்த் தேசிய அரசியல் அறிவார்ந்ததோர் அரசியல் பாதையைத் தமிழ் மக்களுக்குத் திசை காட்டவில்லை.

அறப்போராட்டக் காலத்தில் சில அரசியல் சாகசங்களையும்-ஆயுதப் போராட்ட காலத்தில் சில இராணுவச் சாகசங்களையும் நிகழ்த்திக் காட்டி பெருமைப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றினால் விளைந்த ஒட்டுமொத்த விளைவுகள் என்ன? என்பது குறித்ததோர் ‘ஐந்தொகைக் கணக்கு’ ப் பார்த்தால்,

*வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று செழித்தோங்கித் திகழ வேண்டிய பல எல்லைத் தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு சின்னாபின்னமாய் இன்று இல்லாமல் போய் இருக்கின்றன.

* வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலுவாக இருந்த கிராமியப் பொருளாதாரக் கட்டமைப்புகள் சீர்குலைந்து சிதைந்து போயுள்ளன.

* வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து சுமார் பதினைந்து இலட்சம் மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து உள்ளனர். (இதனால் தாயகத்தில் தமிழர்கள் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர்.)

* வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 90,000 விதவைக் குடும்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

* எந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் அநியாயமாகக் காவு கொடுக்கப்பட்டுள்ளனர்.

* சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் உயிர்ப்பலி எடுக்கப்பட்டிருக்கிறார்கள்/ காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

*போராளிகள் உட்படப் பல நூற்றுக்கணக்கானவர்கள் உடல் ஊனமுற்றுக் கிடக்கிறார்கள்.

* இவைகளைவிட உளவியல் சார்ந்த பிரச்சினைகள், பண்பாட்டுச் சீரழிவுகள் என்று அகரீதியான கண்ணுக்குத் தெரியாத சேதங்கள் வேறு.

13 இந்த அழிவுகளையெல்லாம் ஈடுசெய்து வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் மீண்டும் மிடுக்கோடு எழுந்திருப்பதற்கு வழிவகுக்கக்கூடியதோர் அரசியல் செல்நெறியைத்தான் தமிழ்ச் சமூகம் இன்று அவாவி நிற்கிறது.

ஆனால், தமிழ் அரசியல் தலைமைகள் இதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் அக்கறைகொள்ளாமல் தத்தம் கட்சிகள் சார்ந்த அல்லது தனி நபர் நலன் சார்ந்த தேர்தல் அரசியல் தேவைகளுக்காகத் தமிழ் மக்களை ‘மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல’ த் தவறாக வழிநடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தமிழ்ச் சமூகம் அரசியல் மதிநுட்பத்துடன் ஆய்ந்துணரவேண்டும்.

இன்று இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையானது வெறுமனே உணர்ச்சி வெளிப்பாடுகள் அல்ல. செயற்பாட்டு அரசியலே அவசியமானது. இதற்குத் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ வாய்ப்பாடு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

தமிழ்ப் பொது வேட்பாளர் தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து-முள்ளிவாய்க்காலில் வழிபாடியற்றி-திலீபனின் நினைவிடம் சென்று படத்திற்கு மாலை சூட்டி-பொன். சிவகுமாரனுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தித் தனது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்திருப்பதும் மேற்கொள்ளுவதும் வெறுமனே தமிழ் மக்களை உணர்ச்சியூட்டியும் தன்னை விளம்பரப்படுத்தியும் வாக்குச் சேகரிக்கின்ற மலினமான- ஆத்மாக்களின் இழப்பை வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கும் அநாகரிகமான செயற்பாடாகும்.

இந்த மலினமான-அநாகரிகமான செயற்பாடு தென்னிலங்கைக்கும்-இந்தியாவுக்கும்-சர்வதேச சமூகத்திற்கும் விடுக்கும் செய்தி என்ன? இந்தச் செயற்பாடு விடுக்கும் செய்தியின் பிரதிபலிப்பு எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். சந்தி சிரிக்க வைக்கும்.

நவீன உலகில் ‘புத்திமான் பலவான்’. எனவே தமிழ்ச் சமூகம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் சொற் புத்தி கேளாது சுயபுத்தியைப் பலமாகக்கொள்ளவேண்டும்.

என்ன காரணங்களுக்காக வாக்களித்தாலும்கூடத் தமிழ்ப் பொது வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது புத்திசாலித்தனமாகமாட்டாது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.