கதைகள்

“கனகர் கிராமம்”… தொடர் நாவல் அங்கம் – 46… செங்கதிரோன்

அரசியல் – சமூக – வரலாற்று நாவல்

மறுநாள் விடியலின் பிரசவிப்பில் கண்விழித்த பறவைகளின் ‘கீச்’சொலிகள் வைகறைப் பொழுதின் வரவை அறிவிக்க ஆரம்பித்தன. அதிகாலை 4.00 மணியளவில் கனகரட்ணத்தின் மைத்துனர் சுந்தரத்தைப் பொத்துவிலிலிருந்து மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏற்றிக்கொண்டு வந்த கனகரட்ணத்தின் உதவியாளர் ஒருவன் கோமாரியில் சந்திரநேருவின் வீட்டடியில் இறக்கிவிட்டுப் போனான்.

காரைச் சுந்தரம் செலுத்தக் கனகரட்ணத்தையும் கோகுலனையும் காவிக்கொண்டு அன்று அதிகாலைப் பொழுதிலேயே கொழும்புப் பயணத்தை ஆரம்பித்தது கனகரட்ணத்தின் அந்த வெள்ளைநிற ‘வக்ஸ்சால்’ கார். சந்திரநேருவும் – அவரது மனைவியும் – பிராங்ளினும் அரைத்தூக்கத்தில் நின்று அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.

கொழும்பையடைந்ததும் கொழும்பில் மருதானை ‘டார்லி’ வீதியில் அமைந்திருந்த ‘நீர்ப்பாசன மற்றும் மகாவலி அமைச்சு’க்குக் கோகுலனையும் கூட்டிக்கொண்டு சென்றார் கனகரட்ணம்.

அமைச்சுக்கட்டிடத்தின் தரைமாடியிலிருந்து மின்னுயர்த்தி மூலம் மேல்மாடிக்குச் சென்று அமைச்சரின் அறையினுள் இருவரும் நுழைந்தனர்.

கனகரட்ணத்தைக் கண்டதும் சிரித்துக்கொண்டு எழுந்து நின்று அவருக்காகவே காத்திருந்ததுபோல் கைகூப்பி அமைச்சர் காமினி திசாநாயக்கா வரவேற்றார்.

அமைச்சரின் மேசையின் முன்னால் இருவரும் அமர்ந்ததும் கனகரட்ணம் கோகுலனைக்காட்டி ‘He is my private secretary’ (இவர் எனது பிரத்தியேகச் செயலாளர்) என்று அறிமுகம் செய்தார். கோகுலன் கைகூப்பி அமைச்சருக்கு வணக்கம் செலுத்தினான்.

கனகரட்ணம் முதல்நாளிரவு கோமாரியில் சந்திரநேருவின் வீட்டில் வைத்துத் தயாரித்த கடிதத்தை அமைச்சரிடம் நீட்டியபடி அருகில் அமர்ந்திருந்த கோகுலனைச் சுட்டி “He will explain about this Project” (இத்திட்டத்தைப் பற்றி இவர் விளக்குவார்) என்றார்.

கடிதத்தைக் கனகரட்ணத்தின் கரங்களிலிருந்து பெற்றுக் கொண்ட அமைச்சர் காமினி திசாநாயக்கா அதனை வரிக்குவரி ஆறுதலாக ஊன்றிப் படித்துவிட்டுக் கோகுலனின் பக்கம் தலையைத் திருப்பி “Now You can Explain” (இப்போது நீங்கள் விளக்கமளிக்கலாம்) என்றார்.

கோகுலன் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்திட்டம் பற்றியும் அது ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபைக் காலத்தில் முறையாக நிர்மாணிக்கப்படவில்லை என்பதையும் பக்குவமாக எடுத்துக்கூறி தற்போதுள்ள குளக்கட்டை மேலும் உயர்த்தி அதன் கொள்ளளவை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் – மழை நீரின் தேவையான அளவு வரத்துக்குக் குளத்தின் நீரேந்து பரப்புப் போதுமானது என்பதையும் அதனால் அப்பகுதி விவசாய சமூகம் அடையக்கூடிய எதிர்கால நன்மைகள் குறித்தும் உரிய தகவல்களுடனும் தரவுகளுடனும் தொழில்நுட்ப ரீதியாகத் தனது விளக்கத்தை முன்வைத்தான்.

கோகுலனின் விளக்கத்தை அக்கறையோடு செவிமடுத்த அமைச்சர் கனகரட்ணத்தின் பக்கம் திரும்பி,

“It seems to be a useful project. I can definitely help you. This is an itemised work. It needs large amount of money. I am really sorry that I am unable to allocate money for this project in the Budget for year 1979. It is little late now. How ever, I can make an arrangement to provide a token vote of ten rupees in the budget for 1979, so that It will be taken up in 1980 as itemised work and the full allocation will be granted. I shall now itself give orders to the officers concerned to commence the full Investigation survey prepare plans and estimate. I ensure that this project will be implemented in 1980” (இத்திட்டம் பயன்மிக்கதாகத் தெரிகிறது. நான் உங்களுக்கு நிச்சயமாக உதவ முடியும். இது ஒரு பாரிய வேலைத்திட்டம். பெருந்தொகையான நிதி தேவைப்படும். 1979 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாமைக்கு நான் வருந்துகிறேன். சற்றுப் பிந்திவிட்டது. எப்படியிருப்பினும் 1979 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அடையாள ஒதுக்கீடாகப் பத்துரூபாய் ஒதுக்குவதற்கு நான் ஏற்பாடு செய்வேன். அப்படியாயின் 1980 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இது ஒரு பாரிய வேலைத்திட்டமாக எடுக்கப்பட்டு அதற்கான முழு நிதியும் வழங்கப்படும். இப்போதிருந்தே பூர்வாங்க ஆய்வறிக்கை – வரைபடங்கள் – மதிப்பீடு என்பவற்றைத் தயாரிக்கத் தொடங்கும்படி உரிய அதிகாரிகளுக்குக் கட்டளைகளைப் பிறப்பிக்கிறேன். 1980 ஆம் ஆண்டு இத்திட்டம் நிறைவேற்றி வைக்கப்படும் என நான் உறுதிப்படுத்துகிறேன் என்றார்.)

அமைச்சரின் சாதகமான பதிலால் கனகரட்ணத்தின் முகம் மலர்ந்தது. அமைச்சர் கூறியது சரியாகத்தான் இருந்தது. கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத் திட்டம் சம்பந்தமாகக் கனகரட்ணமும் கோகுலனும் அமைச்சரைச் சந்திக்கும் போது 1978 ஆம் ஆண்டின் முதல் பாதி கடந்துவிட்டிருந்தது. அதனால் 1979 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இதற்கான முழுநிதியையும் வழங்கச் சாத்தியமில்லைதான்.

“Are You Happy Mr. Canagaretnam” (திரு.கனகரட்ணம் அவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியா?) என்று சிறு முறுவலுடன் கேட்டார் அமைச்சர்.

“Yes Honourable Minister Thanks” (ஆம்! கௌரவ அமைச்சர் அவர்களே நன்றி) என்றார் கனகரட்ணம்.
சென்ற காரியம் சித்தித்த திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் கனகரட்ணமும் கோகுலனும் அமைச்சுக் கட்டிடத் தொகுதியைவிட்டு நீங்கினார்கள்.
* * *
1978 நவம்பர் மாதம் 23ஆம் திகதி.

கோகுலன் தனது வேலைகள் மேற்பார்வையாளர்களான இலட்சுமணன், யேசுரட்ணம், பிராங்ளின் ஆகியோருடனும் தேவையான வேலையாட்களுடனும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய ‘ஜீப்’ வண்டியிலும் பெட்டிபூட்டிய உழவு இயந்திரத்திலும் பயணித்து அன்றுமாலை கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்தடியில் வந்து முகாமிட்டார்கள்.

கோகுலன் தன்னுடன் மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கூடப்படித்த வகுப்பறைத் தோழனான ரவீந்திரனின் தங்கை சுந்தரியையே காதலித்துத் திருமணப் பதிவும் செய்திருந்தான். சுந்தரியும் அதே கல்லூரியில் இரண்டு வருடங்கள் ‘யூனியர்’ ஆகப் படித்தவள்தான். யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இரு வருடப் பயிற்சியை முடித்துத் தான் படித்த வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலேயே கணித ஆசிரியையாகக் கடமையாற்றி இப்போது மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றிருந்தார்.

அவர்களது திருமணப்பதிவு மட்டக்களப்பு முகத்துவாரத்தில் வெளிச்சவீட்டுக்கு அருகில் மட்டக்களப்பு – முகத்துவாரம் வீதியான பார் வீதியின் அந்தத்தில் அமைந்திருந்த பெண் வீட்டில் 1978 மே 22 ஆம் திகதிதான் நடைபெற்றிருந்தது. 1979 ஆரம்பத்தில் சம்பிரதாய பூர்வமான திருமண நிகழ்வும் இடம்பெற இருந்தது.

கோகுலனின் மனைவி சுந்தரியின் அண்ணனான ரவீந்திரன் அவனது மைத்துனன் மட்டுமல்ல, பள்ளித் தோழனும் என்பதால் தான் ரி.ஏ. ஆகக் கடமையாற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கள வேலைக்காகக் காடு, வயல் என்று தங்கப் போகும் சந்தர்ப்பங்களில் ரவீந்திரனையும் தன்னுடன் அழைத்துச் செல்லும் வழக்கத்தையும் கோகுலன் கொண்டிருந்தான்.

இம்முறை கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்திற்கு வந்தபோதும் ஏனையவர்களுடன் இணைந்ததாக ரவீந்திரனையும் கூட்டி வந்திருந்தான் கோகுலன்.
திருக்கோவிலைச் சேர்ந்த வேட்டைக்காரர் தம்பிராசா என்பரையும் கோகுலன் தன்னோடு அழைத்து வந்திருந்தான். காடுகளுக்குள் அல்லது வயல்வெளிகளில் கள வேலைக்காக இரவில் தங்கி நிற்கவேண்டிய இப்படியான தருணங்களில் பாதுகாப்புக்காகவும் செல்லுமிடங்களில் மான், மரை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, முயல் என மிருகங்கள் ஏதும் அகப்பட்டால் வேட்டையாடிக் காட்டுக்குள்ளேயே சமைத்துச் சாப்பிட்டுச் சந்தோசமாகப் பொழுதைக் கழித்தும் வரலாம் என்பதற்காகவுமே இந்த ‘வேட்டைக்காரர்’ ஏற்பாடு. கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்தடியில் அன்றிரவு தங்கிநின்று அடுத்த நாள் காலையில் நேரத்துடன் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்துத் திட்டத்திற்கான பூர்வாங்க ஆய்வறிக்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்களையும் தரவுகளையும் திரட்டும் கள வேலைகளை ஆரம்பித்துவிட்டால் ஒரு நாளிலேயே வேலைகளை முடித்துவிட்டு அடுத்தநாள் பின்னேரமே கோமாரிக் ‘குவாட்டஸ்’ சிற்குத் திரும்பி விடலாமென்பதே கோகுலனின் திட்டமாகவிருந்தது.

கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளக்கட்டின் அடிவாரத்தில் ஒரு துண்டுப் பூமியை அடைத்து அதில் மரவள்ளியையும் மரக்கறிகளையும் பயிரிட்டு ஜீவனோபாயம் நடத்திக் கொண்டிருந்த பெரிய நீலாவணையைச் சேர்ந்த முதியவரின் வாடியிலேயே தங்குவதற்கு வேண்டிய ஒழுங்குகள் நிறைவேறின. கொண்டுபோயிருந்த சாமான்களில் உணவு மற்றும் தேநீர் தயாரித்துப் பரிமாறும் வேலையை அந்த முதியவரே தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டார்.

பரந்த அவரது காலைக்குள் மேல்மாடிப் பரணும் அமைத்து அதற்கு ஏறிச் செல்வதற்குக் காட்டுக்கம்புகளில் ஏணியும் செய்து பொருத்தியிருந்தார். கோகுலனும் அவரது வேலை மேற்பார்வையாளர்களும் மேல்மாடிப் பரணில் தங்கக், கீழ்நிலத்தில் வேலையாட்களும் வேட்டைக்காரரும் ‘ஜீப்’ சாரதியும் தங்க ஒழுங்குகள் செய்யப்பட்டன.

கோகுலனும் ஆட்களும் குளத்தில் குளித்துவிட்டு வாடிக்கு வந்தனர். குளத்து நீர்க் குளிப்பு காட்டுப் பாதைப் பயண அலுப்பை அகற்றிவிட்டது. வேட்டைக்காரத் தம்பிராசா அண்ணன் வேலையாட்கள் சிலரோடு சென்று கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்தோரம் நின்ற ஒரு பாலை மரத்தில் ஏறி இரவில் ஒருவர் குந்தியிருக்கக் கூடிய மாதிரிச் சற்று உயரத்தில் காட்டுக் கம்புகளாலும் கொடிகளாலும் இலைகுழைகளாலும் ‘சிறாம்பி’ யைக் கட்டிவைத்துவிட்டுத் திரும்பினார். இரவு நேரத்தில் குளத்தில் நீர் அருந்தவரும் மிருகங்களை மேலேயிருந்து குறிவைத்துச் சுட இலகுவாக இருக்கும் என்பதற்காகத்தான் அச் ‘சிறாம்பி’ என்று விளக்கமும் வேறு தந்தார் வேட்டைக்காரத் தம்பிராசா அண்ணன்.

கோகுலனுடன் வந்திருந்த வேலை மேற்பார்வையாள்களில் ஒருவரான பிராங்ளின் தம்பிராசா அண்ணனிடம் ‘சிறாம்பி’ க்கான விளக்கத்தைக் கேட்டார். அவர் உடனே,
“ஆற்றோரம் சிறாம்பி கட்டி..! அங்கே நின்று படை பொருதித் தோற்றுவாரான் வடசேரியான். துடைப்பங்கட்டால அடியுங்கடி” என்று தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்தக் குளுத்திச் சடங்கின்போது கொம்புமுறி விளையாட்டு முடிந்தபின் பாடப்படும் பாடல் வரியொன்றினைப் பாடிச் ‘சிறாம்பி’க்கு விளக்கமளித்தார்.

அதைக் கேட்ட மற்றவர்கள் “இரவைக்கு வாடியில தம்பிராசா அண்ணன்ட பாட்டுக் கச்சேரிதான் பின்ன” என்று பகிடியாகச் சொல்லிச் சிரித்தார்கள். சூழ்நிலை சுவாரஷ்யமாக மாறிக் கொண்டிருந்தது. வாடி முதியவர் இரவுச் சமையல் வேலையை ஆரம்பித்தார். அதற்கு முன்னர் எல்லோருக்கும் தேநீர் தயாரித்துத் சீவி மொழுகிய தேங்காய்ச் சிரட்டையில் தந்திருந்தார்.

வாடி முதியவரைப் பார்த்து “என்ன பெரியவர்! எங்களால உங்களுக்கு வீண் சிரமம்” என்றான் கோகுலன். “என்னம்பி இது பெரிய கஸ்டமா? இந்தக் குளத்த உயத்திக் கட்டி மக்களுக்கு உதவ வந்திரிக்கிர உங்களுக்கு இந்த உதவிகளயாவது செய்யாட்டிப் பின்னனென்ன …”
என்றார் முதியவர்.

அவரின் சேவை மனப்பான்மையையும் அன்புள்ளத்தையும் இப்படியான மனப்போக்கு நம்மிடையேயுள்ள படித்தவர்கள் பலரிடம்கூட இல்லையே? என்று தனக்குள் எண்ணிக் கொண்டான் கோகுலன்.

தேநீர் அருந்தி முடித்த பின்னர் கோகுலனின் மைத்துனர் ரவீந்திரன் – வேலைகள் மேற்பார்வையாளர்களான இலட்சுமணன் – யேசுரட்ணம் – பிராங்ளின் எல்லோரும் ஏணியில் ஏறி வாடியின் மேல்மாடிப் பரணில் தாம் வரும்போது கொண்டுவந்த பாய்களை விரித்து அமர்ந்தார்கள். மாலை இருட்டு கருக்கட்டத் தொடங்கிற்று.

சுற்றிவர வட்டம்போட்டு அமர்ந்தவர்களின் நடுவில் இலட்சுமணன் மதுப் போத்தலொன்றை அதன் குடுதியைத் திருகித் திறந்து வைத்து அதனைச் சுற்றி நான்கு சிறிய ‘கிளாஸ்’ களையும் வைத்தான். இலட்சுமணன் மது அருந்துவதில்லை. ஆனால், இப்படியான சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு மனம் சலியாமல் சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தும் நல்ல மனப்பான்மையும் புரிந்துணர்வும் கொண்டவன்.

மதுவுடன் கலந்து பருக வாங்கிவந்த ‘லெமனட்’ சோடாவையும் இலட்சுமணன் திறந்து பக்கத்தில் வைத்தான்.

மதுவை அவரவர் ‘கிளாஸ்’ களில் தத்தம் அளவுக்குத் தாங்களே ஊற்றிச் சோடாவையும் கலந்து முடியக் கோகுலன் தனது கிளாசை உயர்த்திப் பிடித்து ‘சியர்ஸ்’ சொல்ல இலட்சுமணனும் ஓடிப்போய் இன்னொரு கிளாசை எடுத்துவந்து அதில் சிறிதளவு சோடாவையும் ஊற்றிய பின் “கோரஸ்’ ஆகச் ‘சியர்ஸ்’ சொன்னார்கள்.

மதுப் ‘பார்ட்டி’ யின் முதற் சுற்று முடிந்தது. அந்தவேளை காற்றுச் சற்றுக் குளிராக வீசத் தொடங்கிற்று. அந்தக் குளிருக்கு மதுவும் இதமாக இருந்தது. கோகுலன் தானும் கனகரட்ணமும் கொழும்பு சென்று அமைச்சர் காமினி திசாநாயக்காவைச் சந்தித்துத் திரும்பிய விபரங்களையெல்லாம் கூறிக் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேலைகள் குறித்த முக்கியத்துவத்தையும் அதில் எல்லோரும் முழுவீச்சாக ஈடுபட வேண்டிய அவசியத்தையும் எல்லோருடைய மனதிலும் பதிய வைத்தான்.

கொண்டுவந்த மதுப் போத்தல்களில் இன்னொன்றைக் கொணரும்படி இலட்சுமணனிடம் காதுக்கள் குசுகுசுத்த கோகுலன் அதைக் கொண்டுபோய் வாடியின் கீழேயுள்ள வாடிமுதியவர் – ‘ஜீப்’ சாரதி ரெட்ணம் – வேட்டைக்காரத் தம்பிராசா அண்ணன் ஆகியோருக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி அனுப்பி வைத்தான். இறைச்சி வேகும் மணம் வாடியின் கீழேயிருந்து மேலே பரவியது.
இலட்சுமணன் மதுப் போத்தலுடன் ஏணியில் இறங்கிக் கீழே சென்றான். சிறிது நேரத்தில் தட்டையான அலுமினியம் கோப்பையொன்றில் நாட்டுக் கோழி இறைச்சிக் குழம்புடன் மேலே வந்தான். இறைச்சிக் குழம்பின் மணம் மூக்கைத் துளைத்தது. “ஏது இறைச்சி” என்று இலட்சுமணனிடம் கேட்டான் கோகுலன்.
“பக்கத்து மரவள்ளிக் காலைக்குள்ள குடியிரிக்கிறவங்க கோழியும் வளக்கிறாங்க. நான்தான் வந்தவுடன விசாரிச்சி வாடி முதியவரிட்ட காசு குடுத்தனுப்பி வாங்குவிச்சனான்” என்று கோழி வந்த புராணத்தை ஒப்பவித்தான் இலட்சுமணன்.

யேசுரட்ணம் இதைக் கேட்டு “இன்றைய கோழி இறைச்சி இலட்சுமணனின் உபயம்’ என்று சொல்லிச் சிரித்தான்.
அதற்குக் கோகுலன் தானும் சிரித்துக் கொண்டே யேசுரட்ணத்தை விளித்து ‘உங்களது உபயம் என்ன” என்றான்.

“கோமாரியிலிருந்து வரும்போது கொஞ்சம் காய்ஞ்ச மரையிறைச்சி கொண்டு வந்தநான். அத வாடி முதியவரிடம் வந்தவுடனேயே குடுத்திட்டன். அதுதான் என்ர உபயம்” என்றான் யேசுரட்ணம்.

“அதுதான், இன்றிரவு சோத்துக்குக் கறி” என்று இலட்சுமணன் கூறுவதற்கும் வெற்றுக் ‘கிளாஸ்’ கள் இரண்டாம் சுற்றுக்கு நிரப்பப்படுவதற்கும் இடையில் நேர இடைவெளி இருக்கவில்லை. கோழி இறைச்சிக் குழம்பைச் சுவைத்தவர்கள் எல்லோரும் நல்ல நாட்டுச் சேவல் என்று ஏகமனதாகச் சிலாகித்துக் கொண்டார்கள்.

கொண்டு வந்த மதுப் போத்தல்கள் பல சுற்றுக்கள் பரிமாறப்பட்டன. நகைச்சுவை நிரம்பிய உரையாடல்களுக்கிடையில் அவ்வப்போது பரணின் மேலே பல சினிமாப் பாடல்களும் அரைகுறையாகப் பாடப் பெற்றன. இலட்சுமணன் வெற்றுப் போத்தலில் நாணயக் குற்றியினால் தட்டி அந்த அரைகுறைப் பாடல்களுக்கு இசையமைத்து அணிசேர்த்தான். கைத்தாளங்களுக்கும் குறைவிருக்கவில்லை. கோகுலன் தனக்கு முழுமையாகத் தெரிந்ததும் பிடித்ததுமான ‘நிலவே’ என்னிடம் நெருங்காதே!-நீ நெருங்கும் இடத்தில் நான் இல்லை எனத் தொடங்கும் திரைப்படப்பாடலைப் பலகையொன்றில் கைகளினால் தாளம் போட்டுக் கொண்டே பாடி முடித்தான். பாராட்டுக் கைதட்டல்கள் பரணையே அதிர வைத்தன.

பரணுக்குக் கீழே உற்சாக மேலீட்டால் ‘ஜீப்’ சாரதி இரட்ணம் நாட்டுக் கூத்துப் பாடல்கள் சிலவற்றை குரலெடுத்துப் பாடினான். அவ்வப்போது ஆடியும் காட்டினான். யேசுரட்ணம் கீழிறங்கிச் சென்று பலகையொன்றை ‘மத்தளம்’ ஆக்கி அண்ணாவியாக மாறினார். வேட்டைக்காரத் தம்பிராசா அண்ணனும் தானும் சளைத்தவரல்ல என்பதைக் காட்ட ‘கொம்புமுறி’ பாடல்களை அவிழ்த்தார். வாடி முதியவரோ சற்றும் எதிர்பாராதபடி பழைய திரைப்பட நடிகரும் பாடகருமான தியாகராஜ பாகவதரின் பாடல்கள் சிலவற்றைப் பாடித் தனது இசை ஞானத்தை வெளிப்படுத்தினார். இந்த முதியவருக்குள் இப்படியொரு ஆற்றல் ஒளிந்து கிடக்கிறதே என்று கோகுலன் தனது நெற்றிப் புருவங்களை மேலுயர்தி வியந்தான். வரும்போது தம்பிலுவிலிருந்து கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்தின் கீழ் அமைந்துள்ள ‘சாவாறு வட்டை’ யின் வட்டவிதானையான மார்க்கண்டுவையும் கூட்டி வந்திருக்கலாமேயென்றும் எண்ணினான். மார்க்கண்டு நன்றாக ‘டோளக்’ வாசிப்பார். வந்திருந்தால் பாட்டுக் கச்சேரி இன்னும் களைகட்டி இருக்கும் என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். உள்ளுக்குள்ளே சென்ற பானம் எல்லோரையும் உற்சாகப்படுத்திற்று. கோகுலனின் மைத்துனன் ரவீந்திரன் அமைதியாக இருந்து எல்லோருக்கும் ஒத்தாசை வழங்கிக் கொண்டிருந்தார்.

இப்படியாகக் காட்டுக்குள்ளே கிடைக்கும் வஞ்சகமற்ற களிப்பான சூழல் ஊருக்குள்ளேயும் கிடைக்காது என்று கோகுலன் எண்ணி மகிழ்ந்தான். காட்டுக்குள்ளே ஒரு களியாட்டத் திருவிழா அரங்கேறிற்று. காட்டுச் சூழலில் இயற்கையோடு இணைந்து வாழ்வது ஒரு வஞ்சமற்ற வாழ்க்கையாகவும் அவனுக்கு நெஞ்சில் இனித்தது.

ஆரவாரங்கள் அடங்கிய பின் எல்லோருக்கும் காய்ந்த மரை இறைச்சிக் குழம்புக் கறியுடனும் குளத்துமீன் சொதியுடனும் உணவு பரிமாறப்பட்டன. பலதையும் பத்தையும் பகிடியாகப் பேசிக் கொண்டே எல்லோரும் உணவு உண்டார்கள்.

குளிர்காற்று முன்பை விடச் சற்று வேகமாக வீசத் தொடங்கிற்று. இலேசான மழைத்தூறலும் ஆரம்பமாயிற்று. கொளுத்தப்பட்டிருந்த ‘குப்பி விளக்குகள்’ அணைந்து விடாதபடி அவை காற்றுத் தீண்டாதபடி மறைவிலே இடம் மாறி வைக்கப்பட்டன.

வேட்டைக்காரத் தம்பிராசா அண்ணன் சாப்பிட்டு முடிந்ததும் தனது மடியை அவிழ்த்து வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டே “தம்பிமாரே’ நான் சிறாம்பியடிக்குப் போறன்” என்று சத்தமிட்டுச் சொல்லிவிட்டு ஒரு கையில் ‘டோர்ச் லைட்’ டுடன் குடையையும் விரித்துத் தலை மேலே பிடித்துக் கொண்டு மறுகையில் துவக்கையும் ஏந்தியபடி கம்பீரமாகக் குளக்கட்டில் ஏறிப் போனார்.

சாப்பிட்டு முடிந்த பின்னரும் சபை கலையாமல் பரணின் மேலிருந்தவர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கீழே ‘ஜீப்’ சாரதி இரட்ணமும் வாடி முதியவரும் ஏனைய வேலையாட்களும் படுக்கையில் வீழ்ந்தார்கள். ‘ஜீப்’ சாரதி இரட்ணத்தின் குறட்டை ஒலி காற்றின் ஓசையையும் மீறி உரத்து ஒலித்தது.

தம்பிராசா அண்ணன் குளக்கட்டில் ஏறிப் போனதும் இலட்சுமணன் கோகுலனிடம் “சேர்! தம்பிராசா அண்ணன்ட பகிடியொண்டு தெரியுமா?” எனக் கேட்டான்.
“சொல்லு, சிரிச்சுப்போட்டு எல்லாரும் படுப்பம்” என்றான் கோகுலன்.

இலட்சுமணன் கதை சொல்லத் தொடங்கினான்.

“சேர்! ஒரு நாள் நாங்க ரெண்டு மூன்று பேர் தம்பிராசா அண்ணனக் கூட்டித்துச் சோமன்குளக் காட்டுக்குள்ள வேட்டைக்குப் போன. ராவயில காட்டுக்குள்ளால ஒத்தயடிப் பாதயில அவரத் துவக்கோட முன்னுக்குவிட்டுத்துப் பின்னால இடவெளியுட்டு நாங்க நடந்து போன. நடந்து போக்கொள்ள ஒரு இடத்தில அவர் நிண்டு எங்கட பக்கம் பின்னுக்குத் திரும்பி நிக்கட்டாம் எண்டு கையால சைக காட்டினார். நாங்களும் என்னத்தயோ கண்டுத்தார் போல எண்டு எண்ணித்துப் பேசாம நிண்டம். புறகு மெல்ல ரகசியமாகக் கையக் காட்டி வரச் சொல்லிக் கூப்பிட்டார். மானயோ மரயயோ கண்டுத்தார் போல எண்டு நாங்களும் எண்ணித்து காட்டுச் சருகுகள்ல கால்பட்டுச் சத்தம் வரப்படாதெண்டு மெல்ல மெல்லக் காலடியள எடுத்து வச்சுப் பூன போல நடந்து அவருக்குக் கிட்டப் போய்ச் சேந்தம். நாங்க அவருக்குக் கிட்ட போய்ச் சேந்தோண்ண முன்னுக்குத் தெரிஞ்ச மரத்தக் காட்டிச் சொன்னார், ‘அந்தா தெரியிர பாலமரத்துக்குக்கீழ வச்சித்தான் போனமாதம் மான் ஒண்டு சுட்ட நான்’ எண்டாரே பாக்கலாம்” என்று இலட்சுமணன் பகிடிக் கதையை முடித்தான்.

“இதச் சொல்றதுக்குத்தானா இந்தளவு எடுப்பு எடுத்தவர் தம்பிராசா அண்ணன்” என்று கோகுலன் சொல்லிச் சிரிக்க எல்லோரும் விழுந்து விழுந்து வயிறுகுலுங்கச் சிரித்தார்கள். சிரித்த சிரிப்பிலே வெறியும் முறிந்தது.

பின் எல்லோரும் தாம் கொணர்ந்திருந்த படுக்கை விரிப்புக்களைப் பாயில் பரப்பிப் போட்டுப் பக்கத்துப் பக்கத்தில் படுக்கையை அமைத்தார்கள். சிறிது நேரம் படுத்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருந்தவர்கள் பின் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமலே உறக்கத்தில் ஆழ்ந்து போனார்கள்.

(தொடரும் …… அங்கம் – 47)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.