சொல்லித்தான் ஆகவேண்டும்!.. சொல்-16… அரசியல் பத்தித்தொடர்… தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
‘தமிழ்ப் பொது வேட்பாளர்’விடயம் ஒரு மாயமான்’
இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து ஆசிரியத் தலையங்கள் எழுதும் தமிழ் ஊடகங்களும்-ஆதரித்து அரசியல் பத்திகள் எழுதும் கட்டுரையாளர்களும்- ஆதரித்து அறிக்கைகள் விடும் அரசியல் கட்சித் தலைவர்களும் பிரமுகர்களும் மிகவும் பிற்போக்குத்தனமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அது என்னவெனில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ ஐ ஆதரிக்காதவர்களை- எதிர்ப்பவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் ‘துரோகிகள்’ என முத்திரை குத்துவதாகும்.ஒரு கட்டுரையாளர் ‘தமிழ்ப் பொது வேட்பாளரை’ ஆதரிக்காதவர்களைப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் ‘ஏவல் நாய்கள்’ என்று கூட வர்ணித்துள்ளார்.
இவையெல்லாம் தமிழர் அரசியலைப் பீடித்துள்ள பிற்போக்குத்தனங்களையே வெளிக்காட்டி நிற்கின்றன.
1949 இல் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற பின்னர், தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர்களை-தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடான அரசியலை முன்னெடுத்தவர்களை-தமிழரசுக் கட்சியின் மீது அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்தவர்களை-கட்சிக்குள்ளேயே தமிழரசுக் கட்சியின் தவறுகளைச் சுட்டிக் காட்டியவர்களையெல்லாம்’துரோகிகள்’ என நாமம் சூட்டியது. தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் (தந்தை செல்வா) நடாத்திய ‘சுதந்திரன்’ பத்திரிகை இதில் முன்னணி வகித்தது.
இதனால் தமிழர்களுடைய அரசியலில் அல்பிரட்துரையப்பாவிலிருந்து ஆரம்பித்து பல ஆளுமைகள் அநியாயமாகக் காவுகொள்ளப்பட்டார்கள்.
பின் ஆயுதப் போராட்டம்முகிழ்ந்து தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் இராணுவ மேலாண்மை பெற்றதும் ஏனைய சகோதர இயக்கங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறான அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்தவர்களையும் ‘துரோகிகள்’ என முத்திரை குத்தியது மட்டுமல்ல அவர்களையெல்லாம்கொலை வெறியோடு வேட்டையாடித் தள்ளினார்கள். அதனால் தமிழ் மக்களிடையே மேலெழுந்த பல போராட்ட-அரசியல் ஆளுமைகளின் விலைமதிக்க முடியாத உயிர்கள் வீணே பலியெடுக்கப்பட்டன. அவ்வாறு பறிகொடுக்கப்பட்ட ஆளுமைகளுள் அமிர்தலிங்கமும் அடங்குவார்.
முன்பு தமிழரசுக் கட்சி தமக்கு அரசியல் ரீதியாக எதிரானவர்களைத்’துரோகிகள்’ என நாமம் சூட்டியதற்கும்-பின்னாளிலே தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கு அரசியல் சித்தாந்த ரீதியாக மாறுபட்டவர்களையெல்லாம் ‘துரோகிகள்’எனப் போட்டுத் தள்ளியமைக்கும்-இப்போது ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ஐ ஆதரிக்கும் சக்திகள் அதற்கு மாற்றுக் கருத்து உடையவர்களை ‘துரோகிகள்’என வர்ணிப்பதற்கும் அடிப்படை மனப்போக்கில் வேறுபாடில்லை. இந்த மூன்று தரப்பாருமே ஜனநாயகக் கோட்பாடுகளை மறுதலிக்கின்ற ‘பாசிசத்தின்’ பிரதிநிதிகளே.
ஆரம்பத்திலிருந்து ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ வாய்ப்பாட்டுக்கு வக்காலத்து வழங்கி வருகின்ற ஈழத் தமிழ் ஊடகம் ஒன்று அண்மையில் தனது ஆசிரியர் தலையங்கத்தில்.
‘தமிழ்த் தேசிய அரசியல்’ என்பது அடிப்படையில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கட்சிகள் எந்த அளவுக்கு அரசியல் பிரதிநிதித்துவங்களைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்பதில்தான் தங்கியிருக்கின்றது’எனக் கூறியுள்ளது.
இக்கூற்று அடிப்படையில் பிற்போக்குத்தனமானது; ஜனநாயக மறுதலிப்புடையது; அரசியல் பன்முகத்தன்மையை அங்கீகரிக்க மறுப்பது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது-அரசியல் மதிநுட்பத்துடன் ஆராயும் போது ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’விடயம் தமிழ் மக்களைப் படுகுழியில்த் தள்ளி வேடிக்கை பார்க்கப்போகின்ற ஒரு வீம்புத்தனமாகும். அறிவார்ந்ததோர் அரசியல் திசையை அவாவிநிற்கின்ற இலங்கைத் தமிழ்ச் சமூகம் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’எனும் மாயமானின் பின்னே சென்று ஏமாறுவதையும் அழிவைத்தேடுவதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.