எலான் மஸ்க் கூற்று உண்மையா?.. உக்ரைனில் ரஷ்யா பின்வாங்கினால் புட்டின் படுகொலை செய்யப்படுவார்?… ஐங்கரன் விக்கினேஸ்வரா
“புட்டினின் ஆதரவாளர் என விமர்சிக்கப்படுகிறேன், அந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது. உக்ரைனில் இருந்து பின்வாங்கினால், புட்டின் கிரெம்ளினிலேயே படுகொலை செய்யப்படுவார்” என எலான் மஸ்க் கூறியமை பலத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
எலான் மஸ்க் நிறுவிய டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors) தயாரித்த மின்சார மகிழுந்துகள் (Car) உலகம் எங்கும் பிரபலமாய் விற்பனை ஆகிவருகின்றன. அமெரிக்க மகிழுந்துகள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தையும் விஞ்சிவிட்டது என 2017 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.
புட்டினை படுகொலை செய்ய சதி ?
அறிவியல் துறையில் முன்னோடியாக இருக்கும் எலான் மஸ்க், தற்போது சர்வதேச அரசியல் வெளியிலும் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கினால் அதிபர் புட்டினை படுகொலை செய்துவிடுவார்கள் என உலகின் முன்னணி பணக்காரர் எலான் மஸ்க் (Elan mask) அண்மையில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புட்டினை படுகொலை செய்ய சதி என கதிகலங்க வைத்த எலான் மஸ்க் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க குடியரசு கட்சி செனட் உறுப்பினர்கள் உடனான கலந்துரையாடலின்போது, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இப்படி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை வழங்கும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் மசோதா கொண்டு வரப்பட்டது. உக்ரைனுக்கு 120 பில்லியன் டாலர்களும் இஸ்ரேல், தைவான், காசாவுக்கு 35 பில்லியன் டாலர்களும் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது.
பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்:
உக்ரைன் வெற்றியை எதிர் பார்ப்பவர்கள் கற்பனை உலகில் வாழ்கின்றனர் என ஜான்சன் தெரிவித்தார். இந்த கருத்தை ஒப்புக்கொண்ட எலான் மஸ்க், உக்ரைனுக்கு ஏதிரான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தோற்பதற்கு வாய்ப்பே இல்லை. உக்ரைன் மசோதா பற்றி தெரிந்து கொள்ள அமெரிக்கர்கள் தங்களின் மக்கள் பிரதிநிதிகளை தொடர்புகொள்வார்கள் என நம்புகிறேன்.
இந்தச் செலவு உக்ரைனுக்கு உதவாது. போரை நீட்டிக்க உக்ரைனுக்கு உதவாது. போரில் வெல்ல உக்ரைனுக்கு திறன் இருக்கிறதா என தெரியவில்லை. சண்டையை முடிவுக்கு கொண்டுவர புட்டினுக்கு அழுத்தம் தரப்படுகிறது. அவர் போரில் இருந்து பின்வாங்கினால், அவர் கிரெம்ளினிலேயே படுகொலை செய்யப்படுவார்.
சில சமயங்களில் புட்டினின் ஆதரவாளர் என விமர்சிக்கப்படுகிறேன். ஆனால், அந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது. போரில் ரஷ்யாவை மட்டுப்படுத்த மற்றவற்றை காட்டிலும் எனது நிறுவனங்கள் நிறையவற்றை செய்துள்ளது என்றார் எலான் மஸ்க்.
ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனம் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கி வருகிறது. போரை தொடர்ந்து, உக்ரைனின் தொலைத்தொடர்பில் எலான் மஸ்கின் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனம் பெரும் பங்காற்றி வருகிறது. இருப்பினும், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நிதி உதவி வழங்க எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
எலான் மஸ்க் வணிக நோக்கில் விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்சின் முதன்மையான திட்டம் ஆகும். மேலும் செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும். அது 2024 ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் எலான் மஸ்க்.
2013 இல் ஹைபர்லூப் என்னும் புதிய கருத்தை முன்வைத்து அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி பெரு நகரங்களிடையே மிக விரைவில் பயணம் செய்யக்கூடிய நோக்கத்தில் குறைந்த அழுத்தக் குழாய்கள் வழியாக ஒரு மணி நேரத்தில் 700 மைல்கள் விரைந்து செல்ல முடியும். வானுர்தி, தொடர்வண்டி ஆகிய ஊர்திகளை விட வேகமாகச் செல்ல முடியும். இந்த் திட்டம் நிறைவேற 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் எலான் மஸ்க் “ஓபன் AI” என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியுராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க்கை பாராட்டிய புட்டின்:
அண்மையில் ரஷ்ய அதிபர் புட்டினிடம், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன் நடத்திய ஒரு நேர்காணலில் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்.
ஏஐ மற்றும் நியூராலிங்க் பற்றி கேள்வி கேட்டபோது, மனிதகுலம் தற்போது பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. மரபணு ஆராய்ச்சியாளர்களால் தற்போது ஒரு மனிதநேயமற்ற மனிதன், ஒரு விளையாட்டு வீரர், விஞ்ஞானி மற்றும் ராணுவ மனிதன் என பல்வேறு நபர்களை உருவாக்க முடியும் என்றார் புட்டின்.
அதன் பிறகு ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்துவது தொடர்பாக புட்டினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. எலான் மஸ்கை நிறுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் எதை அடைய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அவரின் கண்டுபிடிப்புகள், சிந்தனைகள் பற்றி நாம் அறிவு சார்ந்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பினால் தான், அவருடைய கண்டுபிடிப்புகள் இன்னும் மேம்பட்டதாக அமையும். மூளையில் சிப் வைக்கும் இந்த ஆய்வு முழுமை பெற்ற பிறகே அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். எலன் மஸ்க் இந்த புட்டினின் நேர்காணலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.