“ஆகாயப் பந்தல்” … தொடர் நாவல் …. அங்கம் – 03 ….. ஏலையா க.முருகதாசன்.
சாரிணியுடன் வாசல் வரை வந்த மதுசா ஐயோ மறந்திட்டேனே என்று காரை நோக்கி காலடி எடுத்து வைத்தவள் தான் மறந்து போய் விட்டிட்டு வந்து பலகாரக் கூடையை சரவணன் எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்ததும் நிம்மதியடைந்து மன்னிக்கவும் நான் மறந்து போயிட்டன் என்னட்டைத் தாருங்கள் என்று கூடையுடன் நிற்கும் சரவணனை நோக்கிக் கையை நீட்டுகிறாள்.
பரவாயில்லை நானே கொண்டு வருகிறவன் என்று சொன்னவன் என்ன நினைத்தானோ தெரியாது இல்லை இல்லை நீங்களே கொண்டு வாருங்கள் என சொல்லிக் கொண்டே மதுசாவின் அருகில் வர சாரிணி கதைவைத் கால்வாசி திறந்து வைச்சபடியே காத்திருக்க மதுசா சரவணனைப் பார்த்து எங்கடை வீட்டுக்கு கொண்டு வந்த பூக்கள் எதில் பூத்தவை என்று அங்குள்ள செடிகளைக் காட்டிக் கேட்க இதுதான் அவை கருஞ்சிவப்பு இலைகளோடு இருந்த செடிகளை காட்டுகிறான்.
அச்செடிகளில் பூக்கள் எதுவுமே இல்லாதிருந்தது.செடிகளைப் பார்த்தவள் எல்லாப் பூக்களையும் எங்கடை வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டியளா என்று கேட்க என்ன இங்கேயே இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கப் போறியளா வாருங்கள் உள்ளை என்று சாரிணி சொல்லிக் கொண்டே கதவைத் திறந்து உள்ளே போக அவள் பின்னால் மதுசாவும் மதுசாவுக்குப் பின்னால் சரவணனும் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.
தனது மகன் சரவணன் மதுசாவைக் கூட்டிக் கொண்டு வருவான் என நம்பிக்கையுடன் இருந்த சரவணனின் தாய்,மஞ்சள் நிறச் சீலை உடுத்து ஒரு தேவதை போல ஒரு கையில் மஞ்சள் நிற ரோஜாப்பூக்களை ஏந்திவாறும் மற்றக் கையில் கூடை ஒன்றைத் தூக்கியவாறும் வீட்:டுக்குள் காலடி எடுத்து வைச்ச மதுசாவைக் கண்டதும் வியப்புடன் கண்கள் விரிய,ஒல்லியாகவும் இல்லாது பருமனாகவும் இல்லாது அளவான உடலோடும் அளவான உயரத்தோடும் முகம்மலர நின்ற மதுசாவைக் கண்டதும் பூரித்து நின்றாள்.
அந்தப் பூரிப்புடனேயே சரவணனின் உயரத்தையும் மதுசாவின் உயரத்தையும் கண்களால் எடை போட்டாள்.மஞ்சள் பூக்களுடன் நின்ற மதுசாவைக் கண்டவள் இன்னும் புளகாங்கிதமடைந்தாள்.
திருமணமாகாத ஒரு குமரிப்பெண் மஞ்சள்பூக்களுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் அவள் அந்த வீட்டுக்கு மருமகளாவாள் என்பது சரவணன் குடும்பத்தாரின் நம்பிக்கை.
அன்ரி இந்தாருங்கள் முகம் மலர்ந்தபடி ரோஜாப்பூகொத்தைக் சரவணனின் தாயிடம் கொடுத்தாள் முகமலர்ச்சியுடன் வாங்கிய சரவணனின் தாயிடம் அன்ரி இதுவும் உங்களுக்குத்தான் அம்மா உங்களிடம் கொடுக்கச் சொல்லித் தந்தவா என்று பலகாரக் கூடையை கொடுத்தாள்.
மதுசாவை வைச்ச கண் வாங்காமல் பார்த்த சரவணனின் தாய் இவளும் எங்களைப் போல எங்களுடைய கிரகத்தின் வம்சாவழிப் பெண்ணோ என எண்ணியவள், அவளை அணைத்துத் தன் அன்பை வெளிக்காட்டியவள் அவளையுமறியாமல் அநுத்திய சாதினியா ராகியே(எங்களுக்கான மருமகளே பேரழகியே) என்று அவள் சொன்னதும் என்ன அன்ரி என்ன சொன்னனீங்கள் புது மொழியாக இருக்கிறதே என மதுசா கேட்க,தங்களுடைய கிரகத்து மனிதர்கள் பேசும் மொழியை தன்னையுமறியாமல் சொன்னதைச் சமாளித்தவள் அண்ணனும் தங்கையுமாக கண்டு பிடிச்ச மொழி தன்னையும் பிடிச்சுவிட்டது என்கிறாள்.
உங்கடைஅம்மா செய்த பலகாரங்கள் எவையெனப் பார்ப்பம் என்ற சரவணனின் தாய் சசிகலா தமிழ்மொழியை சிரமப்பட்டுக் கதைப்பதைப் பார்த்த மதுசா அன்ரி ஏன் நீங்கள் எங்கடை தாய்மொழியைச் சிரமப்பட்டுக் கதைக்கிறியள் என்று கேட்க,சரவணனும் சாரிணியும் தாங்கள் கண்டுபிடிச்ச மொழி சரளமாகக் கதைக்கக்கூடியதாக வரவேண்டுமென்பதற்காக என்னையும் அந்த மொழியிலேயே கதைக்கச் சொன்னதால நானும் அதைக் கதைச்சுப் பழகியதால் என்னமோ தெரியாது எங்கடை மொழியைக் கதைப்பதில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது என்கிறாள் சரவணனின் தாய்.
சரவணனின் தாய் சொன்னதில் ஏதோ ஒரு மூடிமறைப்பு இருப்பதை மதுசாவால் உணர முடிந்ததாயினம் அது அவளைப் பாதிக்கவில்லை.சரவணனின் தாய் ஒவ்வொரு பலகாரமாக எடுத்துப் பார்த்து முகம்மலர உங்கடை அம்மா இவ்வளவு செய்திருக்கிறாரே,நாங்கள் எதுவும் செய்து தராமல் விட்டிட்டோமே என்று கவலைப்பட்டவளை அன்ரி ஏன் அதற்கு கவலைப்படுகிறீர்கள் கவலைப்படாதீர்கள் என்று மதுசா ஆறுதல்படுத்தினாள்.
மதுசா இருந்த சோபாவில் சரவணன் உட்கார்ந்திருந்தான்.பலகாரங்களைப் பார்த்த அவன் அவற்றில் பூந்தி லட்டை எடுத்து சாப்பிடத் தொடங்க,சாரிணியும் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மதுசா உங்களுக்குத் தேத்தண்ணியா,கோப்பியா,லற்ற மக்கியற்றாவா,கப்பிச்சினோவா பிடிக்கும் என சரவணனனின் தாய் கேட்க தேத்தண்ணி ஒகே அன்ரி என்கிறாள் மதுசா.அடுப்படியை நோக்கி சரவணனின் தாய் எழுந்து போக சாரிணியும் எழுந்து வாருங்கள் என மதுசாவின் கையைப் பிடிச்சு வாருங்கா நாங்களும் போவமென தாயக்குப் பின்னால் கூட்டீக் கொண்டு போகிறாள்.
சாரிணியின் கை மதுசாவின் கையில் பட்டதும் கையில் ஒரு பரவச மின்சாரம் பரவிய நிலையை உணர்கிறாள் மதுசா. ஒரு புது வீட்டுக்குள் நுழைந்த போது இருந்த இறுக்கமான மனநிலை மெது மெதுவாகத் தளர்கிறது.
அடுப்படிக்குள்ளும் இரண்டு கதிரைகளிருந்தன.அவற்றில் ஒன்றில் மதுசாவை சாரிணி உட்காரச் சொன்ன போது,பரவாயில்லை நிற்கிறேன் என அடுப்படி மேசைத்தட்டுடன் சாயந்து நிற்கிறாள்.
சரவணனும் மதுசாவும் யூனிவேர்சிற்றியில் அப்பப்ப சந்தித்துக் கொண்ட போதும் அவர்களுக்குள் நட்பு உருவாகிய போதும் மதுசா சரவணனை உற்றுப் பார்த்ததில்லை.
பல மாணவ மாணவிகளின் கண்களோடு கண்களாகவே அவனின் கண்ணும் இருந்தது.
ஆனால் சரவணன் மதுசாவின் வீட்டுக்கு வந்த போதுதான் அவனின் கண்களைக் கவனிச்சவள் அவனின் கண் மணி கருமைகலந்த சாம்பல் நிறத்திலிருப்பதை கண்டிருக்கிறாள்.
சரவணனுடன் காரில் வந்து இறங்கியதும்,தனது கையைப் பிடிச்சு வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போன சரவணனின் தங்கையின் கண்மணியும் கருமை கலந்த சாம்பல் நிறத்திலிருப்பதை அவதானித்தவள் சரவணன் சாரிணியின் தாயாராண சசிகலாவின் கண்மணியும் அது போலவே இருந்ததைகவனித்தாள்.
பலபேருடன் இவர்கள் நின்றால் இவர்களின் கண்ணின் வித்தியாசத்தை அறிய முடியாது,ஆனால் தனியாக இவர்களைப் பார்க்கும் போது பொதுவாக இருக்கும் கருமணி போலல்லாது வித்தியாசமாகவே இருந்தது. தேத்தண்ணியை போட்டு முடித்த சசிகலா மதுசாவிடம் குடுக்க அவள் நன்றி சொல்லி வாங்கி மேசைத்தட்டோடு சாய்ந்து நின்று குடிக்கத் தொடங்கினாள்.
மதுசா கொண்டு வந்த பலகாரத்தைச் சாப்பிட்டபடியே தேத்தண்ணியைக் குடிச்சால் நன்றாக இருக்கும் என்று நினைச்ச சசிகலா சரவணனிடம் சரு பலகாரக்கூடையை எடுத்துக் கொண்டு வா எனச் சொல்ல அவனும் கூடையை எடுத்துக் கொண்டு வந்து தாயிடம் குடுத்துவிட்டு மதுசா சாய்ந்து நின்ற அதே மேசைதட்டில் மதுசாவிற்கும் தனக்குமிடையில் சிறு இடைவெளிவிட்டு நிற்பதைக் கண்வெட்டாமல் பார்த்து முகம் மலர்கிறாள் சசிகலா.
உழுந்து வடையுடன் தேத்தண்ணி குடிச்சால் நல்லாயிருக்கும் என சசிகலா சொல்ல இரண்டும் நல்ல கொம்பினேசன் அன்ரி என்று சொல்கிறாள் மதுசா.
எனக்கு வடை வேண்டாம் பூந்தி லட்டுத்தான் எனக்குப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டே கூடையிலிருந்த எவர்சிலவர் டப்பாவிலிருந்து ஒரு பூந்தி லட்டை எடுத்தவன் நல்ல வாசமாக இருக்கிறதே எனச் சொல்லிக் கொண்டே பூந்தி லட்டிலிருந்து கயூவையும் முந்திரிய வற்றலையும் எடுத்துச்சாப்பிட்டுக் கொண்டே தாயிடமிருந்து தேத்தண்ணியை வாங்கும் போது அவனையுமறியாமல் மனும்மா (நன்றியம்மா) என்கிறான்.
சாரிணியம் தாய் சசிகலாவும் கண்களை அகல விரிச்சு அவனைப் பார்த்து சொல்லாதை என்பது போலத் தலையாட்டுகிறார்கள்.
எல்லாவற்றையும் கவனிச்ச மதுசா இந்தக் குடும்பம் பூமிக்குரியவர்கள் அல்ல என நினைச்சாலும் எது உண்மையாக இருக்கும் என முடிவெடுக்க முடியாமல் குழம்புகிறாள்.
ஆனால் அவர்களோடு இருப்பது அவளுக்கு விருப்பமாக இருக்கிறது.எந்தப் பயமோ அந்நியமோ அவளுக்க ஏற்படவில்லை.தங்களுடைய வீட்டை தன்னுடைய தாயார் பார்த்து பார்த்துச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பார்.
அதிலும் அடுப்படிஅறை நேர்த்தியாகவும் அழகாகவும் வைத்திருப்பதைப் பார்த்து பலர் புகழ்ந்திருக்கிறார்கள்.ஆனால் இவர்களின் அடுப்படி அறை ஏதோ சொர்க்க லோகத்திலிருக்கும் ரம்மியமான இடமாக காடஇசி தந்து மதுசாவைக் கவர்ந்தது.
சரவணனின் தாய் அடிக்கடி தனது மகனையும் மதுசாவையும் பார்ப்பதும் முகம் மலருவதையம் கதிரையில் உட்கார்ந்தபடியே கவனித்த சாரிணி தாயாரைப் பார்த்து நெற்றியைச் சுருக்கியும் இமையை உயர்த்தியும் உங்கடை மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என சைகையால் கேட்கிறாள்.சொல்ல வேண்டிய நேரம் வரும் போது சொல்வேன் எனத் தாயாரும் சைகையால் மகளுக்குச் சொல்கிறாள்.
வெல்கம்..வெல்கம் என மதுசாவைப் பார்த்தபடியே அடுப்படிக்குள் நுழைகிறார் மகேந்திரராஜா.
ஏலையா க.முருகதாசன்
(தொடரும்)