காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்; ஆய்வில் தகவல்
இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2021-ம் ஆண்டின் காற்று மாசுப்பாட்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் காற்று மாசுபாடு 19.3 சதவீதம் குறைந்துள்ளது. காற்று மாசுபாடு இதேபோன்று நிலைத்திருந்தால் இந்தியாவில் வாழும் மக்கள் சராசரியாக 3.4 வருட வாழ்நாளை இழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசுபாட்டிற்கான சுமையை இந்தியா எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகவும் மாசுபட்ட பகுதி வடக்கு பகுதி ஆகும். இது 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மற்றும் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாகும். 2022-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் காற்று மாசின் தரநிலை அளவு 17.2% குறைந்தாலும், இந்த மாசு நிலைகள் நீடித்தால் மக்கள் வாழ்நாளில் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பகுதி தாண்டி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அதிக காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் மாநிலங்களாக திகழ்கிறது. இங்கு சராசரியாக 29.23 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் 2.9 வருடங்களை இழக்க நேரிடும் என்றும், தெற்கு ஆசியாவை பொறுத்த வரைக்கும் கடந்த 20 ஆண்டுகளில் 2022-ல் காற்று மாசுபாடு 18 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.