கட்டுரைகள்

இலங்கையிலே புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படுவாரா?… நியூசிலாந்து சிற்சபேசன் 

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் பரவலான கவனிப்பைப் பெறுகின்றது.

அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.

ஜனாதிபதியொருவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளென அரசியல்யாப்பு வரையறுக்கின்றது

அதன்படி, ஜனாதிபதி த் தேர்தல் நடைபெறவேண்டிய ஆண்டாகவே 2024 அடையாளமாகின்றது.

ஆனால், இலங்கையிலே அரசியல்யாப்பு மீறல் சாதாரணமானதாகும்.

அதற்கு, அரசியல்யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

மாகாணசபைத்தேர்தல் என்பது பலருக்கும் மறந்தே போய்விட்டது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும்கூட, உள்ளுராட்சித்தேர்தல் நிறுத்தப்பட்டது.

அஃது தவறு என்பதனை, வராது வந்த மாமணியாக, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுவுமே பாலைவனத்தில் பெய்த மழைபோல ஆகிவிட்டது.

2024 ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்பதுகூட அறிவிப்பு வெளியாகும்வரையில் “திகில்” தருணங்களாகவே கடந்தன.

ஆனால், இப்போதும் ஒன்றும் நிச்சயமில்லை. எப்போதுவேண்டுமானாலும் தடாலடியான மாற்றம் வரலாம்.

பணமில்லை என்று சொல்லி ஜனாதிபதித் தேர்தலை ரத்துச் செய்யலாம்.

வாக்களிப்பிலே தீர்க்கமான முடிவு கிடைக்காமல் குழப்பம் வரலாம்.

2024 தேர்தலிலே 39 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

அதிலே, நான்கு அல்லது ஐந்து வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவிலே வாக்குகளைப் பெறக்கூடியவர்களாகக் காணப்படுகின்றனர். அதனால் முன்னெப்போதிலுமே இல்லாத வகையில் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. கூடவே, வடகிழக்கில் திரளக்கூடிய தமிழ் பொதுவேட்பாளர் அலையும், 2005 அளவுக்குக் காத்திரமாக இல்லாவிடினும், தெளிவாக தெரியக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பே தெரிகின்றது.

அதனால், முதல் சுற்றிலே எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றி பெறமுடியாத சூழ்நிலை ஏற்படலாம்.

ஜனாதிபதித் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக கருத்துக் கணிப்புக்கள் வெளியாகின்றன. அதனுடைய நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகும். அதற்கு இரண்டு காரணங்களைப் பெருவெட்டில் சொல்லலாம்.

ஒன்று, சுயாதீனமான கருத்துக்கணிப்பு பொறிமுறை இலங்கையிலே கிடையாது. மற்றையது, வாக்காளரொருவர் வெளியே சொல்கின்ற அபிப்பிராயத்துக்கும், வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்குமிடையே பெரியதொரு இடைவெளி உண்டு.

காரணம்: வெளிப்படைத்தன்மை மட்டுமில்லை. இரககசியமான விசுவாசமும் காரணமாகும்.

அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்றனர் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். ஏமாற்றப்படுவது பொதுமக்களுக்கு விளங்கும் என்பது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். தம்முடைய ஏமாளித்தனத்தை அரசியல்வாதிகள் பாவிக்கின்றனர் என்பது பொதுமக்களுக்கும் தெரியும். ஆக, இரண்டுதரப்புக்குமே எல்லாம் வெட்டவெளிச்சம். ஆனாலும்கூட, ஏமாற்றுவதும், ஏமாறுவதும் தொடர்ந்து நடைபெறுகின்றது.

அதற்கு பொதுமக்களின் விசுவாசமும் காரணமெனச் சொல்லலாம்.

சனநாயக அகராதியில் விசுவாசம் என்பது தேசத்துக்கு உரியது. தனிநபர்களுக்கு உரியதல்ல.

ஆனால், இராசதானியொன்றில் விசுவாசம் ஆள்பவருக்கும், ஆள்பவரது தரப்புக்கும் உரியது.

அதனையே இலங்கையில் காணமுடிகின்றது.

மேட்டுக்குடிச் சிங்கள வர்க்க நலனை பாதுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய சேனாநாயக்க தரப்பு, தனிச் சிங்கள கோஷத்தை முன்வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்க தரப்பு, பின்னர் அதிலிருந்து பிரிந்து சிங்கள-பௌத்த பேரினவாதத்தை முன்வைத்து பொதுஜன பெரமுனவை உருவாக்கிய ராஜபக்ஸ தரப்பு, அதிகாரத்தை தேடி ஐக்கிய தேசிய கட்சியை உடைத்து புதிய கட்சியை உருவாக்கிய பிரேமதாஸ தரப்பு என ஒரு குறுகிய வட்டத்திலுள்ளவர்களிடையே மட்டுமே இலங்கையின் ஆட்சி அதிகாரம் இருக்கின்றது.

அஃது, பொதுமக்களின் விசுவாசத்தினாலேயே சாத்தியமாகின்றது.

அந்தவகையிலே, ஒரு இராசதானிக்குரிய குணாம்சங்களையே இலங்கையிலே காணமுடிகின்றது.

அதிலும், வானளாவிய அதிகாரங்களனைத்தும் ஒற்றைக் குவியலாகக் காணப்படுகின்ற, நிறைவேற்றதிகார சனாதிபதி முறைமை என்பது, சர்வவல்லமை பொருந்திய அரசர் அல்லது அரசியையே மனக்கண்ணில் கொண்டுவருகின்றது.

அதனைச் சர்வாதிகாரமென்றும் சொல்லலாம்.

நிற்க, 2024 ஜனாதிபதித் தேர்தலிலே எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது விழுக்காடு வாக்குகளை, முதலாவது சுற்றிலே, பெற்று வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாதநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே தெரிகின்றன.

அதுமட்டுமல்ல, முதலாவது சுற்றிலே 40 – 45 விழுக்காடு வாக்குகளையேனும் வேட்பாளர்களினால் பெறமுடியுமா என்பதே கேள்வியாகக் காணப்படுகின்றது.

அதனால், இரண்டாம் விருப்பு வாக்குகளை எண்ணுகின்ற சூழ்நிலை உருவாகலாம்.

அதன்போதும், எந்தவொரு வேட்பாளருக்கும் ஐம்பது விழுக்காடு வாக்குகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டால், மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுகின்ற சூழ்நிலைகூட உருவாகலாம்.

இவ்வாறாக, இரண்டாம் அல்லது மூன்றாம் விருப்புவாக்கு அடிப்படையில் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவாரேயானால், பெரும்பான்மை வாக்காளர்களினால் முதல் தெரிவாக விரும்பப்படாத ஒருவரே சனாதிபதியாகின்ற நிலைமை உருவாகும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகளை எண்ணுகின்ற நிலை, பல புதிய சிக்கல்களை உருவாக்கலாம்.

பொதுவாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குச் செலுத்தல் என்பது பரந்துபட்ட வாக்காளர்களுக்குப் பரிச்சயமானதல்ல. அத்தோடு, விரோதநிலையிலே காணப்படுகின்ற வேட்பாளர்களினால் எவ்வாறு இதனைக் கையாளமுடியும் என்பது பெரிய கேள்வியாகும்.

ஒரு பேச்சுக்கு சொல்வதெனில், தன்னுடைய இரண்டாம் மற்றும் மூன்றாம் வாக்குகளை சஜித் பிரேமதாசா அல்லது அனுர குமர திசநாயக்கவுக்கு அளிக்குமாறு எந்த முகத்தை வைத்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவினால் கேட்கமுடியும். நாமல் ராஜபக்ஸ போன்றவர்களுக்கு வேண்டுமெனில், “டீல்” படிந்தால், சாத்தியமாகலாம்.

அத்தோடு, தமிழ் பொதுவேட்பாளர் என்னும் பொறிமுறை தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளே தெரிகின்றன.

இத்தகையவொரு சூழ்நிலையிலேயே, எதுவும் நடக்கலாம் என்னும் ஐயம் வீரியமடைகின்றது.

தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமா? அப்படி நடைபெற்றாலும் வாக்கு எண்ணிகையிலே தெளிவான முடிவு கிடைக்குமா? அதிலே சர்ச்சைகள் ஏற்படுமா? அதனால் கலகம் வருமா? நீதிமன்றத்தை நாடுவார்களா? அதனுடைய தொடர்ச்சியாக தேர்தல்முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுமா? எனக் கேள்விகள் வரிசைகட்டி வருகின்றன.

அந்தவகையிலேயே, இலங்கையிலே புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படுவாரா? என்னும் கேள்வி தூக்கலாகத் தெரிகின்றது.

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.