அணுஆயுத விஸ்தரிப்பை நிறுத்திய கொர்பச்சேவ்… நேட்டோவின் ஆக்கிரமிப்பு தொடர்வது ஏன்?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா
2000 வருடத்துக்குள் பூமியிலிருந்து அணு ஆயுதங்களை ஒழித்துவிட, படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மைக்கேல் கொர்பச்சேவ் கோரினார். அணுஆயுத விஸ்தரிப்பையும், ஆக்கிரமிப்பு இராணுவ ஆதிக்கத்தையும் ரஷ்யா நிறுத்திய போதிலும், நேட்டோவின் ஐரோப்பிய ஆக்கிரமிப்பு இன்னமும் தொடர்வது ஏன் என்பதே பலரின் கேள்விக்குறியாகும்.
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மிகையில் கொர்பச்சேவ் ஆகஸ்ட் 30, 2022 இல் காலமாகி இரு வருடம் ஓடிவிட்டாலும், அவரைப் பற்றிய பார்வை பலவாக உள்ளன. உலக அமைதிக்காக அணுஆயுதத்தை குறைத்த முன்னோடி என்றும், சோவியத் உடைப்பின் சூத்தரதாரி என்றும் பல்வேறு கோணங்களில் அவர் பார்க்கப்படுகின்றார்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவரான மிகையில் கொர்பச்சேவ் மேற்குலக நாடுகளுடனான பதற்றத்தைக் குறைத்தவர் என்றும், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இருந்த பனிப்போர் 1980-களின் இறுதியில் முடிவுக்கு கொண்டு வந்தவரும் என்றும் மேற்குலக நாடுகளால் பாராட்டப்பட்டவர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மிகையில் கொர்பச்சேவ் ஆகஸ்ட் 30, 2022 இல் காலமானார்.
கோர்பச்சேவை சோவியத்தின் சீர்திருத்தவாதி என்றும், புதிய அணுகுமுறையால் உலக அரசியல் அரங்கில் 1985 இல் நுழைந்த போது ஆரம்பத்தில் ரஷ்ய மக்களும் பெரும் நம்பிக்கை கொண்டு கோர்பச்சேவை வரவேற்றனர்.
1990-ல் அமைதிக்கான நோபல் பரிசு
அவரின் சீர்திருத்தங்கள் மீது சோவியத் மக்களும், கிரெம்ளினும் முதலில்
புதிய கொள்கைகளை வரவேற்றனர். கோர்பச்சேவ் பதவி ஏற்றவுடன்
மேற்கத்திய உலகும் பொதுவாக பாராட்டினர். கொர்பச்சேவ் அரசியல் பாணியால் மாஸ்கோ மாறலாம் என்றும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆதரவளித்தன.
இதனாலேயே 1990-ல் அமைதிக்கான நோபல் பரிசு கொர்பச்சேவுக்கு வழங்கப் பட்டது. எனினும், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக ரஷ்யாவில் அவருக்குக் கண்டனக் கணைகளும் எழுந்ததும் உண்மையே.
அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரொனால்டு ரீகனுடன் நான்கு உச்சி மாநாடுகளில் கலந்துகொண்டார் கொர்பச்சேவ். 1987-ல் நடந்த சந்திப்பின் போது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஒன்றில் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்படி, ஐரோப்பாவில் வைக்கப்பட்டிருந்த இரு நாடுகளின் ஏவுகணைகள் அகற்றப் பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இருந்த பனிப்போர் 1980-களின் இறுதியில் முடிவுற்றது. அத்துடன் சோவியத் யூனியன் சிதறுண்டு பல நாடுகளாகப் பிரிந்ததும் அந்தக் காலகட்டத்தில்தான்.
பனிப்போர் முடிவு ;
சோவியத் வீழ்ச்சி அடையும் கால கட்டத்திலேயே ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சோவியத் துருப்புகள் 1988-ல் திரும்பப் பெறப்பட்டன. அதே போல அங்கோலாவில் தனது படைகளை நிறுத்தியிருந்த கியூபாவும், கம்போடியாவில் தனது படைகளை நிறுத்தியிருந்த வியட்நாமும் தங்கள் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கொர்பச்சேவ் வலியுறுத்தினார்.
1989-ல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்தித்த கொர்பச்சேவ், பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். 1980-களின் இறுதியில் இரும்புத் திரை நாடுகள் என்று மேற்கத்திய நாடுகளால் கருதப்பட்ட செக்கோஸ்லோவேகியா, கிழக்கு ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகள் ஜனநாயகப் பாதைக்குச் செல்வதை அவர் தடுக்கவில்லை என்றும் புகழப்பட்டார்.
பெரஸ்ட்ரோயிகா – கிளாஸ்நாத் ;
கொர்பச்சேவால் அறிமுகமாகிய பெரஸ்ட்ரோயிகா, கிளாஸ்நாத் இரண்டு சீர்திருத்தங்களும் சோவியத் யூனியனின் பொருளாதார, அரசியல் வளர்சசிக்கு உந்துசக்தியாகும் என முதலில் எதிர்பார்க்ப்பட்டது. ஆயினும் பிரச்சினைகளைத் தீர்த்ததா என்றால் இல்லை என்றே கூறலாம். இந்த சீர்திருத்தங்கள் பலனை உடனடியாகத் தரவில்லை. சோவியத் யூனியனின் ஒரு கட்சி ஆட்சியிலிருந்த அதிகார வர்க்கப் பொருளாதாரத்தைச் சந்தை பொருளாதாரம் திடீரென ஒரிரவில் மாற்றுவது இலகுவானதல்ல.
சந்தை பொருளாதாரம் முதிர்ச்சியடைய அதிக காலம் வேண்டும் என்பதால் அது வெற்றியடைவில்லை. அதனாலேயே கோர்பச்சேவால் அறிமுகமாகிய பெரஸ்ட்ரோயிகா, கிளாஸ்நாத் இரண்டு சீர்திருத்தங்களின் பலன்கள் தாமதமாகத்தான் வரும் என்பதால் அப்போது இருந்த பிரச்சினைகள் குறையவில்லை என்பதும் உண்மையே.
சோவியத் ஒன்றிய வீழ்ச்சி :
சோவியத் நாட்டில் சிறந்த பொருளாதாரம் சாத்தியமாவது உலகின் பிற பகுதிகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன் சிறந்த உறவுகளைக் கொண்டிருப்பதைச் சார்ந்துள்ளது என்று கோர்பச்சேவ் நம்பினார். அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், சோவியத் ஒன்றியத்தை அழிப்பதில் மும்முரமாக இருந்தார். மேலும் உலகெங்கிலும் இருந்த அமெரிக்க இராணுவக் கட்டமைப்பை விரிவு படுத்தினார். இருந்த போதிலும் கொர்பச்சேவ் ஆயுதப் போட்டியிலிருந்து வெளியேறுவதாக உறுதியளித்தார்.
கிழக்கு ஐரோப்பாவில் மாற்றங்கள் சோவியத் யூனியனையும் பாதிக்கத் துவங்கியது. கொர்பச்சேவின் சீர்திருத்த அணுகுமுறையால் சோவியத் யூனியனில் இருந்த குடியரசுகளில் சுதந்திரத்திற்கான இயக்கம் தொடங்கியது.
1991 இல பால்டிக் நாடுகள் (எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் லாட்வியா) ஒவ்வொன்றாக, மாஸ்கோவிலிருந்து பிரிந்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்தன. மாஸ்கோவில் ஆகஸ்ட் 18, 1991 அன்று, சோவியத் இராணுவத்தாலும் அரசாங்கத்திலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கோர்பச்சேவை வீட்டுக் காவலில் வைத்தனர். இதன்பின்
கொர்பச்சேவ் தலைமைபதவியை ராஜினாமா செய்வது தவிர்க்க முடியாமல் போனது. 1991 கிறிஸ்துமஸ் தினத்தன்று, அவர் தனது பதவியை விட்டு விலகினார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில், “”நாங்கள் இப்போது ஒரு புதிய உலகில் வாழ்கிறோம். பனிப்போர் மற்றும் ஆயுதப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நமது பொருளாதாரம், பொது அணுகுமுறைகள் மற்றும் ஒழுக்க நெறிகளை முடக்கிய நாட்டின் பைத்தியக்காரத்தனமான இராணுவமயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே வலிமைமிக்க சோவியத் யூனியன் சிதைந்து வீழ்ந்தது.
மைக்கேல் கொர்பச்சேவ் சோவியத் உடைவின் பின் “சர்வதேச உறவுகளில் நாம் ஒரு சகாப்தத்தை விட்டு, மற்றொன்றுக்குள் பிரவேசிக்கிறோம், அது உறுதியான, நீடித்த சமாதானத்தின் காலப்பகுதியென நான் எண்ணுகிறேன்” எனக்கூறினார்.
அணு ஆயுத கட்டுப்பாடு ;
செர்னேபில் அணு உலை விபத்து ஏற்பட்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 1996-ல், மிக்கேல் கொர்பச்சேவ் கூறுகையில்”“ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பிள்ளைகள் இறக்கிறார்கள் என்ற காரியத்தை மனிதகுலம் இனி சகித்துக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு நாங்கள் தயாராய் இருக்கவே இல்லை. இந்த அவல நிகழ்ச்சி, மனிதகுலம் கண்டுபிடித்திருக்கும் ராட்சத சக்திகளை இதுவரை கட்டுப்படுத்த முடிவதில்லை என்ற உண்மையின் கொடூர நினைப்பூட்டுதலாய் இருந்ததாக அப்போதைய சோவியத் ஜனாதிபதி மிக்கேல் கொர்பச்சேவ் குறிப்பிட்டார்.
மே 1990இல் வாஷிங்டன் டி. சியில் நடைபெற்ற வல்லரசு மாநாடு ஒன்றின் போது, சோவியத் ஜனாதிபதி மிக்கேல் கொர்பச்சேவ் ஐரோப்பிய நாடுகளின் இரண்டு கூட்டணிகளும் சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் என்று யோசனையை தெரிவித்தார்.
நடுத்தர குறுகிய தூரம் செல்லும் தரை சார்ந்த ஏவுகணைகளை ஒழிப்பது சம்பந்தமான ஓர் ஒப்பந்தம் சோவியத் யூனியன் அதிபர் மிகேயல் கொர்பச்சேவும் அமெரிக்க ரோனால்டு ரீகனும் மாஸ்கோவில் கூடியபோது நிறைவேறியது.
2000 வருடத்துக்குள் பூமியிலிருந்து அணு ஆயுதங்களை ஒழித்துவிட, படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மைக்கேல் கொர்பச்சேவ் சொன்னார்.இதற்கான வழி அணு ஆயுதங்களற்ற, வன்முறையில்லா ஓர் உலகமாக முன்னேறிச் செல்வதில் இருக்கிறது என சோவியத் தலைவர் மிக்கேல் கார்பஷாவ் எழுதிய பெரஸ்ட்ரோய்க்கா (Perestroika) நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் க்ளாஸ்நாஸ்ட் மற்றும் பெரஸ்ட்ராய்க்கா கோட்பாடுகளை செயலுக்குக் கொண்டுவருவதில் கொர்பச்சேவ்வுக்கு இருந்த ஆர்வமே, சோவியத் உடைவுக்கும், அவர் சோசலிச- கம்யூனிஸத்தை உலகில் அழிக்க அமெரிக்காவுடன் சேர்ந்து நோக்கம் கொண்டிருந்தார் என்றும் ரஷ்யாவில் இன்னமும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆயினும் உலக அமைதிக்காக அணு ஆயுத குறைக்க முன்னோடியாக இருந்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மிகையில் கொர்பச்சேவ் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா