கட்டுரைகள்

கருத்துக் கணிப்புகள் என்பதும் ஒரு சூழ்ச்சியேதான்… ஏலையா க.முருகதாசன்

உலகத் தேர்தல்கள் தொடர்பாக கருத்துக் கணிப்புகள் இடம்பெற்று வருகின்றன.இக்கருத்துக் கணிப்புகளுக்கு காரணகர்த்தாவாக இருப்பவர்களில் உளவு நிறுவனங்களும் அடங்கும்.இன்னும் சொல்லப் போனால் உளவு நிறுவனங்களே உலக அரசியலை தீர்மானிக்கின்றன.

இனி நடக்கப் போகும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கருத்துக் கணிப்பு என்ற ரீதியில் ஊடகங்களில் பரவிவிடப்படும் செய்திகள் வாயிலாக மக்கள் மத்தியில் தடுமாற்றம் இடம்பெற வைப்பதே இந்தியாவின்; திட்டமாகும்.

அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்காவே வெற்றியடைய வேண்டும் என்ற கருத்து கருத்துக் கணிப்பின் அலை தாக்கம் ஏற்படுத்தாத நிலையில் மக்கள் கருத்தாக இது இருந்து வருகின்றது.

அதற்காக ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கருத்தும் அதுவல்ல.எனினும்,போட்டியிடும் வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளை வென்றெடுப்பார் என்ற கருத்து உண்டு.
இலங்கை போன்ற நாட்டுக்கு தீவிரவாதப் போக்குள்ள எந்த ஜனாதிபதியுமே தோதானவர்கள் அல்ல.இலங்கை ஒரு விவசாய நாடு இங்கு தற்சார்பு மூலவளங்கள் வழியாக மாபெரும் தொழிற்சாலைகளை அமைப்பதும் சிரமமானதே.

சிறப்பான பொருளாதார கட்டமைப்பைக் கொண்டு வரவேண்டுமென்பதற்காக வேதியல் கழிவகளை கடலில் கலக்கச் செய்து கடல் வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் எந்த பாரிய தொழில் திட்டத்தையும் இலங்கை அரசு மேற்கொள்ளாது.

ஏற்கனவே இனமுரண்பாட்டு வழியாக இலங்கையில் தமிழர் சிங்களவர் என்ற ஏற்ற தாழ்வோ பிணக்குளோ தீர்ந்தபாடில்லை.மூக்குள்ள வரையும் சளி போகாதென்ற நிலைமை தொடருகின்றது.

13வது விதியை நடைமுறைப்படுத்துவதில் தமிழர்கள் வாழும் மாகாணங்களில் அவர்களுக்கு அதிகாரம் போய்விடக்கூடாது என்பதில் தமக்கும் 13 வேண்டாம் என்ற நிலையில் அவர்கள் அழுங்குப்பிடியாக நிற்கிறார்கள்.

ஒருசில சிங்கள அரசியல்வாதிகள் இருதலைக் கொள்ளி எறும்பாகவும் அங்கும் போக முடியாமல் இங்கும் போக முடியாமல் நடுவில் நிற்கிறார்கள்.

இலங்கை அரசியலை இந்தியாவே தீர்மானிக்கின்றது என்பது வெட்டவெளிச்சமானதே.உலக நாடுகளில் இருக்கும் தூதரகங்கள் அவரவர் நாடுகளில் உளவு நிறுவனத் தலைமையகமாகவும் இயங்குகின்றது என்பது உலகறிந்த உண்மை.அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளம் வேட்பாளர்கள் பண்ணையாரிடம் ஆலேசனை கேட்கும் கூலித் தொழிலாளியாக அவர்களிடம் கையேந்தி நின்று ஆதரவு கேட்கும் நிலைமைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்,சால்வையை கக்கத்தில் வைத்தபடி கேட்டுக் கொண்டேதானிருக்கிறார்கள்.

எல்லாருமாகச் சேர்ந்து இலங்கையை எடுப்பார் கைப்பிள்ளையாகவும்,,இல்லாதவன் பெண்டாட்டி எல்லாருக்கும்தோழி என்பார்களே அது போல ஆக்கிவிட்டோம்.
கருத்துக் கணிப்பு என்பது இராஜதந்திரிகளால் நகர்த்தப்படும் ஒரு சதித் தி;ட்டமாகும்.
கருத்துக் கணிப்பைச் செய்வதற்கென்றே பல நிறுவனங்கள் தொழில் ரீதியாக உருவாகிவிட்டன.

ஒருவர் தாம் வெற்றியடைய வேண்டுமென்பதற்காக இத்தகு நிறுவனங்களை நாடி அவர்களுக்குப் பணம் கொடுத்து தமக்குச் சார்பான அலையை மக்கள் மத்தியில் உருவாக்கும்படி செய்கிறார்கள்.

இந்நிறுவனங்கள் ஒரு பொருட் தயாரிப்புத் தொழிற்சாலை போல சதி,சூழ்ச்சி என்பவற்றை முதலீடு செய்து மக்களை மூளைச்சலவை செய்கின்றன. பத்துப் பேரிடம் அவரவரின் அபிப்பராயத்தைக் கேட்டுவிட்டு அதை, இது பத்து இலட்சம் பேரிடம் கேட்ட கருத்துக் கணிப்பு எனத் தொடராக செய்திகளை வெளியிடுகிறார்கள்.

அண்மைச் செய்தியின்படி இலங்கைத் தேர்தலில் அநுரகுமார திஸநாயாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என இந்திய உளவு நிறுவனத் தகவல் என்று ஒரு செய்தியை இந்தியாவே கசிய விட்டிட்டு பின்பு அதை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்தள்ளது.

மறுப்பு என்பதும் ஒரு தந்திரமே,கருத்துக் கணிப்பு இப்படிச் சொல்கிறதே என மக்கள் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுத்து அடியெடுத்து வைத்தார்களோ அந்த முடிவின் உறுதி தளர்ந்து அப்படியே தயங்கி தடுமாறி நின்று குழப்பத்துக்கு உட்படுவார்கள்.
பொய்யை பலமுறை தொடர்ந்து சொன்னால் உண்மையாகி விடுவது போல,முடிவெடுக்க முடியாத நிலைக்கு வாக்காளனை சுயசிந்தனை அற்றவனாக்கிவிடும்.

தாங்கள் அப்படி ஒரு தகவலையும் வெளியிடவில்லையென்ற இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.இதுவும் ஒரு தந்திரம்.ஒரே நேரத்தில் இரண்டு செய்திகளை ஊடகங்களில் கசிய விட்டிருக்கிறார்கள். மக்கள் இது உண்மையா அது உண்மையா எனச் செய்திகளினால் ஏற்பட்ட தாக்கத்தில் உழன்று கொண்டேயிருப்பார்கள்.

இந்தத் தடுமாற்றத்தை ஒரு ஆயதமாக இந்தியா பாவிக்கும்.ரணில் விக்கிரமசிங்காவே வெற்றியடைவார் எனத் தெரிந்துதான் இப்படி ஒரு தந்திரத்தை இந்தியா கையாண்டதற்குக் காரணம்,வெற்றியடையப் போகும் ரணில் விக்கிரமசிங்கா எதிர்காலத்தில் இலங்கை அரசியலை தமது ஆலோசனை இல்லாமல் நடத்துவது சிரமம் என்பதை இந்தியா மெதுமையான எச்சரிக்கையாகச் சொல்லாமல் சொல்லும் வழியே இது.

வாக்களிக்கப் போகும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒரே எண்ணத்தில் வாக்களிக்கப் போவது இல்லை.சிங்கள மக்களுக்கு தமது வாழ்க்கைத்தரம் உயர வேண்டும்,விலைவாசிகள் குறைய வேண்டும்.கல்வி மருத்துவம்,போக்குவரத்து வசதிகள் என யாவும் சிறப்பானதாக இருக்க வேண்டும்,வானத்தை வளைத்தாவது இவற்றைச் செயபவர்க்கே எமது ஆதரவு என்ற அடிப்படையில் வாக்களிப்பர்.

ஆனால் தமிழ் மக்களுக்கு மேற்கூறியவற்றுடன் எந்த மருந்து போட்டும் ஆறாத புண்ணாக இருக்கும் உரிமைச் சமநிலைக் குறைபாடும் தீர்க்கப்பட வேண்டும் என்ற தீராத பிரச்சினையும் உண்டு.

ஏலையா க.முருகதாசன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.