என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!…. பகுதி-02… சங்கர சுப்பிரமணியன்
இரண்டு பஜ்ஜியை சாப்பிட்டுட்டு வரலாம்னு தான் போனேன். ஆனால் என்னவோ சொஜ்ஜியும் தயாராயிருந்தது. என்ன புள்ள அதிசயமா கெடக்குது. ஒன்ன பொண்ணு பாக்க வந்தேனுல்ல அப்ப சாப்பிட்டது. இப்ப என்ன சங்கதி. நம்மகிட்ட பெட்டைகூட ஏதுமில்லயே பொண்ணு பாக்க யாரேனும் வருவினமா என்றேன்.
போங்கப்பா ஒங்களுக்கு எப்பவமே பகடிதான் என்றவள் இன்னும் ஒன்றும் உங்களுக்கு பிடிச்சதும் தயாராய் இருக்கு. இன்னும் ரெண்டு பஜ்ஜியை எடுத்து சாப்பிடுங்கோ நான் அத எடுத்து வரன் கதிரயில இருந்தபடியே குடிப்பம் என்றாள். அதென்ன சங்கதி தெரியுமோ என்றும் கேட்டாள்.
ஏன் தெரியாம. அப்பவே கண்டு பிடிச்சனாக்கும். அதுதான் கும்பகோணம் டிகிரி காபி மணம் மூக்கைத் துளைக்குதே என்று விடுகதைக்கு விடையளித்து இல்லாத மீசையை தடவிக்கொண்டேன்.
கும்பகோணம் காபி வந்ததோன்னோ குடிச்சவன் எம்பெருமான் ஏழுமலயான் வஞ்சகமில்லாமல் வழங்கியிருக்கும் சொத்தில் ஒன்றான குட்டித் தூக்கம் ஒன்றையும் போட்டுவிட்டேன். அதனால் சற்று தடங்கல் ஏற்பட்டுவிட்டது. தடங்கலுக்கு வருந்துகிறேன். விடுபட்ட இடமான போலவரம் நீர்ப்பாசணத் திட்டத்துக்கு
வருவம்.
போலாவரம் நீர்ப்பாசணத்திட்டம் இன்னைக்கு நேத்தைக்கு போட்ட திட்டம் இல்லையாம். இந்தியா சுதந்திரம் அடையும் முன்னே மதராஸ் ராஜதானயா இருந்தப்ப 1940ல் போட்ட தீர்மானமாம். அட கடவுளே வெள்ளக்காரன் நம்ம நாட்ட இன்னும் ஒரு பத்து வருசம் ஆண்டிருந்தா இதுபோல பல திட்டங்களை போடுவதோடு இல்லாம போட்ட திட்டத்த நிறைவேற்றியும் இருப்பான்.
ஒருவேளை இப்படியும் இருக்குமோ. நம்ம புத்தி தெரிஞ்சதுதானே. அந்த கட்சிக்காரன் கொண்டுவந்த எந்த நல்ல திட்டத்தயும் முடிச்சு அவங்களுக்கு நல்ல பெயர சம்பாதிச்சு கொடுத்துடக் கூடாது என்பதப்போல வெள்க்காரங்களுக்கு நல்ல பெயர் வந்துடக்கூடாதுன்னு இதயும் நினைச்சிருப்பாங்களோ.
இருக்கலாம். ஏன்னா எந்த கட்சிக்காரன் செஞ்சாலும் அவங்கள்ளாம் நம்ம ஆளுக. அப்படியிருக்க அதேயே செய்யாதவங்க வெள்ளக்காரன் ஆட்சியில போட்ட தீர்மானத்த நிறைவேற்றி வெள்ளக்காரங்களுக்கு நல்ல பெயர எப்படி வாங்கிக் கொடுப்பாங்க.
ஆனால் எதாவது ஒரு காரணத்துக்காக நம்ம ஆளுங்க வித்தியாசமாவும் நடப்பாங்க. அதுலயும் மதறாஸ் ராஜதானியில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்லவா? அதனால் தீர்மானம் போட்டு நாற்பது வருசம் கடந்துவிட்டது என்றாலும் 1980ல் அதன்
அடிக்கல் நட்டார்கள்.
அடிக்கல் நட்டபோதும் சுற்றுப்புற சூழ்நிலையாலும் அப்போது மத்தியப் பிரதேசத்தில் இருந்த தற்போதைய சட்டிகார் மாநிலம் மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கும் வாய்ப்பிருந்ததால் அங்குள்ளவர்களை அப்புறப்படுத்தி பெரிய அளவில் மறுவாழ்வை சீரமைக்க வேண்டியிருந்ததாலும் உடனடியாக திட்டத்தை செயல் படுத்தமுடியாமல் தாமதமானது.
பேசிய படியே மேயோ ஹால் வரவும் திரும்பவும் பேச்சை தொடர்ந்த சந்திரன், “இத்திட்டம் 2004-2005 ராஜசேகர ரெட்டி ஆட்சியில் தொடரப்பட்டது. ஆனால் செப்டம்பர் 2009 ஹெலிகாப்டர் விபத்தில் ரெட்டி இறந்ததை தொடர்நது திரும்பவும் கிடப்பில் போடப்பட்டது”
“அட கடவுளே எம்பெருமான் ஏழுமலையான் இருக்கும் மாநிலத்துக்கே இந்த சோதனையா? அடிக்கல் நட்டு இருபத்தியைந்து காலம் முடியும்போது கூட துரிதமாக செயல்பட முடியவில்லையே”என்று குறைபட்டான் சடையப்பன்.
“சோதனைதான். மூன்று ஆண்டுகளுக்குப் பின் கிரண் குமார் ரெட்டி ஆட்சியில் அவசியமான வேலைகளுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டது. 2014ல் ஆந்திர மாநிலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என்று பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்திட்டம் தேசியத் திட்டமானது.”
“தேசியத் திட்டம் ஆன பிறகாவது சூடு பிடித்ததா?” என்றான் சடையப்பன்.
சடையப்பனின் கேள்விக்கு விளக்கமாக பதில் சொல்ல ஆரம்பித்தான் சந்திரன். 2014 ல் இருந்து திட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்து வேலை நடைபெறத் தொடங்கி தடுப்புச் சுவர்களை கட்ட ஆரம்பித்தனர். இப்படி கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் 2019 – 2020 ல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்தன. 35% சேதமடைந்துள்ள இந்த தடுப்புச்சுவர்கள் பெரும் பிரச்சனையாகவும் சவாலாகவும் உள்ளன.
இதுதவிர அணையைக்கட்டி முடிக்கும்வரை நீரை மாற்று வழியில் கொண்டு செல்லக்கூடிய காப்பணைகள் கட்டப்பட்டு அதன் ஆயுட்காலமும் முடிவடைந்துள்ளது. இதற்கான தீர்வை எட்டும் வழியைக் காணாமல் தற்போதைய அரசியல் தலைமை பழிசுமத்தும் வேலை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.
2009 – 2010ல் போலவரம் நீர்ப்பாசண திட்டம் குழப்பமான நிலையில் இருந்தபோது இத்திட்டத்தை எதிர்த்து சட்டிகார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாற்றியமைக்கப் பட்ட இத்திட்டத்தால் 4932 ஹெக்டேர் நிலம் ஒடிசாவிலும் 2015 ஹெக்டேர் நிலம் சட்டிகாரிலும் நீரில் மூழ்கும் என்பதே இவ்வழக்கைத் தொடர்ந்ததற்குண்டான காரணமாகும்.
இதைத்தவிர இத்திட்டத்தை எதிர்த்து 15 வெவ்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த முட்டுக்கட்டையிலிருந்து விடுபட அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் அவசியம் தேவை என்ற கருத்துக்களும் உள்ளன. சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றபின் இத்திட்டம் முடிவடைய இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும் என்கிறார். ஆனால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
இப்படியாக போலவரம் நீர்ப்பாசணத் திட்டத்தை விளக்கமாக சந்திரன் சடையப்பனிடம் கூறிமுடித்தான். அதனால் தமிழ்நாட்டில் தான் எந்த திட்டத்தையும் ஒழுங்காக நிறைவேற்றவில்லை எண்ணவேண்டாம். அண்டை மாநிலத்திலும் இதே கதைதான்.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்…)