பிரதமர் மோடி போல தலைவர் வேண்டும்; இது ஒரு பாகிஸ்தானியரின் ஆசை
‘பிரதமர் மோடி போல தலைவர் வேண்டும், அவரது தேசிய நலன் தொடர்பான முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாகவும் அமெரிக்க வாழ் பாகிஸ்தானிய தொழில் நிறுவனர் கூறியுள்ளார்.
1990இல் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்று அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர் சஜீத்தரார்.
இவர் தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுகட்சி வேட்பாளரான டிரம்ப் ஆதரவாளராக உள்ளார். இங்குள்ள முஸ்லிம் மக்களின் ஒரு அமைப்புக்கும் தலைவராக உள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு சமூக அமைப்புகளும் நடத்தி வருகிறார். இவர் அமெரிக்க தேர்தல் மற்றும் இந்தியாவின் வளர்நிலை, இந்திய தலைவர்களின் பங்கு குறித்து பி.டி.ஐ., நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ந்து வருவதை காண முடிகிறது. கடந்த காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, முதல் கல்வி துறை அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் கனவுகள், அவர்களின் கொள்கைகள், ஆற்றிய பணிகள் இன்றும் உதவுகிறது. பல்வேறு ஐ.ஐ.டி., கள் , ஐ.ஐ.எம்., கள் பல திறமைசாலிகளை உருவாக்கியது. கல்வி துறையில் அவர்கள் போட்ட முதலீடு இன்று வீண்போகாமல் ஜொலிக்கிறது.
இது போல் பிரதமர் மோடியும் பாராட்டுக்குரியவர் . இவரது முயற்சி, இவரது நோக்கம், தேசியவாதம், தேச நலனுக்கான குரல், ஆகியவற்றால் நல்ல பலனை இந்தியா பெற்று வருகிறது. இதனை கண்கூடாக காண முடிகிறது.
அமெரிக்காவில் இந்தியர்களின் ஆளுமை இதனை பிரதிபலிக்கிறது. இந்திய தொழில்நுட்ப தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் நல்ல நிலைக்கு வந்துள்ளனர். பிரதமர் மோடி போன்ற தலைவர்கள் பாகிஸ்தானில் உருவாக வேண்டும்.
பாகிஸ்தான் அண்டைய இந்தியா நாட்டை பார்த்து கற்று கொள்ள வேண்டும். இந்தியாவில் கல்விக்கு முதலீடு செய்ததால் அங்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பார்க்க வேண்டும். இதுபோல் எதிர்கால வளர்ச்சிக்கு பாகிஸ்தானிலும் கல்வியில் முதலீடு செய்ய வேண்டும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மீண்டும் பொறுப்பிற்கு வந்தால் சீனாவுக்கு ஒரு சவாலாக இருப்பார். இவர் அரசியலுக்கு வரும் முன்னதாகவே பணம் சம்பாத்யம் பண்ணி விட்டார். அவர் அமெரிக்க மக்களின் நலனுக்காக உழைப்பார். அமெரிக்காவை நல்ல நிலைக்கு கொண்டு வருவார். இவ்வாறு தரார் கூறினார்.