“கனகர் கிராமம்”… தொடர் நாவல் அங்கம்-44… செங்கதிரோன்
அரசியல் – சமூக – வரலாற்று நாவல்
கோகுலன் பாடிய காவடிச் சிந்தை நன்கு ரசித்த கனகரட்ணம் “தம்பி! கோகுலன் உன்ர அப்பாவும் நல்லா பாடுவார் தம்பி. பொத்துவிலுக்குச் சினிமா வாறதுக்கு முன்னால நாடகக் கொட்டக போட்டு நாடகங்கள் நடத்தினவர். ‘ரிக்கற்’ போட்டு நாடகங்கள் நடத்தினது எனக்குத் தெரியும். பாக்கியவத்தைக்குள்ளதான் நாடகக் கொட்டக போட்ட இடம் இரிந்தது. அந்த நாடகங்களில உன்ர அப்பாவும் பாடி நடிச்சிருக்கார்.” என்றார்.
“ஓம்! எனக்கு அப்ப ஏழெட்டு வயசிரிக்கும். அப்பா நாடகங்கள் போட்ட காலம் மெல்லிசா நினைவில இரிக்கு. அப்பா ஒரு நாடகத்தில அவரே பாடி நடிச்சவர். அதுவும் நினைவில இரிக்கு. ‘பவளக் கொடி – அருந்ததி சரித்திரம்’ என்றெல்லாம் நாடகங்கள் போட்டவர். பெயர்கள் மட்டும்தான் எனக்கு ஞாபகத்தில இரிக்கு. பொத்துவிலில மட்டுமில்ல அதுக்கு முந்தி மூதூர் கொட்டியாபுரத்தில – மட்டக்களப்பு மண்டூரில – நம்மட திருக்கோவிலில எல்லாம் நாடகங்கள் போட்ட கதையெல்லாம் அம்மா எனக்குச் சின்னனில சொன்னவ. அதிர விபரமெல்லாம் எனக்கு மறந்து போய்த்து’ அப்பா நல்லா ‘ஹார்மோனியம்’ வாசிப்பார். ‘சர்பினாப் பெட்டி’ என்றுதான் அந்த நாளில நாங்க சொல்ற. அப்பாவும் ஒரு ‘சர்பினாப்பெட்டி’ சொந்தமாக வச்சிரிந்தவர். அவரே பாட்டுக் கட்டி மெட்டுப் போடுவார்.
பொத்துவில் வட்டிவெளியில் இரிந்த பாலசுந்தரம் பாட்டெழுதி வந்து அப்பாட்ட குடுக்க அப்பா அதற்கு ‘சர்பினாப்பெட்டி’ யில வாசிச்சி மெட்டுப் போட்டுக் குடுப்பாரு. அந்த நாளில பொத்துவில் முஸ்லிம் வட்டைக்குள்ள சுன்னத்துக் கலியாணம் எண்டா அப்பாவ வீட்ட வந்து கூட்டித்துப் போவாங்க. ஹூசைன் என்றவர் அப்பாட நல்ல கூட்டாளி. நல்லாப் பாடுவார். ‘’மென்டலின்’ உம் நல்லா வாசிப்பார். யாசின் என்றிர ஒருவர் இரிந்தவர். நல்லா ‘டோளக்’ வாசிப்பார். எல்லாரும் ஒண்டாச் சேந்தாங்கெண்டா விடிய விடிய ‘பஜனை’ தான். நானும் சின்ன வயசில அப்பாவோட போய்ச் சுன்னத்து கல்யாண வீடுகளில் இப்பிடி ‘பஜனை’ கள் கனக்கப் பாத்திருக்கன். அப்ப இரிந்த இப்பிடியான தமிழ்-முஸ்லிம் உறவும் ஒற்றுமையும் இப்ப இல்லாமப் போய்த்து” என்றான் கோகுலன்.
“ஓம்! தம்பி அதுக்குச் சாதாரண முஸ்லிம் மக்களைக் குறைசொல்ல ஏலாது. முஸ்லிம் அரசியல் வாதிகள்தான் அந்த உறவக் கெடுத்தவங்க” என்றார் கனகரட்ணம்.
“நீங்க சொல்லிறது உண்மதான். முந்தி பொத்துவில் எம்.எம். ‘ஸ்கூல்’ லில தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் எல்லாரும் ஒண்டாத்தானே இரிந்து படிச்சநாங்க. அப்பிடி ஒண்டா இரிந்து படிக்கக்கொள்ள ஒற்றுமையும் தானா வளரும். ஆனா ஆரம்பத்தில எம்.எஸ்.காரியப்பரும் புறகு சிறிமாட அரசாங்கத்தில கல்வி அமைச்சராக வந்த பதியுதீன் மஃமூத்தும் தமிழ் மொழிப் பாடசாலைகளைத் தமிழ் – முஸ்லிம் பாடசாலைகள் எண்டு தனித்தனியாகப் பிரிச்சதும் தமிழ் – முஸ்லிம் உறவு கெட்டுப் போனதிக்குக் காரணம். தமிழரசிக் கட்சியும் கூட இதுக்கொரு காரணம்தான். நானும் தமிழரசிக் கட்சிக்காரன்தான்.
ஏன் சந்திரநேருவும்தான். அதுவேற.ஆனா முஸ்லிம் அசியல் தலைவர்களான ரி.பி.ஜயா மற்ற ராஸீக் பரீத் காலத்தில இரிந்து இண்டைக்கு வரைக்கும் இலங்கை முஸ்லிங்களத் தமிழர்களோட சேர்த்துத் ‘தமிழ் பேசும் மக்கள்’ எண்டு தமிழரிர அரசியலில அடயாளப்படுத்திறத அவங்க ஒருத்தரும் விரும்பல்ல. ‘இலங்கைச் சோனகர்’ எண்டுதான் தங்களத் தனியாக அடையாளப்படுத்த விரும்புறாங்க. அது பிழயுமில்ல. அது அவங்கட விருப்பம். உரிமை. ஆனா தமிழரசிக் கட்சி வில்லங்கத்துக்கு அவங்களயும் அரசியலில தமிழ் மக்களோட ‘தமிழ்பேசும் மக்கள்’ எண்டு சேத்துப் பிடிச்சது பிழயென்ரதுதான் என்ர அபிப்பிராயம்” என்றான் கோகுலன்.
“ஏன் தம்பி அப்பிடிச் சொல்லுறா? தமிழரசிக் கடச்சியில சேந்து வேல செய்த முஸ்லிம்களும் இரிக்காங்கதானே. அறுபத்தோராம் ஆண்டு சம்மாந்துற மஜீத்-கல்முன அகமட் – மட்டக்களப்பில மாக்கான் மாக்கார் எல்லாரும் ‘காந்திக்குல்லா’ வத் தலயில போட்டுத்தான் மட்டக்களப்புக் கச்சேரிக்கு முன்னால தமிழரசிக் கட்சி நடத்தின சத்தியாக்கிரகம் இரிக்கில்லயா? 1956 ஆம் ஆண்டு ‘எலக்கசனி’ ல பழைய பொத்துவில் தொகுதியில நிந்தவூர் முஸ்தபாவும் கல்முனயில எம்.எஸ்.காரியப்பரும் தமிழரசிக் கட்சியில நிண்டுதானே வெண்டவங்கள்” என்றார் கனகரட்ணம்.
“அரசியல் விவாதம் நல்லாச் சூடுபிடிக்குது. கோகுலன் தொடர்ந்து கதையுங்க .நாங்களும் அறிய வேணும்” என்று உற்சாகப்படுத்தினார் கனகரட்ணத்திற்கும் கோகுலனுக்கும் இடையிலான சம்பாஷணையை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சந்திரநேரு.
“இது விவாதம் இல்ல. நமக்குள்ள என்ன விவாதம். சும்மா கதைப்பம். சத்தியாக்கிரகம் நடந்திது. அது மொழியோட சம்பந்தப்பட்ட விசயம். அதனாலதான் அவங்களும் வந்து இரிந்தாங்க. ஆனா தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டுப் ‘பனாகொட’ இராணுவ முகாமில தடுத்து வைக்கப்பட்டொன்ன என்ன நடந்திது? அகமட் அரசாங்கத்திர பக்கம் மாறினதால அரசாங்கம் அவர விடுதல செஞ்சிது. தமிழரசுக் கட்சில நிண்டு தேர்தலில வெண்ட முஸ்லிம் எம்.பிக்களெல்லாம் தமிழரசிக்கட்சியிர கொள்கய நேசித்து வந்தாக்களில்ல.
தமிழாக்களிர வாக்குகளால ‘எலக்சன்’ வெல்லிறதுக்காகத்தான் தமிழரசிக்கட்சியில சேந்தவங்க. 1956 இல பழைய கல்முனத் தொகுதியில வெண்ட எம்.எஸ். காரியப்பரும் நிந்தவூர் தொகுதியில வெண்ட முஸ்தபாவும் புறகு 1960 இல கல்முனைத் தொகுதியில வெண்ட அகமட்டும் என்ன செய்தவங்க. எல்லாரும் தமிழரசிக் கட்சியில கேட்டு வெண்டுவந்த புறகு அரசாங்கக் கட்சிக்கு மாறின ஆக்கள்தானே. இதுவும் கூடத் தமிழ் – முஸ்லிம் உறவு கெடக் காரணம். அதனாலதான் நான் சொன்ன தமிழ் – முஸ்லிம் உறவு கெடத் தமிழரசிக் கட்சியும் ஒரு காரணம்தான் எண்டு. இதப்பத்தி எலக்சன் நடக்கக்கொள்ள டொக்டர் உதுமாலெப்பையோட விபரமாப் பேசியும் இரிக்கன்” என்றான் கோகுலன்.
‘அப்பிடியெண்டா தம்பி! நானும்தான் தமிழர்விடுதலைக் கூட்டணியில நிண்டு வெண்டுதானே அரசாங்கக் கட்சிக்கு மாறியிருக்கன். அதுக்குத்தானே துரோகியெண்டு என்னச் சுட்டிருக்காங்க” என்றார் கனகரட்ணம்.
கோகுலன் மிகவும் அமைதியாகப் பதில் சொன்னான். “ நீங்க மாறினத இதோடெல்லாம் ஒப்பிட ஏலாது. நீங்க மட்டுமல்ல 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில யாழ்ப்பாணத் தொகுதியில தமிழரசிக் கட்சியில வெண்டு வந்த சி.எக்ஸ்.மார்ட்டினும் 1972 குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களிச்சு அரசாங்கத்திர பக்கம் தாவினவர்தான். இவங்க எல்லாரும் கட்சி மாறினது பதவிச் சுகங்களுக்காகவும் சுயநலன்களுக்குமாகவுமே. ஆனா நீங்க கட்சி மாறினது உங்களுக்காக இல்ல. முழுக்க முழுக்க மக்களுக்காகத்தான். அதுதான் நான் மட்டுமல்ல சந்திரநேரு போன்றாக்களும் உங்களோட நிற்கிறம்” என்றான் கோகுலன்.
கனகரட்ணம் இதழ்க்கடையில் மெல்லிய சிரிப்பொன்றை அவிழ்த்தார். கோகுலன் தொடர்ந்தான். “முஸ்லிம்களுக்கு என்ன வேணுமெண்டு அவங்கதான் தீர்மானிக்கோணும். அவங்களத்தான் தீர்மானிக்கவும் விடணும். அதுதான் நியாயம். அவங்களுக்கெண்டு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இரிக்கிறாங்க.
நாம முஸ்லிம்களையும் தமிழ் பேசும் மக்கள்’ எண்டு வில்லங்கமாக எங்களோட சேத்துக் கொண்டு அவங்களுக்கு என்ன வேணுமெண்டு தமிழ்த் தலைவர்கள் தீர்மானிக்கப்படாது. அதுவும்கூட ஒரு ஆக்கிரமிப்புத்தான். முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாஷைகளத் தமிழர்கள் மதிப்பதும் தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளைத் முஸ்லிம்கள் மதிப்பதும்தான் சரியான அரசியலா இரிக்குமே தவிர அதவிட்டுப்போட்டு முஸ்லிம்களத் தமிழர்களோட சேத்துத் ‘தமிழ் பேசும் மக்கள்” என அடையாளப்படுத்துவது சரியான அரசியல் இல்ல என்ரதுதான் எண்ட தெளிவான உறுதியான நிலைப்பாடு. ‘ஊரார் சோத்துக்குள்ள நாம மாங்காயப் போட்டுப் பினையப்படாது” என்று முடித்தான் கோகுலன்.
கோகுலன் கூறிய பழமொழியைக் கேட்டுக் கனகரட்ணமும் சந்திரநேருவும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
கனகரடணத்திற்கும் கோகுலனுக்குமிடையிலான, அரசியல் சம்பாஷனையைக் கூர்ந்து கவனித்துக் காதில் வாங்கியபடி அமைதியாகவிருந்த சந்திரநேரு,
‘”கோகுலன் சொல்லிறத்திலயும் விசயம் இரிக்கு. இந்த ‘எலக்சனி’ ல தமிழர்விடுதலைக் கூட்டணியோட ஒப்பந்தம் எழுதிக் கொண்டு தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கய ஏத்து ‘உதய சூரியன்’ சின்னத்தில முஸ்லிம் ஐக்கிய முன்னணி சார்பில கல்முன – சம்மாந்துற – மூதூர் – புத்தளம் தொகுதிகளில போட்டி போட்ட ஒரு முஸ்லிம் வேட்பாளரும் வெல்லல்லத்தானே” என்றார் சந்திநேரு.
தனது அரசியல் நிலைப்பாட்டைச் சந்திரநேரு ஆதரித்துக் கருத்துக் கூறியது கோகுலனை மகிழ்ச்சிப்படுத்தியது.
“1961 ஆம் ஆண்டுச் சத்தியாக்கிரகத்துக்குத் தம்பிலுவில் திருக்கோவில் பகுதிகளில இரிந்தும் ஆக்கள மட்டக்களப்புக்குக் கச்சேரிக்குக் கூட்டித்துப் போனவர் எங்கட அப்பா. அப்ப நான் ஒரு அளவான இளந்தாரி. அப்பாவோட சிந்தாத்துர – அரசரட்ணம் – வேல்முருகு – நாகமணி எண்டு கனபேர் வாகனத்தில ஏறி மட்டக்களப்பக்குப் போன எனக்கு நல்லா ஞாபகமிரிக்கி” என்று கூறிச் சந்திரநேரு சம்பாஷணையை வேறு திசைக்குத் திருப்பினார்.
“ஓம்.நேரு உங்கட அப்பா அரியநாயகத்த எனக்கு நல்லாத் தெரியும். அறப்போர் அரியநாயகம்’ எண்டுதானே அவரச் சொல்லிற. என்ர தகப்பனாருக்குச் சொந்தமான ‘லொறி’ யிலதான் பொத்துவிலில இரிந்து ஆக்கள மட்டக்களப்புக்குச் சத்தியாகிரகத்துக்கு ஏத்திக்கொண்டு போனவங்கள்.’ என்றார் கனகரட்ணம்.
சத்தியாக்கிரகம் நடந்தது எனக்கும் நினைவிரிக்கி. எனக்கு அப்ப பதினொரு வயசு. என்னத்துக்கு அது நடக்குது எண்டு அந்த வயசில தெரியல்ல. ஆனா தமிழ்மொழி சம்பந்தமாக ஏதோ சிங்களத்திற்கு எதிரான போராட்டமெண்டு ஒரு சின்ன விளக்கம் இரிந்திது. எங்கட அப்பாவும் பொத்துவிலில இரிந்து ஆக்கள உங்கட லொறியிலதான் ஏத்தித்துக் கொண்டு போனவரு. ‘மயில்வாகனம் அன்ட் சன்ஸ்’ என்று உங்கட லொறியில எழுதியிரிந்ததும் எனக்கு நினவிரிக்கி. என்னயும் கூட்டித்துப் போகச் சொல்லி அப்பாட்டக் குளரின நான். அப்பா என்னவிட்டுத்து லொறியில மற்ற ஆக்களோட ஏறிப்போனவர். நான் கொஞ்சத்தூரம் லொறிக்குப் பின்னால குளறிக் குளறி வீட்டில இரிந்து ‘மெயின் றோட்’ சந்தி மட்டும் ஓடினனான். அம்மாதான் பின்னால திரத்திவந்து பிடிச்சி வீட்ட இழுத்தித்துப் போனவ.
அதுக்குப் புறகு நான் வந்து தென்னம் குரும்பட்டியயும் ஈக்கிலயும் எடுத்துக் குரும்பட்டித் தேரொண்டு செஞ்சு பொத்துவில் வட்டிவெளிக்குள்ள இரிந்த என்ர மற்றக் கூட்டாளிமாரையும் சேத்துக்கொண்டு செய்த விளையாட்டுத் தேரையும் கயிறு கட்டி இழுத்தித்து ஓடினபடி ”றோட்’ டால
“தமிழ் மொழியை உயிரெண்டு கொள்ளடா
தலை நிமிர்ந்து தமிழ் காக்கச் செல்லடா…
சிங்களக் கூட்டம் வந்து சிதைத்திடும்
சீறிப்பாய்ந்து உன்னை விரட்டிடும்
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
எமது மொழி தமிழ் காக்கத் தயங்காதேடா….”
எண்டு பாடிக் கொண்டு திரிஞ்ச நான்’ என்று கோகுலன் தன் சிறுவயதுச் செய்கையைச் சொல்லிச் சிரித்தான்.
சந்திரநேரு “நீலமலைத்திருடன் படத்தில எழுத்தோடும் போதே நடிகர் ரஞ்சன் குதிரயில இரிந்து பாடின ‘சத்தியமே இலட்சியமாய்க் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா’ என்றிர பாட்டிர மெட்டிலதான் கோகுலன் பாட்டெழுதியிரிக்கார்” என்று சொல்ல கோகுலனும் அதனை ‘ஓம்’ என்று ஏற்றுக் கொண்டான். அதுதான் கோகுலன் எழுதிய முதற் பாட்டு.
இப்படிச் சுவாரஸ்யமாகக் கதைத்துக் கொண்டிருக்கும்போதே கடிதம் ‘ரைப்’ பண்ணி முடிக்கப்பட்டது. கனரட்ணம் வாசித்து விட்டுக் கையொப்பம் இட்டார். கோகுலன் எழுந்து வெளியில் சென்று அவரது காருக்குள் இருந்த அவரது உத்தியோகபூர்வ ‘ரப்பர் ஸ்ராம்பை” எடுத்துவந்து கடிதத்தில் அவரின் கையொப்பத்தின் கீழே பதித்துவிட்டுக் கவனமாக அக்கடிதத்தை ஒரு ‘பைல்’ லில் இட்டு கனகரடணத்திடம் கவனமாகக் கையளித்தான்.
சந்திரநேருவின் மனைவி சாப்பாட்டை மேசையில் எடுத்து வைத்து விட்டுச் “சாப்பிடுங்கோ” என்றார். மூன்றுபேரும் எழுந்து பிராங்ளினையும் தங்களோடு இருந்து சாப்பிடும்படி அழைத்தபடி போய்ச் சாப்பிட அமர்ந்தார்கள்.
சாப்பிட்டுக் கொண்டே தொடர்ந்தும் பலதையும் பத்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் கனகரட்ணம் சொன்னார்.
“தம்பி! யாழ்ப்பாணத்து அரசியல் மட்டக்களப்புக்குப் பொருந்தாது. அங்க கந்தன் வருவான் அல்லது கணபதி வருவான். இஞ்ச அப்பிடில்ல. முஸ்லிம் மக்களுக்கு நாம எதிரியில்ல தம்பி. அதுகள் பாவம் இந்த எலக்கசனில பொத்துவில் முஸ்லிம்கள் போட்ட வாக்காலயும்தான் நான் வெண்ட. ஆனா முஸ்லிம் அரசியல் வாதிகளாலதான் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு ஆபத்து. கவனமா இரிந்தாத்தான் எதிர்காலத்தில கிழக்கக் காப்பாத்தலாம். கிழக்கக் காப்பாத்திக் கொண்டுதான் முஸ்லீம்களோட ஒற்றுமயா இரிக்கவேணும். முஸ்லீம்களோட விரோதித்துக் கொண்டும் வாழ ஏலாது. தமிழ் – முஸ்லிம் ஒற்றும வேணும். அதுபோல தமிழ் – சிங்கள ஒற்றுமயும் வேணும். மொத்தத்தில தமிழ் – முஸ்லிம் – சிங்களம் எண்டு மூண்டு தரப்பாரிட்டையும் ஒற்றும வேணும். இதுக்கு யாழ்ப்பாணத்து அரசியல் சரிவராது தம்பி! நானும் யாழ்ப்பாணத்தான்தான். ஆனா ஐம்பது வருஷங்களுக்கு மேலாக பொத்துவிலில வாழ்ந்து இப்ப மட்டக்களப்பானாகிப் போனன். அதுதான் எனக்கு இதெல்லாம் விளங்கிது. ஆனா யாழ்ப்பாணத்தில இரிந்துகொண்டு கதைக்கிற எங்கடை ஆக்களுக்கு இது விளங்காது”.
“நீங்க சொல்லிறது முழுக்கச் சரி. கிழக்கக் காப்பாத்தினாத்தானே வடக்கோட இணைக்கலாம். இல்லாதத எப்படி எதிர்காலத்தில இணைக்கிறது” என்றான் கோகுலன்.
“சரியாச் சொன்னாய் தம்பி! அது மட்டுமில்ல. தமிழ் மக்களிர பிரச்சனைக்குத் தனிநாடுதான் தீர்வு எண்டா அதுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து போட்டுத்தானே போராட்டத்தில இறங்க வேணும். ஒரு ஆயத்தமுமில்லாம வட்டுக் கோட்டையில கூடித் தீர்மானத்த நிறைவேத்திப்போட்டு ‘எலக்சனி’ லயும் ஆணையைக் கேட்டு வெண்டாத் ‘தமிழீழம்’ வானத்திலிருந்து விழுமா தம்பி. தமிழ் மக்களப் பலப்படுத்தித் தயார்ப்படுத்திப் போட்டெல்லோ ஆயுதத்தைத் தூக்கியிருக்க வேணும். இது ‘ஆடறுக்க முதல் என்னத்தையோ அறுத்த மாதிரி’ என்று சொல்லிச் சிரித்தார். அவரோடு சேர்ந்து கோகுலன் – சந்திரநேரு – சந்திரநேருவின் மனைவி – பிராங்ளின் எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள்.
கனகரட்ணம் கோகுலனைப் பார்த்து” தம்பி! நீ முன்னம் கொழும்புக்கு வந்து மருதானை ‘சுலைமான்ஸ்’ ஆஸ்பத்திரியில என்னச் சந்திச்சிக் கதச்சிக் கொண்டிருக்கெக்குள்ள நல்லொரு பழமொழி சொன்ன நீயல்லோ. எனக்கு அது மறந்து போச்சு. அது என்ன பழமொழி தம்பி” என்று கேட்டார்.
கோகுலன் சற்று நேரம் யோசித்தவிட்டு “மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசியது” என்றான்.
“அதுதான்” என்றார் கனகரடணம். பின்,
“செல்வநாயகம் நல்ல மனிசன் தம்பி. நேர்மையான அரசியல்வாதி. அது வேற விசயம். ஆனா தமிழன்ர அரசியலில கொடி பிடிக்கிறதயும் கோஷம் போடுறதயும் விட்டுப்போட்டுச் செயலில இறங்க வேணும்” என்று கூறி வலது கையால் சாப்பிட்டுக் கொண்டு இடது கையால் தனது கூற்றை அழுத்தி மேசையில் மெதுவாகத் தட்டினார்.
கோகுலனும் சந்திரநேருவும் அமைதியாக இருந்து சாப்பிட்டுக் கொண்டே கனகரட்ணம் சொன்னதைத் தலையசைத்து ஆமோதித்தார்கள்.
‘அது விளங்காமத்தானே உங்கள வந்து சுட்டவனுகள்” என்றான் கோகுலன் மெல்லிய கோபத்தைக் கொப்பளித்தவாறு.
“தம்பி” போனவருஷக் கடைசியில பாராளுமன்றத்தில வச்சு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக நான் வாக்களிச்ச நேரம் அமிர்தலிங்கம் என்னப் பார்த்து என்ன சொன்னவர் தெரியுமா?” என்றார் கனரட்ணம்.
‘இடிவிழும்’ எண்டவர். நானும் பாராளுமன்றக் ‘கலரி’ யிலே இரிந்து கேட்டுத்தானே இரிந்த நான்” என்றான் கோகுலன்.
“நானும் இதக் கேள்விப்பட்டநான்” என்றார் சந்திரநேரு.
“அன்று ‘இடிவிழும்’ எண்டு சொன்ன அமிர்தலிங்கம் பேந்து இப்ப அவரோட பாராளுமன்றச் சகாக்களுக்கு ‘’ஆரப்பத்தியும் கதையுங்கோ ஆனா கனகரட்ணத்தப் பத்திக் குறையாகக் கதயாதயுங்கோ எண்டு சொல்லி வச்சிரிக்கார்” என்று கனகரட்ணம் சொல்லிச் சிரிக்க,
“இப்ப அவருக்கு நீங்க மக்களுக்குச் செய்யிற சேவயக் கண்டொன்ன நீங்க அரசாங்கப் பக்கத்துக்கு மாறின ஏனெண்டு விளங்கியிரிக்கும்” என்றான் கோகுலன்.
சாப்பிட்டு முடிந்த பின்பும் இப்படியாக நீண்ட நேரம் பேசிச் சாப்பாட்டு மேசையிலே நேரத்தைச் செலவிட்டவர்கள் எழுந்து பின் சுணங்காமல் மூவரும் உறக்கத்திற்குச் சென்றார்கள்.
(தொடரும் …… அங்கம் – 45)