“நடக்கை”… சிறுகதை-81… அண்டனூர் சுரா
“அவனும் அவன் மொகறைக் கட்டையும். மீசை மொளைச்சிருக்கிற திமிர்தானே அவனை இப்படியெல்லாம் பேசச் சொல்லுது. இவன் முட்டை இடப்போற போந்தாக் கோழியாட்டம் நடப்பான். இவன் என் புள்ளை நடையைப் பழிச்சிருக்கான்? அவன் இந்தப் பக்கம் வருவான்தானே! வரட்டும். அப்ப வச்சிக்கிறேன்….“
அடுப்பிற்குள் விழுந்து தெறிக்கும் உப்புக் கல்லாட்டம் ‘பட,பட’ என்று வெடித்தாள் மகமாயி. எந்தெந்த வகையிலெல்லாம் கோபத்தை வெளிப்படுத்த முடியுமோ, அத்தனை வகையிலும் வெளிப்படுத்தினாள். பாத்திரங்களை அள்ளிவந்து குடத்தடியில் கொட்டியவள் ஒரு குடத்தைத் தலைக்கும்மேல் தூக்கி தண்ணீர் நாலாபுறமும் சிந்தும்படியாக பெரிய பாத்திரத்தை நிரப்பியவள் குடத்தைத் தரையில் ‘நங்க்’கென்று வைத்தாள். கடற்கரையில் தொலைத்த குண்டுமணியைத் தேடுவதைப் போல எதையோ தேடினாள். அவள் தேடிய வேகத்திற்கு அவளது வாயளவு கரண்டி அவளது கைக்குக் கிடைத்தது. அதைக்கொண்டு மற்ற பாத்திரங்களை நாலாபுறமும் தள்ளினாள். அவளது கொக்கரிப்புகளுக்கிடையே எழும் பாத்திரங்களின் இரைச்சலைக் கேட்கையில் அண்ணியாரும் நாத்தனாரும் சண்டை போட்டுக்கொள்வதைப் போலிருந்தது.
“என்னதும்மா…” அதட்டும் தொனியில் கேட்டாள் நிர்மலா.
பாத்திரங்களைத் தேய்த்து கழுவிக்கொண்டிருந்த மகமாயி கழுகுபோல கழுத்தை மட்டும் திருப்பி, என்ன என்று கேட்கும் தொனியில் முகத்தைக் காட்டினாள்.
“அதை விட்டிட்டு வேலையப் பார்க்க மாட்டியாம்மா நீ.”
“எதைடி நீ விடச் சொல்றே, விடணுமாமே…” அவனையெல்லாம் சும்மா விடக்கூடாது. இன்னைக்கு உன் நடையைப் பழிச்சவன் நாளைக்கு வேறெதையும் பழிக்க மாட்டானு என்னடி இருக்கு…?”
நிர்மலாவுக்கு ‘இச்சீ’ என்றிருந்தது. அவள் பாத்திரம் விளக்கிக்கொண்டிருருந்த அம்மாவின் அருகில் சென்று குனிந்து அவளது முகத்தைப் பார்த்தவளாய், “அம்மா, அவன் முறைப் பையன்ம்மா” என்றாள்.
அவள் துலக்கிக்கொண்டிருந்த பாத்திரத்தை அப்படியே வைத்தவளாய் மகளை வெறிக்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அதுக்காக பழிக்கலாமாக்கும். பார்க்கிற ஊர் ஜனங்க என்ன சொல்லும்?” என்றவள் அவன் வரட்டும், அவனை நான் என்ன செய்றேனு மட்டும் பாரு..என்று சொல்வதைப் போல ஒரு வில்லங்கப் பார்வை பார்த்துவிட்டு பாத்திரத்திற்குள் கையைவிட்டு துலாவி விலக்கினாள்.
நிர்மலா குறுகுறுவென மகமாயியைப் பார்த்தாள். இடுப்பிற்கு ஒரு கையைக் கொண்டுப்போய் மூச்சை உள்ளே இழுத்து சீறும் காளையைப் போல ‘பொசுக்,பொசுக்’ என்று வெளியே கக்கினாள். அவளது உதரவிதானம் மார்போடு ஏறி இறங்கியது.
“அம்மா, ஒன்னுமில்லாத விசயத்துக்கு நீ திட்டுறத கேட்கிறப்ப எனக்கு ரெண்டு கையாலயும் தலையில அடிச்சிக்கிட்டு கத்தணும் போலிருக்கு.“ என்றாள் நிர்மலா. அப்படியாக அவள் சொல்கையில் மென்மெல்லிய கோபம் விழிகளில் படர்ந்து இமைகளில் பதத்தது.
மகமாயி அவள் சொன்னதைச் சட்டைச் செய்யவில்லை. கையில் வைத்திருந்த ஒரு பாத்திரத்தை ‘நங்க்’ என்று தரையில் வைத்து, நீ சொல்லியா நான் கேட்பேன் என்று சொல்லும்விதமாக மகளை ஒரு பார்வைக் பார்த்துவிட்டு பாத்திரங்களைக் கழுவினாள்.
“உனக்கு யாரும்மா இதைச் சொன்னது?”
“யார் சொல்லணும்? நான் என்ன அம்மியா, குழவியா வீட்டுக்குள்ள அடஞ்சிக்கிடக்க. வீட்டு விட்டு ஊர்க்குள்ள நடந்தாதான் ‘கீச், கீச்’ சத்தம்கூட மூச்சுக்கட்டி பேசிக்கிறது கேட்குதே.”
“மூச்சு, மூச்சா பேசுற விசயத்தை ஏன்ம்மா இப்படி மூச்சு விடாமப் பேசுற?”
“வேறென்ன அதை மனசுக்குள்ளேயே போட்டுப் புழுங்கி எச்சியா, சளியா வெளியே காரித் துப்பச் சொல்றியா?“
“அப்படி துப்பித்தான் தொலையே“
“துப்பத்தான் போறேன். துப்புனா தரையிலயா துப்புவேன்? உன்னோட நடைய கிண்டல் பண்ணுனானே, அவனோட முகத்திலதே துப்புவேன்” என்றவள் வாயிலிருந்த எச்சிலைக் காறித் துப்பினாள்.
நிர்மலா சிலையாக நின்றாள். அவளது உதடுகள் பட்டாம்பூச்சி சிறகுகளைப் போல அடித்துகொண்டன. பற்களால் உதடுகளை வருடிக்கொண்டாள். “எந்த நேரத்தில்தான் உனக்கு நான் மகளாகப் பொறந்து தொலைச்சேனோ.?“ என்றவளாய் முகத்தைத் திருப்பி அலுத்துக்கொண்டாள்.
“ஏன்டி இப்படி நீ அலுத்துக்கிறே. உனக்கு நான் என்னடியாத்தா குறை வச்சேன். அப்பன் இல்லாத பிள்ளைனு வேலியா, கள்ளியா இருந்து காத்தேனே. அதுக்காகவா இப்படி அலுத்துக்கிறே? உன்னைச் சித்தாள் வேலைக்கு அனுப்பியிருப்பேனா? இல்ல, மாத்தாளுக்கு அனுப்பியிருப்பேனா? ரொம்பத்தான் அலுத்துக்கிறே..?“
“என்னை நீ படிக்க வச்ச. நான் இல்லைனு சொல்லல. அதுக்காக நான் வேலை பார்க்கிற இடத்துக்கு வந்து, நாலு பேர் பார்க்க பத்திரமா இருடினு சொல்லிட்டு வாறீயே, இது நல்லவா இருக்கு? வேலை செய்கிற இடத்துல என் மானம் போகுது.“
“போகுமுடியம்மா. போகும். உன்னெப் பெத்து வளர்த்த எனக்குத்தான் தெரியும் என் பதைப்பு. பார்த்தேதானே வடநாட்டுல பஸ்லயே ஒரு பொண்ண ஆறு முரட்டுப் பசங்க மானப்பங்கப்படுத்தி தூக்கிப்போட்டுட்டு போயிட்டான்வ. இத்தனை ஆஸ்பத்திரிக இருந்தும் அவள காப்பாத்த முடிஞ்சதா, இல்லையே. இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னே வேலை செஞ்ச இடத்துல ஒரு பணி டாக்டரக் கற்பழிச்சு தூக்கி எறிஞ்சுட்டான்க. இதெல்லாம் பார்க்க, கேட்க உன்னைப் பெத்த வயிறு பதைக்குதுடி.
பொம்பளைனா ஆம்பளை நெழலுகூட வாநீர் ஒழுகப் பார்க்குமடி. வயசுக்கு வந்தவன்க முன்ன விட்டுப் பார்ப்பான்க. கிழடுக் கட்டைக பின்னே விட்டுப் பார்ப்பான்க. பொண்டுகள இந்த ஆம்பள ஒலகம் தாயா, பிள்ளையாவா பார்க்குதுங்க. ஆடு தழையப் பார்க்கிறதாட்டம்ல பார்க்குதுங்க.
கருவப்பிள்ளை கொத்தாட்டம் எனக்கு நீ ஒத்தப் புள்ள. உன்னை நான் கோழிக் குஞ்சா வளர்த்து ஆளாக்கி வச்சிருக்கேன். உனக்கு ஒன்னுன்னா கேட்க யாரு இருக்கா? தகப்பன் இல்லாத பிள்ளைன்னு தெரிஞ்சா கழுத்தில்லாத தவளைகூட ‘கர்ர்ங்கும், கொர்ர்ங்கும்’ மடியம்மா..”அவளது வாய் தொணதொணக்க கைகள் காலை வேலையில் மும்முரம் காட்டிக்கொண்டிருந்தது.
மகமாயி வாய்ச்சண்டையில் சிலம்பாட்டம் ஆடக்கூடியவள். அவளுக்கும் அவளது மகளுக்குமான வேலி அவளது வாய்தான். அவள் பேசத் தொடங்கிவிட்டால் பண்பலை ஒலிபரப்பைப் போல கேளுங்க, கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்க என்று பேசக்கூடியவள்.
மகமாயி எப்பவும் இப்படித்தான். மகள் நிர்மலாமீது ஒரு மழைத்தூறல் விழுந்துவிடக்கூடாது. மழையை உண்டு இல்லைனு செய்துவிடுகிறவள். “இந்த மழ என் புள்ளைய நனைக்கணுமுனே வந்திருக்கு.“ என்று மழையைக் கருக்கித் திட்டித் தீர்த்துவிடுவாள். இயற்கையை உண்டு, இல்லை என்று செய்கிறவளுக்கு மனிசன் எம்மாத்திரம்?
மகமாயி யாரையும் இட்டுக்கட்டி பேசக்கூடியவள்தான். பேசியவர் எதிரே வந்தால், ‘ஏன்டா என் புள்ளயக் கேலி செய்தே’னு கேட்கத் தெரியாது. முந்தானையை எடுத்து உடம்பைப் போர்த்திக்கொண்டு ஒதுங்கிக் கொள்வாள். குறைக்கின்ற நாய் கடிக்காது என்பது மகமாயி விசயத்தில் சாலப் பொருந்தும்.
நிர்மலா ஊர் முறைப்பையன்கள் கேலி, கிண்டல் செய்வதைப் போலதான் நடக்கிறாள். கால்களை எட்டியெட்டி எடுத்துவைத்து கைகளைக் காற்றில் அளாவி வீசி நடக்கிறாள். வேண்டா வெறுப்பாக நடப்பதைப் போலதான் அவளது நடை இருக்கிறது. அவளது வாகான உடம்புக்கு தலை குனிந்து அன்னம் போல கால்களை மெல்ல எடுத்துவைத்து நடந்தால் அழகா இருக்குமென்று அவளுக்குத் தெரியவில்லை. வேலைக்குப் போகிற பொழுதும், வேலை முடித்து வீட்டிற்குத் திரும்புகிற பொழுதும் ஒரே மாதிரியாகத்தான் நடக்கிறாள். சேலைக்கு ஒரு நடை, சுடிதாருக்கு ஒரு நடை, பேன்ட் சர்டுக்கு ஒரு நடை, நைட்டிக்கு ஒரு நடை…இருக்கிறதென்று அவளுக்குத் தெரியவில்லை. தெரியவில்லையா, தெரிந்துகொள்ள விரும்பவில்லையா..? என்று தெரியவில்லை. எந்த உடையை உடுத்தினாலும் ஒரே மாதிரிதான் நடக்கிறாள். அதுவும் அழகாக நடக்காமல் வேண்டா வெறுப்பாக நடக்கிறாள்.
நேற்று பணி முடிந்து நடந்து வந்தாள். பிரவின் கைகளை வீசிக்கொண்டு அவளை எதிர்கொண்டான். அவனுடைய வயது பதினைந்தோ, பதினாறோதான் இருக்கும். உறவுமுறையைச் சொல்லி சுற்றிமுற்றும் பார்த்தால் அவனுக்கு அவள் அத்தாச்சி முறை வேணும். இருவருக்குமிடையில் பதினைந்து வயது வித்தியாசம். அவன் நிர்மலாவை அன்பு, மரியாதை கலந்த தொனிப்பில் ‘அத்தாச்சி’ என்று வாஞ்சையோடு அழைப்பான். பதிலுக்கு அவள் கிண்டல் கலந்த தொனியில் மச்சான் என்பாள். அவர்களுடைய உரையாடல் இந்த அளவிலேயே இருக்கும். பேசிக்கொள்ளுமளவிற்குக் கூடுதலாக நேரம் கிடைத்தால் அவள் அவனிடம் படிப்பைப் பற்றி விசாரிப்பாள். பதிலுக்கு அவளிடம் வேலையைப் பற்றி விசாரிப்பான். மரியாதை நிமித்தமான விசாரிப்புகளே இருவருக்குள்ளும் நிலவும்.
அன்றைய தினம் பிரவின் எதிரே வந்துகொண்டிருந்த நிர்மலாவை நிமிர்ந்து பார்த்தான். எதிரே நடையை விட்டெறிந்துகொண்டு வந்துகொண்டிருந்தாள் நிர்மலா. அவளது நடையை நின்று கவனித்தான் பிரவின். அவளுக்கு நடை ரொம்பவே மாறியிருந்தது.
“அத்தாச்சி…” என்று அழைத்து அவனை நிறுத்தினான்.
முகத்தில் கேள்விக்குறியைத் தொடுக்கி அதே இடத்தில் நின்றாள் நிர்மலா.
“எப்போதும் போல நடங்க பார்ப்போம்..” என்றான் நெற்றியைச் சுழித்து, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்தப்படி.
“ஏன், எப்போதும் போலதானே நடக்கிறேன்.“
“இல்ல, உங்க நடை எவ்ளோ மாறிப்போச்சு“
“எப்படி?“
“எப்படினு சொல்லத் தெரியல. ஆனா மாறிப்போச்சு“
“அப்படியா…!” என்றவளாய் உறைந்து அந்த இடத்திலேயே நின்றவள், “நான் எப்படி நடக்கிறேன்?” என்றவளாய் கண்களைக் சிமிட்டிக்கொண்டு கேட்டாள்.
இரண்டு அடிதூரம் பின்னோக்கிச் சென்ற பிரவின் கால்களை எட்டியெட்டி எடுத்துவைத்து, “ இதோ, இப்படி நடக்குறீங்க?” என்றபடி நடந்து காட்டினான். ரோபோ நடப்பதைப் போல அந்த நடை இருந்தது.
இவனது நடையை மறைவில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து வெடியென சிரித்தார்கள். திடீரென்று சிரித்தது பூதமோ, பேயோ சிரிப்பதைப் போன்றிருந்தது.
சிலப்பதிகாரத்து சதுக்கப்பூதமாக மாறி சிரித்தவர்களைக் கொன்று தின்றுவிடணும் போலிருந்தது நிர்மலாவுக்கு. சிரிப்பது சரி. கேலியாக, பழிப்பதைப் போன்றா சிரிக்க வேண்டும்! அவளது முகம் விகாரமெடுத்தது.
பிரவின் பவ்வியமாக நிர்மலா முன் நின்றுக்கொண்டிருந்தான். கையில் சிக்குண்ட கோழிக் குஞ்சைப் போல ‘விழுக், விழுக்’ என்று விழித்தான். அவனது பார்வையில் கெஞ்சலும் தவிப்பும் இருந்தன. நிர்மலா பிரவின் கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டிவிட்டு வீட்டை நோக்கி நடக்கலானாள்.
அவள் வீடு வந்துசேர்ந்து பல மணி நேரமாகிவிட்டது. சிரித்தவர்களின் முகங்கள் அவளது அகக்கண்களுக்குள் கைக்கொட்டி சிரித்தன. பிரவினை அவள் மனதிற்குள் கொண்டுவந்து நிறுத்தி எடைபோட்டுப் பார்த்தாள். அவன் நடந்துகொண்ட தொனிப்பும், நடையும் அகக்கண்களுக்குள் விரிந்தன. அவனது வார்த்தை, நடந்துகொண்ட விதத்தில் கேலி கிண்டல் இருந்திருக்கவில்லை. உரிமையோடு உறவின் பிசுபிசுப்பில் சொன்னதைப் போன்றே இருந்தது. பலகோணத்தில் அவனை அவள் அலசிப் பார்த்தாள். தன் மீதுள்ள பிரியத்தின் பேரில் இதை அவன் சொல்லியும் நடந்தும் காட்டினான் என்பதை அவள் உணர்ந்தாள். இதென்ன பழிப்பா? போலச் செய்தல் அல்லவா! அவன் நடந்துக்காட்டிய தொனிப்பை மீண்டும் ஒருமுறை கண் முன்னே நிறுத்திப் பார்த்தாள். அவளுக்கும் சிரிப்பே வந்தது.
வீட்டிற்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். பாதத்திற்கு இடையேயுள்ள தூரத்தை சாண் அலகால் அளந்துப் பார்த்தாள். கால்களை கிட்டே, எட்டி எடுத்துவைத்து நடந்தாள். அன்றைய நாள் முழுமையும் நடையாய் நடந்தவளுக்கு உறக்கத்திலும் நடையே நிழலாடியது.
தான் சிறுமியாக இருக்கையில் எப்படி நடந்தேன்? பூப்படைந்ததற்குப் பிறகு எப்படியாக நடந்திருப்பேன்? எனது நடை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில், கல்லூரியில் எப்படி நடந்தேன். இப்பொழுது எப்படி நடக்கிறேன்? எப்படி நடந்தால் நன்றாக இருக்கும்? குழந்தையாக மனதிற்குள் நடை பழகினாள். கையை மெல்ல வீசி, நடை அகலத்தைச் சற்றே சுருக்கி நடந்தால் நன்றாக இருக்குமோ என்று நினைத்தாள். உடம்பு குலுங்காமல் நடக்க முயன்றாள். நடக்கையில் தன் இரண்டு கைகளையும் தன் பின்பகுதிக்குக் கொடுத்து பிட்டம் ஏறி இறங்குவதையும் அதன் அசைவுகளையும் பார்த்தாள். இதுநாள் வரை அவள் நடந்த நடைகள் மெல்ல மறந்து புதியநடை அவளது தலை வழியே கால்களில் இறங்கியது.
காலை மணி எட்டாகியிருந்தது. பேருந்து சரியான நேரத்திற்கு வந்தால் எட்டே முக்கால் மணிக்கு வந்துவிடும். அந்தப் பேருந்தைப் பிடிக்க சீருடை அணிந்து வேகமாகக் கிளம்பினாள்.
“அம்மா நான் போயிட்டு வாறேன்மா…” தாயிடம் பயணம் சொன்னாள்.
பாத்திரங்களைக் கழுவி முடித்து வாசல் கூட்டிக்கொண்டிருந்தவள் கைகளை உதறிக்கொண்டு நிமிர்ந்தாள். முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு சேலையைச் சரிசெய்தவளாய் மகளை நெருங்கினாள்.
“சரி, வா போகலாம்.”
நிர்மலா பெருமூச்சொரிந்தாள் “ நீ எங்கேம்மா வாறேங்கிறே?“
“உன்னை பஸ் ஏத்திவிட்டுட்டு வாறேன்“
நிர்மலா இரு கைகளையும் இடுப்புக்குக் கொடுத்து மூச்சைக் கக்கினாள். “அய்யோ அம்மா, எனக்கேவா. நீ உன் வேலையைப் பாரும்மா. நான் போய்க்கிறேன்“
“ஒனக்குத் துணையாக இருக்கிறதவிட இந்தக் கட்டைக்கு வேற வேலை என்னடி இருக்கு.” என்றவள் மகளை முன்னே நடக்கவிட்டு மகமாயி பின்னே நடந்தாள். அவளது பார்வை மகளின் நடையில் குவிந்தது. நிர்மலா இத்தனை நாட்களில்லாமல் கால்களை அருகருகே எடுத்துவைத்து பெண் நடை நடந்தாள்.
“நிர்மலா..” என்று அழைத்து மகளை நிறுத்தினாள் மகமாயி. அவள் நின்று தாயைத் திரும்பிப் பார்த்தாள்.
“அவன் சொல்றான் இவன் சொல்றான்னு உன் நடையை மறந்து போந்தாக்கோழி மாதிரி நடக்காதே. நல்லா கைவீசி கால்களை நீட்டி எடுத்துவச்சு நட. நீ சாதாரணப்பட்டவளல்ல. போலீஸ்களுக்கு அதிகாரி. அதற்குரிய கம்பீரத்தோட நெஞ்ச நிமிர்த்தி நட..“
நிர்மலா தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடையை மாற்றி அவளுக்குரிய நடையில் நடக்கத் தொடங்கினாள்.