Uncategorizedகட்டுரைகள்

தொழில் தெய்வமா? தொழிலைச் செய்பவர் தெய்வமா?… பகுத-2… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

கடலுக்குள் புதைந்து கிடக்கும் பூம்புகார் துறைமுகப்பட்டினம் என்பது தெரியும். ஆனால் அது பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை எந்த நூலைப் படித்து தெரிந்து கொள்வது? அதை யாராவது எழுதியிருக்கிறார்களா? என்பதை தேடிப்பிடித்து படிப்பதைவிட B.B.C ன் ஆறு நிமிட காணொளி எனது அறிவுக்கு ஐந்து நிமிடத்தில் தீனி போடுகிறது.

இவ்வாறு நூலைப்படித்து அறிந்து கொள்வதற்கு மாற்றாக பல ஊடகங்கள் அதற்கு உதவி செய்கின்றன. அதற்காக நூலைப் படிக்கவேண்டாம் எனச் சொல்லவில்லை. நூலைப்படிப்பவர்கள் நூலைப்படிக்கட்டும். மாற்று ஊடகங்களை பயன்படுத்துவர்கள் அவற்றைப் பயன் படுத்தட்டும் என்பதே என் வாதமாகும்.

பாலை வாங்கி காய்ச்சி உரைஊத்தி தயிராக்கி கடைந்து வெண்ணைய் எடுத்து அதை உருக்கி நெய்யை தயாரிப்பவர்கள் தயாரிக்கட்டும். நேரடியாகவே நெய்யை கடையில் வாங்குபவர்கள் வாங்கட்டும் என்பதே என் வாதம்.

கற்று அறிவைப் பெருக்கவேண்டும். அதேபோல்தான் புசித்து பசியைப் போக்கவேண்டும். படித்து அறிவைப் பெற்றால் என்ன? பார்த்து அறிவைப் பெற்றாலென்ன? இட்லி சாப்பிட்டு பசியைப் போக்கினால் என்ன? இடியாப்பம் சாப்பிட்டு பசியைப் போக்கினால் என்ன?

எல்லாமே காலத்தின் சுழற்சிக்கேற்ற தேவை. இன்று நூலைப்படி என்று கூறுவதைப்போன்று இன்னும் நூறு ஆண்டுகளில் காணொளி பார்க்கச் சொல்லும் காலம் வரலாம். படைப்புக்கள்
எல்லாம் USPல் சேகரிக்கப்பட்டு இன்று பெரிய கட்டிடங்களில் இயங்கும் நூலகங்கள் உறுமாறி USP Centre ஆக ஒரு அறையில் படைப்புக்கள் அடங்கலாம்.

உண்மையை நினைத்துப் பாருங்கள் நீங்கள் உணர்வீர்கள். ஒரு காலத்தில் கணினி என்பது அலமாரி போன்று பெரிதாக இருந்தது இன்று கையடக்கத்தில் வந்துவிட்டதல்லவா. புகைப்படம் எடுக்கும் கருவி எப்படி இருந்தது தெரியுமா? புகைப்படக் கருவியின் பின்புறம் தலையை மூடிக்கொண்டு புகைப்படக்காரர் படம் எடுத்த காலம்போய் நம்மை நாமே கைபேசியில் படம் எடுக்கும் காலம் மாறிவிட்டது. கார்ல் மார்க்ஸ் தத்துவப்படி மாற்றம் ஒன்றுதான் மாறாதது.

அவ்வாறு மாறிய ஊடகத்தை நான் பார்த்ததில் ஒரு திரையிசைப் பாடலைக் கேட்க நேர்ந்தது.

அப்பாடல் நெடுநாளாக என் தலையை உருட்டிக்கொண்டிருந்த விசயத்துக்கு விடையைத் தந்தது. இதுதான் அப்பாடல்.

“செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்”

என்ற பட்டுப்கோட்டையார் பாடல்தான் எனக்கு விடைதந்து உதவியது. ஒவ்வொரு தொழிலைச் செய்பவரும் தெய்வம்தான் என்ற உண்மையை உணர்த்தியது. இப்பாடலில் வரும் சிலவரிகள்,

“பயிரை வளர்த்தால் பலனாகும் -அது
உயிரைக் காக்கும் உணவாகும்”

என்று வருகின்றன.

“கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நாதன்”

என்ற பாபநாசம் சிவனின் பாடலில்
வருவதுபோல் உயிரைக்காக்கும் உணவைத் தரும் உழவரும் கடவுள் அல்லவா? அந்த உழவுத்தொழிலைச் செய்வதற்கும் நிலத்தை பண்படுத்த வேண்டுமல்லவா? அதற்கு கலப்பை வேண்டும். களையெடுக்கவும் அறுவடை செய்யவும் களைக்கொத்தியும் அரிவாளும் வேண்டும்.

இவற்றை செய்து கொடுப்பவர் இல்லையென்றால் உழவுத் தொழிலைச் செய்ய முடியாது. அப்படியானால் எத்தொழில் உயர்ந்தது.

இதைப்போலவே நோய் நொடியினை மருந்து கொடுத்து குணமாக்கும் மருத்துவரும் உயர்ந்தவர் அல்லவா? மருந்து கொடுத்து குணமாக்க அந்த மருந்தை தயாரிப்பவர் உயர்ந்தவர் இல்லயா? மருந்து கண்டுபிடிக்கப்படாவிடில் மருத்துவர் எப்படி நோயைக் குணப்படுத்துவார். பின் எப்படி அவர் உயர்ந்தவர் ஆவார்.

அறுவை சிகிச்சையால் அதனைச் செய்யும் நிபுணர்களால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அறுவைசிகிச்சை செய்ய மிகவும் நுணுக்கமான ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவ்வாயுதங்கள் இல்லாவிட்டால் அறுவைசிகிச்சை என்பதை செய்யவே முடியாது. ஆகையால் அந்த ஆயுதங்களை தயாரிப்பவர்களும் உயர்ந்தவர்களே.

சிலைகளை கடவுளாக்கி தொழும்போது தொழுவதற்கு ஏற்பாடு செய்பவரும் அந்த சிலையை செய்தவரும் உயர்ந்தவர்தானே. இங்கே ஒவ்வொரு தொழிலின் தன்மையும் இன்னொன்றை சார்ந்தே நிற்கின்றன. ஆதலால் எந்த தொழிலும் உயர்ந்ததல்ல. அதுபோல் எந்த தொழிலும் தாழ்ந்ததல்ல.

இங்கே சாதியை உருவாக்கி உயர்வு தாழ்வு ஏற்படுத்தியவர்கள் சாமானியர்கள் அல்ல. இந்த ஆசாமிகள் சாமிக்குள்ளும் சிறுதெய்வம் பெருந்தெய்வம் என்ற வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள். சாமிக்குள்ளும் சைவம் அசைவம் என்ற பிளவையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

இந்த சாமிகளுக்குள் சைவம் சாப்பிடும் கடவுளர் அசைவம் சாப்பிடும் கடவுளரோடு
பெண்கொடுத்து பெண் எடுக்கமாட்டார்கள்.
எடுக்க மாட்டார்களா அல்லது பெண் எடுக்க விடமாட்டார்களா என்பதற்கும்ஆய்வு தேவை.

முருக்கடவுளைப் போன்று காதலித்து மணம் முடித்தால்மட்டுமே சாத்தியம். நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. எங்காவது சிவனுக்கோ விஷ்ணுவுக்கோ துணைவியர் பேச்சியம்மாள் இசக்கியம்மாள் என்று இருக்கிறார்களா? அல்லது மாடசாமிக்கோ கருப்பண்ண சாமிக்கோ விசாலாச்சி மீனாட்சி என்ற துணைவியர் இருக்கிறார்களா?

இதையெல்லாம் சாமிகள் தாமாகவே தீர்மானித்தனரா? அல்லது ஆசாமிகள் சாமிகளை தீர்மானம் எடுக்க வைத்தனரா? அப்படியானால் இந்த கடவுள்களும்
தங்களுக்கென அதிகாரம் எதுவுமற்றவர்களா?

இப்படி கடவுளரையே தன்னிச்சையாக செயல்பட விடாமல் செய்தவர்கள் சேற்றில் தொழில் செய்பவர்களை உயர்ந்தவர்கள் என்று எளிதில் சொல்லிவிடுவார்களா? அல்லது ஆடை கலையாமல் அழுக்குப் படாதவர்களை உயர்ந்தவர்கள் என்பார்களா? எனவே எப்படி ஆராய்ந்து
பார்த்தாலும் உடல் உழைப்பின்றி அழுக்குப்படாமல் இருப்பவர்களே உடல் உழைப்பின்றி அழுக்குப்படாமல் இருப்பவர்களை உயர்ந்தவர்கள் என்று மாற்றியிருக்கிறார்கள் என்பதே உண்மை.

எனவே எந்த தொழிலும் தெய்வமில்லை எந்த தொழிலைச் செய்பவர்களும் தெய்வமுமில்லை. ஆதலால் செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நம் செல்வம் என்பதைப்போல எல்லா தொழில்களும் தெய்வம் என்பதுதான்
உண்மை. இதைத்தானே சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.

இனிமேலாவது எந்தத் தொழிலையும் உயர்த்திச் சொல்லாமலும் எந்த தொழிலையும் தாழ்த்திச் சொல்லாமலும் இருப்போம். அல்லது எல்லா தொழிலையும் அதன் சிறப்பைக் கருதி உயர்வாகச் சொல்வோம். நீங்கள் செய்யும் தொழிலும் சிறப்புடையதே. உங்களை நீங்கள் ஏன் தாழ்த்திக் கொள்கிறீர்கள்.

-சங்கர சுப்பிரமணியன்.

(முற்றும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.