ஆஸி. எதிர்கட்சித் தலைவரின் அகதிகள் விரோதப் போக்கு; பீட்டர் டட்டனின் இனவெறி பேச்சுக்கு நாடளாவிய கண்டனம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
போரில் இருந்து தப்பி வரும் பாலஸ்தீனிய அகதிகளை தடை செய்ய கோரிய அவுஸ்திரேலிய எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனின் (Peter Dutton) பேச்சுக்கு நாடளாவிய ரீதியில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பாலஸ்தீன அகதிகள் தடை :
கொடும் போர் நிலமாக மாறியுள்ள காசாவிலிருந்து வரும் பாலஸ்தீனியர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படக் கூடாது என எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ள கருத்து வெறுக்கத்தக்கதுடன் பல அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் கண்டித்து விமர்சித்துள்ளனர்.
அதேவேளை 7,000 பாலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை நிராகரித்த அவுஸ்திரேலிய அரசு, இஸ்ரேலியர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் பலருக்கு விசாவினை ஆளும் அரசு வழங்கியுள்ளது எனும் தகவல்களும் வெளியாகி உள்ளன.
காஸாவில் நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போரின் கொடுமையால் பலர் அகதிகளாக மீள்குடியேற பல நாடுகளுக்கு விசாவுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆயினும் அவுஸ்திரேலிய விசாவுக்காக பாலஸ்தீனியர்கள் செய்த விண்ணப்பங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.
ஆனால், அதே நேரத்தில் இஸ்ரேல் குடிமக்களுக்கான அவுஸ்திரேலிய விசா விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றில் பாரிய சலசலப்பு:
காசா அகதிகள் விசாக்கள் தொடர்பான பீட்டர் டட்டனின் நிலைப்பாட்டால் ஆஸி நாடாளுமன்றத்தில் பாரிய சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக காசா அகதிகளை அனுமதிப்பதன் மூலம், தொழிலாளர் கட்சி நாட்டைப் பாதுகாப்பற்றதாக மாற்றியதாக எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து குற்றம் சாட்டி உள்ளார்.
1976 லெபனான் உள்நாட்டுப் போரின் பின்னர், லெபனான் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு வந்து பெரும் தவறு செய்ததற்காக மால்கம் பிரேசரின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதேவேளை இனவெறியை நிறுத்துங்கள் என்று பீட்டர் டட்டனிடம் சுயேச்சை எம்பி ஜூலி ஸ்டெகல் கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடுமையான மோதல் வெடித்தது.
பீட்டர் டட்டன் இனவெறி மற்றும் நாட்டைப் பிளவுபடுத்துகிறார் என்று ஜூலி ஸ்டெகல் குற்றம் சாட்டினார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக, போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்களை நிராகரிக்குமாறு அவர் விடுத்த அழைப்பால் எதிர்க்கட்சித் தலைவர் பலத்த கண்டனங்களை எதிர்கொண்டார்.
காசாவில் இருந்து விசா விண்ணப்பங்களை தற்காலிக இடைநிறுத்தத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. திருப்தி அடையும் வரை சரியான பாதுகாப்பு சோதனைகள் இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்த கோரியுள்ளது.
ஆனாலும் முன்னாள் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட அதே செயல்முறைகளை அரசாங்கமும் ASIOவும் பின்பற்றுவதாக தொழிற்கட்சி வலியுறுத்தியது. மேலும் எதிர்க்கட்சி தேசிய பாதுகாப்பு முகமைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டியது.
அக்டோபர் 7 முதல் காஸாவிலிருந்து தப்பிச் செல்லும் பாலஸ்தீனியர்களுக்கு இந்த அரசாங்கம் இதுவரை 2922 விசாக்களை வழங்கியுள்ளது, அவர்களில் 1300 பேர் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். காஸாவுக்கான எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது வருபவர்கள் யாரும் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலுக்கு ஆதரவா ?
இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது போல் 7,000 பாலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா தற்போது நிராகரித்துள்ளது. அரச அறிக்கையின்படி, 10,033 பாலஸ்தீனியர்கள் அவுஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 2,922 விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 7,111 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
போரில் இருந்து தப்ப பல பாலஸ்தீனர்களும் அவுஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்த விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
ஆயினும் இஸ்ரேலிய குடிமக்களின் 235 விசா விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டு, 8,646 விசா விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
ஹமாஸை ஆதரிக்கவில்லை !
அண்மையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் ஹமாஸை ஆதரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி அறிவித்தனர்.
போர் நிகழும் காசாவில் இருந்து வரும் விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் பாலஸ்தீனியர்களின் நுழைவு அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் இக் கூட்டத்தில் கூறியதாக கூறப்படுகிறது.
தமிழ் அகதிகளை தடுத்தவரும் இவரே!
இலங்கையிலிருந்து அகதிகளின் படகுகள் அவுஸ்திரேலியா வரமுயல்வதற்கு தொழில்கட்சியின் இயலாத கொள்கைகளே காரணம் என லிபரல் கட்சியின் தலைவரும் தற்போதய எதிர் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டன் முன்பு தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவிற்கு அதிகளவில் இலங்கையிலிருந்து தமிழ் அகதிகளின் படகுகள் வருவதற்கு ஆளும் தொழில்கட்சி அரசாங்கமே காரணம் என லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டன் முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த பல வருடங்களாக அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரும் இலங்கை கடற்படையினரும் பல படகுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இப்பிரச்சனை அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க பிரச்சினை ஆகும். ஆனால் இந்த பிரச்சினைக்கு அவர்களே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல காலமாகவே இலங்கையில் யுத்தம், பொருளாதார சமூககுழப்பங்களால் அகதிகளாக பெருமளவு மக்கள் வெளியேறினர். ஆயினும் யுத்தம் 2009இல் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் அரசியல் குழப்பநிலை தொடர்கிறது.
அகதிகளின் தொடர் வருகையானது அரசாங்கம் இறைமையுள்ள எல்லைகள் எனற நடவடிக்கையை கைவிட்டமையே பல படகுகள் வரமுயற்சிப்பதற்கு காரணம், தற்போதய அரசாங்கம் தாங்களும் இறைமையுள்ள எல்லைகள் நடவடிக்கையை தொடர்வதாக தெரிவிக்கின்ற போதிலும் அதனை கைவிட்டுவிட்டது எனவும்
பீட்டர் டட்டன் சுட்டிக்காட்டினார்.
தமிழ் அகதிகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது !
ஆகஸ்ட் 2018இல் இலங்கை அகதிகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது என அப்போது அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரான பீட்டர் டட்டன் கூறிய கருத்துக்கள் பெருமளவில் கண்டிக்கப்பட்டது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் பிரவேசிக்கின்ற ஏதிலிகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது என்று, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்தோனேசியாவில் இருபது ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு காத்திருக்கின்றனர் எனக் கூறிய அக்கால உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், இவ்வாறான சூழ்நிலையில், மானஸ்தீவில் உள்ள 20 ஏதிலிகளுக்கு இரக்கம் காட்டி அவர்களை அவுஸ்திரேலிய மண்ணிற்கு அழைத்துவருது மிகப்பெரிய ஆபத்தான தீர்மானமாகும் என
தெரிவித்திருந்தார்.
அவர்களுக்கு இரக்கம் காட்டினால் மீண்டும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஏதிலிகள் அவுஸ்திரேலியா நோக்கி பிரவேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடேஷ் – பிரியா குடும்பம்:
30 ஆகஸ்ட் 2019இல் அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் அவுஸ்திரேலிய நாட்டின் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தமை பலருக்கும் நினைவிருக்கும்.
வானில் பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, நடேஷ் – பிரியா குடும்பம் இந்த நாட்டில் மீண்டும் தரை இறக்கிவிடப்பட்டனர். விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா இவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது.
2018 ஆண்டு மார்ச் மாதம் அதிகாரிகள் இந்தக் குடும்பத்தை அவர்களின் குயின்ஸ்லாந்து வீட்டில் இருந்து பலவந்தமாக வெளியேற்றியபோது அவர்களுக்கு ஆதரவான குரல்கள் அவுஸ்திரேலிய நாடு முழுவதும் எதிரொலித்தன.
அவர்கள் அகதிகள் அல்ல என்று கூறி இவர்கள் வெளியேற்றப்படுவதற்கு ஆதரவான அரசின் நிலைப்பாட்டுக்கு பின்னர் அகதிகள் அங்கீகாரம் கிடைத்தது.
நம் நாட்டின் மூலம் பாதுகாப்பைப் பெறுவதற்கு அவர்கள் உரியவர்கள் அல்லர் என்று உள்ளூர் ஊடகங்களிடம் அப்போதய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்திருந்தார்.
அடைக்கலம் கோரி அந்தக் குடும்பம் விடுத்த விண்ணப்பம் குடியேற்றத் துறை அதிகாரிகளால் விரிவாக ஆராயப்பட்டு நிராகரிக்கப்பட்டது என அவர் கூறியிருந்தார்.
அடுத்தடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடுகளிலும் கணவன் மனைவிக்கும், மூத்த குழந்தைக்கும் அளிக்கப்பட்ட அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆயினும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளான இவ்விடயம், இறுதியில் 2022 இல் குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.