கதைகள்

“கனகர் கிராமம்”….  தொடர் நாவல் அங்கம் – 43… செங்கதிரோன் 

அரசியல் – சமூக – வரலாற்று நாவல்

கோகுலன் கனகரட்ணத்தைப் பார்க்கச் சென்றிருந்த கொழும்புப் பயணத்தை முடித்துக் கொண்டு கோமாரி வந்து சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டிருந்தது. உத்தியோகபூர்வக் கடமைகள் பல காத்திருந்ததால் அவற்றோடு ஒன்றிப்போன கோகுலனுக்குச் சங்கமன்கண்டி-உமிரி வீதியில் குடியமர்த்தப்பெற்ற தஞ்சைநகர் அகதிகளைச் சென்று பார்க்க முடியவில்லை.

அங்கு போகவேண்டுமென்றிருக்கும்போது தஞ்சை நகர் அகதிகளுக்கு ஏதும் பிரச்சனையென்றால் தன்னுடன் தொடர்பு கொள்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த சுப்பையா கோகுலனைத் தேடிக்கொண்டு கோமாரிக் ‘குவாட்டஸ்’ க்கு வந்திருந்தான்.

விசாரித்தபோது சிங்களவரான பொத்துவில் அரசாங்க அதிபர் கோமாரிக் கிராம சேவையாளரான கந்தப்பனுடன் தங்களின் அனுமதியின்றி அரச காணியில் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதையிட்டுத் துருவித் துருவி விசாரித்தாகவும் அதுபற்றித் தான் ‘பொலிஸ்’ சுக்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அறிவிக்கவுள்ளளதாகக் கூறிச் சென்றுள்ளதாகவும் அறிய முடிந்தது.

பொத்துவில் உதவி அரசாங்க அதிபர் ஏற்கெனவே கோகுலனுக்கு அறிமுகமானவர்தான். உடனே அவரைச் சந்திக்கக் கோகுலன் பொத்துவிலுக்குப் புறப்பட்டான். கோகுலன் அவரைச் சந்தித்துக் கனகரட்ணம் எம்.பி சொல்லித்தான் எல்லாம் நடந்தது என்பதை விபரித்துச் சொல்ல அதோடு பிரச்சனை முடிவுக்கு வந்தது. கனகரட்ணம் இப்போது அரசாங்கக் கட்சிப் பக்கம் உள்ள பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததால் எழக்கூடிய அரசாங்க அதிகாரிகளின் சாதகமான பிரதிபலிப்பைக் கோகுலன் நேரடியாக உணர்ந்தான். அரசாங்கத்துடனான செல்வாக்கையும் தன்னைச் சுட்டதனால் தன்மீது ஏற்பட்டுள்ள அனுதாபத்தையும் வைத்து மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகக் கனகரட்ணம் தன்னிடம் கொழும்பில் வைத்துக் கூறியதையும் நினைத்துப் பார்த்தான். அதன் அர்த்தத்தை அனுபவரீதியாகக் கண்டுவிட்டதாக அவனுடைய உள்மனம் உரைத்தது. கனகரட்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியிலேயே இருந்திருந்தால் தஞ்சைநகர் அகதிகள் குடியமர்த்தப்பட்ட விடயத்தை அந்தச் சிங்கள உதவி அரசாங்க அதிபர் எதிர்மறையாகத்தான் அணுகியிருந்திருப்பார்.

1949 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற காலத்திலிருந்தும் பின் 1972இல் தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரசும் இணைந்து ‘தமிழர் கூட்டணி’ யாகிப் பின் ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ யாகப் பரிணமித்த பின்பும் கனகரட்ணத்தின் வார்த்தைகளில் கூறப்போனால் கொடி பிடித்தும் கோஷமிட்டும் செய்யும் ‘சிலுசிலுப்பு’ அரசியலை விடவும் கனகரட்ணம் செய்ய எத்தனிக்கும் யதார்த்தபூர்வமான அரசியல் ‘பலகாரம்’ களைப் படைக்கும் ஆற்றல் உள்ளது என்பதைக் கோகுலன் உணர்ந்தான். மக்களுக்கான அவர்களின் தேவையுணர்ந்த அரசியல் இதுதானென எண்ணினான்.

அரசியலில் தமிழ் மக்களுக்குச் ‘சிலுசிலுப்புத்’ தேவையில்லை. ‘பலகாரம்’ தான் வேண்டுமென்பதைத் தெளிவுடன் தீர்மானித்த கோகுலன் கனகரட்ணம் குணமாகிப் பொத்துவிலுக்குத் திரும்பியதும் அவருடன் தோளோடு தோள் கொடுத்து மக்களுக்காகப் பணி செய்யவேண்டுமென்று சபதம் பூண்டான்.
* * *
கனகரட்ணம் உடல் குணமடைந்து பின் ஜே.ஆர்.ஜயவர்த்தனா அரசாங்கத்தினால் வழங்கப்பெற்ற மட்டக்களப்பு ‘மாவட்ட அமைச்சர்’ பதவியுடன் மட்டக்களப்புக்கு வந்து கல்லடிக் கடற்கரையோரம் அமைந்திருந்த அரசாங்க விடுதியொன்றினைத் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக்கிக்கொண்டார். அருகில் இராணுவ முகாமொன்றிருந்தது அது அவருக்கு மேலதிகப் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் கனகரட்ணத்தைச் சந்திக்கவென்று மட்டக்களப்புக் கச்சேரியில் அமைந்திருந்த மட்டக்களப்பு மாவட்ட அமைச்சரின் அலுவலகம் சென்றான் கோகுலன். கனகரட்ணத்தின் உடல்நிலையைக் கணக்கிலெடுத்து அவர் படிகள் ஏறி இறங்குவதைத் தவிர்ப்பதற்காகத் தரைமாடியிலேதான் அவரது அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. பொலிஸ் பாதுகாப்பும் பலமாகவிருந்தது.

அவரைச் சந்திக்கவென்று பொதுமக்கள் நீண்ட புடலங்காய் போன்ற வரிசையில் நெளிந்தும் வளைந்தும் புடைத்தும் நின்றுகொண்டிருந்தார்கள். கனகரட்ணத்திற்கு மிக நெருக்கமானவனென்றாலும் அதனைக் காட்டிச் சலுகைகள் பெற மனம் ஒப்பாததால் கோகுலன் போய் வரிசையில் தானும் ஒருவனாக நின்றான். மக்களின் வரிசை பாம்பாக ஊர்ந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஒரு கச்சேரி ஊழியன் வந்து கனகரட்ணம் ஐயா உங்களைக் கூட்டிவரச் சொன்னார் என்று கோகுலனை வரிசையைத் தள்ளி முன்னுக்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டான். கனகரட்ணம் கோகுலனைக் கண்டதும் முகம் மலர்ந்து தனக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமரச் சொன்னார். அவரது மேசையின் முன்னால் வேட்டியும் நெஸனலும் அணிந்த முதியவரொருவர் பிரமுகர்த் தோற்றத்துடன் அமர்ந்திருந்தார்.

அவரைக் கோகுலனுக்குக் காட்டி “இவர்தான் கே.சி.நித்தியானந்தா. தமிழர் மறுவாழ்வுக் கழகத் தலைவர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உதவி செய்யிறாங்க. தஞ்சை நகரிலிருந்து வந்து சங்கமன்கண்டியில குடியிருக்கிற சனங்களுக்கு இவர்களிடமிருந்து உதவிகள் பெற்றுக்கொள் தம்பி” என்றார்.

“நான் இவரப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கன்” என்றான் கோகுலன். பின் எழுந்துவந்து கே.சி.நித்தியானந்தா அவர்களை ஒருபுறம் அழைத்துப் போய் எல்லா விபரங்களையும் அவரிடம் கோகுலன் எடுத்துச் சொன்னபோது எல்லாவற்றையும் அக்கறையோடு கேட்ட அவர் கொழும்பு சென்று உதவுவதாகக் கூறிச்சென்றார்.

கோகுலன் கே.சி. நித்தியானந்தா குறித்து நிறையவே கேள்விப்பட்டிருந்தான். அவர் அனுபவம் மிக்க தொழிற்சங்கவாதி. இடதுசாரிப் போக்குடையவர். பிரதமர் ஜே.ஆர்.ஜயவர்த்தனாவைக் கூடத் தொலைபேசியில் ‘ஹலோ ஜே.ஆர்’ என்று அழைக்குமளவுக்கு அவரோடு நெருங்கிய ஊடாட்டம் உடையவர். 1977 இனக் கலவரத்தின்போது அரசாங்க இயந்திரமே அலட்சியமாக இருந்தபோது கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அடைக்கலம் புகுவதற்குத் தானே முன்னின்று கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அகதி முகாமைத் திறந்தார். அந்த அகதி முகாமில் தொண்டர்களாக உமா மகேஸ்வரன் – ஊர்மிளா – மண்டூர் மகேந்திரன் – காரைதீவு கந்தசாமி ஆகியோர் பணிபுரிந்தனர். டக்ளஸ் தேவானந்தா கே.சி.நித்தியானந்தா அவர்களின் பெறாமகன்.

இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிக் கப்பல் மூலம் கொழும்பிலிருந்து வடக்கு – காங்கேசன்துறைக்குப் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். ‘லங்காராணி’ என அழைக்கப்பட்ட கப்பலில் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த அருட்பிரகாசம் என அழைக்கப்பட்ட அருளரும் அதில் பயணித்தார். இத்தகவல்கள் முழுவதையும் மண்டூர் மகேந்திரனின் மூலமும் தனது ஒன்றுவிட்ட சகோதரனுமான காரைதீவுக் கந்தசாமி மூலமும் கோகுலன் அறிந்திருந்தான். கே.சி.நித்தியானந்தா அவர்களுடன் பேசிவிட்டு மீண்டும் கனகரட்ணத்திடம் சென்றபோது அவருக்கு பக்கத்திலிருந்த நாற்காலியில் மீண்டும் அமரச் சொன்னார்.

தன்னைச் சந்திக்க வந்த பொதுமக்களின் பிரச்சனைகளைக் கோகுலனிடம் சொல்லும்படியும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதைத் தனக்குக் கூறும்படியும் பாரிய சுமையொன்றைக் கோகுலனின் தலைமீது தூக்கி வைத்தார். தவிர்க்க முடியாமல் அச்சுமையைத் தூக்கிச் சுமந்துமுடித்து கோகுலன் கோமாரி திரும்ப அன்று நள்ளிரவாகிவிட்டது.
* * *
ஒரு தடவை பாராளுமன்ற அமர்வுக்குக் கொழும்பு போய் வரும்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் செல்லச்சாமியை அழைத்தக் கொண்டு கோமாரிக்கு வந்தார் கனகரட்ணம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான் ஜே.ஆர். ஜயவர்த்தனா அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்தார். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆறில் ஜந்து பங்குப் பெரும்பான்மையுடன் வெற்றிவாகைசூடி ஆட்சியமைத்த ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பிரதமராகப் பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 1978 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலே அதிகாரம் படைத்த ஜனாதிபதி முறைமையைக் கொண்ட புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றி இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அப்போது பதவி மாறியிருந்தார். தஞ்சைநகரிலிருந்து இடம்பெயர்ந்து சங்கமன்கண்டியில் குடியமர்த்தப்பட்டவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மூலம் உதவிகள் பெற்றுக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் கனகரட்ணம் செல்லச்சாமியை அழைத்துவந்து அந்த அகதிகள் குடியமர்த்தப்பட்ட இடத்தைக் காண்பித்தார்.

அகதிகளாக வந்த தஞ்சைநகர் மக்களின் எதிர்கால இருப்பின்மீது கனகரட்ணம் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார் என்பதைக் கோகுலன் எண்ணிப் பார்த்தான். சேவை செய்வதே ஆனந்தம் எனச் செயற்படும் ஓர் அரிதான அரசியல்வாதியைப் பொத்துவில் தொகுதியும் அம்பாறை மாவட்ட தமிழர்களும் பெற்றுக்கொள்வதற்குத் தனது பங்களிப்பும் இருந்ததை எண்ணிக் கோகுலன் பெருமிதமடைந்தான். அதேவேளை அம்பாறை மாவட்டத் தமிழர்களின் நிலைமையறியாது அவர்மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்களின்மீது அவனுக்கு ஆத்திரம் எழுந்தது. அது ஒரு அவசரமான அறிவுபூர்வமற்ற சிறுபிள்ளைத்தனமாகவே அவனுக்குப்பட்டது. அவர் மயிரிழையில் உயிர்தப்பிக் குணமடைந்தபோதிலும் அதன் தாக்கத்தினால் அவரது ஆயுட்காலம் சுருங்கிவிடக்கூடாதே என்றும் ஏங்கினான்.

அரசாங்கத் தரப்புக்குத் தாவியதற்காகக் கனகரட்ணம்மீது துப்பாக்கிச் சூடுநிகழ்த்தி அவரைக் கொலை செய்யத் தீர்மானித்தவர்கள், உண்மையில் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் அரசியல் வரலாற்றையும் அவர்கள் அனுபவிக்கும் பாரபட்சங்களையும் அவர்களது சமூகபொருளாதாரப் பிரச்சனைகளையும் பற்றிய பூரணமான அறிவுபடைத்தவர்களாக இருக்கமுடியாதென்றே கோகுலன் எண்ணினான். அவர்மீதான கொலைத் தாக்குதல் முடிவு வெறுமனே உணர்வுபூர்வமானதே தவிர அது அறிவுபூர்வமானதொன்றல்ல என்ற தீர்மானத்தில் கோகுலன் அசையாது நின்றான்.

எத்தகைய சங்கடங்கள் எழுந்தாலும் கனகரட்ணத்தின் பதவிக் காலத்தில் அம்பாறை மாவட்டத் தமிழர்களைச் சமூகபொருளாதார ரீதியாகக் கைதூக்கி விடவேண்டுமென்ற வேட்கை கோகுலனின் மனதில் விசுவரூபம் எடுத்து வளர்ந்தது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்காவினால் ஏற்படுத்தப்பெற்ற ‘ஆள்புலசிவில் பொறியியல் அமைப்பு’ கலைக்கப்பட்டு அவ்வமைப்பு கையாண்ட சிவில் பொறியியல் வேலைகள் தனித்தனியாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழும் நெடுஞ்சாலைகள் திணைக்களத்தின் கீழும் உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழும் கைமாறின.

கோகுலன் தனது முன்னைய திணைக்களமான நீர்ப்பாசனத் திணைக்களத்தில் உள்வாங்கப் பெற்றான். கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகம் தனது பெயர்பலகையை மீண்டும் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் என மாற்றிக் கொண்டது.

திருக்கோவிலிருந்து பொத்துவில் செல்லும் பிரதான வீதியில் காஞ்சிரங்குடாவில் றூபஸ்குளத்துக்குச் செல்லும் பாதை பிரிகிறது. அப்பாதை வழியே சென்று அது முடிவுறும் இடத்தில் இடது பக்கமாகத் திரும்பி கிறவல் வீதி வழியே கொஞ்சத்தூரம் சென்றால் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் அமைந்திருந்தது. ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபைக் காலத்தில் கட்டப்பட்ட குளம் அது. ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபை கலைக்கப்படும்போது அக்குளத்தின் நிர்மாணம் நிறைவுற்றிருக்கவில்லை. அதனைக் கல்முனை நீர்ப்பாசனத் திணைக்களம் பொறுப்பேற்றுத்தான் மீதி வேலைகளை முடித்தது.

ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையின் திட்ட எல்லை சங்கமன்கண்டி வரை பரவியிருந்தது. ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களின் அக்கறையின்மை காரணமாகவும் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கற்ற காரணத்தாலும் அக்கரைப்பற்றுக்குத் தெற்கெ தமிழ்மக்களே செறிந்து வாழ்ந்தமையாலும் ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் ஏனோதானோ என்றுதான் நடந்து கொண்டிருந்தனர். கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த எம்.எஸ்.காரியப்பரும் சம்மாந்துறையைச் சேர்ந்தவரும் பின்னாளில் அவரது மகளைப் பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அப்துல் மஜீத் திருமணம் செய்து மஜீத்தின் மாமனாராகவும் மாறிய இஸ்மாயில் ‘எஞ்சினியரும்’ கூட இந்த ஏனோ தானோ என்ற போக்குக்கு ஏனையவர்களுடன் சேர்ந்து காரணகர்த்தாவாகவிருந்தார்கள். அதனால் வேண்டா வெறுப்பில் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் சிறிதாகவே நிர்மாணிக்கப்பட்டது. நிந்தவூர்க் களியோடைப் பாலத்திற்கு அப்பால் சங்கமன்கண்டிவரை ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையிடமிருந்து குறைவேலைகளுடன் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்தைக் கல்முனை நீர்ப்பாசனத் திணைக்களம் பொறுப்பேற்று அக்குளத்தின் வேலைகள் கோகுலனின் பொறுப்பிலேயே நிறைவு பெற்றன. அன்றிலிருந்தே அக்குளத்தை உயர்த்திப் பாரிய நீர்த்தேக்கமாக எதிர்காலத்தில் நிர்மாணிக்கவேண்டுமென்பது கோகுலனது நீண்டநாள் எண்ணமாயிருந்தது.

கனகரட்ணத்திடம் ஒருநாள் கோகுலன் இவ்விடயங்களை எடுத்துச் சொன்னபோது கொஞ்சமும் யோசியாமல் “தம்பி! இக்குளத்த உயர்த்திக் கட்டுவதற்கு நீர்ப்பாசன அமைச்சரக் கேட்டுக் கொள்ளும் விபரமான கடிதமொன்ற உடன ஆங்கிலத்தில தயார் செய். இந்தமுற கொழும்பு போகும்போது நீர்ப்பாசன அமைச்சர் காமினி திசாநாயக்காவிடம் உன்னக் கூட்டிற்றுப் போவன். அப்போது அவரிட்டக் கடிதத்தக் கையளிப்பன். நீதான் அவருக்கு இத்திட்டத்தப் பற்றி விளக்கிச் சொல்ல வேணும்” என்றார்.

“நான் உடனே கடிதத்தத் தயாரிக்கிறன். ஆனா அமச்சரிட்ட நான் நீர்ப்பாசனத் திணைக்களத்தில ரி.ஏ. ஆக வேல செய்யிரண்டு அங்க வச்சிச் சொல்லிராதீங்க” எனக் கோகுலன் எச்சரிக்கையுடன் கூறினான். “நான் உன்ன என்ர செயலாளர் எண்டுதான் சொல்லுவன் பயப்படாத, உன்னக் காட்டிக் குடுக்கமாட்டன்” என்று சொல்லிச் சிரித்தார்.
* * *
கனகரட்ணம் ஒருநாள் மாலை திடீரென்று கோமாரிக் ‘குவாட்டஸ்’ க்கு வந்தார். தனியே அவர்தான் காரையும் ஓட்டி வந்தார்.
“தம்பி! நாளைக்குக் காலம கொழும்புக்குப் புறப்பட வேணும். ஆயத்தமாயிரு. அமைச்சர் காமினி திசாநாயக்காவச் சந்திச்சுப் பேசப் போறம். கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளக் கடிதம் ‘ரெடி’ தானே” என்றார்.

“கடிதத்தக் கையெழுத்தில தயாரிச்சித்தன். ‘ரைப்’ பண்ணவேணும்” என்று இழுத்தான் கோகுலன்.

“இரவைக்குக் கோமாரியில உன்னோட தங்கி நாளைக்குக் காலயில உன்னயும் என்ர காரில கூட்டிக் கொண்டு கொழும்புக்குப் போறதான் என்ர ‘பிளான்’. இன்றிரவைக்குக் கடிதத்த ‘ரைப்’ பண்ணி எடுப்பம்” என்றார்.

“கொஞ்சம் பொறுங்க” என்று குவாட்டஸ்சின் உள்ளே சென்று தனது பயணப்பையில் கொழும்புக்குக் கொண்டுபோகவேண்டிய உடுப்பு மற்றும் ஏனைய தேவையான சாமான்களையும் அவசர அவசரமாக எடுத்து வைத்த கோகுலன் வெளியே வந்து “சந்திரநேருவின் வீட்டுக்குப் போவம் அங்கதான் இண்டைக்கு இராத் தங்கல். காரச் சந்திரநேருவின் வீடடுக்கு விடுங்க” என்றான்.

சந்திரநேரு தம்பிலுவில் அறப்போர் அரியநாயகத்தின் மூத்த மகன். கோகுலனின் நீண்ட கால நெருங்கிய நண்பன். கப்பலில் ‘கப்டன்’ ஆக வேலை செய்பவர். விடுதலையில் வந்து நிற்கிறார். சந்திரநேரு விடுதலையில் கோமாரியில் வந்து நிற்கும் காலங்களில் கோகுலன் தனது ‘குவாட்டஸ்” சில் தங்காமல் சந்திரநேருவின் வீட்டில் தங்குவதுதான் வழக்கம். சந்திரநேருவின் வீடு கோமாரியிலிருந்து பொத்துவில் செல்லும் பிரதான வீதியில் கோமாரிப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் வலதுபுறம் ஊரின் ஒதுக்குப் புறமாக அமைந்திருந்தது. சுற்றுச்சூழலில் பற்றைக் காடுகளும் சேனைப் பயிர்ச்செய்கைப் பூமிகளும் பாசனத்திற்குப் பருவ மழையை நம்பிச் செய்கை பண்ணப்படும் வானம்பார்த்தபூமியென வர்ணிக்கப்பெறும் ‘மானாவரி’ வயல் நிலங்களும் இயற்கை அணிசெய்யப் பாதையோரம் அமைந்திருந்தது சந்திர நேருவின் வீடு.

சந்திநேருவிடம் வெளிநாட்டிலிருந்து கொணர்ந்த ஒருநல்ல தட்டச்சுப் பொறியும் இருந்தது. கோமாரியில் கோகுலனின் கீழ் வேலை மேற்பார்வையாளாராகப் பணிபுரியும் பிராங்ளினுக்குத் தட்டச்சு செய்யத் தெரியும். வரும்போது கோகுலன் பிராங்கிளினையும்தான் கனகரட்ணத்தின் காரில் கூட்டி வந்திருந்தான்.

சந்திரநேருவின் வீட்டில் அவர் கப்பலிலிருந்து கொண்டுவந்திருந்த உயர்தர வெளிநாட்டு ‘விஸ்கி’ ப் போத்தலைத் திறந்து நேரம் போவதற்காகக் கோகுலனும் சந்திரநேருவும் கனகரட்ணமும் மெல்லிதாகச் சுவைத்தபடி உரையாடிக் கொண்டிருக்க பிராங்ளின் கடிதத்தைத் தட்டச்சு செய்யத் தொடங்கினான். சந்திரநேருவின் மனைவி செல்வமணி குசினிக்குள் எல்லோருக்கும் இரவுணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார். கடிதம் தட்டச்சு செய்யப்படும் ஓசைகளுக்கிடையில், சந்திரநேருவின் வீடு அமைந்த இடம் சூழ பற்றைக்காடுகளும் சேனைப்பயிர்களும் நிறைந்த இடமாயிருந்தபடியால் பலதரப்பட்ட விலங்குகளினதும் பறவைகளினதும் ஒலிகளும் இணைந்து இயற்கையான ஓர் ‘இசைமாலைப் பொழுதை’ அரங்கேற்றிக் கொண்டிருந்தது. சந்திரநேருவின் மனைவி நல்ல சமையல் வல்லுனர். அவருடைய கைவண்ணம் குசினிக்குள்ளிருந்து மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. இடையிடையே வந்து இறால் பொரியல் – நண்டுப்பால்ப் பொரியல் – மீன் பொரியல் – நாட்டுக் கோழி இறைச்சிக் குழம்பு என்று ‘டிஸ்’களைக் கொணர்ந்து ஒன்று மாறி ஒன்றாக அவர்கள் முன் வைத்துக் கொண்டேயிருந்தார். அந்த ரம்மியமான சூழலில் கோகுலனும் சந்திரநேருவும் கனகரட்ணமும் வெளிநாட்டுக் ‘கிளாஸ்’ களில் ஊற்றப்பட்ட வெளிநாட்டு ‘விஸ்கி’த் துளிகளை உறிஞ்சியும் உமிஞ்சியும் உள்ளிழுத்தபடியே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் – தமிழர் அரசியல் – பொத்துவில்த் தொகுதியின் அபிவிருத்தி – அம்பாறை மாவட்டத் தமிழர்களின் எதிர்காலம் எனப் பலதையும் பத்தையும் அலச ஆரம்பித்தார்கள்.

உரையாடலின் ஒரு கட்டத்தில் கனகரட்ணம் சொன்னார். “தம்பி! தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் வேறு – தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் வேறு. இப்ப உள்ள தமிழ் எம்.பி மார்கள் எல்லாருக்கும் அடுத்த சந்ததியைவிட அடுத்த ‘எலக்சன’ப் பற்றித்தான் அக்கற. தமிழர்களுடைய போராட்டத்திற்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் அரசியலுக்கும் பாரிய வித்தியாசம். அதுதான் நான் கூட்டணியிலிருந்து வெளியில வந்தநான். தம்பி! நேரு உன்ர அப்பா அரியநாயகம் உண்மையில பாடுபட்ட ஒரு ஆள். தமிழரசுக் கட்சி நடத்தின திருமல யாத்திரைக்குத் திருக்கோவிலிருந்து போன அணிக்கு அவர்தான் தலம தாங்கிப் போனவர். அதனாலதான் அவருக்கு அறப்போர் அரியநாயகம் எண்ட பேர்வந்த” என்றார்.

சந்திரநேருவுக்குத் தனது தந்தையைப் பற்றிக் கனகரட்ணம் அவ்வாறு கூறியது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்பது அவரது முகபாவனைகளிலிருந்து வெளிப்பட்டது.

அப்போது கோகுலன் குறுக்கிட்டான்.

“அந்தத் திருமல யாத்திரையில திருக்கோவிலச் சேர்ந்த இராசையாவும் போனவர். ‘பஸ்’ டிரைவர் ஆக வேல பாத்தவர். ஆள் ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கழுத்தச் சுத்தி எப்பவும் ஒரு சிவப்புச் சீலத் துண்ட சால்வ மாதிரிப் போட்டிருப்பார். திருமல யாத்திரையில் அவரே கட்டி அவரே பாடிய பாட்டொண்டும் பாடப்பட்டது” என்று கூறிய கோகுலன ; உள்ளே போயிருந்த ‘விஸ்கித்’ துளிகள் அளித்த உற்சாகத்தில் அந்தப் பாட்டைக் குரலெடுத்துப் பாடத் தொடங்கினான்.

“குலை காட்டும் செங்குரும்பை முலையாள் வள்ளி
கோலமணித் தோளுறையும் குறத்தி நேசா!
மலைநாட்டுத் தமிழர்களின் மானம் போக்கி
மாந்தரிலே இழிவுடைய மாந்தர் ஆக்கி
சிலைகாட்டும் பொம்மைகள் போல் செய்துவிட்டார்
சிங்களத்தார் …… அவர் முன்னே சினந்து பொங்கி
கொலை காட்டும் வேலேந்தி வாருமையா
குலவுதிருக் கோயிலுறை குமரவேளே!”

எண்சீர் விருத்தங்களான இலக்கிய நயம் கொண்ட காவடிப் பாடலாய் இராசையா கட்டிப் பாடிய பாட்டைக் கோகுலன் கணீர் என்ற குரலில் பாடி முடித்தான். தட்டச்சுச் செய்து கொண்டிருந்த பிராங்ளின் தன் வேலையைத் தற்காலிகமாக நிறுத்தி கோகுலன் பாட்டில் நனைந்தான்.கோகுலன் பாடத் தொடங்கியதும் குசினிக்குள் நின்றிருந்த சந்திரநேருவின் மனைவி குசினிக்குள்ளிருந்து ஓடிவந்து அவர்களுக்கு அருகில் நின்று பாட்டைக் கேட்டு இரசித்துச் சிரித்துக் கொண்டு மீண்டும் நளபாகத்தைக் கவனிக்கச் சென்றார். சந்திரநேரு மெல்லிசாகக் கைகளைத் தட்டித் தனது சந்தோசத்தைக் காட்டினார். “இவ்வளவு நேரமும் ‘பாட்டிலில்’ நனைந்தோம். இப்போது நல்லதொரு பாட்டில் நனைந்தோம்” என்று சந்தோசத்தில் எதுகை மோனையில் சந்திரநேரு சொல்லிச் சிரித்தார்.

கனகரட்ணம் ‘தம்பி’! இந்தப் பாட்டெல்லாம் உனக்கெப்படித் தெரியும். அந்நேரம் நீ சின்னப் பொடியனாகத்தானே இரிந்திரிப்பாய்” என்றார்.
அதற்குக் கோகுலன் “கவிஞர் காசி ஆனந்தன் பிறகொரு நாள் எனக்குச் சொன்னவர்.” என்று பதில் சொன்னான்.

“திருமல யாத்திர மட்டுமில்லத் தம்பி! அதுக்குப் பிறகு தமிழரசுக் கட்சி நடத்தின சத்தியாக்கிரகத்துக்கு இந்தப் பகுதியிலிரிந்து ஆட்கள மட்டக்களப்புக் கச்சேரிக்குக் கொண்டு போனவர் அரிய நாயகம். அப்ப அம்பாறை மாவட்டமும் இல்ல. அம்பாறக் கச்சேரியும் இல்ல. மட்டக்களப்புக் கச்சேரி வாசல மறிச்சுத்தான் சத்தியாக்கிரகம் நடந்தது” என்றார் கனகரட்ணம்.
இந்தச் சம்பாஷணைக் கட்டத்தில் சற்றுத் தூரத்தில் அறுபதாம் கட்டைப் பக்கமிருந்து யானைபிளிறும் சத்தம் காற்றில் கலந்துவந்து காதில் விழுந்தது. யானை பிளிறும் சத்தம் அவர்களது ‘சம்பாஷணை’யில் ஓர் இடைவேளையை ஏற்படுத்திற்று. அந்த இடைவேளையில் காலியாயிருந்த ‘கிளாஸ்’ களைச் சந்திரநேரு ‘விஸ்கி’ யால் நிரப்பினார்.

(தொடரும் …… அங்கம் – 44)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.