“நெஞ்சூடு”…. சிறுகதை – 80… அண்டனூர் சுரா
அப்பா இறந்துவிட்டிருந்தார். எத்தனை மணிக்கு இறந்தாரோ, அச்செய்தி எனக்குத் தெரியவருகையில் மணி மூன்று, மூன்றரையாக இருந்தது. இச்செய்தியை எனக்குச் சொன்னவன் என் உடன் பிறந்த தம்பி. இச்செய்தியை எப்படிச் சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. மனிதனுக்கு அழுகை, விம்மல், சிணுங்கல் கொடுத்திருப்பது இதுபோன்ற செய்தியைப் பகிர்வதற்காகத்தான். இது தெரியாது இச்செய்தியைச் சொல்கிறேன் என்கிற பெயரில் காதிற்குள் கொட்டியிருந்தான்.
“அண்ணே, அப்பா செத்திருச்சுண்ணே,…” எனச் சொல்லி நிறுத்தியவன் பெருமூச்சொரிந்தான். அதன் பிறகான நொடிகள் எங்கள் இருவருக்குமிடையில், வெற்று மூச்சாக கழிந்தன..
எனக்கு மூன்று அப்பாக்கள். என் அப்பாவுக்கு நேர் மூப்பு மற்ற இருவரும். அவர்களுக்கு மொத்தம் பதினான்கு பிள்ளைகள். அத்தனை பேரும் மூவரையும் அப்பா என்றே அழைத்துவந்தோம். எந்த அப்பா என்று எதற்காகவேணும் குறித்துக் கேட்டால் பெரியப்பா, நடுஅப்பா, சித்தப்பா என்று சுட்டினோம். வெள்ளைச்சாமி, வைத்திலிங்கம், சுப்பையா. மூவரையும் ஊர், தெருக்கள் வெள்ளையன், வைத்தி, சுப்பன் என்று பெயர்வைத்து அழைத்தார்கள். எங்கள் குடும்பத்தின் அஞ்சல் முகவரி வெள்ளைச்சாமிதான். நாலெழுத்து படித்தவர். குடும்பத்தின் தலையாரி அவராகவே இருந்தார். அவரது சாட்டைக்குச் சுற்றும் பம்பரமாக நாங்கள் இருந்தோம். தம்பிப் பிள்ளைகளாக இருந்தாலும் எங்களை அவர் பிள்ளையாகவே பாவித்தார்.
நான் வீடு நோக்கி கிளம்புகையில் எனக்குள் அச்சுச் சுருளாக ஒரு கேள்வி எழுந்தது. ‘இறந்தது எந்த அப்பா?’ என்கிற கேள்வி அது. மூவரில் இரண்டு பேரை வயோதிகம் கட்டிலில் படுத்தப் படுக்கைக்குத் தள்ளியிருந்தது. துக்கச் செய்தியை என் மனைவி, உறவினர், மாமியார் வீடு, என் சக ஊழியர்,..இவர்களிடம் தெரிவிக்க இறந்தது யார் என்று சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. சற்றே வண்டியை ஓரமாக நிறுத்தி அக்காவிடம் தொடர்புகொண்டேன். எங்கள் குடும்பத்திற்கு மூத்தவள் அக்காதான். பக்கத்து ஊரில் திருமணம் முடிக்கப்பட்டிருந்தாள். அவளது அலைபேசி அழுகுரலும் விம்மலுமாக இருந்தது. “தம்பி வாடா, அப்பா செத்துப்போயிருச்சுடா.”
எந்த அப்பா என்று கேட்க தைரியமற்றவனாய் பந்தத்தைப் பிரிக்க விரும்பாது அவளது அழுகையைத் தேற்றி அலைபேசியை அணைத்தேன். மூன்று அப்பாக்களும் என் கண் முன்னே விரிந்தார்கள். மூன்று அப்பாக்களில் சுப்பையா என் இரத்தத்தின் அப்பாவாக இருந்தார். அவர்மீது அன்பும் அவருக்கு நேர் மூத்தவர் வைத்திலிங்கம்மீது பாசமும் எல்லாருக்கும் மூத்தவரான வெள்ளைச்சாமிமீது மரியாதையும் கொண்டவனாக இருந்தேன். மூவரில் படித்தவர், ஊர் உலகம் தெரிந்தவர் மூத்தவர் வெள்ளைச்சாமிதான். இவரது பேச்சையும், கிழித்த கோட்டையும் தாண்டாதவர்களாக அவரது இரண்டு தம்பிகளும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளும் இருந்தோம். ‘இறந்தவர் மூத்தவராகத்தான் இருக்க வேணும்’ என்று நினைத்தவனாய் வாகனத்தை விரட்டினேன்.
அவருக்கென்று ஒரு சைக்கிள் இருந்தது. அதைக்கொண்டு, உலகின் எந்த மூலைக்கும் சென்று வருபவராக இருந்தவர். வயோதிகம் தலை வழியே கால்களுக்குள் இறங்கியதும் படுத்தப் படுக்கையாகி விட்டார். மூன்று ஆண்டுகளாக ஒரே படுக்கைதான். யாரேனும் தலைக்கும் முதுகுக்கும் கைக்கொடுத்து தூக்கிவிட்டால் சற்றுநேரம் குந்தியிருப்பார். தேங்காய் நார்க்கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்ததில் அவரது ரெட்டைக் குருத்து முதுகில் கயிற்றுத் தடமும் கயிற்றின்மேல் விரித்த போர்வையின் தடமும் ஒட்டிக் கிடக்கும்.
நான் பணியின் நிமித்தமாக வெளியூரில் தங்கிவிட்டிருந்தேன். மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்குச்செல்லும் என்னிடம் அத்தனை வாஞ்சையுடன் நலம் விசாரிப்பார். என் மனைவி, மகன், மகள் இவர்களை விசாரித்து எங்கே வேலை பார்க்கிறாய், சாப்பிட்டாயா, இரவு தங்கியிருந்திட்டு போறீயா, உடனே போகணுமா, ஊர் நடப்புகள், கோவில் கட்டி பூர்த்தியாகாமலிருக்கும் வேலை, எவ்ளோ சம்பளம்,.. வரைக்கும் விசாரிப்பார்.
நான் வீட்டுக்குச் சென்றால் அவருக்கும் அருகில் அமர்ந்து பேசுவது எனக்கு இளைப்பாறுவதைப் போலிருக்கும். அவருக்கு அவ்வபோது அவரது நெஞ்சுக்கூட்டை உருக்கி வாய் வழியே கசடாக்கி வெளியேற்றும்படியான இருமல் வரும். இதையே பனி காலத்தில் ஈரல் வெளியே வந்துவிடும்படியாக இருமுவார். அவரது இருமல் என் நெஞ்சின் தாழ்வாரத்தைத் தைப்பதாக இருக்கும். இறந்திருப்பது அவராகத்தான் இருக்குமென்று, அவர் குறித்த நினைவுகளுடன் வீடு வந்தடைந்தேன். அவர் வைத்த வேப்பமர கிளையில் ஒரு கரிக்குருவி துக்கத்துடன் அமர்ந்து இருந்தது.
வீட்டின் நெடுங்கடையில் ஊர்ப்பெண்கள் குழுமியிருந்தார்கள். வாசலில், ஊர் ஆண்கள் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றார்கள். நான் அவர்களை விலக்கிக்கொண்டு கட்டிலைப் பார்த்தேன். நான் நினைத்தது சரியாகவே இருந்தது. கட்டிலில் அப்பா வெள்ளைச்சாமி, படுத்தப்படுக்கையாக வீட்டின் மேற்கூரையைப் பார்த்தவாறு இறந்திருந்தார். அவரது கைக்கால்கள் விடைத்து, அவர் ஊன்றி நடக்கும் குச்சியைப் போல ஆகிவிட்டிருந்தன. வாய் ஆ…வென்று திறந்திருந்தது. மார்பு மேலே உன்னிப் புடைக்கையில் உயிர் பிரிந்திருக்க வேணும். வயிற்றில் ஆழமான பள்ளம் விழுந்திருந்தது.
அப்பா, கறி மீன், கருவாடு,.. என்று விரும்பிச் சாப்பிடுகிறவர். ஒரு கவளச்சோறு தொண்டைக்குள் இறங்கவேண்டுமெனில் கருவாட்டின் வாடையேனும் அவருக்கு வேண்டும். ஆட்டுக்கால் சூப், நெத்திலி மீன், முட்டை,.. ஆக்கிக்கொடுத்திருந்தால் இன்னும் ஓரிரு வருடம் உயிருடன் இருந்திருப்பார். கவிச்சி சாப்பிடாமை அவரது உடல் அத்தனை வேகமாக மெலிவதற்கு காரணமாக இருந்தது.
அவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன். நான்கு மகள்களையும் நல்ல இடத்தில் கல்யாணம் முடித்து, ஒரு மகனுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தார். கார்த்திகை மாதம் என்பதால் மகன் சபரிமலை ஐயப்பனுக்காக மாலை அணிந்திருந்தான். முப்பது நாட்கள் வீட்டில் கறி, மீன், கருவாட்டுக் கவிச்சி புழங்காது தனிப் பாத்திரத்தில் சமைத்துக் கொடுப்பவளாக பெரியம்மா இருந்தாள். அப்படியான விரதக் காலத்தில் அப்பா உடல் மெலிந்து நலிவடைந்து போனார்.
ஒரு வாரமாக சாப்பாடு இல்லை. சாப்பாடு கொடுக்க எழுப்பினால் அப்பா மெல்ல கண்களைத் திறந்து, ‘என்னடிக் கொழம்பு’ எனக் கேட்டிருக்கிறார். சாம்பார், புளிக்குழம்பு, ரசம்,..என்று ஏதேனும் ஒன்றைச் சொல்லிக்கேட்கையில், அவர் வேண்டாமென்று முகத்தைத் திருப்பிக்கொண்டிருக்கிறார். இப்படியே பத்து நாட்கள் கழிந்ததில் அவரது உடம்பு மேலும் சொடுங்கி இறந்துவிட்டிருந்தார்.
“ரெண்டு மணிக்குப் பார்க்கையில் அவர் நல்லாதான் இருந்தார்.”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னே பார்க்கிறப்ப, வாசலப் பார்க்க கிடந்தாரே.”
“இப்பதான் உயிர் போயிருக்கணும்.” அண்டை வீட்டார்கள் பேசிக்கொண்டது, அழுகுரலினூடே கேட்டது.
அவருக்கும் அவரது தம்பிகளுக்குமாக பதினான்கு பிள்ளைகள் இருந்தோம், அம்மா, பெரியம்மாக்கள் என மூன்று பேர், இவ்வளவு பேர் இருந்தும் அவரது உயிர் பிரிகையில் கூடவே இருந்து கவனிக்க முடியாத குற்றம் என்னைப் பிசைந்தெடுத்தது. அவரது உயிர் பிரிவதற்கு முன்பு யாரையெல்லாம் நினைத்தாரோ அவரது வாய் திறந்திருந்தபடி உயிர்ப் பிரிந்ததைப் பார்க்கையில் அவருக்குத் தண்ணீரோ, பாலோ கொடுத்திருக்க வேண்டும் என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அப்பாவைக் கட்டிலுடன் தூக்கிவந்து வாசலில் வைத்து குளிப்பாட்டினோம். அவரது தும்பைப்பூ தலைமயிர் நெற்றியில் சரிந்து ஒட்டிக்கிடந்தது. தலையில் ஊற்றியத் தண்ணீர் வயிற்றுப் பள்ளத்தில் நிரம்பி வழிந்தது. நெஞ்சுக்கூடு வீங்கி, குறுக்குநெடுக்கு எலும்புகளாக இருந்தன. “மாத்துக்கென எடுத்த வேட்டியை, கோடி வேட்டியாகப் போடுறேனே அப்பா…” என்று அக்கா அப்பாவைக் கட்டிப்பிடித்து அழுது குலுங்கினாள். அப்பா கொஞ்சக்காலம் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிறகு காங்கிரஸிலும் இருந்தவர். இரண்டு துண்டுகளையும் அவரது தலையில் ‘உருமாக்கட்டு’ கட்டிவிட்டு திண்ணையில் நெல் கொட்டி அதன்மீது பாய் விரித்து, அவரது துணிமணிகளை ஒரு மூட்டையாகக் கட்டி தலையணைக்கு வைத்து அதன்மீது அப்பாவைக் கிடத்தினோம். அவரது மூத்த மருமகன் வாங்கி வந்திருந்த செண்டிப்பூ மாலையை அணிவித்து, படிநெல்லில் வெற்றிலையைச் செருகி, விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து, பத்தி ஏற்றியதும் வைக்கோலில் பறையைக் காய்ச்சிக்கொண்டிருந்தவர்கள் பறையை வாசித்தார்கள். ஊர்ப்பெண்கள் அம்மா, பெரியம்மாக்களைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். விதவைகளின் அழுகை ஒப்பாரியாகவும் சுமங்கலிகளின் அழுகை ஓலமாகவும் இருந்தன.
அப்பா நடைஉடையாக இருக்கையில் அவர் ஒரு நாளும் வீட்டில் தங்கியதில்லை. ரிஷப வாகனமென ஊரை வலம் வந்தவர். பொழுது விடிய மிதிவண்டியை எடுக்கிறவர் பொழுது மேல்வானக் கூட்டுக்குள் அடைகையில் மிதிவண்டியைச் சுவற்றில் சாய்த்து வைக்கிறவர். கந்தர்வகோட்டை, கரம்பக்குடி, வேலாடிப்பட்டி, வெள்ளாளவிடுதி,..என்று ஊரை வலம் வந்திருந்த மிதிவண்டி திண்ணையில் சோகம் தழும்ப சாய்ந்து கிடந்தது. அவர் வளர்த்திருந்த இரண்டு பசுமாடுகள் மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டும் மேயாமல், தொழுவ அச்சுக்குத் திரும்பியிருந்தது. ஊருக்கும் வெளியே அவருக்கு நிறைய கூட்டாளிகள் இருந்தார்கள். அத்தனை பேரும் செய்தியறிந்து துக்கத்தில் கலந்திருந்தார்கள்.
கணவனைப் பறிக்கொடுத்திருந்த பெரியம்மா சகிக்க முடியா மணகோலத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளது கூந்தலில் சிறுகூடை அளவுக்கு பூக்கள் இருந்தன. கைகள் நிறைய வளையல்கள். அவளது தம்பி எடுத்துவந்திருந்த சேலையை அணிந்திருந்தாள். உச்சிவகிட்டு நெற்றியிலும், கண்புருவ கூடுவாயிலும் செந்தூரமாக பொட்டுகள். அணையப்போகும் விளக்கு ஒளிர்வதைப் போல அவளது பூவும் பொட்டும் இருந்தன.
மறுநாள் பொழுது, நத்தையைப் போல ஊர்ந்து வந்திருந்தது. “நாக்குல பல் படாம வளர்ந்த மனுசனப்பா. நேரத்தோட எடுக்கிற வேலையப் பாருங்க..”
“மயானமென்ன பக்கத்திலா இருக்கு. இப்பெல்லாம் பிரேதம் தூக்க யார் முன் வாரா, தேர் வந்தவரைக்கும் சரிதே.”
“ விறகேத்தி வண்டி போயிருக்கு. வந்ததும் எடுக்கிறதுதான்.”
“இதனால் தெரிவிப்பது என்னென்ன, சம்மந்திகள், பெண் கொடுத்தவங்க, எடுத்தவங்க, மச்சினன், மாமன்கள் கோடி கொண்டு வரலாம்…” தப்பாட்டத்தில் பாட்டுப்பாடிக் கொண்டிருந்தவர் பாட்டை நிறுத்தி அறிவிக்கலானார்.
“தண்ணீ எடுக்கிற வேலையப் பாருங்க.”
“ஒரு குடத்துத் தண்ணீய சூடுப்படுத்துங்க.”
அப்பாவைக் குளிரூட்டிப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தார்கள். வீட்டின் ஒரு கதவைக் கழட்டிவந்து, அதில் அவரைக் கிடத்தி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்.
“அய்யோ, ஏ அப்பாவுக்குத் தடுமண் பிடிக்கப் போகுதே, அய்யோ தொவட்டி விடுங்களே…” மகள்கள் ஆடி அழுதார்கள்.
“வேற யாரும் அரப்பு, எண்ணெய் வைக்க வேண்டியது இருக்கா…”
“தண்ணீய ஊத்து, நல்லா ஊத்து.”
வந்திருந்த கோடி வேட்டிகளில் இரண்டை எடுத்து, அவரது இடுப்பில் அணிவித்து, மற்றொரு வேட்டியை எடுத்து கயிறு போல நீட்டி அவரது தலையில் முண்டாசுக்கட்டு கட்டி, “தூக்குங்கப்பா, நாழி ஆவுது” என்றவாறு வாசலுக்கு கொண்டுவந்தார்கள்.
வாசலில் கீழே நெல் கொட்டி அதன் மீது பாய் விரிக்கப்பட்டிருந்த பாயில் தெற்கும் வடக்குமாகக் கிடத்தினார்கள். தலையிடத்தில் படிநெல்லும் ஐந்துமுக விளக்கும் எரிந்துகொண்டிருந்தது.
நிறைநெல்நாழி வாங்கும் படலம் தொடங்கியது. அவரது தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த விதை நெல்லை ஒரு பிடி மாட்டுச்சாணத்தில் கொட்டி, அவரது வலது கைக்குக்கொடுத்து குடும்பத்தின் அடுத்த வாரிசிடம் கொடுக்கும் சடங்கு அது. நிறைநெல் நாழியை வாங்குபவர் அவர் விட்டுச்செல்லும் கடைமைகளை அவரிடத்திலிருந்து நிறைவேற்ற வேண்டும். நிறைநாழி நெல்லைச் சுவரில் தட்டி பாதுகாக்க வேண்டும். அடுத்தப்பட்ட விதைப்பு நாளில் நிலத்தை உழுது, நிறைநாழி நெல்லை, விதை நெல்லுடன் கலந்து விதைத்து, அதில் ஆடுமாடுகள் வாய் வைக்காமல் விளைவித்து அறுத்தெடுக்க வேண்டும்.
நிறைநாழி வாங்குபவர் கல்யாணமான குடும்பஸ்தனாக இருக்க வேண்டும். இறந்திருந்த அப்பாவுக்கு ஒரே மகன். அவனுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. அக்குடும்பத்தின் மூத்த ஆண்பிள்ளை நான் என்பதால் நானும் என் மனைவியும் தலைமூழ்கி ஈரத்துணியுடன் கையில் ஒரு பிடி வைக்கோலுடன் உடலை மூன்று சுற்றிவந்து, கையிலிருந்து சாணி நெல்லுடன் ஒளிர்ந்த விளக்கையும் வாங்கி, சாணியுடன் கூடிய நெல்லை ஒரே அறையில் ஒட்டிக்கொள்ளும்படியாக சுவரில் சாத்தினோம். துக்கத்தின் கற்றைக் கனத்தில் எதிர்கால பொறுப்பைக் கூட்டுவதாக அச்சடங்கு இருந்தது.
பிரேதத் தேர் வாசலுக்கு வந்தது. ‘ததிக்குண…ததிக்குண…’ பறை முழங்கியது.
“அய்யகோ…” என்கிற ஓலம்.
“பிள்ளைக்குட்டிகள நல்லா வச்சிக்கணும்ய்யா…” கையெடுத்து கும்பிட்டார்கள்.
“அய்யா, அப்பா, தாத்தா…” கூப்பாடுகளுடன் தேர் நகர்ந்தது.
மயானத்தில், அவரது ஒரே மகன் இறுதிச்சடங்கு செய்தான். பிரேதத்திற்கு தீ மூட்டி குளக்கரைக்கு வந்தோம். வரவு செலவு பார்த்தவர் ஒரு ரூபாய் நாணயத்தைத் தரையில் வைக்க அதன் மீது வண்ணார் வேட்டியை விரிக்க, அதன்மீது ஊர் உறவுகள் அமர்ந்தார்கள்.
“சம்மந்தி உறவுமுறை பொண் கொடுத்தவங்க எடுத்தவங்க எல்லாம் வந்திட்டாங்களா?”
“எல்லாம் இருக்கோம்.”
“எல்லாரும் வந்து, நின்னு பிரேதத்தை ஒண்டிக் கரைச்சல், சலசலப்பில்லாம காடு வந்து சேர்த்திருக்கீங்க. அதுக்காக ஊர் சார்பா கையெடுக்கிறோம்.”
“எட்டு என்றைக்கு, தேவ சங்கதிகளச் சொன்னா, நேரத்தோட வீடு போய் சேர்வோம்.”
“ஆமா, தலை செத்தது நேத்தைக்கு. அப்ப நாளைக்கு மூணா நாளு. காடு அமத்துறது. செத்த நாளிலிருந்து எட்டாம் நாள் திங்கக் கிழம எட்டு. அந்திப் படையல்தான். எல்லாம் நேரத்தோட வந்திரணும்.”
“சரிதே”
“படைச்சி அழுது வேட்டிக் கட்டுறது எப்ப வச்சிலாமெனச் சொல்லுங்க?”
“என்ன எங்களக் கேட்குறீங்க, ஊர்க்காரங்க நீங்களே சொல்லுங்க”
“பதினைஞ்சாம் நாளு படைச்சு அழுது மருநாள் வேட்டிக்கட்டுறது.”
“நாடி அடங்கிய நாளிலிருந்து பதினைஞ்சாம் நாள்”
“ஆமே”
“கோவில் தேவையா, காட்டுத் தேவையா?”
“திருவையாறு, திருச்செந்தூர்னு போகலாம்தான். நாலு மந்திரத்துக்கு ஆயிரம் ரெண்டாயிரமுனு கேட்குறாங்க. அதை ஏன் அங்கே கொடுப்பானேன். அதுக்கு சமைச்சிப்போட ஒரு ஆடு பிடிக்கலாம் பாருங்க…”
“அதுவும் சரிதே. புரோகிதர் திங்கறத்த, நம்ம புள்ளக்குட்டி திங்கட்டுமே.”
“வேறென்ன கிளம்பளாங்களா?”
“யாரப்பா வரவு செலவு. வேட்டில ஆயிரத்து நூறு வச்சிட்டு எழுந்திரு”
“பத்தாதுங்ககோ… ரெண்டாயிரத்து நூறு வையுங்க…”
“அட எடுத்துக்கோப்பா. தேவைக்கு வருகிறப்ப, சேர்த்து வாங்கிக்கலாம்…”
“அது என்ன வேட்டியில வைக்கிறது. கையில கொடுங்க…”
“அதுவும் சரிதே. கையிலேயே கொடுப்பா…”
ஊர்க்குளத்தில் தண்ணீர் ஒரு குட்டையைப் போல கிடந்தது. காட்டுக்கு வந்திருந்த அத்தனை பேரும் முங்கி எழுந்தார்கள்.
“எங்கேப்பா, நிறைநாழி வாங்கினவன்”
“இருக்கேன் சொல்லுங்க..“ என்றேன் நான்.
“கொள்ளி வச்சப் பிளைய, பார்த்து பதமா அழைச்சிக்கிட்ட போகணும்..”
“நான் பார்த்துக்கிறேன்”
ஊர்ப் பங்காளியுடன், வீடு வந்து சேர்ந்தோம். பிறந்த மக்கள், அக்கா, தங்கைகள் அவரவர் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள்.
அப்பா இருந்த காலம் வரைக்கும் அவர் சாப்பிட உட்காருகையில் என்னைச் சாப்பிட அழைக்காமல் இருந்ததில்லை. அவரால் சம்மணமிட்டு சாப்பிட முடியாது. குத்துக்காலிட்டே உட்காருவார். சோற்றைக் கவளமாக நீண்ட நேரம் பிசைவார். கவளத்தை வாய் நோக்கி விட்டெறிகையில் அவரது வாய் திறப்பதற்கும் கவளம் வாய்க்குள் வந்து விழுவதற்கும் சரியாக இருக்கும். அன்றைய தினம் மென்றச்சோறு தொண்டைக்குள் இறங்குவேனா என்றது. அப்பாவின் கட்டிலிருக்கும் திண்ணையையொட்டி நான் படுத்திருந்தேன். அவரது கதம்ப நினைவுகள் என்னைத் தூங்கவிடாது செய்தன.
பொழுது மசமசவென விடிந்து, ஊரின் ஒரு மூலையில் தலைச்சேவல் கூவியது. யாரோ என்னை எழுப்பினார்கள். எழுப்பியவரின் குரல் இறந்துபோனவரின் குரலையொத்திருந்ததால் அக்குரலைக் கேட்டு ஒரே நிமிட்டில் எழுந்து உட்கார்ந்தேன். எழுப்பியவர் நடு அப்பாவாக இருந்தார். “வா, போயிட்டு வருவோம்” என்றார்.
“எங்கேப்பா?” என்றேன். .
“காட்டுக்கு.”.
அவரது கையில் பன்னறு வாளும், தோளில் மண்வெட்டியும் இருந்தன. ஊரில் யாரேனும் இறந்தால், மயானத்தில் சேர்த்ததன் பிறகு பங்காளி ஒருத்தரும் முறைக்காரர் ஒருத்தரும் மயானத்தில் இரவு தங்கி, பிரேதத்தை எரிப்பது ஊரின் வழக்காக இருந்தது. அப்படியாக இருவரை மயானத்திற்கு பணித்திருந்தோம்.
“எரிக்கத்தான் ரெண்டுபேர் பொறுப்பேத்திருக்காங்களே?” என்றேன்.
“ஆமாம்டா, அது எனக்குத் தெரியாதா, வா போயிட்டு வருவோம்” என்றார்.
பொழுது முழுவதுமாக விடிந்திருக்கவில்லை. நிலவு வெளிச்சம் பால்வளி விரிந்திருந்தது. அடுத்தடுத்த சேவல் கூவும் அரவம் கேட்கத் தொடங்கியது. அவர் கையிலிருந்த அரிவாளை நான் வாங்கிக்கொண்டேன். விறகுக்கடியிலிருந்து ஒரு கவட்டைக் கம்பை உருவி கையில் பிடித்துக் கொண்டார். அவர் முன்னே நடக்க நான் பின்னே நடந்தேன்.
இதற்கு முன்பு இதே மயானத்தில் எரியாத பிரேதத்தை நரியும், நாயும் இழுத்துச் சென்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது. அப்படியாக எதுவும் நடந்துவிடக் கூடாது என்றே நடுஅப்பா என்னை அழைத்துச் சென்றிருந்தார்.
அதிகாலை பொழுதில் புகை மூட்டத்துடன் கூடிய சாம்பலைப் பார்க்கையில் எரிந்த எலும்புகள், நீலநிறத்தில் தெரிந்தன. நான் சற்றே தொலைவில் நின்றபடி துருவிப் பார்த்தேன். அப்பா முழுவதுமாக எரிந்துவிட்டிருந்தார். அடுக்கியிருந்த மரங்கள் ஒரு பக்கமாகச் சரிந்து புகைந்துகொண்டிருந்தது.
மண்வெட்டியை தோளிலிருந்து இறக்கியவர், “என்னடா பார்க்கிறே, தள்ளு நில்லடா” என்று அதட்டினார். அவரது அதட்டல் எரிந்து சாம்பலானவர் அதட்டியதைப் போலிருந்தது. மண்வெட்டியால் எரிந்திருந்த கட்டைகளைப் புரட்டியும் கரிகளை நீவியும் பார்த்தார். காலின் இரண்டு பாதங்கள் எரியாமல், புகை அப்பிப்போய் வெளியே கிடந்தன. அதை இடது கை இரண்டு விரல்களால் எடுத்து, நெருப்பிலிட்ட அவர், வேறு ஏதேனும் பாகம் இப்படியாக எரியாமல் கிடக்கிறதா என்று தேடினார். ஒன்றும் அப்படியாக கிடந்திருக்கவில்லை. எரியாது விரவிக் கிடந்த மரக்கட்டைகளை ஒன்று சேர்த்து அதன்மீது ஆங்காங்கே விரவிக் கிடந்த வைக்கோல்களை வாரியள்ளி எரியூட்டினார். அண்ணனின் உடலை தம்பி எரித்தக் கோலத்தைப் பார்க்க என் நெஞ்சு கனத்தது.
“இதெல்லாம் உன்னால எப்படிப்பா முடியுது?” என்றேன்.
அவர், தலையெடுத்து என்னைப் பார்த்தார். எதையோ பெருங்கதையைப் போல சொல்ல வாயெடுத்தவர் சொல்லவந்ததைச் சொல்லாமல் புகையிலை எச்சிலை துப்பியவாறு, எரியாது கிடந்த விறகுகளை எடுத்து, நெருப்பிலிட்டு, “வா, போகலாம்” என்றார்.
இருவரும் வெண்ணாட்சி குளத்தங்கரைக்கு வந்தடைந்தோம். கரையைச் சுற்றிலுமிருந்த பனைமரங்களில் கூடு கட்டியிருந்த தூக்கணாங்குருவிகள், கீச்சிட்டுக்கொண்டு இரைதேடப் பறந்தன. அவர் குளத்திற்குள் குதிரைச் சதை நீர் மட்டத்திற்குள் இறங்கி, ஒரு சிட்டிகை மண்ணை அள்ளி, ஒரு விரலில் எடுத்து, பல் துலக்கி, கொப்பளித்து, மூக்கைப் பிடித்துக்கொண்டு மூன்று முக்கு, முக்கி கரைக்கு ஏறினார்.
“அண்ணன் பிரேதத்தை எந்த ஊர்லயாவது தம்பி எரிப்பானா, என் கண்ணால அதைப் பார்க்க முடியலப்பா?” என்றேன்.
“அடேய், எரியாத எலும்புக்கும் கதைக்கட்டுற ஊரடா இது. வெள்ளையன் நெஞ்செலும்பு எரியலைனு டீக்கடை, பெட்டிக்கடையில் பேசித் திரிஞ்சா, நமக்குத்தான் சொற்கேடு. பேராசைக்காரன், மனச்சுமைக்காரன், அப்படி, இப்படியென கதை அளப்பான்க. அதுக்கு ஏன் இடங்கொடுப்பானேன். ஒரு குறையும் வைக்காம நம்மள வளர்த்தவரு. யாரும் நம்மை நீயுனு சொல்லாத அளவுக்குக் குடும்பத்தைக் காத்தவரு.
அவரது பெயருக்கு ஒரு கலங்கம்னா, அது நம்ம குடும்பத்துக்குக் கேடு. அவருக்கு நாம செய்கிற மரியாத, அவரது உடலை நாயோ, நரியோ வாய் வைக்காம, ஊர்க்கதை அளப்புக்கு விடாம முழுசா எரிக்கிறதுதான். வாழ்க்கைங்கிறது எப்படி பிறந்தோம், எப்படி வளர்ந்தோம் என்பதில மட்டும் இல்லடாப்பா, எப்படி இறந்தோம், எரிஞ்சோம், என்பது வரைக்கும் இருக்கிறது..” என்று சொல்லி நிறுத்தி என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். என்னையும் அறியாமல் என் உடம்பு குலுங்கியது.