கட்டுரைகள்

தொழில் தெய்வமா? தொழிலைச் செய்பவர் தெய்வமா?….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

இத்தலைப்பில் உள்ள கேள்வி நெடு நாட்களாகவே என் தலையை உருட்டிக் கொண்டிருந்தது. தொழில் தெய்வம் என்றாலோ அல்லது தொழிலைச் செய்பவர் தெய்வம் என்றாலோ எல்லாத் தொழிலும் எல்லாத் தொழிலைச் செய்பவரும் தெய்வம் அல்லவா?

ஒரு குறிப்பிட்ட தொழிலையோ அத்தொழிலைச் செய்பவரையோ தெய்வமென்றால் அது வேற்றுமையை விதைத்து பிற தொழில் செய்வோரை இழிவு படுத்தல் ஆகிவிடாதா? என்று பலவாறு குழம்பியிருந்தேன்.

என் நண்பர்கள் என்னிடம் நூலைப்படி நூலைப்படி என்பார்கள். நூலைப் படிப்பது நல்லதுதான். நானும் புரட்சிக் கவிஞர் சொன்னபடி மற்றவர்களிடம் நூலைப்படி சங்கத்தமிழ் நூலைப்படி என்று சொல்வேன். ஏனென்றால் அவற்றில்தான் நம் வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியலும் பொருளியலும் மற்றும் அறிவியலும் கொட்டிக் கிடக்கின்றன.

சங்கத் தமிழ் நூல்கள் அனைத்தையும் படித்துவிட்டால் எல்லாவற்றையும் அறிந்து விடுவீர்கள். மற்ற நூல்கள் எல்லாவற்றிலும் இங்குள்ள கருத்துரையை எடுத்துத்தான் பொழிப்புரையாக தமது நூல்களில் படைத்திருப்பார்கள். சங்கத்தமிழ் நூலில் இல்லாத ஒன்றை எவரும் புதிதாக சொல்லிவிடப்போவதில்லை. மாறிவரும் அறிவியலை மட்டும் மேம்படுத்திக் கொண்டிருந்தால் போதுமானதாகும்.

எண்ணெய் விளக்குகள் மின் விளக்குகளாக மாறிவிட்டன. விலங்கினங்களை பயன்படுத்திய போக்குவரத்து இயந்திரங்களை பயன்படுத்தும் போக்குவரத்து ஆகிவிட்டது. இதுபோல் பனை ஓலைகளில் எழுதி மரத்தடியிலுருந்து பாடம் பயின்றவர்கள் சிலேட்டுப் பலகையில் எழுதி கட்டிடத்துக்குள் கற்க ஆரம்பித்தார்கள்.

பல நாட்கள் பல வாரங்கள் பலமாதங்களென நூல்களின் வாயிலாக படித்து தெரிந்து கொண்டதை இன்று சில மணிநேரங்களில் இருந்து பல மணிநேரங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளும்படி நிலைமை மாறியுள்ளன. உண்மையைத்தான் சொல்கிறேன் உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

இதோ ஒருசான்று. இது கற்பனைதான். ஆனால் உண்மையோடு பொருத்திப் பாருங்கள் புரிந்து கொள்வீர்கள். வேலுச்சாமி நல்ல எழுத்தாளர். கதை, கவிதை, கட்டுரையென பல எழுதுவார். அவர் மகன் வெங்கடசாமிக்கு இதொன்றும் எழுதவராது. வாத்தியார் பிள்ளை மக்கு என்று சொல்லப்படும் சொலவடை போல.

அப்பாவைப் போல பிள்ளைக்கு வரமுடியாது போக வாய்ப்புண்டு. ஆனால் அப்பா மகனிடம் நூலைப்படி என்று சொல்லலாம் அல்லவா? நல்ல அப்பாவான அவரும் கம்ப ராமாயாணத்தில் பல பாகங்கள் உள்ளன கடல் புறாவிலும் பல பாகங்கள் உள்ளன. நூலைப்படி என்றார்.

அதற்கு வெங்கடசாமி அப்பா உங்கள் காலம் வேறு எங்கள் காலம் வேறு. உங்களுக்கு பொழுது போக்கே சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே மங்களம் ஒரு டம்ளர் காபி கொண்டா என்று அம்மாவிடம் கேட்டபடியே பாகம் பாகமா படித்து முடித்தீர்கள். அல்லது வேணுகோபால் சாஸ்திரி ரங்கராஜப் பெருமாள் கோவிலில் செய்த உபன்னியாசத்தை கோவில்மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் சாய்ந்தபடி மாதக் கணக்கில் கேட்டு மகிழ்ந்தீர்கள்.

இன்று எங்கள் காலம் வேறு. இன்று நாங்கள் உங்களைப் போல் சாய்ந்து கிடக்க முடியாது. சாய்ந்து கிடந்தால் நம்மை ஏறி மிதித்துக்கொண்டு முன்னேறி போய்க்கொண்டே இருப்பார்கள் என்று அப்பனுக்கு அப்பவே பாடம் சொன்ன சுப்பையாவைப்போல இப்போது அப்பன் வேலுச்சாமிக்கு மகன் வெங்கடசாமி பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

இப்போதெல்லாம் நீங்கள் மாதக்கணக்கில் படித்து தெரிந்து கொண்டதை சில மணிநேரங்களில் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம் என்றான். இன்றும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். படித்தறிவதென்பது நூலைப் படித்துத்தான் அறியவேண்டும் என்றல்ல.

இன்றும் நாம் சமைப்பதை மறந்து விடவில்லை. எத்தனைதான் துரித உணவகம் வந்தாலும் இன்றும் வீடுகளில் சமைக்கத்தான் செய்கின்றோம். உங்கள் அம்மா விறகடுப்பில் சமைத்ததை உங்கள் மருமகள் காஸ் அடுப்பில் சமைக்கிறாள். நீங்கள் என்னவென்றால் சமையலை மறந்து விடாதீர்கள் விறகடுப்பில் சமையுங்கள் என்கிறீர்கள்.

இன்று சமைக்கும் வழிமுறைகள் மாறியுள்ளன. அதற்காக விறகடுப்பில் சமைக்கக் கூடாதென்று சொல்லவில்லை. விறகடுப்பை விரும்பி சமைப்பவர்கள் சமைத்துவிட்டுப் போகட்டும். யாரும் தடுக்கவில்லை. காஸ் அடுப்பில் சமைப்பவர்களை நம் சமையல் அழிந்துவிடும் விறகடுப்பை பயன்படுத்துங்கள் என்று ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள்.

மாறிய ஊடகத்தை பயன்படுத்தி அறிவைப் பெருக்கிக் கொள்பவர்கள் அவ்வாறே செய்யட்டும். ஆனால் இன்று நீங்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்யாமல் அலுங்காமல் குலுங்காமல் ஆகாயவிமானத்தில் பயணம் செய்து கொண்டே காஸ் அடுப்பில் சமைப்பவர்களைப் பார்த்து விறகடுப்பில் சமையுங்கள் என அறிவுரை வழங்கலாமா?

அறிவைப் பெருக்க ஆலோசனை சொல்லுங்கள். படித்து அறிவை வளர்த்துக் கொள்வதா? அல்லது பார்த்து அறிவை வளர்த்துக் கொள்வதா என்பதை அவரவர் புரிந்து கொள்வார்கள்.

பார்வையற்றவர்கள் நூல்களைப் படிக்க முடியாது. படிப்பின் அவசியம் கருதி பிரெய்ல் முறை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எழுத்துக்களை தடவிப் பார்த்து படித்து வந்தார்கள். இவர்கள் ஏதாவது ஒரு நூலைப்படிக்க வேண்டுமென்றால் அந்நூல் ப்ரெய்ல் முறையில் வந்தால்தான் வழியுண்டு. அல்லது யாராவது ஒருவர் அந்நூலை வாசித்து சொன்னால்தான் உண்டு. ஒரு செயலை நாம் செய்வதற்கும் ஒவ்வொன்றிற்கும் மற்றவர்களின் உதவியை நாடுவதற்கும் வேறுபாடு நிறையவே உள்ளன.

இன்றைய விஞ்ஞான முன்னேற்றம் பலதகவல்களை கேட்பதன் மூலமாகவே தடவிப் பார்த்து உணர்ந்து படிப்பதை பெறமுடிகிறது. இந்ந விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி அவர்களின் சுமையைக் குறைக்காமல் அது கூடாது ப்ரெய்ல் முறையைத்தான் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா. அவர்தான் எது சிறந்தவழி என்று முடிவெடுப்பார் அல்லவா?

இன்னொரு சான்று. கடலுக்குள் புதைந்து கிடக்கும் பூம்புகார் துறைமுகப்பட்டினம் என்பது தெரியும். ஆனால் அது பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை எந்த நூலைப் படித்து தெரிந்து கொள்வது? அதை யாராவது எழுதியிருக்கிறார்களா? என்பதை தேடிப்பிடித்து படிப்பதைவிட B.B.C ன் ஆறு நிமிட காணொளி எனது அறிவுக்கு ஐந்து நிமிடத்தில் தீனி போடுகிறது.

-சங்கர சுப்பிரமணியன்.

(வளரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.