என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!…. சங்கர சுப்பிரமணியன்
பெங்களூரிலுள்ள அலசூர் பழனி முதலியார் தெருவில் வசிக்கும் சந்திரனும் சடையப்பனும் மாலை நேரத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். காளியம்மன் கோவில் வழியாக வந்தவர்கள் பேக்கரி பக்கமாக ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் வலப்பக்கமாக நுழைந்தனர்.
மனிதர்கள்தான் இடத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்றும் பச்சோந்தி ஆகிறார்கள் என்றால் உயிரற்ற சாலைகள் கூட இடத்திற்கு ஏற்ப பச்சோந்தி ஆகின்றன.இதுவரை ஓல்டு மெட்ராஸ் ரோடாக இருந்தது ட்ரினிடி சர்ச்சை தாண்டியதும் மகாத்மா காந்தி ரோடாக பெயரை மாற்றிக் கொண்டது. அதுவாகவா மாற்றிக் கொண்டது?
மனிதன் தன்னிடமுள்ளள நல்ல பழக்கத்தை ரோட்டுக்கும் கடத்தி பெயரை மாற்றுகிறான். வீணாக அங்கே மட்டும் குறை சொல்லமுடியாது. இங்கேயும் அதுபோல் நடக்கத்தானே செய்கிறது. மெல்பனிலுள்ள டாண்டினாங்க் ட்ரெம்தியேட்டர் இருக்குமிடத்தில் லான்ஸ்டேல் ஸ்ட்ரீட் என்ற அறியப்படிம் தெரு நோபல்பார்க் அருகை ப்ரின்சஸ் ஹைவே என்று பெயர் மாற்றம் பெறவில்லையா? அதுபோலத்தான்.
இருவரும் ட்ரினிடி சர்ஜ்ஜைக் கடந்து மகாத்மா காந்தி ரோட்டில் நுழைந்து நடையைத் தொடர்ந்தனர். இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள் என்றாலும் கருத்தளவில் எதிரும் புதிருமானவர்கள். உலகமே இரவு பகல், இன்பம் துன்பம், நன்மை தீமை என்று தானே இயங்குகிறது. அப்படியானால் இவர்களில் ஒருவர் நல்லவர் இன்னொருவர் கெட்டவரா என்று மாடசாமி அண்ணாச்சி போன்றோர் நினைக்கத் தொடங்குவர்.
அதுதான் இல்லை. யானைக்கு அர்ரமென்றால் குதிரைக்கு குர்ரமென்றாகி விடாதல்லவா? இவர்கள் கதை வேறு. சடையப்பன் கடவுள் நம்பிக்கை உடையவர் என்றால் சந்திரன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனாலும் சந்திரன் மனைவி மக்களுடன் கோவிலுக்கு போவார். அவரையும் கிடுக்கிப்பிடி போட்டு கேள்வி கேட்பார்கள்.அதற்கு அவர் சொல்லும் பதில் விசித்திரமாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.
கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லைதான். ஆனாலும் கோவிலுக்கு வருகிறேன் என்றால் எனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்றோ என் குடும்பத்தை இறைவன் காப்பாற்றுவார் என்பதற்காகவோ அல்ல என்பார். இங்குள்ள கடவுளர் எல்லாம் பல யுகங்களுக்கு முற்பட்டவர்கள் என்கிறார்கள். பல யுகங்களுக்கு முன் தோன்றியிரா விட்டாலும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவாவது தோன்றியிருக்கலாம் அல்லவா என்பார்.
அதனாலென்ன என்று கேட்டால், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கே சிலை அமைத்து மரியாதை செய்கிறோம். நமது தாத்தா பாட்டிகளுக்கு படங்களை வைத்து வணங்குகிறோம் அல்லவா? என்பார். எல்லாவற்றிற்கும் மேலாக வயதில் பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பது தமிழர் பண்பாடல்லவா?
அந்த பண்பாட்டின் வழிவந்த நான் இங்கு சிலைகளாக இருக்கும் என்றோ வாழ்ந்தவர்கள் என்று சொல்லப்படும் பெரியோர்களுக்கு ஒரு வணக்கத்தை மரியாதையின் பொருட்டு செலுத்தலாம் அல்லவா? அதைத்தான் செய்கிறேன். அதைத்தாண்டி வேறெந்த எண்ணமோ எதிர்பார்ப்போ கிடையாதென்பார்.
இந்தப் பதில் ஏற்கும்படிதான் உள்ளது. அதெல்லாம் கூடாதென்றால், சாமி படங்கள் கல்லாவில் இருப்பவரின் பின்னால் இருக்க, ஊதுபத்தி வாசம் கமகம என்று வரும் உணவகங்களுக்குள் நுழையும் முன்னரே நாசியைத் துளைக்க செயல்படும் கிருஷ்ணா கபேயிலோ அல்லது மணீஸ் கபேயிலோ ஒரு கப் காபி கூட குடிக்க முடியாதென்பார்.
இந்த கருத்து வேறுபாடுகளுக்கு இடையில்தான் அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இப்படி பேசிக்கொண்டே கப்பன் பாக் காந்திசிலை வரையிலும் நடப்பார்கள். பின் அங்கிருந்து வீடு திரும்புவார்கள். போகும்போதும் வரும்போதும் ஒரு வழிப்பயணத்தின் போது அவர்களின் பேச்சு அரசியல் பற்றியும் இன்னொரு பயணம் மதம் கடவுள் பற்றியும் இருக்கும்.
கடவுள் பற்றி மட்டுமல்ல அரசிலிலும் ஒத்த கருத்தையுடையவர்கள் இல்லை இருவரும்.
பார்ப்பவர்கள் இவ்வளவு முரண்பாடாக உள்ளவர்கள் எப்படி சிறந்ந நண்பர்களாக இருக்கிறார்கள் என்று வியப்படைவார்கள். எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவதில் காந்தத்தில் மட்டுமல்ல மனிதர்களிடமும் நிகழ்கிறது. ஒத்த கருத்துடையவர்கள் மத்தியில் ஆம் என்ற ஆமோதிப்பில் எல்லாம் முடிந்து விடுகிறது.
அதுவே எதிர்மறைக் கருத்துடையவர்கள் மத்தியில் விவாதம் பிறக்கிறது. ஆரோக்கியமான விவாதம் பெரும்பாலும் உணர்வுகளையும் மனிதர்களையும் மதிப்பவர்களிடம் மட்டுமே நிகழும். ஆரோக்கியமற்ற விவாதம் மனிதர்களை மதிக்காதவர்கள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர்களுக்குள் நிகழும்.
சடையப்பனும் சந்திரனும் எந்த ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் அல்ல என்றாலும் அரசியல்பற்றி பேசத் தவறியதில்லை. அன்று ட்ரினிடி சர்ச்சைத் தாண்டியதும் அவர்கள் பேச்சு ஆரம்பிக்கவே,
“தமிழ் நாட்டு அரசியல் மட்டுமல்ல எல்லா மாநில அரசியலிலும் விவாதத்துக்குள்ளாகத்தான் செய்கிறது” என்றான் சந்திரன்.
“அப்படி எந்த மாநிலத்தில் என்ன நடந்தது?”
“ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 1980 ஆம் ஆண்டு போலவரம் நீர்ப்பாசண திட்டத்திற்கான அடிக்கல் நட்டப்பட்டதை பற்றித்தான் சொல்கிறேன்” என்றான் சந்திரன்.
“என்ன சொல்கிறாய்? நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதே. அணை கட்டினார்களா? இல்லையா?”
“அந்தக் கதையை அப்புறம் சொல்லுறன். அணைகட்ட வேண்டும் தீர்மானம் போட்டது எப்ப தெரியுமா? என்றான் சந்திரன்”
“ சடையப்பா? நான் ஒரு கேள்வி கேட்டா நீயோ எதிர்க் கேள்வி கேட்கிறாய்? இப்ப என்னடான்னா தீர்மானம் எப்ப பண்ணுனாங்கன்னு கேக்குற. ஒரு அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி தீர்மானம் போட்டிருப்பாங்களா?”
“அது என்ன அஞ்சாறு வருசம். நம்மள ஆச்சி செய்யுறவங்கள ஏன் அவ்வளவு குறச்சு மதிச்சிட்ட”
“குறச்சு ஒன்னும் மதிப்பிடல. நம்ம ஆளுறவங்க அந்த கட்சி செய்யுற நல்ல திட்டம் எதையும் மற்ற கட்சி ஆட்சிக்கு வந்தா செய்யமாட்டாங்க. மற்ற கட்சி ஆரம்பிச்சு வச்சத அந்த கட்சி தொடரவும் மாட்டாங்க. ஏன்னா பெயரும் புகழும் மற்ற கட்சிக்குப் போயிடுமுல்ல”
“நீ சொல்றது எல்லாமே சரிதான். ஆனா இங்க சங்கதியே வேற” என்றான் சந்திரன்.
அட போப்பா. சொல்ல வர்றத சுருக்கா சொல்லுவியா. இப்படி ஜவ்வு மிட்டாய் மாதிரி இழு இழுன்னு இழுக்கிறியே என்றதும்
கொஞ்சம் கடுப்பான சடையப்பனை சமாதானப்படுத்தினான். அப்படி என்னதான் சொல்லி சமாதானப் படுத்தினான்? உங்கள் ஆர்வம் எனக்கு பிடிக்கிறது. வீட்டுல மனுசி வாழைக்காய் பஜ்ஜி செய்யும் வாசனை மூக்கில் ஏற நாக்கில் உமிழ்நீரை சுரக்க வைக்கிறது. இரண்டே இரண்டு பஜ்ஜியை மட்டும் சாப்பிட்டுட்டு வந்துடறன்.
-சங்கர சுப்பிரமணியன்
(தொடரும்…)