”மட்டுக்குழி”….சிறுகதை….79…. அண்டனூர் சுரா
“கடவுளே, ஆத்தா காளியம்மா, அய்யனாரே, நொண்டியப்புச்சி, சூரக்கருப்பு… உன்னோட குஞ்சு நான் கேட்டுக்கிறேன். நான் காட்டுற இந்த சாம்பிராணிப் புகை, சூடம் புகையை ஏத்துக்கிட்டு இந்த ஏழைக்குக் கருணைக் காட்டணும். போர் வேலை முடியுற வரைக்கும் ஒத்தாசையாயிருந்து நல்லபடியா முடிச்சிக்கொடுக்கணும்…” கண்களை மூடித் திறந்து கோரிக்கை வைக்கிறார் சுப்பையா. அவருடைய உடம்பு சிலிர்க்கிறது. மயிர் கூச்சரிகிறது. இடது கையில் தூவற்காலை எடுத்து வலது கைக்கு மாற்றி தலைக்குமேல் தூக்கிக்காட்டுகிறார். வியர்வை சல,சலவென உடம்பை நனைக்கிறது.
தூவற்காலை இடமிருந்து வலமாகச் சுற்றுகிறார். அவருடைய உதடுகள் மனப்பாடப் பாடலை ஒப்புவிப்பதைப் போல முணுமுணுக்கின்றன. உலகத்திலுள்ள தெய்வங்களையெல்லாம் வயலுக்கு அழைக்கிறார். ஒவ்வொரு சாமிக்கும் பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார். காத்துக்கருப்பு, அடைக்கலம் காத்த அய்யனாரு, முன்னேத்தி ஏரு முன்னடியானு,…
“யப்பா ராசு… இதுல கொஞ்சம் சாம்ராணியத் தூவு” மகன் நிற்கிற பக்கம் அவருடைய பார்வை போகிறது. தூவற்காலை முகத்திற்கருகில் கொண்டுவந்து நெருப்பை ‘ப்பூ, ப்பூ’ என்று ஊதுகிறார். பூவாகச் சிதறுகிறது நெருப்பு. அணைந்துபோயிருந்தக் கரிகளில் அக்னிப்பழம் போல நெருப்பு பிரகாசிக்கிறது.
கால்சட்டையை அரைஞாண் கயிற்றில் இடுக்கிக்கொண்டு ஓடிவருகிறான் ராசு. சாம்பிராணி கட்டியை தேங்காய்கொண்டு நுணுக்கி, அதை நுனி விரல்களால் அள்ளி அப்பன் காட்டுகிற தூவற்காலில் தூவுகிறான். புகைமூட்டம் சிறு,பெரு வட்டங்களாக மேல்நோக்கி படர்கிறது. வாசனை மூக்கைத் துளைக்கிறது.
சுப்பையா தூவற்காலைக் கீழே வைத்து, தாம்பூலத்தில் சூடத்தை ஏற்றி, பக்கத்திலிருக்கிற தேங்காயை எடுத்து நார்களைப் பிய்த்து காதிற்குக் கொண்டுச்சென்று சுண்டுகிறார். ‘டக், டக், டக்’ நெற்றுச்சத்தம் செவிப்பறையில் அறைகிறது. அவருக்குள் ஆனந்தம் பொங்கிப் பீறி, சிரிப்பு உதடுகளில் நெழிகிறது. கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, சனி மூலை பக்கம் திரும்பி கண்களை மூடி விடுபட்ட தெய்வங்களை அழைக்கிறார். “பூமிதாயே… பொண்டாட்டித் தாலிய உருக்கி வித்து, அஞ்சு வட்டி, ஆறு வட்டிக்குக் கடன் வாங்கி இந்த இடத்தில போர்வெல் போடுறேன். நல்ல வழியக் காட்டுத்தாயி… ”
‘டொக்’
தேங்காய் உடைபடவில்லை. கையிலிருந்து தேங்காய் நழுவி தரையிலுருண்டு ஓடுகிறது. அவருடைய முகம் அப்பளமாக உடைகிறது. ஆழ்மனது ‘சுருக்‘கென்று தைக்கிறது. “ஏன் தாயி இப்படி சோதிக்கிற. நல்ல சகுனமா காட்டுத்தாயி. நூறடியில தண்ணீ கிடைச்சிருச்சினா உன் பேரச்சொல்லி எசவுக்கிடா விடுறேன் தாயி. இப்ப என்னால முடிஞ்சது இந்தச் சாம்பிராணி புகையும், தீபமும்தான். இதை ஏத்துக்கத்தாயி…”
அவருடைய மனைவி பாப்பு அருகில் நின்றுகொண்டிருக்கிறாள். உருண்டு ஓடிய தேங்காயைப் பார்த்ததும் நெஞ்சுக்குள் ஒரு பகுதி நொறுங்கிச் சரிகிறது. கணவன் மீதான கோபம் மூக்கின் நுனியில் ஏறி உட்காருகிறது. கணவனைக் கடுகு போலப் பொரிக்கிறாள்.
“காலையில சாப்பிட்டீங்களா இல்ல மோர்ந்துதான் பார்த்தீங்களா? ஒரே போடுல தேங்கா ரெண்டா உடைய வேணாமா? ஊர்க் கண்ணு பாதி, உங்க செய்கை பாதி. என்ன ஜென்மமோ, மறுபடியும் சாமிய நல்லா வேண்டிக்கிட்டு ஒரே போடுல தேங்கா ரெண்டா ஒடையுற மாதிரி அரிவாளப் போடுங்க….” முந்தானையைக் கைகளுக்குக் கொடுத்து வானத்திற்கு ஏந்தி அவளுடைய பாட்டன், முப்பாட்டன்களை வயலுக்கு அழைக்கிறாள்.
‘டொக்’
தேங்காய் சிதறுத் தேங்காயைப் போல உடைகிறது. அவருடைய நெற்றியில் சுருக்கம். உதடு கடிக்கிறார். இதற்கும் திட்டுவாளோ..? அச்சம் மனதில் சட்டென்று படர்கிறது. குடுமியைப் பிய்த்துத் தேங்காயை அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரித்து வைத்து தலைக்கு மேலே கைகளைக் குவித்து நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுகிறார். அவருடன் சேர்ந்து மனைவி, மகன், உறவுமுறைகள் அனைவரும் விழுந்து வணங்குகிறார்கள் .
“ஊம்… போதும், போதும். வந்தவங்களுக்குத் தீபாரதனைக் காட்டுங்க”
“ மாமன், மச்சான் முன்னாடி வாங்க”
“ குல தெய்வத்த நல்லா வேண்டிக்கிட்டு விபூதி எடுங்க”
“கடவுளே, பூமிதாயி…. இன்னைக்கே உன் மடியில இருக்கிற தண்ணிய அவுத்துவுட்டு கண்ணுல காட்டணும்.”
“அச்சு வெல்லத்தை உடைச்சு பச்சை அரிசியில கிளருங்க. பொரி, பொட்டுக்கடலைய பூமித்தாய்க்கு ஊட்டிட்டு வந்தவங்களுக்கு அள்ளிக்கொடுங்கோ…” சாமிக் கும்பிட்ட இடம் அவசரம் ஆர்ப்பரிப்பு கூப்பாடாக இருந்தது.
புள்ளைப் போல வளர்த்த ஆட்ட விற்று , மாட்டை விற்று, பத்தும் பத்தாததுக்குப் பொம்மனாட்டி தாலிய விற்று சுப்பையா இந்த இடத்திலே போர் போடுறாரு. அவரோட அமந்தக் குணத்துக்கு ஒரு குறையும் இல்லாம எல்லாம் நல்லபடியா போர்வேல முடியணும். அவரோட கஷ்டத்த ஏழுகோடி சாமியும் ஆளுக்குப் பாதியா ஏத்துக்கிறணும். கடவுளே…” என்றவாறு பொரி, பொட்டுக் கடலையை வாங்கிக்கொண்டு முணுமுணுக்கிறாள் ஒரு கிழவி.
“எங்க போர்வெல்காரர்?”
“ஆம், இருக்கேன்..” என்றபடி இயந்திரத்தின் மறைவில் நின்றுக்கொண்டு தலையை மட்டும் வெளியே காட்டுகிறார் வேலப்பன்.
“அட முன்னாடி வாங்கண்ணே. விபூதி வாங்கிக்கிறுங்க. நல்லபடியா வேலை முடியணுமென உங்க குலதெய்வத்தை வேண்டிக்கிறுங்க.”
“அதெல்லாம் ஒரு கொறையும் வராதுங்க. காவேரி பாசனம் நிலத்தில குழிய ஆழமா பறிச்சாலே யாரு குழி பறிக்கிறதுனு தண்ணீ வெளியே வந்து எட்டிப் பார்க்கும். போர்வெல் போடுறதுக்குச் சொல்லவா வேணும்? பூதம் கெளம்புற மாதிரி தண்ணி சும்மா பீச்சிக்கிட்டு அடிக்குதா இல்லையானு மட்டும் பாருங்க. எண்பது, தொண்ணூறு அடியிலேயே நீரோட்டத்த உங்களுக்குக் காட்டுறேன்….” என்றபடி விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்கிறார் போர்வண்டிக்காரர் வேலப்பன்.
“ பிறகென்ன எஞ்சினை ஓடவிடலாமா?” – மணியைப் பார்த்தபடி கேட்டார் வேலப்பன்.
“சரி தொடங்குங்க.” – ஒரு பெரியவர்.
“ கடவுளே” கும்பிட்டபடி தலையில் விழுகிறாள் பாப்பு.
“பூமித்தாயீ கருணைக் காட்டம்மா..” – சுப்பையா
வேலப்பன் விரல்களை உதட்டிற்குக் கொண்டுசென்று ‘உச்‘ கொட்டி, மணியை ஒரு கணம் பார்த்துவிட்டு இயந்திரத்தை இயக்குகிறார்.
‘கிரீச், கடக், கட கட கட…’
பூமியை இயந்திரம் குடையும் சத்தம் கருவண்டு குடைவதைப் போல காதைக் குடைகிறது. அரிசி இல்லாமல் ஓடும் வெற்றுக் கிரைண்டரைப் போல அதன் சத்தம் கேட்கிறது. வேட்டியைத் தலைக்கு முட்டுக்கொடுத்து வரப்பில் படுத்திருக்கிறார் சுப்பையா. முறுக்கிப்போட்ட துண்டைப் போல அவருடைய மேனி துவண்டு கிடக்கிறது. ஏமாற்றம் நெஞ்சுக்குள் திண்மக் கட்டியைப் போல உறைந்திருக்கிறது. ‘திடுக்‘ கென்று விழித்து “தம்பி, எதுவும் நல்ல சேதி கிடைச்சதுங்களா….?” ஆவல் பொங்கக் கேட்கிறார்.
“சுப்பைய்யாண்ணே, ஒன்னும் கவலைப்படாதீங்க. இன்னைக்கு எப்படியும் தண்ணீ கெடைச்சிடும். நீங்க கொஞ்சநேரம் தூங்குங்க. உங்க மனைவியையும், மகனையும் வீட்லபோய் சாப்பிட்டு வரச்சொல்லுங்க. வீட்டைவிட்டு வந்து மூணு நாளு ஆச்சு. அப்படியே வரும்போது போயிலைப் பொட்டலம் ஒன்னு வாங்கிக்கிட்டு வரச்சொல்லுங்க. வெறும்வாய உதப்பிக்கிட்டிருக்கிறது என்னவோ மாதிரி இருக்கு….” இரும்புக் கயிற்றை கீழே இறக்கி ஓர் இரும்புக் குழாயை எடுத்துச் சுத்தியலால் இரண்டொரு தட்டுத் தட்டி, அதை ஆழ்த்துளை குழாயுடன் இணைக்கிறார் வேலப்பன்.
முந்தானையை ஏந்தியபடி நின்றுகொண்டிருக்கிறாள் பாப்பு. தண்ணீரை முகர்ந்து குழிக்குள் ஊற்றிவிட்டு அதே தண்ணீரை எதிர்நோக்குகிறாள். உச்சத்தில் வைத்த அவளுடைய கனவு இராட்டினம் இறங்குவதைப் போல கீழே இறங்குகிறது. அவளுடைய முகத்தில் ஏமாற்ற ரேகைகள் படர்கின்றன. கண் இமைகளில் நுனிப்பரு போல கண்ணீர்க் கோர்க்கிறது.
“யார் கண்ணு பட்டதோ, என் கண்ணுல வழியிற தண்ணீகூட இந்த மண்ணுல இல்ல. பூமி இப்படி மலடியாகி கிடக்கே. பூமினு ஒன்னு இருக்கிற மாதிரி சாமினு ஒன்னு இருக்கா இல்லையா? எங்களோட கெஞ்சல், கதறல் அதுகளுக்கு கேட்குதா இல்லையா…?” அவளது உதடுகள் பரிதவிக்கின்றன.
மகன் ராசு கன்னத்தில் கை வைத்தபடி அரைமூட்டை சாக்கைப் போல உட்கார்ந்திருக்கிறான். அவனுடைய கன்னத்தில் மாலை மாலையாகக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது. அழுகை தொண்டைக்குள் அடக்கி முகம் வீங்கிப்போயிருக்கிறது.
“இன்னையோட அஞ்சு நாளு ஆச்சு. இதுவரைக்கும் நானூறு அடி இறக்கியாச்சு. அரைப்படி தண்ணீ…? ஊகூம்! என்ன ஆச்சு இந்த பூமிக்கு…?” சுப்பையா பைத்தியம் பிடித்தவரைப் போல ஒவ்வொரு வரப்பாக உட்கார்ந்து எழுந்து, ஆழ்த்துளையை எட்டிப் பார்க்கிறார். ஏமாற்றம் முகத்தில் சப்பென்று அறைகிறது.
மந்திரித்துவிட்ட கோழியை போலாகிவிட்டார் சுப்பையா. பசி உதரவிதானம் வரைக்கும் பரவி நெஞ்சுக்கூட்டை அடைக்கிறது. மயக்கம் கண்களைக் கட்டுகிறது. ஊழைக்காற்று செவிப் பறையில் அறைகிறது. “கொழந்தைக்கு குடலேத்தமெனு தெரியாம ஒருத்தன் கோடிப் பணம் செலவளிச்சானாம். அந்தக் கதை போலாச்சு என் கதை. நீரோட்டம் பார்க்கிறேனு வந்தவன் இந்த இடத்தில ஊத்து இருக்குன்னான். தண்ணீ சும்மா பதனீர் மாதிரி இருக்கும்னான். நேற்றைக்கு அவனைப்போய் கேட்டேன். என்னடா நீ காட்டிவிட்ட இடத்தில தண்ணீயே இல்லைனு. அதற்கு அவன் சொல்றான் நானா காட்டினேன், சாமிதான் காட்டுனிச்சுனு. அவனோட தவற சாமி மேல எறக்கி வச்சிட்டு அவன் போயிட்டான். என்னோட ஏமாற்றத்த யார்மேலே எறக்கி வக்கிறதாம்?
போர்வெல்க்காரர் வேலப்பன்கூடதான் சொன்னான். காவேரி பாசனத்தில போரு போடுறோம். தண்ணீ அம்பது அடியிலிருந்து சும்மா பீய்ச்சிக்கிட்டு அடிக்கப்போகுதுனு. ஏன் இப்ப தண்ணீ இல்ல? கேள்விகள் ஊக்கைப் போல குடைகிறது. ஏக்கம் ஆழ்மனதை நச்சரிக்கிறது. துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு இடுப்பிற்குக் கைகளைக்கொடுத்து, “என்னைக் கொஞ்சம் கருணையோடு பாருங்க” என்றவாறு வானத்தை முறைத்து வெறிக்கிறார். மண்டைக்குள் ஒரு யோசனை துளிர்விடுகிறது.
“தம்பி, நீங்க நிறுத்தாம எஞ்சினை ஓட விடுங்க. இதோ வாறேன்” என்றவாறு நடையைச் சீர்காழிப் பக்கம் செலுத்துகிறார். ஒவ்வொரு நடையையும் எடுத்துவைக்கும் பொழுது வயிறு அவருக்குப் பசியை நினைவூட்டுகிறது. பசி பொறுக்காத பாம்பு தன் வாலையே விழுங்குகிற மாதிரி, பெருங்குடல் சிறுகுடலைத்தின்னுகிறது. மயக்கம் அவருக்கு ‘கிர்ர்…‘ என்று வருகிறது. கீழே குனிந்து பார்க்கிறார். குப்பைக்கீரை, தொய்யல், முள்ளிக்கீரை, மணலி, நாகரஞ்சி கீரைகள் அடைசலாகக் காலடியில் விளைந்திருப்பது தெரிகிறது. அதை வேகமாக பறித்து வாயிற்குள் திணித்து பற்களால் அறைக்கிறார். சாறு தொண்டைக்குள் இறங்குகிறது. அண்ணம் குளிர்ந்து, குரல் நாண் குளிர்ந்து அவருக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
‘கிரிச், கடக், கட கட கட…‘ என்கிற சத்தமும் ‘டக், டுக்….‘ என்று இரும்புக் குழாய்களைத் தட்டி ஒன்றோடொன்று இணைத்து இறுக்கும் சத்தம் அவருக்குக் கேட்கிறது. ஓரிடத்தில் நின்று நிமிர்ந்து பார்க்கிறார் .
இரண்டு பெரிய கழுகுகள் இறக்கையை ஒடுக்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் போல இரண்டு கூடாரங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று சாம்பல் நிறம். மற்றொன்று அடர் கறுப்பு. சாம்பல் நிறக்கூடாரத்தில் இருப்பவர்கள் அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்.
அவர்களைப் பார்க்க உழைப்பதற்கென்று பிறந்தவர்களைப் போலவும் என்ன வேலை கொடுத்தாலும் செய்கிறோம் என்று சொல்வதைப் போலவும் தெரிகிறார்கள். மற்றொரு கூடாரம் பார்க்க அழகாகவும் அடக்கமாகவும் தெரிகிறது. அதற்குள் உட்கார்ந்திருக்கும் ஒன்றிரண்டு பேர் அரசாங்கத்தை ஆட்டி வைக்கும் அதிகாரம் பெற்றவர்களைப் போல தெரிகிறார்கள்.
ஒரு மேட்டின் உச்சத்தில் நின்றுகொண்டு பார்க்கிறார் சுப்பையா. ஒருபுறம் ஆழ்துளை பறிக்கும் இயந்திரம் காதுகளைக் குடைந்தெடுக்கிறது. இன்னொருபுறம் மோட்டார் தண்ணீரை அருவியைப் போல வாரி இறைக்கிறது. தண்ணீர் புதுக்காவிரி ஆற்றைப் போல விரிந்து ஓடுகிறது. அதை பார்த்துகொண்டே இருக்கலாம் போல இருக்கிறது .
“அடேங்கப்பா! எவ்வளவு பெரிய மோட்டார்! தண்ணிய எப்படிப் பீய்ச்சி இறைக்குது!. யாருடைய போர் இது? இவ்வளவு தண்ணீரும் எங்கே போகுது? எதற்காக இவ்வளவு பெரிய போர்?” தனக்குத்தானே கேட்டுக்கொண்டு விடைதெரியாமல் பேந்தப் பேந்த விழிக்கிறார் சுப்பையா .
“இவங்கள்ள ஒருத்தரை அழைச்சிக்கிட்டுபோய் போர்ப் போடுகிற இடத்தைக் காட்டினால் என்னவாம்…?” இவர்கள் யாராக இருக்கும்?, கூப்பிட்டால் வருவார்களா? சங்கிலி முடிச்சுகளைப் போல நீள்கின்றன கேள்விகள். இவர்கள் யாராக இருந்தாலென்ன? இவர்களில் ஒருவரை அழைத்துக்கொண்டுபோய் போரைக் காட்டத்தான் போகிறேன், அவர்களை நோக்கி வேகமாக நடந்தார் சுப்பையா.
மண் சோதனையாளர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். அவரைச் சுற்றிலும் நான்கைந்து பேர் சோதனையை உற்றுப்பார்த்தவாறு நிற்கிறார்கள். சோதனையாளர் இயந்திரம் வெளியே தள்ளிய மண்ணை அள்ளிப் பிசைந்துப் பார்க்கிறார். மண் எள் பிண்ணாக்கு மாதிரி கறுப்பாக இருக்கிறது. சோதனைக் குழாயில் மண்ணைக் கிடத்தி சோதித்து, முகர்ந்து பார்த்து, நாக்கில் வைத்துச் சுவைக்கிறார்.
சுப்பையா முகம் உடைந்துப் போகிறது. சோதனையைப் பார்த்தவாறு கண்ணீர் மல்க கூனிக்குறுகி நிற்கிறார். பல்லி வயிற்றுக்குள் முட்டை தெரிவதைப் போல துக்கம் அவருடைய கண்களில் தெரிகிறது. கைகளை வானத்தை நோக்கி ஏந்தியபடி கண்கள் பனிக்கக் கேட்கிறார். “அய்யா, மூணு நாளா ஏகப்பட்ட சோதனைக பண்ணிட்டீங்க. உங்களுக்குள்ளே பேசிக்கிறீங்க. பூமிதாயீ என்னதான் சொல்கிறாள்?”
“ இருக்கிறதென சொல்கிறாள்.”
“ தண்ணீ தானுங்களா?”
“மீத்தேன்!”
மூர்ச்சையாகி விழுகிறார் சுப்பையா. அவருடைய விழிகள் இடுங்கி இமைகளுக்குள் சொருகுகின்றன. உயிர்க்காக போராடுகிறார். காவிரிப் படுகையைப் போல…!
அண்டனூர் சுரா