வீழ்ச்சியுறும் பங்களாதேஷ் பொருளாதாரம்!… மாணவர் எழுச்சியும் இராணுவ ஆட்சியும்… ஐங்கரன் விக்கினேஸ்வரா
(தென்னாசிய பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவுக்கு மேலாக உயர்ந்து வரும் நிலையில் இருந்த வங்க தேசம் மீண்டும் பாரிய பொருளாதர வீழ்ச்சியை அடைந்துள்ளது. வளர்ந்து வரும் அபிவிருத்தியில் 455 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட பங்களாதேஷ், தற்போதய மாபெரும் பிரச்சனையில் இருந்து வெளியேறுவது பெரும் சிக்கலாக இருக்கும்)
தற்போதைய மாணவர் போராட்டம் தலைநகர் டாக்கா பல்கலைக்கழகத்தில் இருந்தே தொடங்கியது. இதே டாக்கா பல்கலைக் கழக வளாகம் 1971 மார்ச் 25, 26 ஆகிய இரு நாட்களும், மனித குலம் கண்டிராத படு கோரமான, இரக்கம் அற்ற இனப் படுகொலையைச் சந்தித்தது.
பல்கலைக்கழகத்தின் புகழ் பெற்ற பேராசிரியர்களும், மாணவர்களும்
1971 மார்ச் 26 அதிகாலை, பல்கலைக்கழக வளாகத்திலேயே, பாகிஸ்தான் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
தற்போது பங்களாதேஷில் ஜூலை மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் பல வாரங்களாக மாணவர்களின் புரட்சி சொந்த நாட்டின் அரசையே ஆட்டங்காண வைத்துள்ளனர்.
அதேவேளை அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
நீண்ட காலமாக பங்காளதேஷ் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது. ஆனால் இன்று ஆசியாவில் எழுச்சி பெறும் புலிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
தென்னாசிய பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவுக்கு மேலாக உயர்ந்து வரும் நிலையில் இருந்த வங்க தேசம் மீண்டும் பாரிய பொருளாதர வீழ்ச்சியை அடைந்துள்ளது.
மாணவர் எழுச்சியும் பொருளாதர வீழ்ச்சியும்:
தற்போது நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசீனா இவ்வருட ஜனவரி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் 41.8% வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின், பல வருடங்களாகச் சர்ச்சையிலிருந்த வேலைவாய்ப்பு இடஓதுக்கீட்டை மீண்டும் அமுலாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கினார்.
இதன் விளைவே ஆட்சியை இழந்து, பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். மாணவர்களின் தொடர் போராட்டங்களால் பங்களாதேஷ் நாடு எப்போதும் இல்லாத வகையில் அமைதியற்ற நாடாக மாறியது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
இறுதியில் மாணவ போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லமான ஹணபபானுக்குள் (Ganabhaban) நுழைந்து மொத்த வீட்டையும் சூறையாடி அழித்தனர். ஆயினும் இதற்கு முன்பே பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு ஹெலிகாப்டர் வாயிலாக இந்தியாவுக்குத் தப்பி வெளியேறி உள்ளார்.
இவை அனைத்திற்கு முக்கியமான காரணமாக இருந்தது அந்நாட்டில் அமலிலிருந்த சர்ச்சைக்குரிய வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு முறை தான், இதை எதிர்த்து மாணவர் போராட்டங்களில் தொடங்கியது நாடு தழுவிய நெருக்கடியாக அதிகரித்தது.
சர்ச்சைக்குரிய இடஓதுக்கீடு:
சர்ச்சையிலிருந்த வேலைவாய்ப்பு இடஓதுக்கீட்டால், பங்களாதேஷ் முழுவதும் மாணவர்கள் எழுச்சியால் அரசியல் வன்முறை வெடித்தது.
ஜூலை 31 வரையில் இந்த வன்முறை மூலம் பங்களாதேஷ் பொருளாதாரத்திற்கு 10 பில்லியன் டொலர் மதிப்பிலான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டது.
இதனால் அந்நிய செலாவணி இருப்புகளை உயர்த்த போராடும் பங்களாதேஷ் நாட்டிற்கு 20 முதல் 40 பில்லியன் டொலர் வரையில் பாதிப்பு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்க வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர் போராட்டத்தை அடக்க ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய முடக்கம் போன்றவற்றின் மூலம் பிரதமர் பங்களாதேஷ் பொருளாதாரத்தில் $10 பில்லியன் தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டது.
ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மீறியுள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராணுவ ஆட்சி எழுந்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி:
வளர்ந்து வரும் அபிவிருத்தியில் 455 பில்லியன் டொலர் பொருளாதாரம் கொண்ட பங்களாதேஷ், தற்போதய மாபெரும் பிரச்சனையில் இருந்து வெளியேறுவது பெரும் சிக்கலாக இருக்கும்.
மாணவர் போராட்டங்களால் தற்போது 40 பில்லியன் டொலர் வரையில் அந்நாட்டின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் பங்களாதேஷ் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து ஒரு ஆபத்தான நிலையில் உள்ள வேளையில் அந்நாட்டின் அரசியலில் ஏற்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அந்நாட்டு தொழிலதிபர்களுக்குக் கொடுத்துள்ளது. ஜூன் மாதம் பங்களாதேஷ் நாட்டின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பு 21.8 பில்லியன் மட்டுமே.
பங்களாதேஷ் நாட்டின் அரசியல் எந்த அளவுக்கு வேகமாக சரி செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அந்நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள சரிவு குறைக்கப்படும் என்பது முன்னைய பாடமாகும்.
இராணுவ ஆட்சியில் வங்கம்:
தற்போது பங்களாதேசில் இராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக இராணுவ தளபதி வாக்கர் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார்.
பங்களாதேஷில் அனைத்து பாடசாலை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அந்நாட்டில் இடைக்கால அரசை இராணுவம் அமைப்பதாக இராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்தார்.
பங்களாதேஷை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான் பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியவர். வங்கதேச விடுதலைக்கு காரணமான தேசத் தந்தை எனப் போற்றப்பட்டவர். ஆனால், வங்கதேசம் விடுதலையான சில ஆண்டுகளிலேயே முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் சொந்த நாட்டு இராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர்.
முஜிபுர் ரஹ்மான் சிலை உடைப்பு:
தற்போது ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் சொந்த நாட்டு மக்களின் புரட்சியால் நாட்டை விட்டே தப்பி ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வங்கத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் சிலைகள் பல இடங்களில் தகர்க்கப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் நாட்டை உருவாக்கிய, வங்கதேச விடுதலைக்கு காரணமான தேசத் தந்தை எனப் போற்றப்படும் முஜிபுர் ரஹ்மானின் சிலைகள் பல இடங்களில் தகர்க்கப்பட்டமை என்பது மாணவர்களின் கோபாவசத்தை வெளிப்படுத்தி உள்ளது.