வட்டுவாகல் பாலம்; பயத்தோடு பயணிக்கும் பயணிகள்….. சி.கதீசனா
வட்டுவாகல் பாலம் முன்னோர்களின் கருத்துக்களின் படி 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது. முல்லைத்தீவு நகரத்தின் நுழைவாயிலாக வட்டுவாகல் பாலம் அனைவரையும் வரவேற்கின்றது. சுமார் 40 மீட்டர் தூரம் கொண்ட வட்டுவாகல் பாலம் வரலாற்றுத் தொன்மையான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் சின்னமாகும். சுமார் 70 வருடங்கள் தொன்மையானதாகும்.
இலங்கைப் போரின் முடிவில் தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்த மக்கள் வட்டுவாகல் பாலத்திலே இலங்கை படையிடம் ஒப்படைக்கப் பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த வட்டுவாகல் பாலத்தின் ஒரு பக்கத்திலும் இலங்கைப் படையினர் இன்னொரு பக்கமும் நின்றிருக்க தமிழ் மக்கள் குழந்தைகளோடு தண்ணீரில் நீந்தி பாலத்தைக் கடந்து வந்த வரலாற்றை இவ் வட்டுவாகல் பாலம் கூறுகின்றது.
முல்லைதீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ 35 தர வீதியின் வட்டுவாகல் பாலம் ஆனது எந்தவித புனரமைப்புகளும் இன்றி சில வருடங்களாக மோசமான நிலையில் சேதம் அடைந்து காணப்படுகின்றது.
இவ் வட்டுவாகல் பாலத்தின் வழியே முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணமும், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிய பயணமும், முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சி நோக்கிய பயணமும் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவுக்கான பயண செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இவ் வட்டுவாகல் பாலத்தின் வழியே பெரிய வாகனம் முதல் சிறிய வாகனம் வரை பயணத்தை மேற்கொள்கிறது. அத்தோடு குறித்த பாலத்தின் போக்குவரத்தில் ஒரே நேரத்தில் பெரிய வாகனம் ஒன்றே பயணம் செய்து கொள்ள முடியும் என்பதோடு, வாகனங்கள் ஒன்றை ஒன்று விலத்திச் செல்ல முடியாது என்ற நிலையும் காணப்படுகிறது.
அத்தோடு இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் வருகின்ற போது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு குறித்த வாகனம் வீதியை கடந்ததன் பின்னரே பயணம் மேற்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி ஒரு வாகனத்தை மற்றைய வாகனம் முந்திச் செல்ல முடியாத ஒடுக்கமான நிலை காணப்படுகிறது.
இப்பாலத்தின் வீதியில் இரு பக்கங்களிலும் சமிஞ்ஞை விளக்குகள் அமைக்கப் படாமையினால் வாகன சாரதிகள் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இப்பாலத்தின் அடியில் நீரேரி காணப்படுகின்றதனால் பாலத்தின் கரைகளில் மீனவர்கள் மீன் பிடித்தலையும்,இறால் பிடித்தல், வலை வீசுதல் போன்ற செயற்பாடுகளை மாலை வேளையிலும் அதிகாலை வேளையிலும் மேற்கொள்வதை எம்மால் அவதானிக்க முடியும். இக்காட்சியானது இப்பாலத்தின் அருகில் இடம்பெறுகின்ற அருமையான காட்சியாகும்.
இப் பாலமானது வெவ்வேறு இடங்களுக்கு செல்வதற்கு உதவியாக அமைந்துள்ள நிலையில் மழைக்காலத்தில் பல தடவைகள் சேதமடைந்திருக்கிறது. அதாவது பாலத்தின் பல்வேறு இடங்களில் வெடிப்புகள் காணப்பட்டமை, வீதி பாதுகாப்பு அற்றதாக சில இடங்களில் தாழிறங்கி காணப்பட்டமை, இவற்றோடு பாலத்தில் அடிக்கடி உடைவுகள் ஏற்படுகின்றமை போன்றன.
இது தொடர்பில் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியும் நிரந்தர புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படாமல் தற்காலிக புனரமைப்பு மாத்திரமே செய்யப்பட்டு வருகின்றன. இப்பாலத்தின் வழியே பிரயாணிகள் பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலை காணப்படுவதால் குறித்த பாலத்தை சீரமைத்து தரும்படி அப்பாலத்தின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பாலத்தினை திருத்துவதற்கான கோரிக்கைகள் பல தடவைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை திருத்துவதற்கான நிதி கிடைக்கவில்லை என தற்காலிகமாக புனரமைப்பு பணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டின் மழைக்காலப் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தை மேவிச் சென்றதோடு அதனால் பிரயாணத்தை மேற்கொள்கின்ற கனரக வாகனங்களும், சிறிய வாகனங்களும் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியிருந்தன. கடந்த ஆண்டில் பாலத்தில் நீர்மட்டம் உயர்ந்ததில் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள ஒருவரில் நானும் ஒருவர் எனும் ரீதியில் இதனை எழுதியுள்ளேன்.
இன்றும் கூட வழமை போல் வாகனங்கள் அப்பாலத்தின் ஊடாகவே பயணிக்கின்றன. ஒவ்வொரு மழைக்காலங்களிலும் நீர்மட்டம் உயர்வதால் அப்பாலத்தினூடாக பயணத்தினை மேற்கொள்ளும் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இப்பாலத்தில் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் பல தடவைகள் அப்பாலத்தின் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.
ஒவ்வொரு மழைக் காலங்களிலும் பிரயாணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு இவ் வட்டுவாகல் பாலப் பகுதியில் கனரக வாகனம் ஒன்றை ஏற்றிய நிலையில் பாரவூர்தி ஒன்றின் டயர் காற்று போனதால் அந்த வீதி ஊடாக போக்குவரத்து பல மணிநேரம் தடைப்பட்டிருந்தது. குறித்த பாலம் ஒடுங்கியதாகவும் ஏனைய வாகனம் விலத்திச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாலும் பாலத்தின் நடுப்பகுதியில் குறித்த வாகனம் பழுதடைந்தமையினால் இந்த பாலத்தின் வீதியூடாக சேவையில் ஈடுபடும் பஸ்கள் முதல் ஏனைய கனரக வாகனங்களும் மாற்று வழியை பயன்படுத்த முடியாத நிலையில் பாலத்தின் இருமருங்கிலும் நீண்ட வரிசையில் மாலை 5 மணியிலிருந்து பல மணி நேரம் காத்து நின்ற செய்தி பதிவாகியுள்ளது.
இவ்வாறாக இப் பாலத்தின் பிரச்சினையால் போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது. வட்டுவாகல் பாலத்தின் வீதி போக்குவரத்து மேற்கொள்ள கட்டாயமான வீதியாகும். அப் பாலத்தின் சேதங்கள் பல இடங்களுக்கான போக்குவரத்து மேற்கொள்வதற்கு தடையாக உள்ளதோடு அப்பாலத்தின் சேதங்கள் குறித்து உரிய அமைப்பு கவனத்தில் எடுத்து அதனை நிரந்தர புனரமைப்பு செய்து கொடுக்க வேண்டும். அப்பாலத்தின் வழியே பயத்தோடு பயணம் செய்யும் பயணி என்னும் வகையில் இக்கட்டுரை அமைய பெற்றுள்ளது. இனிவரும் மழை காலங்களிலாவது பயணிகளுடைய போக்குவரத்து தடைப்படாது குறித்த பாலமானது புனரமைப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-சி.கதீசனா
3ம் வருடம் ஊடகக் கற்கைகள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்