கட்டுரைகள்

பங்களாதேஷ் வன்முறைகளின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான்; அச்சத்தில் இந்தியா – இலங்கை தேர்தலில் எதிரொலிக்குமா?… சு.நிஷாந்தன்

பங்காளதேஷில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் போராட்டங்களின் பின்னணியிலும், ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியிலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பங்களாதேஷில் இரண்டு பிரதான கட்சிகள் உள்ளன. பங்களாதேஷ் அவாமி லீக் மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி ஆகிய கட்சிகளே இந்நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதானக் கட்சிகளாகும்.

பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியின் தலைவரும் பிரதமராகவும் இருருந்த ஷேக் ஹசீனா, சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை விரும்பாத மற்றும் இந்தியாவுடன் இணைந்து போகும் மிதவாத போக்கை உடையவர்.

ஆனால், பங்களாதேஷ் தேசியவாத கட்சி கடும்போக்குவாதத்தை விரும்பு கட்சி என்பதுடன், பாகிஸ்தான் மற்றும் சீனா சார்ப்பு கொள்கைகளை கொண்டது.

1971 முதல் தலையீடு

அரச துறையில் இராணுவத்தினருக்கான கோட்டா ஒதுக்கீடு ஒரு பிரச்சினையாக இருக்கின்ற போதிலும் மறுபுறம் இந்நாட்டு உள்ளக அரசியலில் சீனா, பாகிஸ்தானின் தலையீடுகள் மிகப் பெரிய தாக்கங்களை கடந்த 1971ஆம் ஆண்டுமுதல் ஏற்படுத்தி வருகின்றன.

1971ஆம் ஆண்டுக்கு முன்னர் இன்றைய பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாக மாற இந்தியாவே அனைத்த வழிவகைகளையும் செய்தது. அதற்கு எதிராக நீண்டகாலமாக பாகிஸ்தான் பல்வேறு நகர்வுகளை பங்களாதேஷில் முன்னெடுத்து வருகிறது. அதேபோன்று இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களாக உள்ள அசாம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல் போன்றன இந்தியாவின் கீழ் வாழ விரும்பாத மாநிலங்களாக உள்ளன.

அருணாச்சல் பிரதேசத்தை சீனாவுடன் இணைக்க பல முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலப்பரப்பு பங்களாதேஷ்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு

பங்களாதேஷில் சீனாவின் ஆதிக்கம் ஏற்பட்டால் அருணாச்சல், மணிப்பூர் உட்பட பல வடமேற்கு மாநிலங்கள் இந்தியாவைவிட்டு பிரிந்துச் செல்லும் சூழ்நிலைகள் ஏற்படலாம். அதற்கு சீனா மற்றும் பாகிஸ்தானின் பங்களிப்பு அதிகரிக்கலாம் என்பதால் இந்தியா இந்த விவகாரத்தில் அதிக அக்கறை செலுத்தியுள்ளது.

தற்போதைய இந்த சூழல் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒரு விவகாரமாக மாறியுள்ளதால் புதுடில்லி பல்வேறு நகர்வுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு சார்பான ஆட்சியொன்று பங்களாதேஷில் அமைந்தால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், பாகிஸ்தான் உடனான பங்களாதேஷின் உறவும் புதுபிக்கப்படும்.

கடுமையான மாணவர் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிடடு தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். பங்களாதேஷ் விவகாரம் தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதமும் இன்று இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், இடைக்கால அரசொன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவம் அறிவித்துள்ளது.

பங்களாதேஷின் தற்போதைய பதற்றமான சூழ்நிலை இலங்கை அரசியலிலும் எதிரொலிக்க கூடியது. இலங்கையில் இந்தியா அதன் செல்வாக்கை தக்கவைக்க முயற்சித்துவரும் பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சார்ப்பான ஒருவரை ஜனாதிபதியாக்கும் முயற்சிகளில் பெய்ஜிங்கும் ஈடுபட்டுள்ளது.

சீன ஆதிக்கம்

அதற்காக பல்வேறு ரகசிய சந்திப்புகள் கடந்தகாலத்தில் இடம்பெற்றிருந்தன. இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒரு தேர்தலாகும். இங்கு எவர் ஆட்சி அமைத்தாலும் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்பாட்டால் அது இந்தியாவுக்கு பாதகமானது.

அதனால் ஜனாதிபதித் தேர்தலில் இந்திய றோ வின் நகர்வுகள் அதிகமாக இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு அனைத்து நாடுகளிலும் இருக்க வேண்டியது கட்டாயம் என்பது அது இந்தியாவின் பூகோள அரசியலிலும் தேசிய பாதுகாப்பிலும் தாக்கம் செலுத்தும் காரணியாகவும் உள்ளது.

அதன் காரணமாக பங்களாதேஷ் விவகாரத்தை கையாள்வது போன்று இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் இந்தியா அதிகூடிய அவதானத்தை செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சு.நிஷாந்தன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.