நடுகைக்காரி….74….. ஏலையா க.முருகதாசன்
தாயின் கையை, கடையடியைவிட்டு அவசரம் அவசரமாக பிடித்திழுத்துக் கொண்டு தேநீர்க்கடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த மங்களேஸ்வரியிடம் எதுக்காக இப்ப என்னை இழுத்துக் கொண்டு போறாயடி என்று தாய் கேட்க ,சொல்றன் வாங்கம்மா என்றவள் தேநீர்க்கடையடியில் யாருமில்லாத இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போனவள்;,அம்மா நீங்கள் வீட்டுக்கு போனதும் என்னை அடியுங்கள் பேசுங்கள் ஆனால் இஞ்சை புடவைக் கடையடியிலை எதுவும் கதைக்காதையுங்கோ அம்மா நீங்கள் புஸ்பாவின் தாய் ஏதாவது கேட்டால் பொய் சொல்ல வேண்டி வரும் என்ற மகளை கேள்விக்குறியுடன் பார்த்த மங்களேஸ்வரியின் தாய் நீ என்னடி சொல்கிறாய் எனக்கு ஒண்டுமே விளங்கேலை என்கிறாள்.
அம்மா என்னோட படிக்கிற புஸ்பா அண்டைக்கு எங்கடை வீட்டுக்கு என்னை வருத்தம் பார்க்கப் போறதாகத் தாய்க்குப் பொய்; சொல்லிப் போட்டு ஞானத்தைப் வருத்தம் பார்க்க அவற்றை வீட்டுக்குப் போயிருக்கிறாள்,தாயும் என்னை வருத்தம் பார்க்கத்தான் எங்கடை வீட்டுக்குத்தான் புஸ்பா வந்ததாக நம்பிக் கொண்டிருக்கிறா,தற்செயலா புஸ்பாவின்ரை தாய் உங்களை ஏதாவது கேட்டாள் என்னை வருத்தம் பார்க்க எங்கடை வீட்டுக்கு வந்ததாகப் பொய் சொல்லுங்கோம்மா,இன்னொரு விசயம் எனக்குக் குடுக்கவெண்டு பொய் சொல்லி தாயிடம் கொர்லிக்ஸ் வாங்கிக் கொண்டு போய் குடுத்திருக்கிறாள்,இன்னொரு விசயமம்மா அங்கை போனவிடத்திலை புஸ்பாவுக்கு பீரியட்வர ஞானத்தின்ரை தாய்தான் உதவி செய்திருக்கிறாள்,அம்மா இன்னொரு விசயம் அவள் அங்கை மீன்குழம்போடை சோறு சாப்பிட்டுமிருக்கிறாள்,புஸ்பா மீன் குழம்புக் கதையை தாய்க்குச் சொன்னாளோ சொல்லவில்லையோ தெரியாது அதைப்பற்றி ஏதாவது கேட்டாள் வந்த இடத்திலை எப்படிச் சாப்பாடு குடுக்காமல் அனுப்புவது என்று சமாளியுங்களம்மா.
இஞ்சை நானும் நீங்களும் வந்திருக்கிறம்,புஸ்பாவும் தாயும் வந்திருக்கினம்,ஞானமும் தாயும் வந்திருக்கினம்.அம்மா உங்களை புஸ்பாவின் தாய் ஏதாவது கேட்டால் என்னென்ன பொய் சொல்ல வேண்டுமென்று தெரியுமோ,எனக்கு வருத்தம் என்று சொல்ல வேண்டும்,கொர்லிக்ஸை ஏன் குடுத்து விட்டனீங்கள் அவளுக்கென்ன காய்ச்சல்தானே என்று சொல்ல வேண்டும்,பீரியட்டுக்கு உதவி செய்ததென்று சொல்ல வேண்டும் என்று படபடவென மங்களேஸ்வரி சொல்ல தாய் மலைச்சுப் போய் நின்றாள்,ஏன்ரி ஞானத்துக்கும் புஸ்பாவுக்கும் காதல் கீதல் இருக்கோடி இல்லாட்டி அவளேன் அந்தப் பொடியனை வருத்தம் பார்க்கப் போக வேணும்,எனக்கென்றால் சமிசமாய் இருக்கு,அது சரி தமயந்திக்கு அன்னம் தூது போன மாதிரி நீதான் தூதுக்காரியோ,தரகர் வேலை பார்க்கிறாய் போல என தாய் மங்களேஸ்வரியை சந்தேகத்துடன் பார்த்தவள்,நீ தேவையில்லாத வேலை பார்க்காதை,கொண்ணை அறிஞ்சால் பிரளமே வரும் என்ற தாய்க்கு அம்மா அண்ணை என்ன திறமோ அவரும் விரும்பித்தானே செய்தவர்,அம்மா இதுக்கு கடுமையாக யோசிக்கத் தேவையில்லையம்மா தாயைச் சம்மதிக்க வைக்க முயற்சிக்கிறாள்.
ஓண்டாகப் படிக்கிற பிள்ளையள் தங்கடை சக பிள்ளைகளுக்கு வருத்தம் துன்பம் என்றால் போய்ப் பார்க்கிறது வழக்கந்தானே.நன்மைக்கு பொய் சொல்றது தப்பில்லையம்மா,அதுக்கென்று திருவள்ளுவரே பொய் சொல்லலாம் என்ற மாதிரி பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற குறளையே எப்பவோ எழுதியிருக்கிறார் என்று மங்களேஸ்வரி சொல்லுகிறாள்.
மகள் தன்னையும் கூச்சநாச்சமில்லாமல் பொய் சொல்லச் சொல்கிறாளே என பதட்டமடைந்த மங்களேஸ்வரி,எடியே நாளைக்கு நாங்களும் இதுக்கு உடந்தையென்று உன்ரை சினேகிதியின் குடும்பத்துக்கு தெரிய வந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும்,நீ என்னைக் கொண்டு போய் சிக்கலில் மாட்டப் போகிறாய் கொப்பருக்கு தெரிஞ்சால் அவர் காலிலை சுடுதண்ணி ஊத்தின மாதிரி குதிப்பாரடி என்று சொல்ல அது ஒண்டும் நடக்காதம்மா என்றவளிடம்,அது சரி உன்னிலையும் எனக்கு ஐமிச்சமாய் இருக்கு நீயும் ஏதாவது என்று சொல்லி முடிக்கமுந்தி அம்மா உன்ரை மோளைப் பற்றி என்ன நினைக்கிறாய் பொடியங்கள் என்னைப் பார்க்கவே பயப்படுவினம் என்று தாய்க்குச் சொன்னாலும் தனக்கும் தனபாலசிங்கத்துக்குமிடையிலை ஒரு ஈர்ப்பு இருப்பதால் தாய் கேட்டதும் அவளுக்கு திக்கென்று இருந்தாலும் முகத்தை கடுமையாக வைச்சிருந்தபடி தான் எதுக்கும் அசைந்து குடுக்கமாட்டன் என்பது போல நடித்தாள்.
மங்களேஸ்வரி சொன்னதைக் கேட்டு அவளின் தாய் பயந்து போயிருந்தாள்.
ஒரு குடும்பகாரி துணிஞ்சு எப்படிப் பொய் சொல்ல முடியும்,முழுப்பூசணிக்காயை சோற்றிலை மறைக்கிற மாதிரி பொய்யைச் சொல்லச் சொன்னது மட்டுமல்ல அதுக்கு திருவள்ளுவரையும் சாட்சிக்கழைக்கிறாளே.எங்கடை காலம் மாதிரி இப்ப இல்லை,இப்ப காலம் தலைகீழாக மாறிவிட்டது என்று நினைச்ச மங்களேஸ்வரியின் தாய் பதட்டத்துடன் முன்னே போக மங்களேஸ்வரியும் புடவைக்கடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
வெயிலின் வெக்கை ஒருபுறமும் சனநெரிசல் ஒருபுறமுமாக புடவைக் கடைஅல்லாடிக் கொண்டிருந்தது.
சங்கப் புடவைக்கடையில் உடுபுடவைகள் மலிவென்பதால் மலிவு விலைக்கு விற்பனை நடக்குதென்றால் கடை ஒரே ஆராவாரமாக இருக்கும். ஞானமும் தாயும் சீத்தைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுப்பித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அம்மா அக்காமாருக்கு துணி எடுக்கேலையா என்று ஞானம் கேட்க அவைக்கும் எடுக்கத்தான் வேணும்.இஞ்சை கிடக்கிறதிலை அவளவைக்கு எது பிடிக்குமோ தெரியாது என்று சொன்ன ஞானத்தின் தாய்,மேசையில் தனக்கருகில் கிடந்த சீத்தைத் துணியைக் காட்டி தம்பி அதை ஒருக்கா என்னட்டை எடுத்துத் தாங்கோ என்று சொன்ன போது,அந்தத் சீத்தைத் துணியை மங்களேஸ்வரியின் தாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.மங்களேஸ்வரி அவளருகில் நின்று கொண்டிருந்தாள்.
யாரோ ஒரு பெண் என நினைச்சுக் கொண்டிருந்த ஞானத்தின் தாய்க்கு அந்த முகம் பரிச்சயமான முகமாகத் தெரியவே,உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது என்று சொல்ல,நான் இவளின்ரை அம்மா இவாவும் உங்கடை மகனும் ஒரே வகுப்பில்தான் படிக்கினம் என்று சொல்ல,ஓ அப்படியா என்ற ஞானத்தின் தாய் சொல்கிறாள்.
ஞானம் மங்களேஸ்வரியைப் பார்த்தும் பார்க்காதவன் போல,அம்மா பெரியக்காவின் நிறத்துக்கு அந்தச் சீத்தைத் துணி நல்லாயிருக்குமென்று நினைக்கிறன் என்று சொல்ல,அதே துணியை மங்களேஸ்வரியின் தாய் எடுத்து விரித்து உயர்த்திப் பார்ப்பதைக் கண்ட ஞானத்தின் தாய்,அவ பார்த்துக் கொண்டிருக்கிறா பார்த்து முடியட்டும் என்று சொல்ல,பரவாயில்லை நீங்களும் பாருங்கள் என்று மங்களேஸ்வரியின் தாய் சொல்லி கொண்டே ஞானத்தின் தாயிடம் குடுப்பதற்கு முந்தி மங்களேஸ்வரி இந்தாங்க அன்ரி என்று சீத்தைத் துணியை ஞானத்தின் தாயின் பக்கத்துக்கு தள்ளி விடுகிறாள்.
அவள் அப்படி நடந்து கொண்டது மங்களேஸ்வரியின் தாய்க்கு பிடிக்கவில்லையோ தெரியாது,கீழ்க் கண்ணாலை மகளை முறைச்சுப் பார்க்கிறாள்.
ஞானம் மங்களேஸ்வரியை யாரென்று தெரியாதது போல நடந்து கொண்டான். அதே போலவே மங்களேஸ்வரியும் ஞானத்தைக் கவனிக்காதது போல இருப்பதைக் கண்ட மங்களேஸ்வரியின் தாய் என்ன இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாத மாதிரி நடிக்கிறியள் எனக்கும் எல்லாம் விளங்கும் என்கிறாள்.
பக்கத்தில் நிற்பவர் யாரென்று தெரியாத அளவுக்கு அவசரமும்,துணி விற்று முடிஞ்சு போனால் என்ன செய்வது என்ற பதட்டமும் எல்லோர் முகத்திலும் தெரிகிறது.
ப னா வடிவில் துணிப்பட்டடை இருந்தது.அந்தத் துணி நல்லதா இந்தத் துணி நல்லதா என்ற அங்கலாய்ப்பில்,கிழக்குப் பக்கத்து பட:டடையோடு வடக்கிலும் தெற்கிலம் தொடுக்கப்பட்டு மேற்கு நோக்கி நீளவாட்டுப் படட்டையின் மூன்று பகுதிகளிலும் கண்ணாடி அலுமாரிகளும் அவற்றுக்குள் சீலைகள்,பஞ்சாபி உடுப்புக்கள் ,காற்சட்டைகள்,சேர்ட்கள் என அடுக்கப்பட்டிருந்தன.
பாவனையாளர்களில் பெரும்பாலானவர்கள் சீத்தைத் துணிகளை எடுப்பதிலும்,சிலர் சீலைகள் எடுப்பதிலும், ஒரு சிலர் பஞ்சாபி உடுப்பை எடுபித்து அது நல்லதா இது நல்லதா எனத் தடுமாறுவிதிலும்,இன்னும் சில ஆண்கள் ரெடிமேட் சேர்ட்டுகளை எடுப்பித்து இந்தக் கலர் நல்லதா அந்தக் கலர் நல்லதா எனக் குழம்பிக் கொண்டிருந்தனர்.
பட்டடை எங்கும் சீத்தைத் துணிகளாலும்,சீலைகள்,பஞ்சாபி உடுப்புக்கள்,சேர்ட்டுகள்,காற்சட்டைகள்,கைலிகள் எனப் பரவிக் குவிந்து கிடந்தன.
குலைந்து கிடந்த சீத்தைத் துணிகளை திருப்பிச் சுற்றி வைப்பதும்,அதை ஒருக்கா எடுங்கோ என்று சொல்ல விற்பனைப் பணியாளர்கள்,அலுமாரியிலிருந்து திருப்பி எடுத்து குலைத்துக் காட்டுவதுமாக இருந்தனர்.
துணியை அளந்து வெட்டுவதற்கு சக பணியாளரிடம் மீற்றர்த் தடியை வாங்குவது போல விற்பனைப் பெண் சிவயோகினி ஒண்டையும் எடுக்காதுகள் அங்கலாய்ப்பிலை அதையும் இதையம் குலைச்சுப் போடுதுகள் என்று பெண் விற்பனையாளர் ஆண் விற்பனையாளனுக்கு காதிலை சொல்கிறாள்.
மங்களேஸ்வரியும் தாயும் வடக்குப்புறப் பட்டடைக்குப் போன போது அங்கு புஸ்பாவும் தாயும் நிற்பதைக் காண்கிறாள்.அவளை நோக்கிப் போன மங்களேஸ்வரிக்கு அவளருகில் சிறு இடைவெளிவிட்டு ஒரு பெண் துணிகளைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டவள்,புஸ்பாவின் அருகில் நிற்க வேண்டுமென்பதற்காக புஸ்பாவுக்கும் அந்தப் பெண்ணுக்குமிடையில் கையைவிட்டு துணியொன்றை ஆர்வமாக எடுத்துப் பகார்ப்பது போலப் பார்க்க,அந்தப் பெண் வலது பக்கமாக நகர்ந்து இடம் குடுக்க, தனக்கு இடது பக்கமாக நின்ற புஸ்பாவோடு நெருங்கி நின்வள் இஞ்சை எல்லாரும் வந்திருக்கிறம்,நீங்களும் அம்மாவும் நானும் அம்மாவும்;அந்தப் பக்கம் ஞானமும் தாயும் நிற்கினம்,என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,புஸ்பா யதார்த்தமாக முகத்தைத் திருப்புவது போலத் திரும்பிப் பார்க்கிறாள்.
ஞானமும் அந்நேரம் பார்த்து முகத்தைத் திருப்பி புஸ்பாவைப் பார்க்கிறான்.இருவர் முகத்திலும் மெலிதாக புன்னகை இழையோட கண்களால் பேசிக் கொள்கின்றனர்.
மகள் யாரைத் திரும்பிப் பார்க்கிறாள் என்பதைக் கடைக்கண்ணால் பார்த்த புஸ்பாவின் தாய் மெதுவாக தானும் தலையைத் திருப்பிப் பார்க்கிறாள். தெற்குப் பக்கத்து பட்டடையிலிருந்து ஒரு பொடியன் திரும்பிப் பார்ப்பதைக் கவனித்த புஸ்பாவின் தாய் மகளை குத்திட்டுப் பார்த்துவிட்டு துணி எடுப்பதில் கவனம் செலுத்துகிறாள்.
வடக்குப் பட்டடையோடு புஸ்பாவின் தாய் நின்ற நிரையில்,புஸ்பாவின் தாய்க்கு வலது பக்கத்தில் ஒரு பெண் அதற்கடுத்து மங்களேஸ்வரியின் தாய்,அதற்கடுத்து புஸ்பா,அதற்கடுத்து மங்களேஸ்வரி என நிற்கின்றனர். கடைக்குள் சன நெரிசல் மட்டுமல்ல கதைப்போரின் இரைச்சலும் இருந்தது.
புஸ்பாவின் காதுக்கு கிட்ட வாயைக் கொண்டு போன மங்களேஸ்வரி,புஸ்பா நான் சொல்லுறதைக் கவனமாகக் கேள்,என்னை வருத்தம் பார்க்கத்தான் நீங்கள் வந்தனீங்கள் என்று அம்மாவிட்டை கெஞ்சாத குறையாகக் கெஞ்சி பொய் சொல்லச் சொல்லியிருக்கிறன்,அம்மாவும் அரைகுறை மனதோடை ஓம் என்று சொல்லியிருக்கிறா,வீட்டுக்குப் போனதற்குப் பிறகு என்ன தாளிதம் நடக்கப் போகுதோ தெரியாது.நன்மை தரும் விசயத்துக்கு நல்லாய்ப் பொய் சொல்லலாம் என்று திருவள்ளுவர் சொன்ன,பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற குறளையும் சொல்லியிருக்கிறன், உங்கடை அம்மா எங்கடை
அம்மாவோடை கதைக்கு வேண்டி வந்து நீங்கள் என்னை வருத்தம் பார்க்கத்தான் வந்தனீங்களா என்று கேட்டால்,அம்மா ஓம் என்று தாராளமாகப் பொய் சொல்லுவா அதற்குப்: பொறுப்பு திருவள்ளுவர்தான் நீங்கள் ஒன்றும் யோசியாதையுங்கோ,தெண்டித்து ஞானத்தின்ரை அம்மாவையோ,உங்கடை அம்மாவையோ என்ரை அம்மாவையோ ஒருத்தரரோடு ஒருத்தர் கதைக்கவிடாமல் செய்ய வேணும் என்று மங்களேஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,மங்களேஸ்வரிக்கு இடம் குடுத்து கிழக்குப் பக்கமாக தள்ளி நின்ற பெண்,இந்தக் காலத்துப் பெட்டையளுக்கு ஒரு டீசன்ரியே இல்லை,நான் துணி பார்த்துக் கொண்டிருக்க இடையிலை வந்து புகிருது என்று மங்களேஸ்வரிக்குச் சுடத்தக்கதாகச் சொல்ல,அதற்கு மங்களேஸ்வரி இஞ்சருங்கோ நான் டீசன்ட் இல்லாதவளல்ல,என்னோடை படிக்கிறவா இவா அதுதான் புகுந்து நின்றனான் என்று மங்களேஸ்வரி சொல்ல,அதுக்குக் கேட்டிருந்தாள் விலத்தி நின்றிருப்பன்தானே என்று அந்தப் பெண் சொல்ல தனது தவறை உணர்ந்து மங்களேஸ்வரி அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொறி என்கிறாள்.
மீண்டும் மங்களேஸ்வரி மறந்து தன்னும் ஞானத்தை குத்திட்டுப் பார்க்காதையுங்கோ, கொஞ்சத்துக்கு முன்னம் நீங்கள் ஞானத்தைப் பார்த்ததை உங்கடை அம்மாவும் கவனிச்சவா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,புஸ்பாவின் தாயார் உங்கடை மகளை வருத்தம் பார்க்கவா புஸ்பா வந்தவா என்று மங்களேஸ்வரியின் தாயைக் கேட்க,தடுமாறிய மங்களேஸ்வரியின் தாய் தன் தடுமாற்றத்தைக் காட்டாது ஓம் பாருங்கோ அவளுக்குச் சும்மா காய்ச்சல்,அதுக்குப் போய் இந்தப் பிள்ளை மினக்கெட்டு வருத்தம் பார்க்க வந்திட்டுது என்று மங்களேஸ்வரியின் தாய் சொல்லிக் கொண்டிருக்கும் போது மங்களேஸ்வரி வீதிப் பக்கம் திரும்பிப் பார்த்தவள் ஐயையோ என்கிறாள்,யாரோ மங்களேஸ்வரியின் காலை விழக்கிப் போட்டார்கள் என நினைச்ச புஸ்பா பதட்டப்பட்டு,ஏன் என்ன நடந்தது என்று கேட்க,அங்கை பாருங்கள் என்று தனது தலையை வீதிப் பக்கம் திருப்பிக் காட்ட,நீலாவும் அவளுடைய தமக்கையும் கடைக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர்.
(தொடரும்….)