“கனகர் கிராமம்”…. தொடர் நாவல்… அங்கம் – 42… செங்கதிரோன்
அரசியல் – சமூக – வரலாற்று நாவல்
கோகுலனின் கண்களிலிருந்து கண்ணீர் வெளிப்பட்டதைக் கவனித்துவிட்ட கனகரட்ணம், “தம்பி! தைரியமானவன் நீ, உன்னப் போன்றவர்கள் கலங்கக் கூடாது. உன்ர அப்பாவயும் எனக்குத் தெரியும். ஐம்பதாம் ஆண்டிலிருந்து அவர எனக்குத் தெரியும். நீ அப்போது சிறு குழந்தயா இரிந்திரிப்பா. முதலில பாணமையிலதான் வந்து குடும்பத்தோட இரிந்தவர். பாணமயில பெரியதம்பிப் போடியார் அப்பாவின்ர நல்ல கூட்டாளி. பெரியதம்பிப் போடியார் மட்டக்களப்பு சிங்களவாடி. பாணமயில வன்னியசிங்கம் போடியாரிட மகளத்தான் கலியாணம் செய்தவர். ரெண்டுபேரும் நல்லாத் தண்ணி போடுவினம். பேந்துதான் பாணமயிலிரிந்து பொத்துவிலுக்கு உன்ர அப்பா குடும்பத்தோடு குடியேறினவர்.
பொத்துவிலில சினிமா வராத காலத்தில நாடகக் கம்பனி வைச்சுக் கொட்டகைகளில நாடகம் போடுறதத் தொழிலாச் செய்தவர். கொழும்பு மொறட்டுவயில மரத்தொழில் பயிற்சி பெற்ற திறமையான தச்சுக் கலைஞன். தண்ணி போட்டாலும்கூட ரோசக்காரன். மானஸ்தன். பொத்துவிலில என்னிட்ட ஒருநாளும் உதவி கேட்டு வராதவன். எவருக்கும் தலை குனிய மாட்டார். அவர் குடியாலதான் வருத்தம் வந்து செத்தவர். அவர் ஆட்களுக்கு வாங்கிக் குடுத்துத்தான் தானும் குடிச்சார். அவர் ஒருநாளும் ஆரிட்டயும் வாங்கிக் குடிச்சவரில்ல. அவ்வளவு ரோசக்காரன். உன்ர அம்மாவும் நல்ல தைரியசாலி. கெட்டிக்காரி. உன்ர அப்பா செத்தென்று எவரிட்டயும் கை ஏந்தாம தன்ர சொந்தக் காலில நின்று உன்னப் படிப்பித்து ஆளாக்கினவ. எனக்கு எல்லாம் தெரியும். அப்பிடிப்பட்ட தாய் தகப்பனுக்குப் பிறந்த நீ கண்கலங்கக்கூடாது” என்றார்.
கோகுலனுக்குக் கனகரட்ணத்தின் பேச்சைக் கேட்க ஆச்சரியமாயிருந்தது. இவ்வளவு உணர்ச்சிகரமாக அவனுடன் இதற்கு முன்பு ஒருநாளும் உரையாடியதில்லை. மற்றது தனது குடும்பத்தின் சகல விடயங்களையும் தனது தாய் தந்தையரைப்பற்றியும் இவ்வளதூரம் அறிந்து வைத்திருக்கிறாரே என்பதும் அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அதேவேளை தான் உயர்வான மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த கனகரட்ணம் தன் தந்தையைப் பற்றியும் தாயைப்பற்றியும் உயர்வாகக் கூறியது கோகுலனுக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் இப்படி இறந்துபோன தனது தந்தையை நினைவுபடுத்தியும் தாயைப்ற்றியும் கூறுகிறாரென்றும் கோகுலன் நினைத்தான்.
ஊரில் செல்வந்தராக வாழ்ந்து காரில் ஓடித்திரிந்து தனது பாரிய வேளாண்மைச் செய்கையையும் மாட்டுப்பட்டிகளையும் வர்த்தக நிலையங்களையும் ஒப்பந்த வேலைகளையும் முகாமை செய்து கொண்டு ஓர் ‘உப்பரிகை’ வாழ்க்கை வாழ்ந்தவர் என்று கனகரட்ணத்தைப் பற்றித் தான் கட்டியிருந்த பிம்பம் ஒரு நொடியில் உடைந்து நொருங்கியதைக் கோகுலன் தன்னுள் உணர்ந்தான். கோகுலனின் தாய் தந்தையருடன் பெரிதாகப் பழகாமலே இவ்வளவு விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறாரே என்று எண்ணியதில் கனகரட்ணத்தின் சமூக ஊடாட்டம் மிகவும் நுட்பமானது எனப் புரிந்து கொண்டான். அவர்மீது அவன் வைத்திருந்த அபிமானம் ஆர்முடுகல் அடைந்தது.
நீண்ட நேரம் அமைதி நிலவியதால், “என்ன தம்பி யோசிக்கிறா. அப்பாவின்ர ஞாபகத்த ஏற்படுத்திப் போட்டேனோ?” என்றார் கனகரட்ணம். “அப்படியொண்டுமில்ல” என்று சமாளித்தான் கோகுலன். “உன்ர கண்ணால தண்ணி வந்ததப் பார்த்தன். அதனாலதான் தைரியசாலிகளான உன்ர அப்பாவப்பத்தியும் அம்மாவப்பத்தியும் சொல்லவேண்டி வந்தது” என்றார் கனகரட்ணம்.
“நான் தைரியமிழக்கல்ல. கலங்கவும் இல்ல. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சேவ செய்யிறதான் உங்களுக்கிருக்கிற ஒரேயொரு ஆச எண்டு நீங்க சொன்னவுடன் அரசாங்கக் கட்சிக்கு மாறின உங்களில எனக்கு ஏற்பட்டிருந்த ஆத்திரத்தயும் வன்மத்தையும் எனது கண்ணீர் கழுவி என்னிலிருந்து வெளியேற்றிவிட்டது.” என்று தனது உள்ளத்தைத் திறந்து வார்த்தைகளைக் கொட்டினான் கோகுலன். கனகரட்ணத்தைக் காணவரும்போது கோகுலன் கனத்த மனத்துடன்தான் வந்தான். கோகுலனின் மனம் இப்போது இலேசாகி இறக்கை கட்டிப்பறந்தது. கோகுலனின் பதிலால் முகம் மலர்ந்து புன்னகைத்த கனகரட்ணம் “உனக்கு இன்னும் சொல்லிறன் கேளு” என்றார். கோகுலனும் ஆர்வத்துடன் காதைக் கொடுத்தான்.
“உன்ர குடும்பம் அப்ப பாக்கியவத்தயிலதான் குடியிரிந்தது ஞாபகமிரிக்கு. பாக்கியவத்தட வரலாறும் உனக்குத் தெரிய வேணும். அதயும் சொல்லிறன்.
1940 ஆம் ஆண்டு எண்டு நினைக்கிறன். திருக்கோவில சின்னத்துரை என்றொரு ‘அப்போதிக்கரி’ இரிந்தவர். பொத்துவில் பிரதேசத்துக்கும் அவர்தான் வைத்திய சேவை செய்தவர். அவரின்ர முழுப் பெயரும் கூட எனக்கு நல்லா ஞாபகமிரிக்கு. டொக்டர் முருகப்பர் கந்தவனம் சின்னத்துரை-மட்டக்களப்பு ஆள். அவரின்ர அப்பாவின்ர அக்காவின்ர பெயர் பாக்கியம். அவருக்கு மாமி. மாமியாரின்ர பெயரிலதான் ‘பாக்கியவத்த’ என்று வந்தது. கிட்டத்தட்ட நூறு ஏக்கர் தென்னந்தோட்டம் தம்பி. பேந்து அதப் பொத்துவில் முஸ்லிம் ஆளொருவர் வாங்கி ‘மௌலானா தோட்டம்’ எண்டு மாறியது. பேந்து அத்தோட்டம் துண்டுதுண்டுகளாகப் பலபேருக்கும் விற்கப்பட்டுக் கைமாறியதுதான் இப்ப இரிக்கிற ‘பாக்கியவத்த’ ‘மௌலானாதோட்டம்’ எண்டு இடயில சொன்னாலும் ஆரம்பித்திலிருந்த ‘பாக்கியவத்த’ என்ற பெயர்தான் நிரந்தமாப் போச்சுது. ‘பாக்கியவத்த’த் தொங்கலிலிரிந்துதான் ‘விக்றர்’ ர தென்னந்தோட்டம் தொடங்கிது.
‘பாக்கியவத்த’ த் தென்னந்தோட்டமும் ‘விக்றர்’ ர தென்னந்தோட்டமும் ஒரு காலத்தில முள்ளுப் பத்தைகளாக மூழ்கிக் கிடந்தது. ஊராட்கள் விறகு பொறுக்க இந்தத் தோட்டங்களுக்குப் போய் வருவாங்க. ‘விக்றர்’ ர தோட்டம் பொத்துவில் களப்பு வரைக்கும் இரிந்தது. அதின்ர இங்காலப் பக்கத்து எல்ல ‘வட்டி’ என்று சொல்லுற பரந்த பள்ளப் பூமி. மாரிகாலத்தில வட்டி வெள்ளக்காடா இருக்கும். வெள்ளம் மொனராகல றோட்டுக்கு மேலாலயும் வழிஞ்சோடி மட்டக்களப்பு ரோட்டுக்கு மேலாலயும் வழிஞ்சி சவக்காலப் பூமியால பாய்ஞ்சி ‘கொட்டுக்கல்’ லில கடலில கலக்கும். இப்ப எல்லா இடமும் சனம் குடியேறித்து. அந்த நாளையில றோட்டால வெள்ளம் பாயக்குள்ள சனம் போய் ‘ஏறுகெழுத்தி’ மீன் புடிப்பாங்க. சரி இனி விசயத்துக்கு வருவம்.
அறுபதாம் ஆண்டு எண்டு எனக்கு ஞாபகம். உன்ர அப்பாவும், ‘சிங்கத்தார்’ எண்டு பொத்துவில் ஆஸ்பத்திரியில அன்ரி மலேரியா ஒவசியராக வேல பார்த்தவர். அவரும் காரைதீவுதான் ஊர். அவரும் அப்ப பாக்கியவத்தயிலதான் குடியிருந்தவர். தெய்வநாயகம் போடியார் எண்டு களுவாஞ்சிக்குடி. பொத்துவிலில கலியாணம் கட்டி வட்டிவெளியில குடியிருந்தவர். பெரிய மீசை வச்சிருப்பார். மற்றவர் முத்தையாக் கிளாக்கர். உனக்குத் தெரியும்தானே. இவங்க எல்லாரும் முன்னிண்டுதான் இன்ஸ்பெக்ரர் ஏத்தத்தில இரிக்கிற பள்ளிக்கூடத்தக் கட்டிப் பேந்து அத அரசாங்கம் பாரமெடுத்தது. அப்பிடி உன்ர அப்பாவும் மக்களுக்கு நன்ம செய்த ஒரு ஆள்தான். அந்தக் குணம்தான் உனக்கும் வந்திரிக்கு” என்றார்.
“எனக்கு நல்லா ஞாபகம் இரிக்கு, காட்டுக் கம்புகளயும் கிடுகுகளயும் கொண்டுதான் அந்தப் பள்ளிக்கூடத்த முதல் கட்டினவங்க. பள்ளிக்கூடத்தில படிக்க பிள்ளைகள் வேணுமெண்டு பொத்துவில் ‘எம்.எம்.ஸ்கூலில்’ ல படிச்சுக் கொண்டிருந்த என்ன விலக்கிக் கொண்டு போய் புதிசாக் கட்டின இன்ஸ்பெக்ரர் ஏத்தம் பள்ளிக்கூடத்தில அப்பா என்னச் சேர்த்தவர். தலைமை ஆசிரியராக இரிந்தவர் பாலசிங்கம் மாஸ்ரர். பொத்துவிலில உங்கட வீட்டுக்குப் பக்கத்திலதானே குடியிரிந்தவர். பிறகு மீனோடைக்கட்டுப் பள்ளிக்கூடத்திற்குப் ‘பிரின்சிப்பலா’ வந்தவர். எலக்சனுக்கு நமக்குத்தான் வேலை செய்தவர்” என்றான் கோகுலன்.
“சின்ன வயசில நடந்ததெல்லாம் உனக்கு நல்ல ஞாபகம் இரிக்குத் தம்பி. எல்லாத்தயும் சரியாச் சொல்லுறா. இன்ஸ்பெக்ரர் ஏத்தம் பள்ளிக்கூடத்தில ஆரம்பத்தில ரெண்டு பொம்புளப் புள்ளையள் படிப்பிச்சவயள். ஞாபகம் இரிக்கா தம்பி” என்றார்.
“இராஜேஸ்வரி அக்கா, பிரேமாவதி அக்கா எண்டு நாங்க அழச்ச அவங்க ரெண்டுபேரும் காரதீவுதான். பொத்துவிலில எங்கட வீட்ட இரிந்துதானே பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்தவங்க. சின்னலில எனக்கும் பாடம் சொல்லிக் குடுத்தவங்க. அவங்க இப்ப காரதீவிலதான் ‘ரீச்சர்ஸ்’ சாக இரிக்காங்க” என்றான் கோகுலன்.
“எல்லாத்தயும் நல்லா ஞாபகமாக வச்சிரிக்கியே! சரி பழய கதயளக் கதைக்கத் தொடங்கினா கதச்சிக் கொண்டே இரிக்கலாம். பழசுகளக் கதைக்க நல்லாத்தான் இரிக்கு.
நேரம் போகுது. நீயும் உன்ர இரிப்பிடத்துக்குப் போகவேணும். நான் கெதியில சுகமாகிப் பொத்துவிலுக்கு வருவன். வந்த பிறகு என்னோட நீ நிக்கவேணும்” என்று கூறி முடித்த கனகரட்ணம் எதேச்சையாக “கொழும்பில எங்க தம்பி தங்கி நிக்கிறா?”என்று கேட்டார்.
“வெள்ளவத்த பசல்ஸ் லேனில அத்தான் நடேசன் வீட்டிலதான்” என்று பதிலிறுத்தான் கோகுலன். சற்று நேரம் யோசித்த கனகரட்ணம் “நடேசன் எண்டா நம்மட ‘ராஜுவின்ர கூட்டாளிதானே. அவர எனக்கு நல்லாத் தெரியுமே” என்றார்.
ராஜு என்று அவர் குறிப்பிட்டது அவருடைய அக்காவின் மகளை மணம் முடித்தவரும் கல்முனை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் ‘ரி.ஏ.’ ஆகப் பணிபுரிந்து கொண்டிருந்தவரும் தேர்தலின்போது இவர்களுடன் இணைந்து வேலை செய்தவரும் பொத்துவில் பிரதேசத்துக்குப் பொறுப்பான இராஜகோபால் ரி.ஏ.யைத்தான் குறிப்பிடுகிறார் என உடனே புரிந்து கொண்ட கோகுலன் “ஓம்! அவர்தான்” என்றான். “நடேசன் எப்படி உனக்குச் சொந்தம்” என்று கேட்டார் கனகரட்ணம்.
நடேசன் கோகுலனின் தாயாரின் கூடப்பிறந்த தங்கையின் மகளை-கோகுலனுக்கு ஒன்றுவிட்ட அக்காவைத் திருமணம் செய்தவர். கோகுலனுக்கு அத்தான். 1968 ஆம் ஆண்டு கோகுலன் மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தபோது செங்கலடி நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகத்தில் ‘பிரதம இலிகிதர்’ ஆகக் கடமையாற்றியவர். கோகுலன் ‘நீர்ப்பாசனப் பயிலுனர்’ பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கக் காலாகவிருந்தவர். கோகுலனை நீர்ப்பாசனப் பயிலுனர் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காகக் கொழும்புக்குக் கூட்டிச் சென்று வழிகாட்டி உதவியவர். இராஜகோபால் ‘ரி.ஏ.’ இன் நெருங்கிய குடும்ப நண்பர். இப்போது கொழும்பு ‘யாவத்த’ யில் அமைந்திருந்த நீர்ப்பாசனத் திணைக்களத் தலைமை அலுலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
வெள்ளவத்தை பசல்ஸ் ஒழுங்கையில் 47/2 இலக்க வீட்டைச் சொந்தமாக வாங்கி அங்கு தனது மனைவியும் மூன்று பிள்ளைகளும் அடங்கிய குடும்பத்துடன் வசித்து வந்தார். மூன்று பிள்ளைகளும் கொழும்பு கல்லூரிகளில் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். கோகுலன் கொழும்பு வரும்போதெல்லாம் இங்குதான் தங்கிச் செல்வான். இம்முறையும் அங்கு தங்கி நின்றுதான் கனகரட்ணத்தைப் பார்க்க மருதானை ‘சுலைமான்ஸ்’ தனியார் மருத்துவ மனைக்கு வந்திருந்தான்.
இவ்வளவு விடயங்களையும் விபரமாகக் கனகரட்ணத்திடம் ஒப்புவித்த கோகுலன்,
“முதலில சுகமாகி வாங்க உடல்நிலயக் கவனியுங்க. நான் உங்களோட ‘எலக்சன்’ காலத்தில் எப்படி நின்றேனோ அதையும்விடக் கூடுதலாக நிற்பன்” என்று அழுத்திக் கூறிவிட்டு இருக்கையை விட்டு எழுந்தான் கோகுலன்.
கோகுலனின் பதிலால் கனகரட்ணம் பூவொன்று மலர்ந்ததுபோல் புன்னகைத்தார். பின் பொலிஸ் இன்ஸ்பெக்ரரைக் கூப்பிட்டுக் கோகுலனைப் பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
மாலை ஆறுமணியளவில் மருதானை ‘சுலைமான்ஸ்’ மருத்துவமனைக்குள் பிரவேசித்த கோகுலன் மருத்துவ மனையைவிட்டு வெளியேறும்போது இரவு பதினொரு மணியாகிவிட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியேறிய கோகுலன் வீதியில் இறங்கி வெள்ளவத்தைக்குச் செல்வதற்கான ‘பஸ்’ சைப் பிடித்தான்.
கனகரட்ணத்தின் தந்தையார் மயில்வாகனம் ‘ஓவசியர்’ கனகரட்ணத்தை உயர்கல்வியைப் பெறும்பொருட்டு 1941 ஆம் ஆண்டு கனகரட்ணத்திற்குப் பதினேழு வயதாயிருக்கும் போது இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
அக்காலத்தில் கொழும்பிலிருந்து ரத்னபுர வழியாக மட்டக்களப்புக்கு வீதி இருந்தது. இது கொழும்பு – ரத்னபுர- வெல்லவாய – மட்டக்களப்பு ( Colombo-Ratnapura- Welllawaya- Batticaloa- CRWB) வீதி என அழைக்கப்பட்டது. இன்றும் அவ்வாறே. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குச் செல்வதற்கான வீதி இதன்பின்பே நிர்மாணிக்கப்பெற்றது.
மயில்வாகனம் ஓவசியர் கடமையாற்றிய காலத்தில்தான் மட்டக்களப்பு திருகோணமலை வீதி நிர்மாணம் செய்யப்பெற்றது. இவ் வீதியை இவர் மிகக் குறுகிய காலத்தில் வீதிப் போக்குவரத்துக்கு உரியதாகச் செப்பனிட்டு முடித்ததால், அப்போது நிலவிய பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கையின் இறுதி ஆளுநராகவிருந்த சேர் ஹென்றி மொறுச்சேன்மூர் அவர்களினால் மயில்வாகனம் ஓவசியருக்குக் ‘கார்’ ஒன்று பரிசளிக்கப்பெற்றதுடன் மேலும் என்ன வேண்டுமென்று ஆளுநரினால் கேட்கப்பட்டார்.
1941 ஆம் ஆண்டு உயர்கல்வியின் பொருட்டு இந்தியா சென்ற கனகரட்ணம் இந்தியாவில் சகஜான்பூர் விமானஓட்டுனர் துறையில் இலத்திரனியல் பொறியியல் கற்கை மேற்கொண்டு விமானியானார்.
பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் இரண்டாவது உலக மகா யுத்தம் நடைபெற்ற காலத்தில் யுத்த விமானத்தில் பணியாற்றினார். அப்போது சக இந்திய விமானிகளுடன் மலேசிய நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டு இந்தியாவில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு – திருவோணமலை வீதியை மிகக் குறுகிய காலத்தில் செப்பனிட்டுக் கொடுத்தமைக்காக அப்போதைய இலங்கையின் ஆளுநர் அவர்கள் மயில்வாகனம் ‘ஓவசியர்’ க்குக் காரொன்றைப் பரிசளித்து மேலும் என்ன வேண்டுமென்று கேட்டபோது இந்தியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தனது மகன் கனகரட்ணத்தின் விடுதலையை அவர் வேண்டினார். அதன் பெறுபேறாகக் கனகரட்ணம் இந்தியச் சிறையிலிருந்து விடுதலையாகி இலங்கை திரும்பினார்.
இந்த விபரமெல்லாம் ஏற்கெனவே கோகுலனுக்குத் தெரிந்திருந்தது. அந்த இராணுவ அனுபவம்தான் அவரைப் பொடியன்கள் சுட்டபோது தரையில் விழுந்து உருளச் செய்திருக்கிறது. அதனால்தான் அவர் வயிற்றில் சூட்டை வாங்கிக்கொண்டபோதும் துப்பாக்கிதாரிகளினால் குறிபார்த்துச் சுட முடியாததால் உயிர் தப்பியிருக்கிறார் என்று கோகுலனை அவன் ‘பஸ்’ சில் மருதானையிலிருந்து வெள்ளவத்தைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது எண்ண வைத்தது.
(தொடரும் …… அங்கம் – 43)
கனகர் கிராமம் நாவல்….
இதயராசன்
‘கனகர் கிராமம்’ அரசியல் – சமூக – வரலாற்று நாவல் செங்கதிரோனின் அனுபவச் செழுமையுடன், கிழக்கு மாகாணம் குறிப்பாகப் பொத்துவில் பிரதேச மக்களின் வாழ்வியலை, அவர்களது மண்ணுடன் இரண்டறக்கலந்து அனுபவிக்கும் உணர்வு, ஒவ்வொரு வாசகருக்கும் ஏற்படும் என்பது எனது கணிப்பாகும்.
செங்கதிரோன் தான் மண் அழைந்து விளையாடிய களத்தினை, கதைமாந்தர் ஊடே, தன் அனுபவத்தினையும் அம்மக்களின் வாழ்வியல் அனுபவத்தையும், அப்பிரதேச வரலாறு – தொல்லியல் சான்றுகள் – அம்மாக்களின் தொன்மங்களையும் பாட்டியிடம் கதைகேட்கும் பேரப்பிள்ளை போல், வாசகர்களும் தன்னிலைமறந்து கதைக்குள் உறைந்துவிடச் செய்யும் மொழிநடை ஆசிரியர்க்கு வாய்த்துள்ளது.
இதுவரை எழுதப்பட்ட 42 அத்தியாயங்களில் முதல் அரைவாசி அத்தியாயங்களும் அம்மக்களின் கடின உழைப்பினையும், பண்பாட்டினையும் எழுச்செல்கின்றன.
இயற்கையோடு இணைந்த அம்மக்களது உழைப்பும், வறுமையும், எதிர்நோக்கும் சவால்களும் சொல்லப்படுகின்றன. நன்றாயினும் தீதாயினும் மண்ணையும் உழைப்பையும் நேசிக்கும் மக்களை மனக்கண்ணில் நிறுத்துகின்றது.
வெறுமனே புறவாழ்க்கையை வைத்து ஒருவரின், ஒரு கூட்டத்தின் அகக் கோலங்களை மதிப்பிட முடியாது. ஆனால் பொத்துவிலிருந்து உகந்தை சென்று, அங்கிருந்து கால்நடையாக கொடிய விலங்குகள் நிறைந்த ‘யால’ வனத்தினூடே கதிர்காமத்திற்கு யாத்திரை போன பக்தர்களுடன் வாசகர்களையும் யாத்திரைக்கு அழைத்துச் சென்ற பாங்கினை எப்படிப் பாராட்டினாலும் நிறைவுபெறாது.
நாவலின் இரண்டாவது அரைப்பகுதியும் அம்மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பேசுகின்றது. அம்மக்களது அரசியலை வழிநடாத்தும் கனவான்களும், அரசியல் கட்சிகளும் எவ்வளவுதூரம் மக்களுக்கு விஷ்வாசமாகா இருக்கின்றனர் – இருக்கின்றன என்பதை நடைமுறை அரசியல் செயற்பாட்டின் மூலம் சொல்கின்றார்.
1977 ஆம் வருட தேசிய அரசுப் பேரவைத் தேர்தல் மூலம், கிழக்குமாகாண அரசியல் சதுரங்கத்தைப் படம்பிடுத்துக் காட்டுகின்றார். நாடு தழுவிய இனவாதம், மதவாதம், மொழிவாதம் முன்னிலைக்கு வந்தமையால், வஞ்சனை அறியாத கிராமத்து மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கும் வாழ்க்கை திணிக்கப்படுவதை 77 ஆகஸ்ட் இனக்கலவர்தினூடே விபரிக்கின்றார்.
நாவல் முழுமையும் வெளிவந்த பின்பே, முழுமையான மதிப்பீட்டை நல்க முடியும் என்ற வகையில், இதுவரையான 42 அத்தியாயங்களும் வாசித்த மட்டில், நாவல் வாசகரிடையே கனதியான இடத்தைப் பெறும், உசாத்துணையாகவும் எடுத்தாளப்படும் என்பதைப் பதிவு செய்கின்றேன்.