கதைகள்

”மநுவின் ஒரு நாள் அலுவல்” … சிறுகதை -78… அண்டனூர் சுரா

ஒட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸ் நடக்கயிருக்கின்ற ஜமாபந்தியால் களைக்கட்டியிருந்தது. அவ்வூரை தாலுகா கிராமமாக அறிவித்ததன் பிறகு கூடும் முதல் ஜமாபந்தி என்பதால் பந்தல்கால் ஊன்றுதல் தொடங்கி தண்ணீர்ப்பந்தல் அமைக்கிறது வரைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தேறின. அவ்வூருக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த தாசில்தார் பஞ்சமன் அத்தனை வேலைகளையும் தனிஒருவராக வரிந்துகட்டி செய்துகொண்டிருந்தார்.
அதிகாரிகள் மனு வாங்குவதற்கும் மக்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கும் உகந்ததாக பெரிய பந்தல் போடப்பட்டு அதில் வைக்கோல் நிரவி தண்ணீர்த் தெளித்து அதன் மீது பின்னிய பனைமட்டைகள் விரிக்கப்பட்டிருந்தன.

பஞ்சமன் திட்டமிடலின் பேரில் ஜமாபந்தி நடப்பதால் பொதுமக்கள் வருமிடங்களிலும் நடைப்பாதையிலும் அவர்கள் இளைப்பாறுவதற்குக் கூடுமிடங்களிலும் பெரிய மண்சால்களில் தண்ணீர் வைத்தார். ஜமாபந்தியில் எத்தகைய மனுக்கள் வாங்கப்படும் என்கிற செய்தியை பட்டித்தொட்டியெங்கும் தண்டோரா போட்டு அறிவிக்கைச் செய்தார். ஒரு நாளைக்கு நான்கு ஊரென ஒரு வாரக் காலம் நடைபெறும் ஜமாபந்தி அது. தாசில்தாரின் அறிவித்தலின்பேரில் ஊர்த்தலையாரிகள் செய்தியை முனைந்து அவரவர் கிராம மக்களுக்கு ஜமாபந்தி குறித்தச் செய்தியை அறிவிக்கைச் செய்தார்கள்.

ஜமாபந்தியையொட்டி மனு வாங்குமிடங்கள், மனு எழுதும் இடங்கள், மனு எழுதக் கடுதாசி விற்குமிடங்கள் யாவும் ஆர்ப்பரிப்பிற்கு உள்ளாகிருந்தன. ஜமாபந்தி நடக்குமிடம் திருவிழாக்கோலம் கண்டது. ஜமாபந்தியை முதல்நாள் கலெக்டர் வருகைத்தந்து நடத்தி வைப்பதாக இருந்தது. நிகழ்வை நடத்தி வைப்பதுடன் அரைநாள் மக்களுடன் இருந்து மனுக்கள் வாங்கவும் சில பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காணவும் திட்டமிட்டிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் கலெக்டர் பிரிட்டிஷாராக இருந்தார். அவரது வெள்ளைத் தோலைப் பார்க்கவும் அவரது செம்பட்டை தட்டிப்போயிருக்கும் முடிகள், முழங்கால்கள் வரைக்கும் அணிந்திருக்கும் பூட்ஸ் கால்கள், தொப்பி, கோட், சூட், டை இவற்றைப் பார்ப்பதற்கென்று பலர் கூடியிருந்தார்கள். அவரது பெயர் மக்களின் வாய்க்குள் நுழையாத பெயராக இருந்ததால் அவரை ‘கலெக்டர் துரை’ என்றே அழைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

ஒட்டப்பிடாரம் அதுநாள் வரைக்கும் இல்லாத பிரத்யேகக் களமானது. தூத்துக்குடி மாவட்ட நகரத்திற்குப் பிறகு மக்களால் பெரிதும் உச்சரிக்கும் பெயராக ஒட்டப்பிடாரம் ஆகிவிட்டிருந்தது. தூத்துக்குடிக்கும் ஒட்டப்பிடாரத்திற்கும் இடையில் ஒற்றை, இரட்டை மாட்டு வண்டிகளும், எருமைப் பூட்டிய வண்டிகளும், தள்ளுவண்டி, சைக்கிள் இழுவண்டிகளும் ஜமாபந்திக்காக ஓடத்தொடங்கியிருந்தன. ஜமாபந்தி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அதுகுறித்த வேலைகள் தொடங்கிவிட்டிருந்தமையால் வீட்டுமனை, பட்டா, குடிநீர்ப் பிரச்சனை, உப்பு வரிக்குத் தடை, தினக்கூலி உயர்வு, துறைமுகத்தில் வேலை செய்யும் கொத்தடிமையாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கிட கோருதல், ரயில் பாதை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு நிவாரணம்,….என மக்கள் ஒவ்வொரு மனுக்களாக எழுதி, மனு சரியாக இருக்கிறதா என ஒவ்வொருத்தரிடமும் கொடுத்து சரிபார்க்கும் வேலையில் இறங்கியிருந்தார்கள்.

வாடகை வீட்டில் இயங்கிய தாலுகா ஆபீஸ்க்கு வெள்ளை அடிக்கும் படலம் ஒருவழியாக முடிவிற்கு வந்தது. கூரை ஆங்காங்கே ஒழுகியதால் வரகு, வைக்கோல், கரும்புத் தோகைக்கொண்டு வேய்ந்திருந்தார்கள். அலுவலகத்திற்கு முன்பு வாழைமரம் நடவும், தென்னை ஓலையாக தோரணங்களும் தொங்கவிடப்பட்டன.

அண்டை கிராமத்தார்கள் தாலுகா ஆபிஸ்க்கு நடந்துவர தற்காலிக பாதைகள் ஒதுக்கிக்கொடுத்தார் தாசில்தார் பஞ்சமன். சிலர் அதையே பொதுவழியாகவும், நிரந்தர பாதையாகவும் கேட்டு மனு எழுதி கசங்காமல் பஞ்சமனிடம் நீட்டினார்கள். அதற்கு அவர் இம்மனுக்களை ஜமாபந்தி அன்று கலெக்டரிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மாட்டுவண்டி கட்டிக்கொண்டு வரும் வெளியூர் மக்கள் வண்டிகளை நிறுத்த ஓரிடம் மாடுகளை கட்ட ஓரிடமென இடங்கள் ஒதுக்கிக்கொடுத்தார். பண்ணையார்களின் குதிரை வண்டிக்கென தனியிடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. எருமைகள் பூட்டிய வண்டிகளும் வந்திருந்தன. மாடு, குதிரைகளுக்கான வைக்கோல், புல், தீனிகள்,..விற்பனைக்கு வந்தன. கால்நடை தீனிகள் பண்டமாற்று முறைக்கும், அணாவிற்கும் ஜமாபந்தி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விற்பனையைத் தொடங்கியிருந்தன.

ஒரு கட்டு புல் கொடுத்து நான்கு கட்டு வைக்கோல் வாங்கிக்கொள்ளும் சந்தையாக ஜமாபந்தி சந்தை கூடியிருந்தது. மாடு, குதிரைகள் கட்டுவதற்கான கயிறுகள், அச்சுகள், சங்கிலிகள் விற்பனைக்கு வந்தன. மாதந்தோறும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் இச்சந்தை வாரத்தின் ஏழு நாட்களும் கூடியிருந்தது. கலெக்டர் ஆய்விற்கு உட்பட்ட இச்சந்தையில் எந்தப் பொருளும் அடக்கவிலையை விடவும் இரண்டு விழுக்காடு இலாபமளவிற்கே விற்கும் சந்தையாக நிர்ணயித்திருந்தார் பஞ்சமன். அதைக் கண்காணிக்கவும் செய்தார். சந்தை ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தைச் சுற்றி கூடியிருந்தது. உப்பு சந்தை கடற்கரை ஓரத்திலும் கருவாட்டு சந்தை அதையொட்டியும் விரிக்கப்பட்டிருந்தது.

ஒட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தார்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு முதல் நாளே பந்தலுக்கு வந்திருந்தார்கள். தூத்துக்குடியில் இரு மாதத்திற்கு ஒரு முறை கூடும் ஜமாபந்திக்கு அடுத்து குறிப்பிடத்தகுந்த ஜமாபந்தி அது. தாசில்தார் பஞ்சமன் எடுத்திருந்த முயற்சியின் பேரால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தூத்துக்குடியில் கூடும் மாவட்ட ஜமாபந்தியை விடவும் பெரிய ஜமாபந்தி என்று இதைச் சொல்லுமளவிற்கு அதற்கான வேலைகளை முடுக்கியிருந்தார் பஞ்சமன். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூடும் ஜமாபந்தியில் கலெக்டர் மட்டுமே மனு வாங்குபவராக இருந்தார். அவரிடம் கொடுக்கப்படும் மனுக்கள் ஆங்கில மனுக்களாக இருந்தன. ஆங்கிலத்தில் மனு கொடுக்கையில் அவரிடம் ஆங்கிலத்தில் மனுக்குரித்த சந்தேகங்கள் எழுப்புவார். மனுதாரர் அதை ஆங்கிலத்தில் விளக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அதைவிடவும் தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ்க்குள் அவ்வளவு எளிதில் எல்லோராலும் நுழைந்துவிட முடியாது. அதற்குள் நுழைய ஏகப்பட்ட பரிந்துரைகள் தேவையாக இருந்தன. கலெக்டரிடம் ஆங்கில மனுகொடுக்க ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் எழுதி வாங்கிச் செல்லவேண்டும். அப்படி எழுதுவாங்குகையில் மனுக்குரித்த விபரம் அவர் வழியே அடுத்தவர்களுக்குத் தெரிந்துவிடவும் வாய்ப்பிருந்தது. ஆனால் ஒட்டப்பிடாரம் ஜமாபந்தி அப்படியானது அன்று. இங்கு தாலுகா அளவிலான மனு என்பதால் மனுவை தமிழில் எழுத அனுமதித்திருந்தார் பஞ்சமன். படிக்காதவர்கள் ரேகை வைக்கவும், அதுவும் முடியாதவர்கள் நேரடியாக கோரிக்கைகளைச் சொல்லவும் வலியுறுத்திருந்தார். ஆங்கிலம், தமிழ் இரண்டும் தெரிந்தவர்கள் இரு மொழிகளிலும் மனு கொடுக்கலாம் என்றும் விரும்பினால் கலெக்டரிம் நேரில் மனு கொடுக்கலாம் என்றும் அறிவித்திருந்தார்.

ஜமாபந்தியை முன்னிட்டு டீக்கடைகள், வெத்திலைக்கடை, கொட்டைப்பாக்கு, சடை புகையிலை,..என பல கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அரிவாள், மண்வெட்டி, கடப்பாறைகளை கொய்துகொடுக்கும் கொல்லற்கடைகள் திறந்திருந்தார்கள். கூடை, சாக்கு, பாய், கயிறு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸில் நின்று எந்தப் பக்கமாகத் திரும்பினாலும் கடைகளாகவே இருந்தன. இது தவிர ஆட்டு சந்தை, மாட்டுச்சந்தை, குதிரை, கோழி, வாத்து சந்தைகளும் கூட தனித்துவ சந்தையாகி இருந்தன. அத்தனையும் கட்டுப்படியான தாசில்தார் நிர்ணயித்த விலையின்பேரில் விற்கவும் வாங்கவும் பண்டமாற்றிக் கொள்ளவுமாக இருந்தன.

மனு எழுதிக்கொடுப்பதற்கென்று இருபது பேர்களை நியமித்திருந்தார் பஞ்சமன். அவர்கள் ஐந்தாம் பாடத்திற்கும் மேல் படித்தவர்கள். பத்தாம் பாடம் வரைக்கும் படித்தவர்கள் ஆங்கில மனு எழுதினார்கள். மனு எழுதித் தரவேண்டி நிற்பவர்களிடம் விலாசம் கேட்டு கோரிக்கையை நீட்டெழுத்துகளில் எந்தவொரு அடித்தல், திருத்தலுமின்றி எழுதிக்கொடுப்பவர்களாக இருந்தார்கள். தாசில்தாரிடம் கொடுக்கவேண்டிய மனு தமிழிலும் கலெக்டரிடம் கொடுக்க வேண்டிய மனு ஆங்கிலத்திலும் எழுதப்படவேண்டும் என்பதால் தமிழில் எழுதவேண்டிய மனுவிற்கு உள்ளூர்க்காரர்களையும், ஆங்கிலத்தில் மனு எழுத தூத்துக்குடி மாவட்டம் முழுமையும் ஆங்கிலம் தெரிந்தவர்களை வரவைத்திருந்தார். தமிழில் மனு எழுத ஒரு மனுவிற்கு அரை அணாவும், ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு ஒன்றரை அணாவும் கூலியாக நிர்ணயித்திருந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரட்டைக்குதிரை சாரட் வண்டிகள் இரு வாரக் காலத்திற்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. அவ்வண்டி கலெக்டரின் அதிகாரப்பூர்வமான வண்டி என்பதால் அத்தகைய வண்டி தாசில்தார் அனுமதியில்லாமல் ஊருக்குள் இயங்க தடை விதித்திருந்தார். கலெக்டரின் வாகனத்தை நிறுத்த தனிஇடமும் அவருடன் வரும் பிற அலுவலக வாகனங்களுக்கு தனி இடமும் ஒதுக்கிக் கொடுத்தார்.

ஜமாபந்தி நாள் வந்திருந்தது. கலெக்டர் வரவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. மக்கள் அவரது வருகையை எதிர்நோக்கி இருந்தார்கள். அவரை வரவேற்க மேள, தாள வாத்தியங்கள் இசைக்கக் காத்திருந்தன. ஒட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸ் ஆறு மாதத்திற்கு முன்பே தொடங்கியிருந்தாலும் அவ்வூருக்கு கலெக்டர் வருவது இதுவே முதல்முறை. அவர் முறையாக தாலுகா ஆபிஸை திறந்து வைக்கவும் வெளியில் கல்வெட்டு பதிக்கவும் நூனாழி கட்டி கத்தரிகோலுடன் கலெக்டருக்காக காத்திருந்தார்கள்.

ஒட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம அலுவலர்கள், தலையாரிகள், நில அளவையர்கள், பஞ்சாயத்தாரர்கள், பண்ணையார்கள், ஊர்ப்பெருந்தலைகள்…என்று பலரும் கலெக்டரை வரவேற்கக் காத்திருந்தனர். கலெக்டர் இரட்டை குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்து இறங்கியதும் அவருக்கு பொக்கை கொடுத்து, வரவேற்பு அளித்து அவருக்கான இடத்திற்கு அழைத்து செல்லவேண்டிய தாசில்தார் பஞ்சமன், அந்நேரம்வரைக்கும் வராமல் இருந்தது அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பைக் கூட்டியிருந்தது. அவர் பணியேற்று ஆறு மாதங்கள் கூட ஆகியிருக்காத நிலையில் அவர் கலெக்டர் வருவதற்கு முன்பாக வராவிட்டால் அவர் வீட்டுக்குச் செல்லவேண்டிவரும் என்று அதிகாரிகளும் மக்களும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பத்து மணிக்கு கலெக்டர் வருவதாக நேரம் கொடுத்திருந்தார். அவரது இரட்டை குதிரைகள் பூட்டிய வண்டி ஒட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸ் வளாகத்திற்குள் நுழைகையில் மணி சரியாக பத்து எனக் காட்டியது. அவரது வண்டி வளாகத்திற்குள் நுழைந்ததும் ‘கலெக்டர் துரை..’ வந்துவிட்டாரென பரபரப்பு பற்றிக்கொண்டது. மனுகொடுக்க வந்திருந்தவர்களை விடவும் வெள்ளைக்காரக் கலெக்டர் துரையைப் பார்க்க வந்தவர்கள் முண்டியடித்தார்கள். காவலர்கள் அரைக்கால் சட்டையுடன் கையில் லத்திக்கம்பை வைத்துக்கொண்டு வரையப்பட்டிருந்த எல்லைக்கோட்டிற்கு வெளியே தள்ளினார்கள். காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அவர்களை ஒழுங்குப்படுத்தி வரிசையில் நிற்க வைக்கும் வேலையில் இறங்கினார்கள். மக்களின் வரிசை தேர்வடம் அளவிற்கு நீண்டிருந்தது. ஆண்களுக்கென தனி வரிசை. பெண்களுக்கென்று தனி வரிசை அமைக்கப்பட்டிருந்தது. குடியானவர்களின் வரிசை, பண்ணையார் வரிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் வரிசை, இராணுவத்தில் பணியாற்றி கணவனை இழந்த விதவைகளுக்கென்று தனி வரிசை,…..இப்படியாக வரிசைகள் நீண்டிருந்தன.

கலெக்டர் வந்திறங்கியதும் தாசில்தாரை எதிர்நோக்கினார். அவரை வரவேற்க தாசில்தார் வந்திருக்கவில்லை. தனக்கு வணக்கம் வைக்க தாசில்தார் இல்லாததைக் கண்டு அவர் கோபத்தின் உச்சிக்கு சென்றார். அவருடைய சிவப்பு கண்கள் மேலும் சிவந்திருந்தன. அவரது கழுத்திடத்தில் தொங்கிய டையை இழுத்துவிட்டுக்கொண்டார். அவருக்குக் குடைப்பிடித்திருந்த பணியாளர் கையிலிருந்த விசிறியால் விசிறி விட்டார். அவருக்கு வியர்த்துக் கொட்டியது. தன் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டார் கலெக்டர்.

ஆங்கிலயேர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தின் வெளிப்பாடுதான் இந்த அவமரியாதை என்பதாக நினைத்தார். ஒரு காலத்தில் ஆங்கிலேய துரைகள் என அழைக்கப்பட்ட தாங்கள் இப்பொழுதெல்லாம் வெள்ளையர்கள் என நிறப்பாகுப்பாட்டுடன் விளிக்கப்படுவதை அவர் சக கலெக்டரின் வாயிலாக தெரிந்து வைத்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் இன்றைய தினம் எனக்கு முன்பே தாசில்தார் வருகைத்தந்து தனக்கு வணக்கம் வைக்கவில்லை என்பதை நினைக்கையில் அவருடைய கண்களில் அனல் பறந்து நாசிகள் விடைத்தன.
“தாசில்தார் எங்கே?” அவருக்கு குடைப் பிடித்துகொண்டிருந்தவரிடம் கேட்டார். அவருக்குப் பதில் தெரிந்திருக்கவில்லை. அடுத்து அவர் துணை தாசில்தாரிடம் கேட்கலானார். அவர் பதற்றத்துடன் ஓடிவந்து, “இந்நேரம் வரைக்கும் அவர் வந்துசேரவில்லை. அவரது வருகைத் தொடர்பாக எந்தவொரு தந்தியும் கிடைக்கப்பெறவில்லை” என்றவாறு படபடப்புடன் நின்றார். கலெக்டர் அவரது உதவியாளரைக் கூப்பிட்டு தட்டச்சு இயந்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி அவரே தட்டச்சு செய்தார்.

எழுத்துகள் பாதி பக்கத்தை நிரப்பியிருந்தது. ஒருவர் வியர்க்க விறுவிறுக்க ஓடி வருவது தெரிந்தது. அவர்தான் ஒட்டப்பிடாரம் தாலுகாவின் தாசில்தார் பஞ்சமன். அவருடைய ஒரு கையில் கலெக்டரிடம் கொடுப்பதற்கான பொக்கையும், மற்றொரு கையில் கோப்புகளும் இருந்தன. ஓடி வந்திருந்த களைப்பு அவருடைய நெற்றியில் வியர்வையாகக் கொட்டிக்கொண்டிருந்தது. அவருடைய கால்கள் அவரையும் அறியாமல் தடதடத்தன. கலெக்டர் முன் நின்று வணக்கம் வைத்து பொக்கையை அவர் முன் நீட்டினார். மக்கள் வரிசை களைந்து கலெக்டரை வட்டம் கட்டி தாசில்தார் மீது கலெக்டர் எடுக்கப்போகும் உடனடி நடவடிக்கை எத்தகையது என்பதைக் கவனிக்கத் தொடங்கினார்கள்.

கலெக்டர் தாசில்தாரைப் பார்த்து கேட்டார். “இன்றைக்கு ஜமாபந்தி என்று தெரியும்தானே?”
“ தெரியும் துரை”
“இன்றைக்கு ஜமாபந்தி நடக்கப்போகிற செய்தியை அலுவலர்களுக்கும், மக்களுக்கும் தெரிவித்தது யார்?”
“நான்தான் துரை”
“ ஜமாபந்தி ஏற்பாடுகளைச் செய்தது யார்?”
“நான்தான் துரை”
“தேதி குறித்தது?”
“நானேதான் துரை”
“கலெக்டர் வருவதற்கு முன்பாகவே தாசில்தார் ஜமாபந்திக்கு வந்துவிட வேண்டும் என்று உனக்கு ஏன் தெரிந்திருக்கவில்லை?”
“தெரியும் துரை”
“ஜமாபந்திக்கு என்னை அழைத்திருந்த நீ, என்னை வரவேற்க எனக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டும் அல்லவா?”
“வந்திருக்க வேண்டும் துரை”

“இத்தனையும் தெரிந்து நீ இவ்வளவு தாமதமாக வரக் காரணம் நான் ஆங்கிலேயன். நீ இந்தியன். என்னை நீ அவமரியாதை செய்யவேண்டும். அப்படித்தானே?”
பஞ்சமனின் உதடுகள் துண்டிக்கப்பட்ட சிறகுகளாக தடதடத்தன. “அப்படியாக இல்லை துரை. நேற்றைய தினம் ஜமாபந்திக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துமுடித்து வீட்டுக்குச் செல்ல இரவு மணி ஒன்றாகி விட்டது. வீட்டில் அத்தனை அதிகாலையில் எழுந்து வண்டி பிடித்து ஆபிஸ் வந்துசேர இத்தனை நாழிகையாகி விட்டது துரை.”

கலெக்டர் தாசில்தாரின் கண்களைத் துருவிப் பார்த்தார். “தாசில்தார், பணியாற்றும் ஊரிலேயே தங்கியிருந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்று உனக்கு ஏன் தெரிந்திருக்கவில்லை.”
“ தெரியும் துரை. ஆனால், எனக்கு யாரும் வாடகைக்கு வீடு தர மாட்டேங்கிறார்கள் துரை.”
கலெக்டர் தட்டச்சிலிருந்து எழுந்தார். தாசில்தார் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். “ ஏன்?”
“ஏனென்றால் நான் பஞ்சமன். கீழ்ச்சாதிக்காரன்.”

கலெக்டர் அருகில் நின்ற அதிகாரிகளை அழைத்து இதுகுறித்து விசாரித்தார். “தாசில்தார் சொல்வது உண்மைதான் துரை. இங்கே ஐந்தாம் வர்ணத்தவன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் தங்குவதற்கு வீடு தரமாட்டார்கள் துரை.” கலெக்டரின் விரல்கள் தட்டச்சில் ஓடத் தொடங்கின.

“……சாதியைக் காரணம் காட்டி தாசில்தாரை அவமதிப்பு செய்தது என் கவனத்திற்குத் தெரிய வருகிறது. அதிகாரியை மதிக்கத் தெரியாத இவ்வூருக்கு தாலுகா ஆபிஸ் தேவையில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக துவக்கப்பட்ட ஒட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸை ரத்து செய்து அதை கோவில்பட்டிக்கு மாற்றம் செய்து ஆணைப் பிறப்பிக்கிறேன்….”

  • அண்டனூர் சுரா

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.