எல்லை தாண்டிய உளவுப் போரில் மொசாட்டின் இலக்குத் தவறாத அதிரடி!… -ஐங்கரன் விக்கினேஸ்வரா
(உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளுக்கும்
முன்னோடி என்றே கூறப்படுகிறது இந்த இஸ்ரேல்
நாட்டின் மொசாட் உளவு அமைப்பு. உலகிலேயே மிக திறமையான மற்றும் அதிபயங்கரமானதாக அனைவராலும்
கருதப்படும் உளவு அமைப்பே மொசாட்)
மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ள ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்களின் கொலைகளின் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரியும்.
சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் மொசாட்:
இஸ்ரேல் மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் சிறியதொரு நாடு, ஆனால் ராணுவத்தில் உளவு துறையில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடி இஸ்ரேல் தான்.
உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளுக்கும் முன்னோடி என்றே கூறப்படுகிறது இந்த இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்பு. உலகிலேயே மிக திறமையான மற்றும் அதிபயங்கரமானதாக அனைவராலும் கருதப்படும் உளவு அமைப்பே மொசாட்.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் உளவு துறை என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்காவிடம் தான் பயிற்சி பெற்றது மொசாட் ஆனால் இப்போது அமெரிக்கா சி.ஐ.ஏ.வே ஆச்சரியப்படும் அளவிற்கு மொசாட் வளர்ந்து உள்ளது.
இஸ்ரேலுக்கு எதிர் காலத்தில் எதிரி ஆவான் என்று மொசாட் யாரையாவது எண்ணினால் ஆரம்பத்திலேயே அந்த அமைப்பை அழித்து விடும். 1972ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இஸ்ரேல் வீரர்கள், பயிற்சியாளர்கள் 11 பேர் பாலஸ்தீன போராளிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான ஒவ்வொருவரையும் பழிவாங்கி விட்டுதான் இஸ்ரேல் அமைதியானது.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாட்டில் இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் மேற்கொண்ட ரகசிய படுகொலை வேட்டையின் பெயர் Operation Wrath of God.
இஸ்ரேல் மிகச் சிறிய நாடாகவே இருந்த போதிலும் அந்த சிறிய நாட்டை பார்த்து பொருளாதாரத்திலும் மக்கட்தொகையிலும் மிகையாக இருக்கும் மேற்குலக நாடுகள் கூட பயப்படுகிறது என்றால் அதற்கு மிக மிக முக்கிய காரணம் மொசாட்.
லெபனானில் ஹிஸ்புல்லா தளபதி இலக்கு:
இஸ்ரேலின் எல்லை தாண்டி, நாடு கடந்த ட்ரோன் குண்டுத்தாக்குதலில் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே, லெபனானில் ஹிஸ்புல்லா தளபதி பஹத் சுக்கர் ( Fuad Shukur) ஆகியோரின் மரணங்கள், உளவுப் போரில் மொசாட்டின் இலக்குத் தவறாத அதிரடியை உலகிற்கு மீண்டும் நிருபித்துள்ளன.
கடந்த வார ஞாயிறு அன்று இஸ்ரேலின் உதைப்பந்தாட்ட மைதானத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த தாக்குதலுக்கு காரணமான ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி பஹத் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஷுரா கவுன்சில் தலைமையகம் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இவர் 83ஆம் ஆண்டு லெபனானில் அமெரிக்க தளம் ஒன்றின்மீது நடத்திய தாக்குதலில் 241 அமெரிக்க படைகள் கொல்லப்பட்டதற்கு பிரதான சூத்திரதாரி என வர்ணிக்கப்பட்டவர் அவரின் தலைக்கு அப்போது பரிசாக 5 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக தருவதாக அமெரிக்க அறிவித்து இருந்தது.
இருவரினதும் இழப்பு, மத்திய கிழக்கில் போராடிவரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு மத்தியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே.
ஈரானில் படுகொலையான ஹமாஸ் தலைவர்:
ஈரானின் புதிய அதிபராக தேர்வான மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார் இஸ்மாயில் ஹனியே. தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனியே படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆயினும் பாலஸ்தீன போராளிகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் படைகளும், உளவு அமைப்பு மொசாட்டும் மிகத்தீவிரமாக வேட்டையாடத் தொடங்கி உள்ளன.
யாரிந்த இஸ்மாயில் ஹனியே:
இஸ்மாயில் ஹனியே கடந்த 2017 முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.
அத்துடன் இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் போராளிக் குழுவின் நாடுகடந்த அரசின் தலைவராக இருந்து வந்தார். சமீபத்திய ஆண்டுகளில் கத்தாரில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.
தற்போதய போது இஸ்ரேல்-காசா போரில், அவர் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் ஒரு பேச்சுவார்த்தையாளராக செயல்பட்டார். அத்துடன் ஹமாஸின் முக்கிய நட்பு நாடான ஈரானுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டமை அரபுலகில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்மாயில் ஹானியா இவர் பாலஸ்தீனத்தில் 1962 ஆம் ஆண்டு அகதி முகாமில் பிறந்தவர் உலக இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இஸ்ரேலை அழித்தொழிக்க முன்வரவேண்டும் என மத்திய கிழக்கில் இஸ்லாமிய இளைஞர்களை அணித்திரட்டி ஹமாஸ் இயக்கம் வலுப்பெற காரணமாக இருந்தவர்.
ஹமாஸின் ஆதிக்கத்துக்குள் காசாவை கொண்டு வந்தவர்களில் முதன்மையானவரும் அங்கு பிரதமராகவும் ஆக்கப்பட்டவர். அத்துடன் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆதிக்கத்தை குறைத்து காசாவில் சுய பொருளாதார அபிவிருத்திகளையும் மேற் கொண்டவர்.
ஈரானுக்குள்ளும் லெபனானுக்குள்ளும் இஸ்ரேலின் புலனாய்வுத்துறையின் கை ஓங்கியிருக்கின்றது என்றே கருத வேண்டும்.
ஏர் பிரான்ஸ் கடத்தலும் ஒப்பரேஷன் என்டபேயும் :
1976 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 27இல் இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்விலிருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஏதன்ஸ் நகரில் தரை இறங்கிய போது, பாப்புலர் ஃப்ரண்ட் (PFLP) என்ற பாலஸ்தீனிய அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பும் சேர்ந்து விமானத்தைக் கடத்தினார்கள்.
கடத்தப்பட்ட விமானம் உகாண்டா நாட்டில் உள்ள என்டபே விமானத் தளத்திற்கு கடத்திச் செல்லப்பட்டது. விமானத்தில் 304 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகள் உட்பட 316 பயணம் செய்தனர்.
இஸ்ரேலிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட பாலஸ்தீன அமைப்பின்
கோரிக்கையாக இஸ்ரேலில் உள்ள 40 போராளிகளையும், கென்யா நாட்டில் உள்ள 13 போராளிகளையும் விடுதலை செய்யவேண்டும் என கோரியது.
பிரதமர் நேத்தன்யாஹூவின் அண்ணன் களப்பலி:
மொசாட் வழி நடாத்திய இந்தச் சண்டையில் இரண்டு பணயக் கைதிகளும் ஒரு இஸ்ரேலிய தளபதியான யோனாதன் நேத்தன்யாஹூம் கொல்லப்பட்டனர்.
இவர் வேறுயாறும் அல்ல, இன்றைய இஸ்ரேலின் பிரதம மந்திரியான பெஞ்சமின் நேத்தன்யாஹூவின் தமையனார். கடத்தல்காரர்கள் தரப்பில் அனைத்து கடத்தல்காரர்களும் உயிரிழந்தனர்.
உகாண்டா இராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்களும் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். மீட்பு முயற்சி சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது. ஏனைய பணயக் கைதிகளும், இஸ்ரேலிய இராணுவ வீரர்களும் இஸ்ரேல் நாடு திரும்பியமை மொசாட்டின் வரலாறாகும்.