அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத் தள்ளாட்டங்கள் எதனைக் காட்டுகின்றன?… நியூசிலாந்து சிற்சபேசன்
உலகெங்கிலும் ஓடியோடிச் சனநாயகம் போதிக்கும் ஆசானின் உள்வீட்டுச் சீத்துவம் சந்திக்கு வந்திருக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறுவதாகும் அடுத்த தேர்தல் 2024 நவம்பரில் நடைபெறவுள்ளது. இத்தகையதொரு பின்னணியிலேயே, உள்வீட்டு விவகாரங்கள் பேசுபொருளாகியுள்ளன.
தனிப்பட்டவர்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கே அரசியல் என்பதுவும், அரசியலில் வெற்றிபெற எதனையும் செய்யலாம் என்பதுவும், அதற்காக எந்த எல்லைவரையிலும் போகலாம் என்பதெல்லாம் தற்கால அரசியலின் தன்மையாகும்.
ஆனால், சனநாயகம் போதிக்கும் ஆசானே! உங்கள் தேசத்திலும் அப்படியா? என உலகின் கடைக்கோடியிலுள்ளோரும் பதறுகின்றனர்.
விருப்பு-வெறுப்புக்களினாலும், சுயநலப்போக்குகளினாலும் அரசியல் இயங்குவது பல்வேறு நாடுகளிலும் சர்வசாதாரணமானதாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களிளெல்லாம், பிரம்பையும் தூக்கிக்கொண்டு சனநாயக வகுப்பெடுக்க ஓடிவருகின்ற அமெரிக்காவின் இன்றையநிலை, “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்னும் வரிகளையே நினைவுபடுத்துகின்றது.
“டெமோக்கிரட்டிக்” என்று சொல்லக்கூடிய ஜனநாயாகக் கட்சியும், “ரிப்பப்ளிக்கன்” என்று சொல்லக்கூடிய குடியரசுக் கட்சியுமே, அமெரிக்காவின் தேசிய மட்டத்திலே கோலோச்சுகின்றன.
சிவில் உரிமை, பரந்தளவிலான சமூகப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை போன்றவையே ஜனநாயகக் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை வரையறுக்கின்றன.
மறுவளத்தில், வலதுசார் பழமைவாதக் கூடாரமாகவே குடியரசுக்கட்சி அறியப்படுகின்றது. பொருளாதார நலன்களே அக்கட்சியினுடைய மையவிசையாகும். குறைந்தவரி, துப்பாக்கிஉரிமை, எல்லைப்பாதுகாப்பு போன்றவையே குடியரசுக்கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை வரையறுக்கின்றன.
2024 தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்பை, தற்போதைய சனாதிபதியான பைடனுக்கே ஜனநாயகக் கட்சி வழங்கியது.
அரசதஸ்தாவேஜை முறைகேடு, கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவை ஏற்க மறுத்தமை, “கப்பிற்றல் ஹில்” என்று சொல்லப்படுகின்ற அமெரிக்க ஆட்சிப்பீடக் கட்டடத்தொகுதியில் கலகம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் மகுடமாக, பாலியல் விவகாரமொன்றில் குற்றவாளி என நியூயோர்க் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டவரே முன்னாள் சனாதிபதி டிரம்ப் ஆகும். அவருக்கே, 2024 தேர்தலுக்கான சனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்பைக் குடியரசுக்கட்சி வழங்கியது.
டிரம்ப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க படவேண்டுமா? என்ற பிரச்னையைப் பேசிப்பேசியே தேர்தலிலே வெற்றிபெற்றுவிடலாம் என்னும் கணக்கு பைடனின் பிரசாரத்தில் இருந்திருக்கலாம் என்றே கருதமுடிகின்றது. ஆனால், காலம் இன்னுமொரு கணக்கை போட்டிருக்கின்றது.
தேர்தலையொட்டி, ஜூன் 27ல் நடைபெற்ற நேருக்குநேர் விவாதம் 2024 தேர்தல் பரப்பையே மாற்றியமைத்துவிட்டது.
அன்றைய விவாதத்தில், பைடனின் வயதுமூப்பின் தளர்வு பரம இரகசியமானது. அவரது குளறுபடியான பேச்சே அதற்குச் சாட்சியாகியது.
அதனைத்தொடர்ந்து, பைடன் கூர்மையாகக் கவனிக்கப்பட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில், இரண்டாவது தடவையாகப் போட்டியிட தயாராகிய பைடனுடைய “தயார்நிலை” சந்தேகத்திற்குரியதாகியது. பைடன் வேட்பாளராகத் தொடர முடியுமா என்ற கேள்வியின் வீரியம் உச்சம் தொட்டது.
ஏற்கெனவே, பைடனின் செயற்பாட்டிலே சொந்தக்கட்சியினரே நம்பிக்கை இழக்கத் தொடங்கியிருந்தனர். பிரச்சாரப் பணிகளிலே துடிப்பைத் தேடவேண்டியிருந்தது.
பைடன் வேட்பாளராகத் தொடரக்கூடாது. போட்டியிலிருந்து விலகவேண்டும் என்பதான குரல்கள் ஆங்காங்கே ஈனஸ்வரத்தில் ஒலிக்க ஆரம்பித்திருந்தன.
பூனைக்கு யார் மணி கட்டுவது என அவரது கட்சிக்காரர்களே அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
அத்தகையதொரு சூழலிலேயே, நேருக்குநேர் விவாதத்தில் பைடனின் சொதப்பல் வரமாகியது.
வாராது வந்த வரத்தைக் கட்சிக்காரர்கள் இறுகப்பற்றிக்கொண்டனர். ஜனாதிபதி தேர்தலிலிருந்து பைடன் விலகவேண்டும் என்னும் குரல்கள் உரத்து ஒலிக்க ஆரம்பித்தன.
நிலைமை கைமீறியது. பைடனுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். துணை ஜனாதிபதி கமலா ஹரிசை ஜனநாயக் கட்சியின் வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தார்.
பைடனுடைய விலகலைத் தொடர்ந்து, குடியரசுக்கட்சியின் டிரம்ப்பை தோற்கடிக்கக் கூடிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய சவாலை ஜனநாயகக் கட்சி எதிர்கொண்டது.
புதிய வேட்பாளரை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு கால அவாகாசம் குறைவு என்பது மிகப்பெரிய சவாலாகும்.
தற்போதைய நிலவரப்படி, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னணி வேட்பாளராக வலம்வருகின்றார்.
ஆகஸ்ட் 19ல், சிகாகோவில் ஆரம்பமாகின்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிலேயே, கட்சியின் அடுத்த சனாதிபதி வேட்பாளர் பூர்வாங்கமாக அறிவிக்கப்படுவார்.
மறுவளத்தில், குடியரசுக் கட்சி சனாதிபதித் தேர்தல் வேட்பாளராக, டிரம்ப்பை பூர்வாங்கமாக அறிவித்துவிட்டது.
குடியரசுக் கட்சியின் முழுமையான ஆதரவு டிரம்ப்புக்கு கிடைத்திருக்கின்றது. தேர்தல் களத்திலே கட்சி ஒன்றுபட்டுள்ளது.
பரந்துபட்ட சமூகத்தை ஒன்றுபடுத்தும் இயல்பை டிரம்ப் கொண்டவரல்ல. வலதுசார் தீவிரப்போக்கைக் கொண்டவர். பல்லினக் கலாச்சாரத்தை ஒப்புக்குச் சப்பாணியாக ஏற்றுக்கொள்பவர். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்து ஒழித்து விடும் என்பதற்கு அஞ்சாதவர். யதார்த்தத்துக்கு எதிராக ஓடக்கூடிய இயல்பைக் கொண்டவர். அதனாலேயே, அவரது ஆதரவாளர்களால் ஆதர்சநாயகனாகக் கொண்டாடப்படுபவர். அதுவே, சாம்பலிலிருந்து எழுகின்ற பீனிக்ஸ் பறவை போன்று, டிரம்ப்பை எழுச்சி பெற வைக்கின்றது.
அண்மையிலே, பென்சில்வேனியாவிலே டிரம்ப் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம், கடைசிநேரத்தில் பைடன் தேர்தல் போட்டியிருந்து விலகியமை போன்றவை அமெரிக்க சனாதிபதித் தேர்தலின் போக்கையே மாற்றியிருக்கின்றன.
எது எப்படியாகிலும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்காலத் தள்ளாட்டங்கள் “வீட்டுக்கு வீடு வாசற்படி” என்னும் பேச்சுவழக்குத் தத்துவத்துக்கு உயிர் கொடுக்கின்றன.
– நியூசிலாந்து சிற்சபேசன் –
சீரான பார்வை, அருமையான அலசல். சனநாயகம் போதிக்கும் ஆசானே, உங்கள் தேசத்திலும் அப்படியா? போன்ற வரிகள் வலிமையானவை, சிந்திக்கத் தூண்டுபவை! வாழ்த்துக்கள்.