கட்டுரைகள்
அமெரிக்க துப்பாக்கி கலாசாரம்: தொடரும் அழிவை நிறுத்த ஏன் தயக்கம்? …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை ஆதரிப்பதில் ஆளும் ஜனநாயகக் கட்சியினர் ஏறக்குறைய ஒருமனதாக இருக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 91% கடுமையான துப்பாக்கிச் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மறுபுறம் இதை 24% குடியரசுக் கட்சியினர் மட்டுமே
ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்)
அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு `துப்பாக்கி கலாசாரம்’ அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
இன்றுவரை ‘வெகுஜன துப்பாக்கிச்சூடு’ (Mass Shooting) என்பதற்கு அமெரிக்கா ஒரு வரையறையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், துப்பாக்கி வன்முறைக் காப்பகம் ஒரு வெகுஜன துப்பாக்கிச் சூட்டை நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த – கொல்லப்பட்ட சம்பவமாக வரையறுக்கிறது.
துப்பாக்கிக் கலாச்சார வரலாறு:
உலகின் மக்கள் தொகையில் அமெரிக்க மக்களின் பங்கு 5வீகித்திற்கு சற்றே குறைவு. ஆனால், உலகில் சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்கர்கள் கைகளில் உள்ளது என்பது வெளிப்படை. கடந்த ஆண்டுகளில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்பதே இதற்கு சான்றாகும்.
கிட்டத்தட்ட நாளுக்கொறு ஒரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் துப்பாக்கிச் சூட்டினால் நடக்கும் கொலைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிக உயிர்ப் பலிகள் நடப்பது அமெரிக்காவில் தான்.
ஆயினும் துப்பாக்கி மீதான கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள அமெரிக்க மாநிலங்களில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் குறைவாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அப்படியானால், துப்பாக்கிக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துவிட வேண்டியதுதானே என பொது மக்கள் கோருகின்றனர். ஒரு வல்லரசு தேசத்தால் இதைச் செய்ய முடியாதா எனும் கேள்வி தோன்றலாம். எளிதாகச் செய்ய முடியாது என்பதே உண்மையாகும்.
ஆயுத உரிமை கோட்பாடு:
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெறுவதற்கான அமெரிக்க புரட்சிப் போரின் பின்னர், ஒட்டு மொத்த ராணுவத்தை உருவாக்கி தங்கள் நாட்டை பேணிக்காக்க முடியவில்லை. எனவே, ‘மிலிஷியா’ எனப்படும் தனியார் ராணுவக் குழுக்களைக் கொண்டே உள்நாட்டு போர் நடத்தப்பட்டது.
அவ்வேளையில் தனித்தியங்கும் ராணுவக் குழுக்கள் சமூகத்தின் பாதுகாப்புக்கு அவசியம் என்ற எண்ணம் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்களுக்கு இருந்தது.
அடிப்படையான அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு, அதைத் தொடர்ந்து 10 சீர்திருத்த மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டன. உரிமைகளுக்கான மசோதா என அழைக்கப்படும் இந்த அடிப்படை உரிமைகள் சார்ந்த சீர்திருத்தங்களின் இரண்டாவது இடத்தில் இருப்பது துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையாகும்.
18-ம் நூற்றாண்டின் கடைசியில் எழுதப்பட்ட இந்த அடிப்படை உரிமை இன்று வரை அப்படியே நீடிக்கிறது. அமெரிக்க வரலாற்றோடு பிணைந்திருக்கும் இந்த உரிமை சமூக இருளாக மாறிவிட்டது என்பது பெரும் குறைபாடாகும். பெரும்பாலான மாகாணங்களில் சாதாரணப் பொருட்கள் வாங்கும் ‘வால்மார்ட்’ போன்ற வணிகத் தளங்களில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எளிதாக வாங்க முடியும்.
துப்பாக்கி உரிமைக்காகக் குரலெழுப்புவதில் மிக முக்கிய நிறுவனம் ‘தேசிய துப்பாக்கி சங்கம்’ (என்.ஆர்.ஏ.) பண பலம் மிகுந்த இந்த நிறுவனம் தேர்தல்களின்போது, தங்களது கொள்கைகளுக்குச் சாதகமாக இருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களது தேர்தல் பணிக்கு நிதி கொடுக்கிறது. குறிப்பாக, அதிபர் தேர்தலில் இந்த நிறுவனத்தின் சார்பு மிகக் கூர்மையாக உற்றுநோக்கப்படும்.
100 பேருக்கு 120.5 துப்பாக்கிகள்:
துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வீடுகளிலும், பொது இடங்களிலும் நடக்கும் துப்பாக்கிச் சூடுகளை உள்ளடக்கியிருக்கிறது. இது கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் கொலைகளைவிட கணிசமாக பெரிய விகிதமாகும்.
சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட முன்னணி தனியார் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டில் உலகெங்கிலுமுள்ள தனியார் கைகளில் துப்பாக்கிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ததில், 390 மில்லியன் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்ததாக மதிப்பிடுகிறது.
அமெரிக்காவில் 100 குடியிருப்பாளர்களுக்கு 120.5 துப்பாக்கிகள் என்ற விகிதம் மற்ற நாடுகளைவிட அதிகமாக இருக்கிறது.
இது கடந்த பல வருடங்களாகத் துப்பாக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘அன்னலைஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்’ நடத்திய ஓர் ஆய்வில், ஜனவரி 2019 – ஏப்ரல் 2021-க்கு இடையில் 7.5 மில்லியன் அமெரிக்க வயது வந்தோர் புதிய துப்பாக்கி உரிமையாளர்களாக மாறியிருக்கின்றனர். இதையொட்டி, ஐந்து மில்லியன் குழந்தைகள் உட்பட 11 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் துப்பாக்கியால் தாக்கப்பட்டனர். அந்த நேரத்தில் புதிய துப்பாக்கி உரிமையாளர்களில் பாதி பேர் பெண்கள் ஆவர்.
பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு:
துப்பாக்கி கலாசாரத்திற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வந்ததையடுத்து கடுமையான சட்டம் இயற்றுவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது, 57% அமெரிக்கர்கள் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை விரும்புவதாகவும், 32% பேர் தாங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
10% பேர் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், இது தொடர்பாக கடுமையான சட்டங்களை இயற்றுவதில் கட்சிகளுக்கு இடையேயும் முரண்பாடு நிலவுகிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், “கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை ஆதரிப்பதில் ஆளும் ஜனநாயகக் கட்சியினர் ஏறக்குறைய ஒருமனதாக இருக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 91% கடுமையான துப்பாக்கிச் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மறுபுறம் இதை 24% குடியரசுக் கட்சியினரும், 45% சுயேச்சையினரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
சில மாநிலங்கள் தாக்குதல் ஆயுதங்களின் உரிமையைத் தடைசெய்ய அல்லது கண்டிப்பாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றன. சட்டங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். ஆனால் கலிபோர்னியா, எடுத்துக்காட்டாக, வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன் தாக்குதல் ஆயுதங்களின் உரிமையைத் தடைசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் எதிர்ப்பது யார்?
தேசிய துப்பாக்கிச் சங்கம் அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த துப்பாக்கி அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பு துப்பாக்கி உரிமையாளர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் தாக்குதல் ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான சட்டத்தை இயற்றுமாறு தற்போதய அதிபர் பைடன் அமெரிக்க காங்கிரஸை வலியுறுத்தியிருக்கிறார்.
துப்பாக்கி தடைக்கான அவரின் முறையீடு 28 ஆண்டுகளுக்கு முன்பு 1994-ல் நிறைவேற்றப்பட்டதைப் போன்றது. ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகிவிட்டது .
அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறைக்கு வலுவான நடவடிக்கை தேவை என்பதை அரசியல் வாதிகள் அறிவர். காங்கிரஸின் இரு அவைகளும் விரைவாகச் செயல்படுவது அவசியம். இந்தத் தாக்குதல் ஆயுதத் தடையை உடனடியாக வழங்க வேண்டும் என அதிபர ஜோ பைடன் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கோரியுள்ளார்.
அமெரிக்க சமூகங்கள், பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.