நசுக்கப்படும் உரிமைகள்… ஏதிலிகளின் எதிர்காலம்?… வி.எஸ்.சிவகரன்
எந்தச் சமூகம் மூலதன குவியலை எதிர்த்துப் போராடவில்லையோ அந்தச் சமூகம் தனது சந்ததிகளையும் சேர்த்து அடிமைப்படுத்துகிறது என்கிறார் மார்க்ஸ்.
வல்லோன் மட்டுமே வாழலாம் எனும் எழுதப்படாத மரபு பெரு வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனை தடுக்கக்கூடிய ஆற்றலோ, வல்லமையோ எளியோனுக்கு இல்லை.
அவன் தங்கி வாழும் நிலையையே இந்த ஆதிக்க சமூகம் கட்டமைத்துள்ளது. சமய ரீதியாகவும், சாதிய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வகைப்படுத்தி மேலெழும்ப விடாமல் தொடர்ந்து நசுக்குகிறது.
மேட்டுக்குடி சிந்தனையாளர்கள் தமது சுகபோக இருப்பிற்கு குந்தகம் ஏற்படாதவாறு எழுகுழாம் உறவைத் தமக்குள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
அதனால்தான் உலகம் முழுவதும் சமூக சம நீதி என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. நிர்வாகப் பொறிமுறை யாவும் பொருளாதார நலனியலாளர்களின் கைப்பாவையாகவே காணப்படுகின்றன.
இந்த முறைமையை (சிஸ்டத்தை) மாற்றுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இது ஒரு பெரிய மாபியாக்களின் நெட்வொர்க்.
சமனற்ற நீதிப் பொறிமுறை என்பது தற்போது நடைமுறை நிர்வாக இயலில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் இந்தக் களத்தில் நின்று நிலைக்க முடியாமல் காணாமல் போக வேண்டி வரும்.
இல்லையேல் இந்தக் கும்பல் காணாமல் ஆக்கிவிடும்.
பணமும் பதவியும் வந்துவிட்டால் பலரிடம் இயல்பாகவே போக்கிலித்தனம் குடிகொண்டு விடும். சகல அநீதிகளும் அதிகாரத்தின் மமதையால் அரங்கேறும்.
இதில் பாதிக்கப்படுவது சாமானியனே. அவனைத் தொடர்ந்தும் ஏதிலியாக பயன்படுத்தவே இந்த கூட்டம் விரும்பும். வறுமையும், சார்பு நீதியும் இருந்தால்தான் தொடர்ந்தும் முதலாளித்துவத்தைத் தக்க வைக்க முடியும்.
இதற்கு எதிராகத்தான் கம்யூனிசம் வீறு கொண்டு எழுந்தது. பொருளாதார அடியாள்களே சமூக இருப்பு நிலைத் தீர்மானங்களை மேற்கொள்கின்றமையாக் அறப்பிறழ்வு ஏற்படுகிறது எனப் பெரும் ஜனநாயகப் போர் தொடுத்தார்கள்.
ஆனால் தற்போதைய பொருளாதாரக் கூட்டு மாபியாக்களுக்கு முன் கம்யூனிச சித்தாந்தம் காலாவதியாகிக் கரையத் தொடங்கிவிட்டது.
ஆதிக்க வர்க்கம் எப்போதும் பாட்டாளி வர்க்கத்திற்கு நேசக்கரம் நீட்டியதில்லை. சமத்துவ நீதி என்பது அரசமைப்பு நூல்களில் அலுமாரியில் நீள் உறக்கம் கொள்கிறது.
எங்கும் நீதி இல்லை. நீதி தேடிய ஆயுதப் போராட்டங்களையும் சரி, ஜனநாயகப் போராட்டங்களையும் சரி, வலுவிழக்க வைத்து இல்லாமல் செய்து விடுகிறார்கள்.
பாவிகளுக்கு நீதி பாதி என்றார் அறிஞர் அண்ணா. நீதிப் போராட்டங்களை கால நீட்சி ஏற்படுத்தி, மன வலிமையைக் குன்றவைத்து, மடை மாற்றம் செய்து விடுகிறார்கள்.
பொருளாதாரத் தரகர்களுக்கு ஆதரவாகவே அதிகார வர்க்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுரண்டல் அடிமைத்தனத்தை ஒழிக்காத வரைக்கும் சமூகக் கட்டமைப்பில் மாற்றம் என்பது கானல் நீராகவே காணப்படும்.
இதற்கு எதிரான அணி திரட்டல்களை தவிர பாட்டாளி வர்க்கத்திற்கு வேறு என்ன இருக்கப் போகிறது?
வர்க்க நிலை கடந்தாலும் இனவாதமும் ஏகாதிபத்திய அடக்கு முறையும் இலங்கையில் தமிழர்கள் மீது குறையவில்லை. அது காலத்திற்குக் காலம் புதிய வடிவங்களில் உருமாற்றம் பெற்று, மீளெழுகிறது.
அதை தடுப்பதற்கு எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. சகல விடயங்களிலும் அடக்குமுறையும் நீதியின்மையும் புறக்கணிப்பும் இனப பாகுபாடும் தொடர்கின்றன.
யுத்தம் முடிவுற்று 15 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் கூட மனோநிலை ரீதியாக கொழும்பு அரசியலும் சரி நிர்வாக நிலைப்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டனவாக இல்லை.
அதனால்தான் வடகிழக்கு பகுதியில் தொடர்ந்தும் புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களும் வலிகளும் தொடர்கதையாகவே இருக்கின்றன.
இதில் அரசியல் சார்பு நிலைப்பாடுகளும், பொருளாதார ரீதியான சார்புகளும் யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் மேலோங்கி வருகின்றன.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா கொண்டு வந்த காணி உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972 ஆம் ஆண்டில் 50 ஏக்கருக்கு மேலதிகமாக காணி வைத்திருந்த தனி நபர்களிடமிருந்து காணிகளை சுவீகரிப்பு செய்தது.
இதில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டம், மன்னார் மாவட்டம் ஆகியவற்றில் அதிக காணிகள் உள்ளீர்க்கப்பட்டன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களில் குறைந்த அளவான காணிகளே பெறப்பட்டன.
நீண்ட காலம் யுத்தம் நடைபெற்ற பிரதேசம் என்பதால் சிவில் நிர்வாக நடைமுறைகள் காணப்படவில்லை. அதனால் காணியற்ற குடும்பங்களைப் பிரதேச செயலகங்களே குடியேற்றின.
ஆனால் பிரதேச செயலகங்களுக்கும் சரியான தகவல் இல்லை. யாவும் அரச காணி என்பதே அவர்களது நிலைப்பாடாக இருந்தது.
2009ம் ஆண்டு யுத்த முடிவுக்கு பின்னர் அரசின் ஒவ்வொரு திணைக்களமும் தமது அதிகாரத்தை ஏதிலிகளாக உள்ள வடக்கு, கிழக்கு மக்கள் மீது செலுத்த ஆரம்பித்தன.
அதன் விளைவே ஆயுத மோதல் முடிவுக்கு வந்தாலும், ஜனநாயக யுத்தம் வியாபித்து, அசுர குணம் கொண்டு பல வகைத் தாக்குதல்கள் நடக்கின்றன.
அதனால்தான் நாளாந்த வாழ்வாதாரத்துக்காக போராடும் ஏழைகளை அதிகார வர்க்கம் நசுக்க முனைகிறது. இந்தக் காணிகளில் பலர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர்.
குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட கால பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனப் பல நிலைகள் காணப்படுகின்றன.
குடியிருப்பவர்களுக்கே காணி ஆவணங்கள் வழங்க வேண்டும் என்பதே நியதி.
ஆனால் வழமையான அரச காணிகளை போல் இலவசமாக அல்ல, காணிகளுக்கு வருடாந்தம் குத்தகை செலுத்த வேண்டும்.
இந்த ஆணைக்குழு சாதாரண குடியிருப்பாளர்களுக்கு காணி ஆவணம் வழங்குவதில் தயக்கம் காட்டி வருகிறது.
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடியேறியவர்களுக்கு இதுவரை ஆவணங்கள் வழங்கப்படவில்லை.
வெளி மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு காணி வழங்க முன்வந்தமையால் கடந்த காலத்தில் பெரும் வாதப்பிரதிவாதங்கள், போராட்டங்கள் எழுந்தன. அதனால் இதுவரை அவ்விவகாரம் முடிவுறுத்தப்படவில்லை.
உள்ளூரில் காணியற்ற குடும்பங்கள் பல ஆயிரம் உள்ள போதும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க மறுக்கிறார்கள்.
அவ்வாறே மன்னார் மாவட்டத்திலும் மன்னார் நகரப் பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த நிலை பல தசாப்தங்கள் கடந்தும் நீள்கிறது.
மாந்தை மேற்கு இலுப்பைக்கடவை பகுதியிலும் மூன்று தசாப்தத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் அக்காணிகளில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆவணம் வழங்குவதை தவிர்த்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெரு வணிகர்களுக்கு காணி வழங்கியுள்ளனர்.
அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த வாரம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஜனநாயகப் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
இலஞ்சம் பெற்றுக் கொண்டே எமது காணியை வெளியாள்களுக்கு வழங்கியுள்ளனர் என அதிகாரிகள் மீது பகிரங்கமாகவே அந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவ்வாறான நிலைமைதான் காணப்படுகிறது எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியைப் பெறுவதற்கு அரசியல் செல்வாக்கும் பொருளாதார வலிமையும் முதன்மையாகத் தேவைப்படுகின்றன. பணமும் அதிகாரமுமே யாவற்றையும் தீர்மானிக்கின்றது.
சாமானியனின் ஜனநாயகக் குரல் என்பது காற்றோடு காற்றாகக் கலந்து விடுகிறது. அது எந்த வல்லாதிக்கர்களின் காதுகளுக்குள்ளும் போவதில்லை என்பதே பரிதாபகரமான ஜனநாயகத் தோல்வி.
அரசிறைமையின் ஜனநாயக படுகொலை. இதுவே தொடர்கிறது.
வனத்தினைக்களம், வனவிலங்குகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், முப்படையினர் ஆகிய தரப்புகளின் நில அபகரிப்பு, பௌத்த கோயில்களுக்கான நிலஆக்கிரமிப்பு, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தான்தோன்றித்தனமான அடாவடித்தனம், பொருளாதார நலன் சார்ந்தவர்களது அபகரிப்பு என தமிழர்கள் மீது கூட்டு வன்மம் அரசின் ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்படுகின்றது.
இதில் தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் பிரச்சினைகளுக்கு ஆதரவாக முன்வருவதில்லை. அதற்காக போராடவும் தயாராக இல்லை. அரச விசுவாசத்துடன் நழுவி விடுகிறார்கள்.
வாக்களித்த மக்கள் ஒவ்வொரு தடவையும் ஏமாந்தே போகிறார்கள். இப்போது தமிழ் அரசியல்வாதிகளும் வணிகர்களாகிவிட்டனர். ஊழலும், லஞ்சமும் இந்தியாவை மிஞ்சும் அளவுக்கு விஞ்சி விட்டன.
இந்த உரிமை இழந்த மக்கள் தங்களின் உரிமைக் குரலை வல்லாதிக்க ஆட்சிப் பீடம் செவிமடுத்து நீதியை வழங்குமா என ஏங்கி நிற்கின்றனர.
இவர்களது வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்கு முன்வர வேண்டியது இந்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும் தார்மீக கடமையும் ஆகும். ஏழை வீட்டிலும் ஒளி பிரகாசிக்க வழி விடுங்கள்.
வி.எஸ்.சிவகரன்