பாலஸ்தீன தேசிய ஒற்றுமைக்கான பெய்ஜிங் பிரகடனம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
பெய்ஜிங்கில் ஹமாஸ்(Hamas) மற்றும் ஃபத்தா(Fatah) பல வருடங்களாக நீடித்து வந்த பிளவுக்கு முடிவு கட்டுவதற்கான பிரகடனத்தில் ஜூலை 23இல் கையெழுத்திட்டுள்ளனர்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி முன்னிலையில் ஹமாஸ் அதிகாரி முசா அபு மார்சுக், ஃபாத்தா அமைப்பின் முக்கியஸ்தர் மஹ்முட் அல் அலாவோல் ஆகியோர் உட்பட மற்ற பாலஸ்தீன அமைப்புகளைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இஸ்ரேலுடன் போர் முடிவுக்கு வந்ததும் காசாவை ஆட்சி செய்ய இடைக்கால தேசிய நல்லிணக்க அரசாங்கம் அமைக்கப்படும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனைத்து அமைப்புகளும் இணங்கின.
தேசிய ஒற்றுமைக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இப்பாதை முழுமையடைய தேசிய ஒற்றுமைதான் ஒரே வழி. அதில் கடப்பாடு கொண்டுள்ளோம். அதை ஏற்க மற்ற அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறோம் என ஹமாஸ் அமைப்பின் அபு மார்சுகி தெரிவித்தார்.
ஹமாஸ் – ஃபத்தா நல்லிணக்கம் :
ஹமாஸுக்கும் ஃபத்தாவுக்கும் இடையிலான நல்லிணக்கம் பாலஸ்தீன உள் உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது. 2006ல் இருதரப்புக்கும் மோதல்கள் ஏற்பட்டதில் இருந்து பாலஸ்தீனப் பிரதேசத்தில் உள்ள இரண்டு முக்கிய பாலஸ்தீனிய அரசியல் கட்சிகள் கடும் போட்டியாளர்களாக இருந்து வருகின்றன, அதன் பிறகு 2007இல் காசாவை ஹமாஸ் கைப்பற்றியது.
நிகழ்காலத்தில் காசாவில் மோதல் தொடர்வதுடன், சர்வதேச முயற்சிகள் மூலம் போர் நிறுத்தம் தீவிரப்படுத்துகின்றன. இவ்வேளையில் பாலஸ்தீனத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது குறித்து, சீன அரசு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போது சீன வெளியுறவு மந்திரி வாங் யீ உடனான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இந்த பிரகடனம், இரண்டு பெரிய பாலஸ்தீனிய அரசியல் குழுக்களுக்கு இடையேயான ஆழமான பிளவைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.
பாலஸ்தீனிய பிரிவுகள் ஹமாஸ் மற்றும் ஃபத்தா பெய்ஜிங்கில் ஒரு வரலாற்று பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளனர். இது அவர்களின் பல ஆண்டுகால விரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதையும், ஒரு தேசிய ஒற்றுமை அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
இருப்பினும், சமரசத்திற்கான முந்தைய முயற்சிகள் பலவும் தோல்வியடைந்து உள்ளன. 2011 இல் இதேபோன்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதும் அறிந்ததே.
தற்போது சீனா ஆதரவுடன் நீண்டகால பேச்சுவார்த்தையின் பின்னர்
இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தொடரும் போர்:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒன்பது மாதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, சர்வதேச ஆதரவுடன் போர்நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க சீனாவும் முயன்றுள்ளது.
காசாவில் எதிர்கால ஆட்சி நிச்சயமற்றதாகவே உள்ளது. இஸ்ரேல் எதிர்காலத்தில் ஹமாஸின் எந்தப் பங்கையும் எதிர்க்கிறது. அதேவேளை போருக்குப் பிந்தைய காசாவை ஃபத்தா ஆதிக்கத்தில் உள்ள பாலஸ்தீனிய அதிகாரம் கைப்பற்றுவதற்கான அமெரிக்க அழைப்புகளையும் நிராகரிக்கிறது.
காசாவை ஆளும் நிலைக்குத் திரும்ப விரும்பவில்லை என்று கூறிய ஹமாஸ், பல்வேறு பாலஸ்தீனியப் பிரிவுகளால் உருவாக்கப்படும் கூட்டு அரசாங்கத்திற்காக வாதிடுகிறது. இந்த அரசாங்கம் காசா மற்றும் மேற்குக்கரை ஆகிய இரு பகுதிகளுக்கான தேர்தல்களை மேற்பார்வையிடும், இது ஒரு ஐக்கிய பாலஸ்தீனிய நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டதாக அமைய திட்டமிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனிய ஒற்றுமையை வலுப்படுத்திய பெய்ஜிங் பிரகடனம் இரு பிரிவுகளாலும் மற்ற 12 அரசியல் குழுக்களாலும் கையெழுத்திடப்பட்டது. அத்துடன் ஆனால் 1967 எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியும் உள்ளனர்.
மலேசிய பிரதமர் ஆதரவு:
பாலஸ்தீன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், பெய்ஜிங்கில் கையெழுத்தான ஃபத்தா, ஹமாஸ் இடையேயான ஒப்பந்தத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார். பெய்ஜிங் பிரகடனம் பாலஸ்தீன ஒற்றுமையை அடைவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய படியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
பாலஸ்தீன மக்களின் உரிமைகளை உணர்ந்து கொள்வதில் முக்கியமானது.
பாலஸ்தீனிய அரசியல் பிரிவுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை எளிதாக்கியதற்காக சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தையும் அவர் பாராட்டினார். இந்த ஒற்றுமைப் பிரகடனம் உறுதியான முடிவுகளாக பலஸ்தீன மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் அமைய வேண்டும். இந்தப் பிரகடனம் எதிர்கால அறைகூவல்களைத் தாங்கிப்பிடிக்கும் என்பது எனது உண்மையான நம்பிக்கை என்று அவர் கூறினார்.இதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு இன்றியமையாதது என்று குறிப்பிட்டார்.சர்வதேச அரசாங்கங்கள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்து இந்த ஒற்றுமை முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தினார்.
பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வரலாற்றில் மாபெரும் நிகழ்வு:
பாலஸ்தீனத்தில் செயற்பட்டு வரும் 14 போராட்ட இயக்கங்கள் இனி வருங்காலத்தில் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயல்படுவது என சீனத் தலைநகர் பீஜிங்கில் வைத்து கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த 14 அமைப்புகளில் ஹமாஸ் மற்றும் ஃபத்தா என்பன பிரதான அமைப்புகளாகும்.
பாலஸ்தீன மக்கள் இன்றைய நிலைக்கும், இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், போர் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதற்கு பாலஸ்தீனர்களின் போராட்ட அமைப்புகளிடையே நீடித்து வந்த பிளவுகளும் ஒரு காரணமாகும்.
சீன தனது வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மூலம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்கள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் முயற்சியை எடுத்தது. அதன் விளைவாக 14 அமைப்புகளின் பிரதிநிதிகளும் சீனாவில் கூடி 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடாத்தி இறுதியில் ஒற்றுமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஏற்கெனவே சீனா, ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நிலவி வந்த நீண்டகால பகைமையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐங்கரன் விக்கினேஸ்வரா