மலையக வாழ்வியலும், நாட்டுப்புறவியல் கூறுகளும்… தவமணிதேவி
அன்றாட செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள், பொருட்கள், உளவியல் தேவைகள், பொழுதுபோக்குகள், உறவாடல்கள், வேலை, குடும்ப சுழற்சிகள் என வாழ்க்கையின் நாளாந்த அடிப்படையான விடயங்களை அன்றாட வாழ்வியல் குறிக்கின்றது. பொருளாதாரம், சூழலின் அமைவு, தனிமனித நிலைமைகளைக் கடந்து அன்றாடம் ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயற்பாடுகள் பல உள்ளன.
மனதளவில் வாழ்வியல் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு சிந்தித்து செயல்படுத்துவதே வாழ்வியல் ஆகும். வாழ்வியலுக்கும், ஆழ்மனதுக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. மனிதனது தேவையை நிர்ணயம் பண்ணுவதே வாழ்வியல் ஆகும். வாழ்க்கையை எளிமையாக்க வேண்டுமென்றால் முதலில் மனதை எளிமையாக்க வேண்டும். தேவை எது ஆசை எது என்பதை உணர்ந்து அதனை செயற்படுத்தி வெற்றி பெறுவதே வாழ்வியல் ஆகும். இவ்வாறு வாழ்வியல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைக்க முடியும்.
ஒரு மனிதனுக்கு சில முக்கியமான தேவைகள் உள்ளது. அவனது அறம், பொருள், இன்பம் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதை ஏறக்குறைய திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்தார். இதுவே திருக்குறளாகும். இன்று உலகப் பொது மறையாக போற்றிக் கொண்டாடப்படுகின்றது.
உறவுகளைப் போற்றுதல், விருந்தோம்பல், தாய் தந்தையரை தெய்வமாக மதிக்கும் மாண்பு, இல்லற வாழ்வு என்பன எங்கும் காணாத பண்பாட்டு நெறியாகும். விழாக்காலங்களிலும், இல்ல நிகழ்வுகளிலும், உறவினர்கள் ஒன்றுக் கூடி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதலும், உறவுகளைப் பேணுதலும், தமிழர்களின் வாழ்வியலில் ஒரு மிகச்சிறந்த வாழ்க்கை முறை ஆகும்.
தமிழர் வாழ்க்கை முறையானது, தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப வகுக்கப்பட்டு ஒரு வரையறைக்குட்பட்ட வாழ்வியலைக் கொண்டிருந்தது. அங்கு பண்பாடுகள் போற்றப்பட்டன. அறநெறிகள் தழைத்தோங்கின. ஆனால் இன்றையச் சூழலோ முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. நவீனத்துவம் என்ற பெயரில் மொத்தத்தையும் இழந்துவிடும் சூழலில் எமது சமூகம் காணப்படுகின்றது.
குடும்ப உறவுகளில் விரிசல், கூட்டுக் குடும்பம் அரிதாகிக் கொண்டு செல்லுதல், பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்து வாழுதல், விவகரத்துகள், விடுதிப் படிப்புகள், முதியோர் இல்லங்கள் போன்ற பல்வேறு பட்ட வாழ்வியலுக்கு முரணான விடயங்கள் தற்போது தலைத்தோன்றிவிட்டன. குறிப்பாக பெரியோர்கள் இல்லாத இல்லங்களில் இருந்தே இவ்வாறான விடயங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. ஒவ்வொரு தனி மனிதனும் இயந்திர ரோபோக்களாகி செயற்படுகிடுகின்றனர். இவ் இயந்திரத்தனமான வாழ்க்கையை நிறுத்தி சற்று வாழ்வியலுடன் ஒப்பிடும் வகையில் சிந்தித்தாலே போதும் இவற்றுக்கு தீர்வு தானாக கிடைத்து கிடைத்துவிடும்.
சூரியன் ஒவ்வொரு நாளும் கிழக்கில் உதயமாகிறான். எமது வாழ்வும் சூரியனாகவும், வாழ்வியல் கூறுகள் ஒளிக்கதிர்களாகவும்மிளிர வேண்டும். இதற்கு மாற்று சிந்தனை அவசியமாகின்றது. அந்தக் காலங்களைப் பொறுத்த வரையில் மரத்தடி பஞ்சாயத்துக்கள் காணப்பட்டன. குற்றச் செயற்பாடுகள் குறைவாகவே காணப்பட்டன. ஏனெனில் அக்கால வாழ்வியல் முறைகளில் நேர்மை செயற்பாடுகள் குடிகொண்டு இருந்தன. ஆனால் இன்று நீதிமன்றங்கள் அதிகரித்துக் காணப்பட்டாலும், நீதியான செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன. எல்லோரிடமும் பணம், பொருள், வீடு இருந்தாலும் அக்கால வாழ்வியல் முறைக்கும், இக்கால வாழ்வியல் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன என்றே கூறலாம்.
தற்கால வாழ்வியல் முறையானது இயந்திரமாகிவிட்டது எனலாம். மனிதன் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றான். தனது இலக்கு எதுவோ அதை மறந்து விடுகின்றான். தனது தேவை எதுவோ அதை மறந்து விடுகின்றான். நிம்மதியற்று வாழ்கிறான். எல்லா வித நோய்களையும் உடம்பில் வைத்துக் கொள்கிறான். உற்சாகமாக தனித்துவமாக செயற்படும் ஆற்றலை இழக்கின்றான். இவற்றிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால் எமது வாழ்வியல் முறைகளை நாம் கையாள வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். எமது நோக்கம், குறிக்கோள் அறிந்து நாம் செயற்பட வேண்டும். எமது பாரம்பரியங்களை நாம் பின்பற்ற வேண்டும். எமது மூதாதையர் பின்பற்றிய குடும்ப உறவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். கைத் தொலைபேசிகளுக்கு விடை கொடுத்து விட்டு நம் குழந்தைகளுடன் கொஞ்சிப் பேச வேண்டும். விழாக்காலங்களை எம் உறவுகளுடன் கொண்டாட வேண்டும். வேலை முடிந்ததும் சற்று இளைப்பாற வேண்டும்.
முருகையா தவமணிதேவி, வட்டகொட