”உளவு நிறுவனங்கள்””… 42… -மௌனஅவதானி
ஒரு மனிதனின் உடம்பில் ஒரு நோய் மட்டுமே ஏற்பட்டால் அந்த நோய்க்கு மருந்தைக் கொடுத்து குணமாக்கிவிடலாம். நோயின் தாக்கத்திலிருந்தும் மருந்தின் தாக்கத்திலிருந்தும் நோயுற்ற மனிதனின் உடலில் இருக்கும் உறுப்புக்களின் ஆக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் வேதியல் பொருட்களுக்கும் மருந்தின் வேதியல் பொருட்களுக்குமிடையிலிருக்கும் ஒத்த வினை அல்லது எதிர்வினையால் ஏற்படும் சாதக பாதக விளைவினையும் உடல் தாக்குப் பிடிக்கும்,நோயாளி குணமாகியும் விடுவான்.
ஆனால் ஒரு மனிதனுக்கு பல நோய்கள் ஏற்பட்டு,பல நுண்ணுயிர்க்கிருமிகளின் தாக்கத்தினால் அவன் அவதியுறும் போது அவனின் நோய்களைக் குணமாக்க கொடுக்கப்படும் மருந்துகளினாலும் அனைத்து நோய்களுக்குமான பல்வேறுபட்ட நோய்களின் தாக்கத்தினாலும் அவன் வாழ்நாள் முழுக்க சுகதேகியற்றவனாக தனது வாழ்வின் முன்னேற்றத்தில் கவனமற்றவனாகவும் அதற்காக உழைக்க முடியாதவனாக ஆகி இறக்கும் வரை நோயாளியாகவே வாழ்வான்.
அது போன்றதே இலங்கையின் நிலையாகும்.இலங்கைக்குள் இந்திய உளவு நிறுவனம் எவ்வாறு ஊடுருவி நுழைந்து செயல்பட்டது எனப் பார்க்கையில் பெரும் வியப்பே ஏற்படும்.
அவ்வாறு வியப்பு ஏற்படுகையிலும்கூட இந்தியா எமது அண்டை நாடு அது ஒரு போதும் எமக்குத் துரோகம் செய்யாது என்ற அதீத நம்பிக்கையை சிங்களவர்களைவிட தமிழர்களே கொண்டிருப்பதால் அதுவே இந்தியாவின் பலமாக மாறியுள்ளது.
இந்தியா எக்காலத்திலும் இலங்கையுடன் அகத்தூய்மையாக நடந்து கொண்டது கிடையாது.வெளிப்பார்வைக்கு இந்தியா இலங்கைக்கு நிறைய உதவிகள் செய்து வருகின்றது என்று தோன்றினாலும் கடனுக்கு வட்டி வாங்குவது போன்று தனது நலன் நோக்கியே அனைத்தையும் செய்தது என்பது இன்று மிகத் தெளிவாகவே தெரிகின்றது.
இக்கட்டுரையில் தொடர்ச்சியாக ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளில் இந்தியாவின் உளவு வேலைபற்றி எழுதுவதற்குக் காரணம் அயல்நாடு என இந்தியாமீது இலங்கைத்தமிழர்கள் பற்று வைத்திருக்க அந்தப் பற்றைத் தனக்குச் சாதகமான பலமாக இந்தியா எடுத்துக் கொண்டு தமிழரை இலங்கை அரசிற்கு எதிரான பகடைக்காயாக பயன்படுத்தி வந்திருக்கின்றது என்பதை நிராகரிக்க முடியாது.
ஆரம்ப காலங்களில் கேரளா, தமிழகத்தின் செட்டிநாடு (தமிழகத்தில் வணிகத்தை கையகப்படுத்தி வைத்திருந்த செட்டிச் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்த காரைக்குடிப் பகுதி செட்டிநாடு என்றும் அழைக்கபட்டிருந்தது) பகுதிகளிலிருந்து வணிக ரீதியாக தமது தொழிலை நடத்துவதற்காக இலங்கைக்கு வந்திருந்தனர்.
கேரள மலையாளிகள் ஆங்காங்கே சிறு சிறு தேநீர் சாப்பாட்டுக் கடைகள் தொடக்கம் பெரும் மொத்த வியாபாரங்களை நடத்துகின்ற வல்லமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
அதே போல கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கி அவற்றை களஞ்சியப்படுத்தி வைக்கும் வணிகத்தை செட்டிமார்கள் மேற்கொண்டிருந்தனர்.
இந்தக் களஞ்சிய அறைகளை மண்டி அல்லது கிண்டங்கி எனவும் அழைத்தனர்.
கொழும்புத் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை செட்டிமார் கொழும்பில் கிண்டங்கி அமைத்துக் களஞ்சியப்படுத்தியது போல காங்கேசன்துறையில் கப்பல் மூலம் இறக்கிய பொருட்களை காங்கேசன்துறையிலேயே களஞ்சியப்படுத்திப் பின்னர் அவற்றை லொறிகள் மூலம் இலங்கையின் பலபகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர்.
காங்கேசன்துறைச் சந்தியிலிருந்து தெற்கு நோக்கிய யாழ்ப்பாண வீதியில் கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரத்திற்கு இடைப்பட்ட வீதியோரத்து கிழக்கு மேற்குப் பகுதிகளில் கிண்டங்கிகளை செட்டிமார்கள் கட்டி தமது வியாபாரத்தை நடத்தினர்.அக்கட்டிடங்கள் யாவும் இப்பொழுது சிதிலமடைந்துவிட்டன.
செட்டிமார்கள் வியாபாரிகளாக மட்டுமல்ல வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களாகவும் இலங்கையில் தமது தொழிலை நடத்தி வந்தனர். பலம்பொருந்திய உலக நாடுகளின் உளவு நிறுவனங்கள் போல இந்தியாவின் உளவு நிறுவனமும் ஒரு பலமிக்க நிறுவனமாக இந்தியாவின் நலன் நோக்கி இந்தியாவின் ஆலோசனையுடனும் தனித்துவமாகவும் செயல்பட்டு வருகின்றது.
இந்நிறுவனம் இலங்கை பக்கத்து நாடல்லவா என்ற எவ்வித சிந்தனையுடனும் அது செயல்படாது.சிங்களவர்களானாலென்ன தமிழர்களானாலென்ன தமது நாட்டின் பாதுகாப்பும் அந்தப் பாதுகாப்புக்கு இலங்கையின் ஆட்சி சீர்குலைந்தாலென்ன,இலங்கையில் இனமுரண்பாடுகள் ஏற்பாட்டாலென்ன ,பொருளாதாரம் விழ்ச்சியடைந்தாலென்ன அதைபற்றி இந்தியாவுக்கு எவ்வித கரிசனை கிடையாது.
அதே நேரம் தனது சுயமுகத்தை இந்தியா காட்டிக் கொள்ளக்கூடாதென்பதற்காக இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து கொண்டேயிருக்கும்.
இனமுரண்பாடு பெரும் அரசியல் முரண்பாடாக வளர வேண்டுமென்பதற்காக நீண்டகாலத் திட்டமிடலுக்கமைய இந்தியாவால் ஏற்படுத்தப்பட்டதே இனக் கலவரங்களாகும்.
இனக் கலவரங்களை நடத்துவதற்கு இந்திய உளவு நிறுவனத்திற்கு உதவி செய்தவர்கள் தானாடாவிட்டாலும் தசையாடும் என்பது போல இந்தியர்கள் என்ற ரீதியில் உளவுத் தகவல்களை வழங்கியவர்களில் முக்கியமானவர்கள் மலையாளிகளும் செட்டிமார்களுமே.
இலங்கையின் அரசியல் நிலைநிறுத்தத்தன்மையை சீர்குலைப்பதே இந்தியாவின் உள்நோக்கமென்பதை இலங்கையர்கள் உணர்ந்து போதும் தம்மையறியாமலே அவர்களின் சதிவலையில் விழுந்து எண்ணிறந்த ஆண்டுகளாகிவிட்டன.
இந்தக் கட்டுரையின் முதல் பகுதிகளில் குறிப்பிட்டிருந்தது போல இலங்கைத் தமிழர்கள் வணிகத்தில் படிப்படியாக முன்னேறுவதை இந்திய வணிகர்கள் ஒரு போதுமே விரும்பியது இல்லை.
ஒரு இனத்தின் வணிகப் பொருளாதாரம் பல்வேறுபட்ட பொருளாதார அலகுகளுக்குள் முக்கியத்துவமான அலகாகும். இந்த பொருளாதார இலக்கை தமது கையிலெடுத்து வளர்ந்து கொண்டிருந்த இலங்கையை தாயகமாகக் கொண்ட இலங்கை வணிகர்களையும் வியாபாரிகளையும் அடிமட்டம் வரையும் இல்லாதொழிக்க வேண்டுமென்பதற்காக இந்திய உளவு நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டதே தமிழர்கள் மிது ஏவிவிடப்பட்ட இனக்கலவரங்களாகும்.
இந்த இனக்கலவரத்தில் உயிர்ச்சேதம், உடமைச் சேதம் உட்பட வணிக வியாபார நிறுவனங்களும் பெரிதும் பாhதிக்கப்பட்டதே இலங்கைத் தமிழர்களுடையதுதான்.
இதற்குப் பின்னால் இருந்தவர்கள் செட்டிமார்களும் மலையாளிகளுமே.வெளிப்படையாக இவ்வினக்கலவரங்கள் யாவும் சிங்கள மக்களாலும் இனவெறி அரசியல்வாதிகளாலும் என பொது அபிப்பராயத்தை இலங்கைத் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அனைத்து இனக் கலவரங்கள் யாவும், ஒற்றர்களாக தகவல்களைக் கொடுத்த பிச்சைக்காரர்களாக வேசம் போட்ட,இந்தியாவுக்காக விலைபோனசுதேசி ஒற்றர்கள்;,வீடு வீடாக துணிகளைக் கொண்டு சென்று விற்ற இந்தியா வியாபாரிகள்,பெரும் வணிகத்தை நடத்திய இந்திய வியாபாரிகள் இலங்கை முப்படைகளுக்குள் இருந்த சுதேசிய ஒற்றர்கள் வரை இந்தியாவின் கைப்பாவைகளாகச் செயல்பட்டனர்.
இந்தியாவின் உதவி என்பது ஏற முயற்சிக்கும் ஒருவனுக்கு, அவனை ஒரு கையைக் கொடுத்து ஏற உதவி செய்வதும், அதே வேளை இன்னொரு கையை காலால் அமத்திப் பிடிக்கும் தந்திரத்தைக் கொண்டதாகவே இருந்தது. இந்தியாவின் இலங்கை மீதான அக்கறை என்பது தாமரை இலைத் தண்ணீர் போன்றதே.
இனமுரண்பாடு, பொருளாதார நலிவு போன்றவற்றை தனது உளவு நிறுவனத்தின் மூலமாக நகர்த்திய இந்தியா இலங்கை தன்னையே எதற்கும் நாடி நிற்க வேண்டும் என்பதற்காக இலங்கை முழுமூச்சுடன் எழுந்திருக்க முடியாதளவிற்கு பெரும் சூழ்ச்சியைச் செய்தனர்.
இலங்கை இனப்பிரச்சினைக்காக தீர்வுகளை இந்தியா தவிர்ந்த எந்த நாடு கொண்டு வந்தாலும் தமது ஆலோசனையில்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத தடைக்கல்லாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது.
இலங்கையில் இனமுரண்பாடுகளையும் இனவாத போக்கினையும் மேன்மேலும் வளர்த்துவிடுவதற்காக போராளிக் குழுக்களுக்கு அயுதப் பயிற்சி கொடுத்து இலங்கைக்கு அனுப்பி வைத்த இந்திய உளவு நிறுவனம் அதே நேரம் தனக்கான ஒற்றர்களை போராளிக் குழுக்களுக்குள்; இருந்தே தேர்வு செய்து அனுப்பியும் வைத்தார்கள்.
(தொடரும்)
மௌனஅவதானி