வெலிக்கடை சிறை படுகொலைகள் 41 ஆண்டுகள்!… முருகபூபதி.
1983 ஜூலை 25 – 27 – 28 திகதிகளில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக……! !
தாயகம் முதல் புகலிடம் வரையில் அலைந்துழலும்
ஈழவிடுதலைக் கனவைச் சுமந்த ஆத்மாக்கள் !!!
ஐந்து வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு பிரான்ஸில், எனது மதிப்பிற்குரிய ஆசான் ( அமரர் ) பண்டிதர் க. மயல்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழா நடந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் அதற்கு என்னையும் அழைத்திருந்தனர்.
அங்கு பயணமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், எனது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்த ஒரு அன்பர் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டார்.
அவரது பெயரைப்பார்த்துவிட்டு, அந்தப்பெயரில் இலங்கையில் எவரையும் எனக்குத் தெரியாதிருந்த நிலையில், “ தமிழ்நாட்டில் நீங்கள் எவ்விடம்? “ எனக்கேட்டிருந்தேன். அவர் தமிழ்நாட்டில் சிறிதுகாலம் வசித்திருந்தாலும், அவரது பூர்வீகம் இலங்கையில் வடபுலம்தான் என்பதை தெரிந்துகொண்டேன்.
இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் இனவிடுதலைப் போராட்டமும் அவரையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. இந்தப்போராட்டத்தில் அவரும் ஒரு இயக்கத்தில் இணைந்திருந்தவர். அத்துடன் அறிவுஜீவி. தொடர்பாடலின் ஊடாக அவரும் பிரான்ஸிலிருப்பதை அறிந்துகொண்டேன்.
நான் அங்கு சென்றதும் என்னைத்தேடி வந்து சந்தித்தார். அவருக்கு நான் ஏற்கனவே எழுதியிருந்த சொல்லமறந்த கதைகள், சொல்லவேண்டிய கதைகள் ஆகிய நூல்களை கொடுத்தேன். அவற்றைப் பார்த்துவிட்டு, தன்னிடமும் சொல்லவேண்டிய கதைகள், சொல்ல முடியாத கதைகள் ஏராளமாக இருப்பதாகச் சொன்னார்.
எனக்கு கதை கேட்பதில் அலாதிப்பிரியம். அவரிடம் அவரது கதைகளைக் கேட்டேன். அனைத்தும் திகிலையும் அதிர்ச்சியையும் வியப்பையும் தந்தன. அவர் சொல்லச்சொல்ல கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
உயிருக்காக போராடிய தருணங்களையும் அனுபவித்த சித்திரவதைகளையும் வேதனைக்குரிய விடயங்களையும் சுவாரசியமாக சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் 1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடை சிறையில் நடந்த படுகொலைச்சம்பவங்களின்போது உயிர் தப்பியவர்!
அவரது வாழ்வில் அந்த இரண்டு நாட்கள் மட்டுமல்ல, அதன்பின்னர் மட்டக்களப்பு சிறையில் நடந்த சம்பவங்களும் மறக்க முடியாதவை.
தமிழகத்தில் தஞ்சமடைந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவுக்கு மட்டக்களப்பு சிறையுடைப்பு ( 23 செப்டெம்பர் 1983 ) சம்பவத்தை பின்னணியாகக்கொண்டு ஒரு திரைப்படம் எடுக்கும் எண்ணம் இருந்ததாக ஒரு செய்தி முன்னர் கசிந்திருக்கிறது. அதனை படமாக்கவேண்டுமானால், வெலிக்கடை சிறையில் அடுத்தடுத்து நடந்த படுகொலைகளையும் சித்திரிக்கவேண்டும். சாத்தியமற்ற அந்த முயற்சி கைவிடப்பட்டது.
பல நாடுகளில் சிறையுடைப்புகள் நடந்துள்ளன. அந்த உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பல ஆங்கிலத் திரைப்படங்களை பார்த்திருப்போம். அத்தகைய ஒரு படத்தில், அமெரிக்காவின் அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் திரைப்பட நடிகராகவிருந்த டொனால்ட் ரேகன் நடித்திருக்கிறார்.
எந்தவொரு கதைக்கும் ஒரு முன்கதை – பின்கதை இருக்கும். அந்த முன்கதைக்கும் ஒரு முன்கதை – பின்கதை இருக்கும்! எனவே கதைகள் முடிவற்றவை. அதுபோன்றதுதான் ஈழப்போராட்டத்தின் கதைகளும்!
விடுதலைப்புலிகளின் லெப்டினன்ட் சீலன் ( லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனி ) 1983 ஜூலை 15 ஆம் திகதி தென்மராட்சியில் நடந்த இராணுவ சுற்றிவளைப்பின்போது கொல்லப்படுகிறார். அதன் எதிரொலியாக திருநெல்வேலியில் அதே மாதம் 23 ஆம் திகதி வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் நடந்த தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதன் எதிரொலியாக கொழும்பில் வெலிக்கடை சிறையிலிருந்த தமிழ் அரசியல்கைதிகள் 35 பேர், அதே மாதம் ( ஜூலை ) 25 ஆம் திகதி வெட்டியும் கொத்தியும் கொல்லப்பட்டனர். நீதிமன்ற விசாரணையில் மரணதண்டனைத் தீர்ப்பின்போது தன்னை தூக்கிலிட்டதும், தனது கண்களை தானமாக வழங்கவேண்டும் எனச்சொன்னவர் குட்டிமணி . அந்தக்கண்களில் தமிழ் ஈழத்தை காணமுடியும் என நம்பியிருந்தவர்.
” என்னைத்தான் தூக்கிலிட முடியும். ஆனால், மலரப்போகும் தமிழ் ஈழத்தை எவராலும் தூக்கிலிட முடியாது ” என்று நீதிமன்றத்தில் சூளுரைத்தவர் ஜெகன். அன்று கொழும்பில் பொரளையிலிருந்து கலவரம் வெடித்துப்பரவியது. மீண்டும் அதே மாதம் 27 ஆம் திகதி மேலும் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவங்களின்போது தமது உயிர்களை காத்துக்கொள்ள போராடியவர்களில் உயிர்தப்பிய ஒருவருடன்தான் அன்று பாரிஸிலிருந்து பேசிக்கொண்டிருந்தேன். அவரை அன்றுதான் முதல் தடவையாக பார்க்கின்றேன். எனது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்திருக்கும் அவர், வாசிப்பு அனுபவம் மிக்கவர். தான் படித்ததில் தனக்கு பிடித்தமானதை எனக்கும் அனுப்புவார். நாம் பரஸ்பரம் தோழர் என்று அழைத்துக்கொள்வோம்.
1843 ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கடை சிறையில், நூற்றி நாற்பது வருடங்களின் பின்னர் அந்த இரண்டு நாட்களும் நடந்த படுகொலைச் சம்பவங்களின்போது கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்: குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை, தேவன், நடேசன், சிவபாதம் மாஸ்டர், ஜெயரட்ணம், பாலசுப்பிரமணியம், அன்பழகன், சுரேஷ்குமார், அருந்தவராஜா, தேவக்குமார், சின்னையா, சிவானந்தராஜா, மயில்வாகனம், கந்தையா, உதயசீலன், ஈஸ்வரநாதன், நாகராசா, கணேசலிங்கம், சுதாகரன், இராமச்சந்திரன், மகேந்திரன், தில்லைநாதன், குலராஜசேகரம், உதயகுமார், சிவகுமார், சாந்தகுமார், சந்திரகுமார், ராஜன், அமிர்தலிங்கம், ராஜயோகநாதன், கிருஷ்ணகுமார், தவராஜசிங்கம், உதயகுமார் ஆகிய 35 பேர்.
மூன்று நாட்களின் பின்னர் ஜூலை 28 ஆம் திகதி கொல்லப்பட்டவர்கள்: மருத்துவர் ராஜசுந்தரம், பாஸ்கரன், தேவகுமார், துரைராஜா, சர்வேஸ்வரன், குமார், மரியநாயகம், நீதிராசா, நவரட்ணசிங்கம், ராசேந்திரன், குமாரசிங்கன், சேயோன், ஜெயமுகுந்தன், சிவசுப்பிரமணியம், சிறிக்குமார், இராஜரட்ணம், மனோரஞ்சன், கணேசலிங்கன் ஆகிய 18 பேர்.
வெலிக்கடைச்சம்பவம், கொழும்பு கலவரம் ஆகியவற்றின் எதிரொலியாக இந்தியா ( இந்திரா) உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களையடுத்து, ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர். அதே 1983 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி மட்டக்களப்பு சிறையிலிருந்து பலர் தப்பிச்சென்றனர்.
அவர்களில் ஒருவருடன்தான் அன்று நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
இச்சம்பவங்கள் நடந்த காலப்பகுதியில் வீரகேசரியில் பணியாற்றி, பெரும்பாலான செய்திகளை ஒப்புநோக்கியிருந்தமையால் பலவிடயங்கள் நினைவுக்கு வந்தன. அவர் வெலிக்கடை சிறை, மட்டக்களப்பு சிறை ஆகியவற்றின் உட்புற வெளிப்புறத் தோற்றங்களையும் விளக்கினார். அவர்கள் தடுத்துவைக்கபட்டிருந்த கூண்டுகளின் பிரிவுகள் பற்றியும் சொன்னார்.
பத்திரிகையாளர்கள் சரவணன், கார்மேகம் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உட்பட சிலர் வெலிக்கடை, மட்டக்களப்பு சிறைச்சாலை சம்பவங்கள் பற்றி எழுதியிருக்கின்றனர். சிறைகளைப் பின்னணியாக வைத்து பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
சிறைகளுக்குள் வாடியவர்கள் எழுதிய புத்தகங்கள் பிரசித்தமானவை. நேரு, இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சிறையிலிருந்தவேளையில் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள், பின்னாளில் உலக சரித்திரம் என்ற நூலாக வெளியானது.
நெல்சன் மண்டேலா தனது சிறை வாழ்க்கையை தனது சுயசரிதையான Long walk to freedom நூலிலும் , கிரண்பேடி தனது சுயசரிதையில் ( நான் துணிந்தவள் ) திகார் சிறையில் பணியாற்றிய அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளனர்.
ஜெயகாந்தன், தனது கைவிலங்கு நாவலையும் ( காவல் தெய்வம் திரைப்படத்தின் மூலக்கதை ) சி. ஏ. பாலன் தூக்குமர நிழலில் நாவலையும், இலங்கையில் சி. புஸ்பராணி தனது சிறை அனுபவங்களை அகாலம் என்ற பெயரிலும் எழுதியுள்ளனர். மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியவர்களில் ஒருவரான எஸ்.ஏ. டேவிட் அய்யாவும் Tamil Eelam Freedom Struggle ( An inside Story ) என்ற நூலை எழுதியுள்ளார். அவ்வாறே அன்று உயிர் தப்பிய இன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ” ஈழப்போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்” என்ற நூலை வரவாக்கியுள்ளார்.
அன்று இலங்கைச் சிறைகளிலிருந்து உயிர்தப்பியவர்களில் சிலர் பின்னாளில் முதலமைச்சராக, அமைச்சராக, தொடர்ந்தும் அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டவர்களாக, புலம்பெயர்ந்து சென்றவர்களாக இலங்கையிலும் இந்தியாவிலும் புகலிட நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வெலிக்கடையில் தமிழ் அரசியல் கைதிகளை தாக்குவதற்கு முன்னின்ற பிரபலமான நபர் சேபால ஏக்கநாயக்க, இத்தாலிய விமானம் ஒன்றை கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் சிறையிலிருந்த சிங்களக் கைதி.
1983 இல் வெலிக்கடை படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்படவில்லை. ஆனால், அதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் பின்னரும் தொடர்ந்திருப்பதையும் மறக்கமுடியவில்லை.
1997 ஆம் ஆண்டு களுத்துறை சிறையிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் வெட்டிக்கொல்லப்பட்டனர்.
2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ என்ற சிங்களப்பிரதேசத்தில் தடுப்பு முகாமிலிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகளும் கொல்லப்பட்டனர். தமிழ் ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு, பல உலக நாடுகளில் நிகழ்ந்த விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகள் பற்றியெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டு, எதிர்பாராத சூழ்நிலையில் கைதாகி, சித்திரவதைகளையும் அனுபவித்து, சிறையிலும் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று பரதேசியாக அலைந்துழன்று இறுதியில் பிரான்ஸில் தஞ்சமடைந்திருக்கும் அந்தத் தோழர், சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தரப்படும் குடி தண்ணீரை சேமிப்பதிலும் சமர்த்தராக இருந்துள்ளார் என்பதையும் அவருடன் சிறையிலிருந்து தப்பிய மற்றும் ஒருவர் மூலம் அறிந்துவைத்திருந்தேன். அன்று 1983 ஆம் ஆண்டு தப்பியவர்கள் திசை மாறிச்சென்றனர். சிலர் இன்று எம்மிடையே இல்லை. சிலர் இன்றும் தளராமல், அயற்சியுறாமல் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி அரசியல் தலைவர்களாக பிரகாசிக்கின்றனர்.
சிறை வாழ்க்கையில் உயிர்தப்பியவர்கள் தமிழ் இனத்திற்காக கொடுத்த விலை அதிகம். அந்தத் தோழருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது பிரான்ஸில் வதியும் ஷோபா சக்தி, சாத்திரி ஆகியோரின் சில படைப்புகளும் நினைவில் சஞ்சரித்தன.
சாத்திரியின் அவலங்கள் கதைத்தொகுப்பில் ஒரு பாத்திரம் இவ்வாறு பேசும்:
” இயக்கத்துக்கு போகேக்குள்ளை இருபது வயது. பதினைஞ்சு வருசம் இயக்க வாழ்க்கை. இரண்டரை வருசம் தடுப்பும் புனர்வாழ்வும். இப்ப வயது முப்பத்தெட்டை எட்டித்தொடப்போகுது. ஒற்றைக்கண்ணும் இல்லை. வசதியும் இல்லை. இப்பவெல்லாம் மனசுக்கு முடியாதெண்டு தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறேல்லை.”
அவலங்கள் தொகுப்பு பற்றிய எனது வாசிப்பு அனுபவக்குறிப்பினை பின்வருமாறு தொடங்கியிருந்தேன். ” ஈழத்திற்கான போரைத் தொடங்கியவர்களில் பலர் இன்றில்லை. அவர்களைப் பின்பற்றியவர்கள் பரதேசிகளாக சென்றுவிட்டனர். சென்றவிடத்தில் ஈழத்தின் நினைவுகள் துரத்திக்கொண்டிருக்கின்றன. சாதாரண மனிதனாக இருந்தால் அந்த நினைவுகள் வரும்போதெல்லாம் நீண்ட பெருமூச்சை காற்றில் பரவச்செய்துவிட்டு மற்றவேலைகளை கவனிக்கலாம். ஆனால், சாத்திரி போன்ற எழுத்தாளர்களினால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவர்களின் ஆழ்ந்த பெருமூச்சுக்கள்தான் கதைகளாக வெளியே தள்ளப்படுகின்றன. எழுத்தில் பதிவாகிவிடுகின்றன. ”
அன்று நான் சந்தித்த தோழர் எழுதக்கூடியவர். ஆனால், தன்னை எழுத்தாளனாக மாற்றிக்கொள்ளாமல், தேர்ந்த வாசகனாகவே வாழ்ந்து வருகிறார். அவரே என்னிடம் வந்து, பாரிஸில் சில நண்பர்களிடம் அழைத்துச்சென்றார். நீண்டபொழுதுகள் அவருடன் உரையாடியபோது, 1999 ஆம் ஆண்டில் சபாலிங்கம் நினைவாக நண்பர்கள் வட்டம் பிரான்ஸில் வெளியிட்ட தோற்றுத்தான் போவோமா? தொகுப்பும் நினைவில் சஞ்சரித்தது. அந்தத் தொகுப்பை எனக்கு அனுப்பிவைத்த புஸ்பராஜாவும் இன்றில்லை!
அகிம்சைப்போர், ஆயுதப்போர், ராஜதந்திரப்போர் என்று சொல்லும் சமகாலத் தமிழ்த்தலைவர்களின் வார்த்தை ஜாலங்களுக்கும், ஊடகங்களில் அவர்கள் நடத்தும் காகிதப்போர்களுக்கும் மத்தியில் ஈழப்போராட்டத்தின் தொடக்கத்தையும் இன்று அதன் பரிமாணத்தையும் பற்றி அந்தத் தோழர் எனக்கு விபரித்தார்.
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலை எழுதிய சி. புஸ்பராசா மறைவதற்கு முன்னர் எழுதிய பின்வரும் வரிகளும் நினைவுக்கு வருகின்றன:
” அனைத்தும் சிதைந்து போய்விட்டது – எனது கனவுகள் போல்
எனது நம்பிக்கைகள் போல் – இப்போது எனது வாழ்வுபோல்
அனைத்தும் சிதைந்து போய்விட்டது ”
சமகாலத்தில் இலங்கையில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த கொலைக்குற்றவாளிகள் – மரண தண்டனை தீர்ப்பின் பிரகாரம் சிறையிலிருந்தவர்கள் ஜனாதிபதியின் பணிப்புரையில் பொதுமன்னிப்பில் விடுதலையானார்கள் . அவ்வாறு விடுதலைபெற்ற ஒருவர் அரசின் வீடமைப்பு அதிகார சபைக்கு தலைவரானார்.
இலங்கை அரசின் இந்த வேடிக்கைகளை அன்று சிறைகளில் கொல்லப்பட்ட அரசியல் கைதிகளின் ஆத்மா பார்த்துக்கொண்டிருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையுடன், அந்த ஆத்மாக்களுக்கே இந்தப் பதிவை சமர்ப்பிக்கின்றேன்.
2019 ஆம் ஆண்டு என்னை பிரான்ஸில் சந்தித்து, வெலிக்கடை சம்பவங்களைச் சொன்ன தோழர் , மீண்டும் கடந்த ஆண்டு ( 2023 இல் ) பாரிஸில் நடந்த வென்மேரி அறக்கட்டளையின் விருது விழாவுக்கு நான் சென்றிருந்தபோதும் அந்த நிகழ்ச்சிக்கு தமது அன்புத்துணைவியாருடன் வருகை தந்து வாழ்த்தினார்.
அண்மையில் Report of the Presidential Truth Commission on Ethnic Violence 1981-1984 என்ற ஆவணத்தையும் எனக்கு நினைவுபடுத்தி, அதன் இணைப்பினை அனுப்பிவைத்தார்.
மீண்டும் சொல்கின்றேன் : நினைக்கத் தெரிந்த
மனதால் எதனையும் மறக்கவும் முடியவில்லை. !
—0—
letchumananm@gmail.com – முருகபூபதி