இந்து சமுத்திரத்தின் சுதந்திரம், பிராந்திய நாடுகளின் இறையாண்மை; அவுஸ்திரேலியா அர்ப்பணிப்புடன் செயல்படும்
இந்து சமுத்திரத்தின் ஊடான பயணத்தை உறுதிப்படுத்தவும், பிராந்திய நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிக்க அவுஸ்திரேலியா அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் Geopolitical Cartographer” இனால் ஏற்பாடு செய்யப்பட்ட சொற்பொழிவில் கலந்து கொண்டு “அவுஸ்திரேலியாவும் இந்து சமுத்திரமும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், பலவந்தமாக அல்லது தமது இறையாண்மையில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டினார்.
புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு முன்னால் சிறிய மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் இந்து சமுத்திரம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பின் மூலோபாய முக்கியத்துவத்தை அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தனது உரையில் தெரிவித்தார்.
குறிப்பாக உலகின் வல்லரசு நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தங்களின் முன்னால், பல்வேறு நாடுகளும் அவற்றை எதிர்ப்பதன் மூலம் தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய உலகில் அரசியல் நம்பிக்கைகள் அல்லது சித்தாந்தங்களை மாற்றுவதை விட பொருளாதார காரணிகள் அரசியல் நிகழ்வுகள் மற்றும் முடிவுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தொற்று, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பாரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தியது என்றும், அந்த நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட தேவையான நிதி நடவடிக்கைகளின் விளைவாக, நாடுகளில் பணவீக்கம் அதிகரித்தது என்றும் மொரிசன் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் அவசியமானதாக இருந்தாலும், அவை வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கும், உலகெங்கிலும் மோசமான வாழ்க்கைச் செலவுகளுக்கும் வழிவகுத்தன என்றும், சுட்டிக்காட்டிய அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், உலகளவில் நாடுகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியதன் காரணமாக உயரும் பாதுகாப்புச் செலவுகள் எவ்வாறு இந்த பணவீக்க நிலைமையை மேலும் அதிகரித்தன என்றும் தெளிவுபடுத்தினார்.
நீடிக்கப்பட்ட நிதிக் கொள்கைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் உள்ளடங்கிய இந்த புதிய பொருளாதார சூழலை நிர்வகிப்பதில் அரசாங்கங்கள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்றும் ஸ்கொட் மொரிசன் வலியுறுத்தினார்.
பல்வேறு நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் வர்த்தகங்களும் தங்கள் பொருளாதார தீர்மானத்தின்போது, புவிசார் அரசியல் அபாயங்களைப் புரிந்து கொண்டு அவற்றையும் உள்ளடக்க வேண்டும் என்றும் மொரிசன் குறிப்பிட்டார்.