“மரணத்தில் மகிழும் நெறி பிறழ்ந்த சமூகம் ஆகிறோமா”: எங்கிருந்து வந்தது இந்த மூன்றாம் தர மனோநிலை?…. வி.எஸ்.சிவகரன்
‘காடாற்ற முதல் வீடாற்றாதே!’ எனும் கிராமிய வழக்குண்டு. இறப்பு என்பது இயல்பானதே. உதித்தவை எல்லாம் உதிர்வன என்பது இயற்கையின் நியதி.
எதையும் கேள் தருகிறேன், மரணத்தை மட்டும் கேளாதே என்றார் எமதர்மன். துறவிகளுக்கு மரணம் சுகமானது. பேரின்ப நிலை பேறடைதல் என்கிறார்கள்.
பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின் செலார், கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநடவாதே.- என்கிறார் திருமூலர்.
இதை ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வுணர்வு எந்நிலையிலும் எழாத வரை வாழ்வு ஆணவத்தின் உச்சமே. அகம்பாவத்தின் மிச்சமே.
பிறந்தன இறக்கும். இறந்தன பிறக்கும். தோன்றின மறையும். மறைந்தன தோன்றும். பெருத்தன சிறுக்கும். சிறுத்தன பெருக்கும். உணர்ந்தன மறக்கும். மறந்தன உணரும். புணர்ந்தன பிரியும். பிரிந்தன புணரும் என்கிறார் பட்டினத்தார்.
நாம் எவர் கருத்தியலைத் தான் புரியப் போகிறோம்?
உயிர்வன இறந்து விட்டால் இறையென விழிக்கும் மரபுசார் பண்பு நெறி கொண்ட ஒழுங்குடையவர்கள் உளர். யுத்த களங்களில் கூட எதிரி மடிந்து விட்டால் போர் வீரனுக்கு உரிய மரியாதை பின்பற்ற வேண்டும் என்கின்றன தமிழ் இலக்கியங்கள்.
விலங்குகள், பறவைகள் இறந்தால் கூட அதற்குரிய பண்பாட்டை வெளிப்படுத்துகிறோம்.
ஆனால் நாம் தற்காலத்தில் பொது வெளியில் மரணத்தில் மகிழ்கிறோம். இந்த மூன்றாம் தர மனோநிலை எமக்கு எப்படி உருவாகியது? எங்கிருந்து உருப்பெற்றது?
உலக ஒழுங்கிற்கு அடிநாதமிட்டவர்கள், மரபை விதியாக்கியவர்கள், சிற்றின்ப பேறிற்காய் நெறி பிறழலாமா? படித்தவர்கள் எனக் கூறுபவர்கள் தொடக்கம் கேள்விச் செவியர்களான முகநூல் போராளிகள் வரை இழிநிலையில் இதழ்விரிப்பாளர்கள் ஆகிவிட்டனர்.
எவரை எவர் கடிந்து கொள்வது? காழ்ப்புணர்வு, கசப்புணர்வு, பசப்புணர்வு பிணத்தின் மீது கூட வருகிறது என்றால் நீ மனிதனா எனச் சிந்திக்க வேண்டும்.
இனி, விடயத்திற்கு வருவோம்.
சம்பந்தன் மேல் இப்பத்தியாளர் உட்பட பலருக்கு ஆயிரம் விமர்சனம் உண்டு. அவர் விமர்சனத்துக்கு உட்பட்டவர். விமர்சிக்கப்பட வேண்டியவர். ஏனெனில் அவர் பொது வாழ்வில் இருந்தவர். அதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அவர் மரணத்தை மகிழலாமா? அன்றைய நாள் தீபாவளியென சிலர் மகிழ்ந்து கொண்டாடினார்கள். கவி பாடியும் புளகாங்கிதம் அடைந்தனர். மரத்திற்கு கூட உணர்வு உண்டு. அது மனிதனுக்கு எங்கே போனது?
இறந்தவர் உடலம் இயற்கையோடு சங்கமிக்கும் வரை இகழ்வது தகுமா? தமிழர் மரபாகுமா? பண்பாட்டுக்கு இழுக்காகாதா? ஒழுக்க நெறிகெடாதா? விழுப்பம் பேசிய நாம் இப்படி மரபு மீறுவது தகுமா?
அவ்வளவு அவசரமாக விமர்சிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? உணர்வுக் கோபத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் தெரியவில்லையா? அல்லது மொழியின் குறைபாடா?
அரசியலில் நிச்சயம் மீள்வாசிப்பு செய்யப்பட வேண்டும். அதற்கும் கால நிர்ணயமும் அறமும் உண்டு. அதை பின்பற்றத் தெரியாதவர்கள் கட்சிகளிலோ, அமைப்புகளிலோ தொடர்வதில் எந்தப் பயனும் இந்தச் சமூகத்திற்கு இல்லை.
பண்பாட்டுத் தொடர்ச்சியை பேண முடியாத சமூகம் எப்படி தனது தனித்துவத்தை தற்காத்துக் கொள்ளும்?
அறிவு பூர்வமாகவே ஆராய்வது தகும். உணர்வு பூர்வமாக அல்ல.
அவருடைய அரசியல் செல்நெறியும், அவரது வகிபாகமும், அரசியல் தீர்மானங்களும் விவாதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் தலைமைக்கும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுணர்ந்து, தெளிந்து, மீள வழி தேட முடியும்.
சம்பந்தன் விட்டுச் சென்ற இடைவெளி மிகப்பெரியது. அதை நிரப்பக் கூடிய அளவில் தற்போது எந்தத் தலைவரும் இல்லை என்பதே வெள்ளிடைமலையாககும்.
நீண்ட கால யுத்தத்துக்குள் மூழ்கி இருந்தமையால் ஜனநாயக அரசியலின் மிக நீண்ட இடைவெளி காணப்பட்டது. குடும்ப வாரிசுகளைத் தவிர, எந்தத் தலைவரும் தனக்குப் பிறகு தலைவரை உருவாக்குவதில் அக்கறை செலுத்துவதில்லை.
கிராமிய அமைப்புக்கள் தொடக்கம் இலக்கிய மன்றங்கள் வரை அரசியல் கட்சிகளிலும் எங்கும் தலைமைத்துவப் பதவி நிலைகள் என்பன நலனியல் சார்ந்த அடிப்படையிலேயே முதன்மையாகின்றன.
‘வளர்த்த கடா மார்பில் பாயும்’ எனும் நிலையில்தான் இரண்டாம் நிலைத் தலைவர்களை எவரும் உருவாக்க முன்வருவதில்லை – தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் எனும் பட்டறிவு அச்சத்தினால்.
சம்பந்தரும் அதற்கு விதிவிலக்கு அல்லர். அவர் ‘பதவி சுகபோகி’என்பது அவரின் கடந்த கால அரசியலை மீட்டிப் பார்க்கும்போது புரியும்.
கடந்த 70 ஆண்டுகளில் தமிழ்த்தேசியம் பேசிய எந்த தலைவரும் இவ்வாறு கொழும்புடன் இணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என எண்ணிய வரலாறு இல்லை. அந்த அளவுக்கு கீழ் இறங்கினார்.
அதைஜ் கொழும்பு புரிந்து கொள்ளவில்லை. மாறாக, தமிழர் தரப்பின் எதிர்ப்பைத்தான் அவர் பிரதிபலனாகச் சம்பாதித்தார்.
அவரைப் புரிந்து கொள்ளாமையின் விளைவே அவர் மரணத்தில் மகிழ்ந்தமை எனலாம். ஆனால் சம்பந்தன் யாவற்றையும் அறியாமல் செயல்பட்டவர் அல்லர். தெளிவில்லாதவரும் அல்லர்.
எப்படியாவது தீர்வை பெற்று விட வேண்டும் என முயற்சித்தார். இந்தியாவை விடுத்து கொழும்பை நேசித்துப் பார்த்தார். எல்லாக் கதவுகளையும் திறக்க முற்பட்டார். சம்பந்தனின் எந்த மந்திரத்திற்கும் சிங்களம் அசையவில்லை.
மாறாக, நம்பிக்கையூட்டி ஏமாற்றியது. அவர் அறியாமல் இருந்திருக்க மாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என நம்பிக்கையூட்டினார். அதையும் பலர் கேலி செய்தனர்.
தற்போதைய சமூகத்தில் எதையும் ஆழமாக ஆராயாத இளைய சமூகம் உருவாகி வருகிறது. அவர்களிடம் எந்த விதமான இலக்குமில்லை, தூரநோக்கு சிந்தனையுமில்லை.
எப்படியும் வாழலாம் எனும் வாழ்கைக்குள் சமூகத்தை சிதைக்க முற்படுகிறார்கள். ஏதிர்காலம் என்னவாக போகிறதே எனும் அச்சம் ஏற்படுகின்றது. இவர்கள் தலைமை தாங்கும் போது சமூகம் பரிதாபத்திற்கு உள்ளாகப் போகிறது.
சிங்கக் கொடியையும் தூக்கிப்பிடித்து பார்த்தார். மென்சக்தி அணுகுமுறையையும் திடப்படுத்தினார். அதில் மிகுந்த நம்பிக்கையும் கொண்டார்.
இனப் பிரச்சினைத் தீர்வே இலக்கு என்பதால் அன்றாட, அத்தியாவசிய பிரச்சுனைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டார்.
ஏழு தசாப்தமாக ஏமாற்றிய கொழும்பிற்கு சம்பந்தனும் ஒரு பொருட்டல்ல என்பதை பின்னர் உணர்த்தினார்கள்.
கொழும்பை, இந்தியாவை, சர்வதேசத்தைக் கையாள்வதில் பின்னடைவையே சந்தித்தார்.
இராஜதந்திர – இராஜீக அணுகு முறையில் திடமான வெற்றியை நோக்கிய தந்திர வியூகத்தை அவர் வகுக்கவில்லை எனும் விமர்சனமும் உண்டு.
சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் எவரும் இல்லாத காரணத்தினால் தள்ளாத வயது வரை சம்பந்தனிலேயே தங்கி இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அதுவும் சம்பந்தனின் தோல்வியே.
சுமார் ஐம்பது ஆண்டு கால அரசியலில் சம்பந்தனினால் ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியவில்லை. கட்சியைக் கூடக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியவில்லை.
அவரது ஆளுமையின் வல்லமையில் குறைபாடா அல்லது சுயநலத்தின் வெளிப்பாடா? தன் கட்சியையே காக்க முடியாதவர் தமிழ் மக்கள் நலனைக் காப்பார் என நம்பியது யார் தவறு?
காற்று இடைவெளியை நிரப்பும் என்றார் அறிஞர் அண்ணா. சம்பந்தனின் இடைவெளியை எது நிரப்பப் போகிறது? அதையும் காலத்திடம் எதிர்பார்த்துக் காத்திருக்க முடியுமா?
தலைமையற்ற வெறுமைக்குள் ஆளுக்கு ஆள் ஏட்டிக்குப்போட்டி அரசியலை நடத்தி, உள்கட்சிக்குள்ளேயும் நீதி தேட வேண்டிய நிலையில் உள்ள கட்சிகளினால் தமிழ் மக்களின் இனப்பிரச்ச சினை சார்ந்து சிந்திக்க முடியுமா?
அல்லது ஐக்கியத்தைப் பேண முடியுமா? தமிழ் மக்களில் குறைந்தபட்சமேனும் நம்பக்கூடிய ஒருவர் தலைமை தாங்கக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எவரும் தெரியாத நிலையில் சம்பந்தனின் மரணம் என்பது நீண்ட இடைவெளியே.
‘நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை’ – என்கிறார் வள்ளுவர்.
– வி.எஸ். சிவகரன் –