இலங்கை வடமராட்சியிலிருந்து… அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து வரையில் இலக்கியப் பயணம்!…. முருகபூபதி.
இலங்கை வடமராட்சியிலிருந்து…
அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து வரையில் இலக்கியப் பயணத்தை தொடரும் சியாமளா யோகேஸ்வரன் !…. முருகபூபதி.
“ உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள், தங்கள் தாயகம் விட்டு புலம்பெயர்ந்து சென்றாலும், தாங்கள் புதிதாக கால் பதித்த தேசத்திலும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் “ என்று இதற்கு முன்னரும் எனது பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன்.
எனது இந்த அவதானிப்பில், இம்முறை மற்றும் ஒரு பெண் எழுத்தாளரை இங்கு அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.
இலங்கையில் வடமராட்சிப் பிரதேசம் பல கலை, இலக்கிய, ஊடகத்துறை ஆளுமைகளை மாத்திரமன்றி சிறந்த கல்விமான்களையும் எமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அவர்களின் பெயர்ப்பட்டியல் சற்று நீளமானது. ஆனால், தற்போது வடமராட்சியில் வாழும் இளம் தலைமுறையினர் அந்த ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் தெரிந்து வைத்திருக்கிறார்களா..?
அங்கிருக்கும் புகழ்பெற்ற கல்லூரிகள், பாடசாலைகளில் அதிபர்களாக ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களாவது, தமது மாணவர் மத்தியில், அவர்களை அறிமுகப்படுத்துகிறார்களா..?
அல்லது, “ அன்பார்ந்த மாணவர்களே, நீங்கள் வதியும் இந்த வடமராட்சிப் பிரதேசத்தில் முன்னர் வாழ்ந்த – தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் கலை, இலக்கிய ஆளுமைகள் மற்றும் கல்விமான்கள் – தமிழ் அறிஞர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் என்று எப்போதாவது சொல்கிறார்களா..?
ஆனால், இந்த டிஜிட்டல் யுகத்தில் முகநூல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மாத்திரம் கோடிக்கணக்கில் பல்கிப்பெருகியிருக்கிறது.
அதேசமயம் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மாதாந்தம் கலை, இலக்கியம், வரலாறு சார்ந்த நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
நான் இதுவரையில் நேருக்கு நேர் சந்தித்திராத அவ்வப்போது மெய்நிகர் நிகழ்ச்சிகளில் மாத்திரமே பார்த்து உரையாடியிருக்கும் ஒரு பெண் எழுத்தாளரைப் பற்றித்தான் இந்தப்பதிவில் எழுதுவதற்கு முன்வந்துள்ளேன்.
ஒரு நாள் காலைப்பொழுது, எனக்கு இலக்கிய உரையாடலுடன் புலர்ந்தது.
தனது பெயரை சியாமளா யோகேஸ்வரன் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் எழுதியிருக்கும் கானல் நீர் என்ற புதிய நாவலுக்கு அணிந்துரை எழுதித்தருமாறு கேட்டது ஒரு பெண் குரல்.
அவரது குரல் எனக்குப் புதியது.
எங்கேயிருந்து தொடர்புகொள்கிறீர்கள்…? எனக்கேட்டேன். அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பேர்ண் மாநகரத்திலிருந்து எனச்சொன்னார்.
நான் கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக வசிக்கும் அவுஸ்திரேலியா கண்டத்திலிருந்து மற்றும் ஒரு எழுத்தாளரா..? ஆச்சரியத்துடன் உரையாடினேன்.
எனது முகவரியைப் பெற்று தான் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருந்த இதயராகம் ( நாவல் – 2021 ) உறவுகள் ( சிறுகதைத் தொகுதி – 2022 ) ஆகிய நூல்களை அனுப்பியிருந்தார்.
இவர் பிறந்த இடம்: இலங்கையில் வடமராட்சியில் பருத்தித்துறை. மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று பேராதனைப் பல்கலைக்கழகம் பிரவேசித்தவர்.
பாடசாலைப் பருவத்திலேயே கலை, இலக்கிய ஈடுபாடு இவருக்கிருந்திருக்கிறது. அந்த ஈடுபாடு பல்கலைக்கழகம் பிரவேசித்த பின்னரும் தொடர்ந்திருக்கிறது.
பேராதனைப் பல்கலைக்கழக வருடாந்த வெளியீடுகளான கீதம், இளங்கதிர், மற்றும் இந்து தர்மம் முதலானவற்றில் இவரது கட்டுரைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன.
அவுஸ்ரேலியாவுக்கு இவர் புலம்பெயர்ந்து வந்த பிறகு குவின்ன்ஸ்லாந்து தமிழ் மன்றம், அவுஸ்திரேலியா தமிழ் பேரவை ஆகியன நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பங்கேற்று பல பரிசில்களை பெற்றிருப்பவர்.
சமகாலத்தில் சிறுகதை மஞ்சரி, அரமியம், இளவேனில், காற்றுவெளி, மற்றும் உதயன் , சஞ்சீவி முதலானவற்றில் சிறுகதைகளையும் எதிரொலி பத்திரிகையில் அரசியல் மற்றும் சமகால நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், நேர்முக ஆக்கங்களையும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
இவரது கானல்நீர் நாவலுக்கு அணிந்துரை எழுதிக்கொடுத்தேன. அந்த அணிந்துரையுடன் குறிப்பிட்ட நாவல் வெளியானதும் அதன் பிரதியையும் எனக்கு சியாமளா யோகேஸ்வரன் அனுப்பி வைத்தார்.
அத்துடன் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்திலும் உறுப்புரிமை பெற்று இணைந்துகொண்டார்.
எமது சங்கத்தின் காப்பாளரும் மூத்த கவிஞருமான கவிஞர் அம்பி அவர்களின் 95 ஆவது பிறந்த தினத்தை நாம் மெய்நிகரில் கொண்டாடியபோது, சியாமளா, அம்பி அவர்கள் இறுதியாக எழுதிய சொல்லாத கதைகள் நூல் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை சமர்ப்பித்தார்.
மிகவும் சிறப்பாக அவர் எழுதியிருந்த அந்த நயப்புரை, இலங்கை, அவுஸ்திரேலியா ஊடகங்களிலும் வெளியானது.
சியாமளா யோகேஸ்வரன் , தமிழ்ப் பாடசாலை ஆசிரியராக சேவையாற்றியிருப்பதுடன், சிறுவர்களின் கலைவிழாவுக்கான நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்த அனுபவத்தையும் பெற்றிருப்பவர்.
மூத்தோர் அவைக்காகக் கவிதைகளுடன் நாடகங்களையும் எழுதி, நடித்து அரங்கேற்றியவர்.
அவுஸ்ரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கம், பிறிஸ்பேர்ன் தமிழ் பாடசாலைத் தமிழ் போட்டிகளுக்கான ஆக்கங்களாக கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை பல ஆண்டு காலமாக எழுதி வருகிறார்.
நியூ சவுத்வேல்ஸ் பாடசாலைகள் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்ப் பாட நூலுக்கான ஆக்கங்களையும் எழுதியிருப்பவர்.
ஒரு பிரதேசத்தில் கலை, இலக்கியம் சார்ந்த எழுத்துப்பணிகளில் ஒருவர் அர்ப்பணிப்போடு ஈடுபடத்தொடங்கியதும், சுற்றியிருப்பவர்கள் அவரிடத்தில் மேலும் சில பொறுப்புகளை சுமத்திவிடுகிறார்கள்.
சியாமளாவுக்கும் அத்தகைய அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன. எனினும் அந்தப்பொறுப்புகளை பொறுமையுடன் சுமந்துகொண்டு, தனது ஆக்க இலக்கியப்பிரதிகளையும் எழுதிவருகிறார்.
குவின்ஸ்லாந்து சிறீ செல்வ விநாயகர் ஆலயத்துக்கான மாதாந்தச் செய்தி மடலையும் சியாமளா தயாரித்து வருகிறார்.
இவரிடத்திலிருக்கும் ஆழ்ந்த சமயப்பற்று, ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடச் செய்திருக்கிறது.
அவுஸ்திரேலியா லக்ராலிஸ் பன்னாட்டு பால் தயாரிப்பு நிறுவனத்தில், தரநிர்ணயக் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளராகப் (QA Coordinator of Lactalis Pty Ltd) பணியாற்றிவரும் சியாமளா யோகேஸ்வரன் இதுவரை எழுதியிருக்கும் நூல்கள்:
உறவுகள், மனதின் வடிவங்கள், விடியல் முதலான கதைத் தொகுதிகள். இதயராகம், கானல் நீர், மெல்லிழைகள் முதலான நாவல்ள் .
எனக்கிருந்த வேலைப்பளுவுக்கு மத்தியில் சியாமளாவின் கானல் நீர் நாவலுக்கு அணிந்துரை எழுதியிருந்தேன்.
கடந்த சில வருடங்களாக எனக்கு எங்கிருந்தாவது இலக்கிய நூல்கள், இதழ்கள் தபாலில் வந்துகொண்டேயிருக்கின்றன.
அவற்றையெல்லாம் படித்து முடிப்பதற்கும் அவைபற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதுவதற்கும் தேவைப்பட்ட நேரத்தையும் தேடவேண்டியிருக்கிறது. எனினும், முடிந்தவரையில் நேரம் ஒதுக்கி, “ படித்தோம் சொல்கின்றோம் “ என்ற தலைப்பில் நான் படித்த நூல்கள், இதழ்கள், மலர்கள் குறித்த எனது வாசிப்பு அனுபவத்தை பதிவுசெய்து வருகின்றேன்.
சியாமளா யோகேஸ்வரன் புதிய தலைமுறை எழுத்தாளர் என்பதை அவருடனான உரையாடலிலும், அவர் முதலில் அனுப்பியிருந்த இரண்டு நூல்களிலுமிருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தது.
புதிய தலைமுறையினரை வரவேற்று ஊக்குவிக்கவேண்டியதும் மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் முக்கிய பணியாகும்.
சியாமளாவின் கானல்நீர் நாவல் எனது மின்னஞ்சலுக்கு Pdf format இல்தான் முதலில் வந்து சேர்ந்தது. அச்சில் நூலாக வெளியாகும் படைப்புகளை படிப்பதற்கும், மின்னூலாக வெளிவரும் படைப்புகளை படிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.
இணையத்தின் அறிமுகத்தையடுத்து மின்னூல்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கானலில் மான் ( தெணியான் ) , கானல் தேசம் ( நடேசன் ) முதலான தலைப்புகளில் நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றை எமது ஈழத்து எழுத்தாளர்களே எழுதியிருக்கின்றனர். ஒருவர் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான். மற்றவர் நான் புகலிடம் பெற்று வாழும் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் வசிக்கும் எழுத்தாளர் நடேசன்.
இந்த வரிசையில் இதே கண்டத்தில் குவின்ஸ்லாந்து மாநிலம் பிறிஸ்பேர்ண் நகரிலிருந்து சியாமளா யோகேஸ்வரன் தனது கானல் நீர் நாவலை வரவாக்கியிருக்கிறார்.
“ போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை. தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது “
அடல்ஃப் ஹிட்லர் இவ்வாறு இரண்டாம் உலகப்போர் முடிவடைவதற்கு முன்னர் சொன்னார். தனது முடிவு எத்தகையது என்பதை தீர்க்கதரிசனமாகவே சொல்லிவிட்டாரோ எனவும் யோசிக்கத் தோன்றியது.
ஒவ்வாரு மனிதரதும் வாழ்க்கைப்போரும் இத்தகையதே! ஒவ்வொருவரதும் வெற்றியையும் தோல்வியையும் வேறு யாரோ ஒருவர்தான் எழுத்தில் பதிவுசெய்து வைக்கின்றார். சிலர் தத்தம் வாழ்க்கையை சுயசரிதைப் பாங்கில் எழுதுகின்றனர்.
ஒரு மனித உயிர் பிறந்த நேரம் முதல், அதாவது தாயின் கருவறையிலிருந்த வெளிப்பட்டு, இப்பூவலகைப் பார்க்கத் தொடங்கி மரணிக்கும் வரையில் எது எதற்காகவோ போராடிக்கொண்டிருக்கிறது.
எமது தமிழ் சமூகத்தில் இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் பெண்களின் வகிபாகம் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது. அத்துடன் கானல் நீரைத் தேடி ஓடும் கலைமானைப் போன்று அலைந்துழலும் வாழ்க்கையைத்தான் எமது சமூகம் பெண்களிடத்தில் திணித்துவைத்திருக்கிறது.
இராமாயணம், மகா பாரதம், சகுந்தலம், சத்தியவான் சாவித்திரி, சிலப்பதிகாரம், நளவெண்பா முதலான அனைத்து காவியங்களிலும் பெண்களின் ஓலமும் கண்ணீரும்தான் தென்படுகின்றது.
ஆனால், அந்தக் காவியமாந்தர்களான பெண்களை படைத்திருப்பவர்கள் அனைவருமே ஆண்கள்தான்.
சியாமளா யோகேஸ்வரன் ஒரு பெண்ணின் அலைந்துழன்ற வாழ்வை தமது கானல் நீர் நாவல் மூலம் சித்திரிக்க முயன்றுள்ளார்.
ஒவ்வொரு படைப்பாளியினதும் வாழ்வின் தரிசனங்களே அவர்கள் எழுதும் இலக்கியப்பிரதிகள். அவை சிறுகதைகளாக, நாவலாக உருமாறும்போது மனிதர்கள் பற்றி மாத்திரமின்றி சமூகம் குறித்த பார்வையும் வாசகர்களை வந்தடைகிறது.
கானல் நீர் மூன்று தலைமுறைக் கதை. அதனால், இம்மூன்று தலைமுறையின் காலத்து சமூக அமைப்பு முறையையும், போர்க்கால இடப்பெயர்வு – அந்நிய புலப்பெயர்வு குறித்தெல்லாம் பேசுகின்றது.
நாவலின் பிரதான நாயகி அபி, தாயின் கருவறையிலிருந்து வெளியே வந்த நாள் முதல் அவளது குழந்தைப்பருவம், பள்ளிக்காலம், காதல் அரும்பும் இளமைப்பருவம், தனக்குத்தானே துணையை தேடிக்கொள்வதில் காண்பித்த அவசரம், அதனால் நேர்ந்த நெருக்கடிகளை கடந்து செல்ல மேற்கொண்ட பிரயத்தனங்கள், தாயின் சொற்களை கேட்காமல் விட்ட தவறுகளுக்கு பிராயச்சித்தமும் தேட வழியின்றி, இலங்கை – தமிழ் நாடு – இங்கிலாந்து என்று பரதேசியாக அவலப்பட்ட கதையே கானல்நீர்.
கானல் நீரைத்தேடி ஓடியது யார்..? அபியா… அல்லது அவளைப்பெற்ற தாய் சுமதியா..? என்பதை வாசகர்கள் தீர்மானிப்பார்கள்.
தாயகத்தில் போர்க்கால வாழ்க்கை, அதிலிருந்து தப்பித்து தமிழ்நாட்டில் அகதி வாழ்க்கை, அங்கே வாழ்க்கைத்துணை கிடைத்ததும் இங்கிலாந்து சென்று தொடங்கிய புலம்பெயர் புகலிட வாழ்க்கை. இவற்றையெல்லாம் ஒரு கதை சொல்லியாக கூறிவரும் நாவலாசிரியர் சியாமளா, இம்மூன்று நாடுகளினதும் நிலக்காட்சிகளை சித்திரிப்பதில் கவனம் செலுத்தாமல், பாத்திரங்களின் குண இயல்புகளை மாத்திரமே தொடர்ந்து காண்பித்துள்ளார்.
அதனால், காட்சிகளையும் விரைவாக நகர்த்திச்செல்ல நேர்ந்துவிடுகிறது. தொடக்கத்தில் குழந்தை அபி. பின்னர் மாணவி. அடுத்து காதல் வலையில் சிக்கி – முரண்பட்டு – மோதி அதிலிருந்து வெளியேறும் இளவயதுப் பருவம், இடையில் இயக்கத்தில் இணையப்போவதாக பெற்ற தாய்க்கு எச்சரிக்கை, இறுதியில் தொடரவிருக்கும் போர்க்கால நெருக்கடியிலிருந்து தப்பித்து தமிழக அகதிமுகாம் வாழ்க்கை. அங்கு சென்றபின்பு மீண்டும் மற்றும் ஒரு புதிய காதல். அது திருமணத்தில் முடிந்திருந்தாலும், இங்கிலாந்தை புகலிடமாக பெற்றுச் சென்று , ஒரு ஆண்மகவுக்கு தாயான பின்னர், கணவனுடன் ஏற்படும் பிணக்கு, இறுதியில் பெற்றமகனை ஒரு மருத்துவனாக பார்க்கும் மன நிறைவு . இத்தனைக்கும் மத்தியில் ஊரிலிருக்கும் பெற்றதாய் தன்னை தொடர்ந்தும் புறக்கணிக்கிறாளே என்ற ஏக்கத்திலேயே அபியின் வாழ்க்கை தொலைந்துபோகிறது.
சில திரைப்படங்களை பார்த்திருப்பீர்கள். எழுத்து ஓடும்போது, இத்திரைப்படத்தில் வரும் பாத்திரங்கள் எவரையும் குறிப்பன அல்ல எனவும், உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் எனவும் காண்பிப்பார்கள்.
கானல்நீர் நாவல் சொல்லும் கதையும் யாராவது ஒருவரது வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இதுபற்றி நாவலாசிரியர் சியாமளா தனது முன்னுரையில் ஏதும் சொன்னால்தான் வாசகர்கள் தெரிந்துகொள்வார்கள்.
நாவலின் படைப்பூக்கத்தில் ஆசிரியர் மேலும் கவனம் செலுத்தியிருக்கவேண்டும் எனவும் கூறத்தோன்றுகிறது.
சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே படைப்பாளிகளின் நோக்கமாகும். சியாமளாவும் தனது இரண்டாவது நாவல் கானல் நீர் மூலம் பேசவைத்துள்ளார்.
பருவ வயது, கண்ணாடித் தம்ளரைப்போன்றது என்பார்கள். அதனை நிதானமாக பக்குவமாக கையாளவேண்டும். அவ்வாறு கையாளத் தவறும் பட்சத்தில் வாழ்க்கை என்னவாகும் என்ற செய்தியை சியாமளா இந்நாவலில் கூறியிருக்கிறார்.
அவர் தொடர்ந்தும் படைப்பிலக்கியத்தில் பயணித்து வளரவேண்டும், நாவலிலக்கியத்தில் உச்சங்களை தொடல் வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன்.
முருகபூபதி – மெல்பன் – அவுஸ்திரேலியா
letchumananm@gmail.com