கதைகள்

“கனகர் கிராமம்” … தொடர் நாவல் … அங்கம் – 40 …. செங்கதிரோன்.

 

1977 ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் 1978 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த வரவு செவுத் திட்டம் மீதான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நேரம்.

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் வாக்குகளைக் கோரும் நோக்கில் ஒழுங்காக அறிவிக்கத் தொடங்கினார்.

கனகரட்ணத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதும் எதிர்க்கட்சி வரிசையில் ஏனைய தமிழர் விடுதலைக்கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமர்ந்திருந்த அவர் தனது வலதுகையை உயர்த்தி வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முயன்றார். கனகரட்ணம் தனது வலது கையை உயர்த்த முனைவதை அவதானித்த பக்கத்திலமர்ந்திருந்த யாழ்ப்பாணத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் வெ.யகேஸ்வரன் கனகரட்ணத்தின் வலது கையைப் பிடித்து மடக்கி அமர்த்தினார். ஆனால், கனகரட்ணமோ தனது இடது கையை உயர்த்தி வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக “ஆம்’ என்று கூறி வாக்களித்துவிட்டார். அவரது வாக்கு வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாகப் பதிவானது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் யாவரும் மேசையில் தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஏனைய தமிழர் விடுதலைக்கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் முகத்தில் ஈயாடவில்லை. கனகரட்ணம் என்ன வேலையைப் பார்த்தார் என்பதுபோல் ஆளையாள் நோக்கினர். அமிர்தலிங்கம் தனக்குவந்த ஆத்திரத்தில் கனகரட்ணத்தை நோக்கி ‘இடிவிழும்’ என்று திட்டினார்.

இவையெல்லாவற்றையும் கனகரட்ணத்துடன் கூடவே பாராளுமன்றத்துக்குள் வந்து பாராளுமன்ற ‘கலரி’ யில் அமர்ந்து அவதானித்துக் கொண்டிருந்த கோகுலனுக்கு முகத்தில் பேயறைந்தது போலிருந்தது. என்ன வேலையைப் பார்த்தார் இவர் என்று எண்ணிய கோகுலன் செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நின்றான்.

கனரட்ணமோ வரவு செலவுத் திட்டம் மீதான வாக்களிப்பு முடிந்து அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது எனச் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதும், எதுவுமே நடக்காததுபோல் எவரையும் எதிர்த்தும் ஒன்றும் பேசாமல் அமைதியாக எழுந்து ஒரு துறவிபோல் சபையைவிட்டு வெளியேறினார்.

ஏனைய தமிழர் விடுதலைக்கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே அவரை இடைமறித்துப் பேசாமல் சபையை விட்டு வெளியேறும் கனகரட்ணத்தை இதயக் குமுறலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது அவர்களின் முகக் குறிப்புகளிலிருந்து தெரிந்தது.

கனரட்ணம் சபையை விட்டு வெளியறிய கையோடு கோகுலனும் ‘கலரி’ யைவிட்டு வெளியேறினான்.

கனகரட்ணத்தின் செய்கை அவனின் மனதில் ஆத்திரத்தை எழுப்பிவிட்டிருந்தது.

கனரட்ணம் அரசாங்கத்தின் பக்கம் நின்று வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற விடயத்தில் கோகுலனுக்கு அவர்மீதான ஆத்திரம் அலை அலையாக எழுந்தது. அவரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தியதில் தானே சூத்திரதாரி என்பதால் இப்படிச் செய்துவிட்டாரே எண்ணிச் சினம் கொண்டான். தமிழர்விடுதலைக் கூட்டணியில் நின்று வென்று தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கைக்குத் தமிழ் மக்களின் ஆணையை பெற்றுக் கொண்டுவிட்டுத் துரோகம் பண்ணிவிட்டாரே என்ற உணர்வு மேலோங்கிய நிலையில் கோகுலன் கொந்தளித்தான்.

ஆனாலும் தமிழர்களுடைய அரசியலில் இதற்கு முன்னர் தமிழரசுக் கட்சியில் நின்றுவென்று பின்னர் அரசாங்க கட்சிக்குத் தாவியவர்களெல்லாம் தன்னலத்திற்காகவும் – அரசாங்கக் கட்சியில் சேர்ந்து ஊழல்கள் செய்து உழைப்பதற்காகவும் – வாழ்க்கைவசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் – பதவிகளுக்காகவுமே அப்படி மாறினார்கள். ஆனால் கனரட்ணம் அவைகளுக்காக அப்படி மாறக்கூடியவரல்ல என்றும் அவனது உள்மனம் உரைத்தது.

கனரட்ணம் பரம்பரைப் பணக்காரனாக இருந்து வாழ்க்கையின் அத்தனை வசதிகளையும் அனுபவித்து சகல இன்பங்களையும் சுகித்தவர். உழைக்கவேண்டிய அல்லது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கிருக்கவில்லை. எல்லா வசதிகளும் அவரிடமிருந்தன. தனது நலன்களுக்காக அப்படி நடந்து கொண்டிருக்கமாட்டார். அவரைத் தனது சிறு வயதிலிருந்தே கோகுலன் அறிந்திருந்தான்.அவரது ‘லைவ் ஸ்ரைல்’ வித்தியாசமானது. உண்மையானது; நேர்மையானது; வெளிப்படையானது; துணிவு மிக்கது: எவருக்கும் அடிபணியாதது. தனக்கு வாக்களித்த மக்களின் நலன்களுக்காக மட்டுமே அவர் அப்படியான தீர்மானத்திற்கு வந்திருப்பார் என்றெண்ணிய கோகுலன், இருந்தாலும் தனது தொகுதி மக்களிடம் ஒரு சொல் கேட்டிருக்கலாமே என்றும் ஆதங்கப்பட்டான். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்களை எவ்வாறு எதிர்வரும் நாட்களில் தான் எதிர்கொள்ளவதென்பதும் அவனது ஏக்கமாக இருந்தது.

பாராளுமன்றத்திற்கு வெளியே வந்த கோகுலன் தானும் அவருடன் வாகனத்தில் ஏறினான். கனரட்ணத்துடன் அவன் எதுவுமே பேசவில்லை. சூறாவளிக் காற்றில் கொந்தளிக்கும் பெருங்கடலைப்போல் அவனுடைய மனம் குமுறிக் கொண்டிருந்தது.

தனது செய்கையால் கோகுலன் கோபமடைந்துள்ளான் என்பதைக் கனகரட்ணம் கோகுலனின் முகக் குறிப்பிலிருந்தும் உடல் மொழியிலிருந்தும் மோப்பம் பிடித்திருக்கவேண்டும் போலும், அவரும் கோகுலனுடன் ஒன்றும் பேசவில்லை.

வாகனச் சாரதியும் ஏதோ வேண்டத்தகாதது நிகழ்ந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டானோ என்னவோ தெரியவில்லை, கோகுலனை கேள்விக்குறியோடு நோக்கியவன் கனகரட்ணத்தின் பக்கம் பார்வையைத் திருப்பிப் பின் கோகுலனைப் பார்த்து ‘ என்ன நடந்தது’ என்பது போல கண்களால் கேட்டுத் தலையை அசைத்தான். கோகுலன் எவருடனும் பேசும் நிலையில் அப்போது இல்லை.

கொழும்பு “கால்பேஸ்’ இல் அமைந்திருந்த பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலிருந்து புறப்பட்ட வாகனம் காலிவீதி வழியே பயணித்துக் ஐந்தாம் ஒழுங்கையால் பிரதான வீதியிலிருந்து விலகி உள்திரும்பும் சந்தியில் தன்னை இறக்கிவிடும்படி வாகனச் சாரதியிடம் சொல்லி இறங்கிக் கனகரட்ணத்திடம் ‘போய்வருகிறேன்’ என்று கூடச் சொல்ல மனம் விரும்பாமல் தான் கொழும்பில் தங்கியிருந்த வெள்ளவத்தைக்கு ‘பஸ்’ எடுப்பதற்காக உரிய ‘பஸ்’ தரிப்பை நோக்கி நடையைக் கட்டினான். கனகரட்ணத்தின் கொழும்பு வாசஸ்தலம் ந்தாம் ஒழுங்கை, சார்ள்ஸ் வழி, இலக்கம் இரண்டில் அமைந்திருந்தது. அன்றிரவு ஊருக்குத் திரும்புவதே கோகுலனின் திட்டமாயிருந்தது.

பல்கலைக்கழக அனுமதிக்காக 1970 இல் இலங்கை அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ‘தரப்படுத்தல்’ முறைமை – 1972 இல் நிறைவேற்றப்பெற்ற இலங்கைக்கான புதிய குடியரசு அரசியலமைப்பு 1974 ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளன்று நிகழ்ந்த அசம்பாவிதத்தில் ஒன்பது அப்பாவி உயிர்கள் பலியாகியமை எனத் தொடர்ந்த நிகழ்வுகள் யாழ்குடாநாட்டுத் தமிழ் இளைஞர்களிடையே கொந்தளிப்பையும் குமுறலையும் ஏற்படுத்தியிருந்தன.

அடக்குமுறை அரசாங்கத்தின் மீது அவர்களை ஆத்திரம் கொள்ளச் செய்தன. மிதவாத அரசியலில் நம்பிக்கையிழந்த தமிழ் இளைஞர்களைத் தீவிரவாத சிந்தனைகள் ஆட்கொள்ள ஆரம்பித்தன. அம்மைநோய் கண்ட உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படுதல் போல ‘அடிமைநோய்’ உற்ற தமிழ்ச் சமூகத்தில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் வெடித்துக்கிளம்பின. இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு, 1970 இல் ஆட்சியமைத்த பிரமதர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ‘ஐக்கிய முன்னணி’ அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வடமாகாண அமைப்பாளராகவும் அதிகாரம் மிக்க அரசியல் வாதியாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்த யாழ் நகர பிதாவான அல்பிரட் துரையப்பா மீது 21.07.1975 அன்று யாழ்பாணம் ன்னாலைக்கட்டுவன் வரதராஜப்பெருமா ஆலயத்தில் வைத்து நிகழ்த்தப்பெற்ற துப்பாக்கிச் சூட்டுப்படுகொலை பிள்ளையார் சுழி இட்ட.

1977 இல் பிரதமர் .ஆர். தலைமையிலான யூ.என்.பி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் 1977 ஆணியல் இலங்கையில் நாடளாவிய ரீதியில் அரங்கேறிய தமிழ் மக்கள் மீதான இனக்கலவரம், ஏற்கெனவே தீவிரவாத சிந்தனைகளை நோக்கிச் செயற்பட ஆரம்பித்திருந்த தமிழ் இளைஞர்களிடையே எரிகிற நெருப்பிலே எண்ணெயை வார்த்தது போலாயிற்று.

இந்தச் சூழ்நிலையில்தான், பொத்துவில் தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளராக நின்று வெற்றியீட்டியிருந்த இத்தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான கனகரட்ணம் 1977 இன் இறுதியில் அரசாங்கம் கொணர்ந்த 1978 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததன் மூலம் ஆளும் தரப்புக்குத் தாவியிருந்தார்.

கனகரட்ணம் அரசாங்கத்தின் பக்கம் மாறிய பின் 1978 ஜனவரியில் ஒருநாள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியதஸ்தர்களில் ஒருவரான மாவை. சேனாதிராஜா யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கோவிலுக்கு வந்திருந்தார். தமிழர்விடுதலைக் கூட்டணியின் பொத்துவில் தொகுதிக் கிளையின் கூட்டம் திருக்கோவில் சித்திரவேலாயுதர் கோயில் வீதியிலுள்ள கண்ணன் முதலாளி வீட்டில் காலை 10.00 மணிக்கு நடைபெறுவதாகவும் அதற்கு தவறாது சமூகமளிக்கும்படியான தகவல் கோமாரியிலிருந்த கோகுலனுக்குக் கிடைத்தது. கண்ணன் முதலாளி, யாழ்ப்பாணத்தைப் பூர்வகமாகக் கொண்டவரும் மட்டக்களப்பில் வசித்தவருமான மார்க்கண்டு முதலாளியின் உறவுக்காரர். பொத்துவில் – ஊறணி – திருக்கோவில் பிரதேசங்களிலிருந்த மார்க்கண்டு முதலாளியின் குடும்பச் சொத்துக்களின்-வயல் மற்றும் தென்னந்தோட்டம் போன்ற அசையாச் சொத்துக்களின் முகாமையாளரான கண்ணன் முதலாளி நீண்ட காலமாகத் திருக்கோவிலில் நிரந்தரமாகக் குடியிருப்பவர். திருமணமாகாதவர்.

கோகுலனும் கூட்டத்துக்குப் போனான். அக்கரைப்பற்றிலிருந்து சிவஞானச்செல்வக்குருக்கள்-தம்பிலுவிலிலிருந்து சிந்தாத்துரை, அரசரட்ணம், தருமரட்ணம், தட்சணாமூர்த்தி, திருக்கோவிலிலிருந்து சிவஞானம், நாகமணி, பொத்துவிலிலிருந்து இலட்சுமணன், ஆசீர்வாதம், நல்லதம்பி, தம்பட்டையிலிருந்து குருநாதபிள்ளை ஆகிய முக்கியஸ்தர்கள் ஏனையவர்களுடன் பிரசன்னமாயிருந்தார்கள். பின்னர் சிறிது நேரத்தில் அரியநாயகம் அவர்களின் இளைய மகன் ‘வாவா’ என அழைக்கப்பெறும் பிரகஸ்பதியும், கனகரட்ணத்தின் இளைய மகன் ரஞ்சனும் வந்து இணைந்து கொண்டனர்.

முதலில் மாவை சேனாதிராஜா கனகரட்ணம் அரசாங்கத்தின் பக்கம் மாறியதற்குக் கண்டனம் தெரிவித்தார். கனகரட்ணத்தைத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளராக நியமிப்பதற்கு விதப்புரை செய்த கோகுலனை ஓரிருவர் குற்றம் சுமத்தினார்கள். சிவஞானச்செல்வக் குருக்களும் சிந்தாத்துரையும் அதில் முன்னின்றார்கள். கோகுலன் கூட்டத்தில் வாயே திறக்கவில்லை. கனகரட்ணம் கட்சி மாறியதன் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டாரங்களின் பிரதிபலிப்பை நாடிபிடித்துப் பார்க்கத்தான் மாவை சேனாதிராஜா வருகை தந்துள்ளார் என்பதாகவே கோகுலன் எடுத்துக் கொண்டான். மாவைசேனாதிராசா எதிர்பார்த்தபடி கூட்டத்தில் கனரட்ணத்திற்குப் பெரிதாக எதிர்ப்பு எழவில்லை. வந்திருந்த எல்லோருக்கும் மதிய உணவும் கண்ணன் முதலாளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனையில் கல்யாண வீடொன்றிற்குச் செல்லவேண்டியிருந்ததால் மதிய உணவில் கலந்துகொள்ளாமல், கண்ணன் முதலாளி உட்பட எல்லோரிடமும் விடைபெற்றுவிட்டு கல்முனைக்குப் புறப்பட்டான் கோகுலன்.

கோகுலன் கல்முனையில் கல்யாண வீட்டையடைந்தான். மணமக்களை வாழ்த்திவிட்டுப் மதியஉணவுப் பீங்கானைக் கையிலேந்தியபடி அங்கு நின்ற மாமர நிழலின் கீழ் மற்றைய நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பொத்துவில் இலங்கை வங்கி முகாமையாளர் ஜெகநாதனும் அவர்கள் மத்தியில் இருந்தார். நண்பர்கள் ஒன்று கூடியதால் அரட்டையடித்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில்தான் அந்த அதிர்ச்சியான செய்தி வந்து சேர்ந்தது. கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஐந்தாம் ஒழுங்கை, இல.2 சார்ள்ஸ் ஒழுங்கையில் அமைந்திருந்த அவரது வீட்டில் வைத்து இனம்தெரியாத இரு இளைஞர்கள் வந்து கனகரட்ணத்தைச் சுட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்களாம். கனகரட்ணம் கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்பதே அச்செய்தி. செய்தியைக் கேட்ட கோகுலனுக்கும் ஜெகநாதனுக்கும் ஈயத்தைக் காய்ச்சி செவியினுள் செலுத்தியது போலிருந்தது. இருவரும்தான் கனகரட்ணத்தை அரசியலுக்குள் இழுத்து வந்தவர்கள். அதிர்ச்சியுடனும் கவலையுடனும் ஆளையாள் நோக்கினர். கோகுலனால் தொடர்ந்து உணவருந்த முடியவில்லை. பீங்கானைக் கொண்டுபோய் ஒரு மேசையில் வைத்தவிட்டுக் கைகளை கழுவிக் கொண்டு கல்யாண வீட்டு ஆரவாரங்களுக்கு மத்தியில் கண்ணீர் பனித்த கண்களுடன் வெளியேறி வீதியில் இறங்கினான். கனகரட்ணத்தின்மீது கோகுலன் கொண்டிருந்த ஆத்திரமெல்லாம் ஒரு நொடியில் ஓடி மறைந்தது.

நேரே கோகுலன் தாயாரிடமே சென்றான். செய்தி கேட்ட அவன் தாய் தலையிலடித்துக் கலங்கினாள். உயிராபத்து அவருக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று தெரிந்த தெய்வங்களையெல்லாம் வேண்டினாள்.

கோகுலன் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகம் சென்று மறுநாள் ‘லீவு’ போட்டுவிட்டு அன்றிரவே மட்டக்களப்பு – கொழும்பு கோட்டை புகையிரத வண்டியில் கொழும்பு பயணமானான்.

கோகுலன் கொழும்பையடைந்து கொள்ளும்பிட்டி, இல:2 சார்ள்ஸ் வழியிலுள்ள கனகரட்ணத்தின் வாசஸ்தலத்தையடைந்த தருணம் கனகரட்னத்தின் வயது முதிர்ந்த அவரின் தாயாரைக் கூட்டிக் கொண்டு கனரட்னத்தின் தங்கை திருமதி. ரங்கநாயகி பத்மநாதன் கொழும்பு வைத்தியசாலைக்குப் போவதற்கு காரில் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

தேர்தல் காலத்தில் திருமதி.ரங்கநாயகி பத்மநாதனும் பொத்துவிலில் வந்து தங்கியிருந்து கனகரட்ணத்திற்கு ஒத்தாசை புரிந்திருந்ததால் அப்போதே அவர் கோகுலனுக்கு மிகவும் பரிச்சயமாகியிருந்தார்.

கோகுலனைளக் கண்டதும் “வாங்க கோகுலன், நல்லவேள நீங்க இப்போ வந்தது. கொஞ்சம் பிந்தியிருந்தால் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டுப் போயிருப்பம். சின்னண்ணய ஒரு நாளைக்கு ரெண்டுபேர்தான் பார்வையிடலாம். ரெண்டு பேருக்குத்தான் அனுமதி. நீங்க இவ்வளவு தூரமிருந்து வந்திருப்பதால் அம்மாவும் நீங்களும் சென்று பாருங்கள். நான் நேற்றுப் பாத்தேன். நாளையும் நான் பாக்கலாம். நான் சும்மா அம்மாவுடன் காரில் வருகிறேன். நீங்க காரில் ஏறிக் கொள்ளுங்க” என்றார்.

வைத்தியசாலை சென்று பார்வையிட்டனர். அவசர கவனிப்புப் பிரிவில் கட்டிலில் கனகரட்ணம் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார். உடம்பு முழுவதும் “பாண்டேஜ்”களும் குழாய்களும் ‘வயர்’களுமாகவே இருந்தது.முகத்தை முழுதாகச் சுவாசக் கருவி மூடியிருந்தது. கண்ணாடி இழைகளுக்குள்ளால் கனகரட்ணத்தின் முகத்தை அறைக்கு வெளியே நின்று மூடப்பட்டிருந்த வாசல்கதவில் காணப்பட்ட கண்ணாடியில் திரையிடப்பட்டிருந்த சிறு துவாரம் வழியாகவே பார்க்க முடிந்தது.

பார்த்துவிட்டு வெளியே வரும்போது கோகுலனுக்குக் கண்களில் நீர் முட்டியது. சுதாகரித்துக் கொண்டான். கனகரட்ணம் சிகிச்சையின் பின் உயிர்தப்பி நீண்ட காலம் வாழவேண்டுமென்று கடவுளைப் பலமுறை பிரார்த்தித்துக் கொண்டான்.

வைத்தியசாலையிலிருந்து கனகரட்னத்தின் தாயாருடனும் தங்கையுடனும் கொள்ளுப்பிட்டி திரும்பிய கோகுலன் அவர்களுடன் வீட்டில் கொஞ்சநேரம் கதைத்திருந்துவிட்டு விடைபெற்றான்.

கனகரட்ணத்தை வந்து பார்த்தது மனதைச் சற்று ஆசுவாசப்படுத்தியிருந்தாலும் அவரது நிலைமை கோகுலனது நெஞ்சைக் கனக்கவைத்தது. அவருக்கு ஏதும் நேர்ந்துவிட்டால் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் எதிர்காலம் என்னாவது என்ற ஏக்கம் அவன் உள்ளத்தில் முள்ளாகக் குத்திக்கொண்டேயிருந்தது. திருமதி.ரங்கநாயகியின் வீட்டில் முன் மண்டபத்தில் அவரது கணவன் பத்மநாதனும் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரையும் கனகரட்ணமும் கதைத்துக் கொண்டிருந்தார்களாம். சிறிது நேரத்தில் கனகரட்ணமும் இராசதுரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதமர் ஜே.ஆரின் அரசாங்கத்தில் அமைச்சராயும் விளங்கிய தேவநாயகத்தைச் சென்று சந்திப்பதாகவும் இருந்ததாம்.

அவ்வேளையில்தான் இரண்டு இளைஞர்கள் வந்து வீதியில் நின்று கனகரட்ணத்தைச் சந்தித்துக் கடிதமொன்று கொடுக்க வந்தள்ளதாகக் கூறக், கனகரட்ணம் வெளியே வீதிக்கு வந்து அவ்விரு

இளைஞர்களையும் வழக்கமாகப் பொதுமக்களைச் சந்திக்கும் பக்கத்திலிருந்த கட்டிடத்திற்கு அவர்களை அழைத்து சென்றுகொண்டிருக்கும்போதுதான் அவர்களின் துப்பாக்கியால் கனகரட்ணத்தைச் சுட்டார்களாம். வெளியில் வீதியில் வைத்துக் கனகரட்ணம் சுடப்பட்ட நேரத்தில் உள்ளே இராசதுரை இருந்தவராம் என்ற மேலோட்டமான தகவல்களைத் திருமதி.ரங்கநாயகியுடன் உரையாடிய நேரத்தில் கோகுலன் பெற்றுக் கொண்டான்.

அன்றிரவே கொழும்பிலிருந்து ஊருக்குத் திரும்ப தீர்மானித்தான் கோகுலன்.

கொழும்பிலிருந்து திரும்பிய கோகுலன் கல்முனையில் தன்தாயாரைக் கண்டு கனகரட்ணத்தின் நிலையைச் சொல்லி அவரைச சற்று ஆசுவாசப்படுத்திவிட்டுக் கோமாரிக்கு விரைந்தான்.

கோமாரிக்கு வரும்வழியில் இடையில் சங்கமன்கண்டியில் தஞ்சைநகரிலிருந்த அகதிகள் குடியமர்த்தப்பட்ட இடத்திற்குப் போய் அவர்களையும் பார்த்துவிட விரும்பிய கோகுலன் சங்கமன்கண்டி பிரதான வீதியிலிருந்து உமிரிக்குச் செல்லும் ‘கிறவல்’ வீதி பிரியும் சந்தியில் இருக்கும் தேனீர்க் கடையடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான். அவ்விடம் வரும்போதெல்லாம் அந்தத் தேனீர்க் கடையில் தேனீர் அருந்தவது அவனது வழக்கமாயிருந்தது. காரணம் அக்கடையில் நன்னாரிவேர் போட்டு அவித்த வெந்நீரில் தேனீர் தயாரிப்பதால் நன்னாரிப் ‘பிளேன்ரீ’ அங்கு கிடைக்கும். அதனால் அக்கடையில் எப்போதுமே சிறு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அவ்விடத்தைக் கடந்த செல்லும் அனைத்துப் பயணிகளும் பெரும்பாலும் அக்முன் தரித்துப் ‘பிளேன்ரீ’ அருந்தாமல் செல்வது அரிது. இப்படியொரு கடை மட்டக்களப்பிலிருந்து கல்முனைக்குச் செல்லும் வழியில் கிரான்குளத்திலும் இருந்தது. ஒரு முதியவர் அக்கடையை நடாத்திக் கொண்டிருந்தார். சங்கமன்கண்டி உமிரிச் சந்திக்கடைபோல் அங்கும் எப்போதும் சிறுகூட்டம் இருக்கும்.

கோகுலனைக் கண்டதும் தேனீர்க் கடைக் கந்தசாமி “வாங்க ரி.ஏ.யா! கொழும்புக்குப் போனயளாம் எண்டு கேள்வி. கனகரட்ணம் பாடு என்ன?” என்றான். கொழும்புக்குத் தான் சென்ற விடயமும் இவனுக்குத் தெரிந்திருக்குதே என்றெண்ணிக் கொண்டு “ஓம் ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்தநான் – சிகிச்சை நடக்கிது” என்றான். “ஆண்டவரே அவருக்கு ஒண்டும் நடந்திப்போடா” என்றான் தேனீர்க் கடைக் கந்தசாமி.

பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் “அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு முதல் முறயாக் கிடைச்ச தமிழ் எம்.பிய அறிவு கெட்டவனுகள் அநியாயமாகச் சுட்டுப் போட்டானுகள்” என்றார்.

இதைக் கேட்ட இன்னொருவர், “அவரிர இளைய மகன்தானாமே சுட்ட” என்றார்.

இதனைக் கேட்டுக் கோகுலனுக்கு எரிச்சல்தான் வந்தது. எப்படிப் பொய்யான வதந்தி வெளியில் உலவுகிறது என எண்ணிய கோகுலன் அதனை முளையிலேயே கிள்ளிவிட நினைத்தான். இல்லாவிட்டால் காட்டுத் தீ போல எங்கும் பரவிவிடும் என்றெண்ணி அங்கு கூடிநின்ற சிறு கூட்டத்தின் மத்தியில் “அப்படியில்ல அது பொய்” என்றுரைத்தவன், கனகரட்ணம் சுடப்பட்ட அன்று திருக்கோவிலில் கண்ணன் முதலாளியின் வீட்டில் நடைபெற்ற தானும் பங்குபற்றிய கூட்டத்தில் கனகரட்ணத்தின் இளைய மகன் ரஞ்சனும் கலந்துகொண்டிருந்ததை எடுத்துச் சொன்னான். அதன்பிறகு அங்கு நின்ற எல்லோருக்கும் தெளிவு பிறந்தது. அப்படியொரு வதந்தி பரவக் காரணமாயிருந்தது கனகரட்ணத்தின் இளையமகன் ரஞ்சனும் அப்போது புலிகள் இயக்கத்தில் இணைந்து விட்டதாகக் கதை அடிபட்டதேயாகும்.

தேனீர்க் கடையிலிருந்து தஞ்சைநகர் அகதிகளின் இடத்திற்குச் சென்றபோது கோகுலனைக் கண்டதும் தத்தம் சேனைகளுக்குள்ளே வேலை செய்து கொண்டிருந்த பெண்களெல்லாம் “அடைக்கலம் தந்த யாவைச் சுட்டுட்டானளே” என்று ஒப்பாரி வைத்தார்கள். அவர்களை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறி நிலைமையை விளங்கப்படுத்திச் சொல்லி அவர்களது உடனடி வாழ்வாதாரத் தேவைகள் என்ன என்ற விபரங்களையும் பெற்றுக்கொண்டு கோமாரியை அடைந்தான் கோகுலன்.

(தொடரும் …… அங்கம் – 41)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.