“உளவு நிறுவனங்கள்” …. தொடர் 41…. மௌனஅவதானி.
இலங்கையை உளவு பார்ப்பதற்கு இந்திய உளவு நிறுவனமான றோ பெரும் வலைப்பின்னலையே ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு பெரும் காரணிகளாக இருந்தவை சிங்கள தமிழ் மக்களின் குணாம்சங்களேயாகும்.
உலக நாடுகளிலேயே இலங்கையில் மட்டுந்தான் சிங்கள மக்களும் சிங்கள மொழியும் இருக்கின்றது.சிங்கள மக்கள் தமது உரிமைக்கு வாழ்க்கைக்கும் ஆபத்து ஏற்படக்கூடாதென்பதில் அனைத்து முயற்சிகளையும் அவர்கள் செய்:வதில் எவ்வித தவறுமேயில்லை.
சிறுபான்மையினமான தமிழர்கள் தமது உரிமைக்காக தமது சனத்தொகையிலும் கூடிய வலுத்திறன் கொண்டு போராடி வருகின்றமை சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பயத்தினை ஏற்படுத்தியது என்பது எதார்த்தமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமாகும்.
நூற்றுக்கு தொண்ணூற்றியொன்பது வீதமான சிங்கள மக்கள் புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள்.புத்த சமயத்தைத் தழுவும் நாடுகளின் பலமும் பார்வையும் சிங்கள மக்களுக்கு இருக்கின்றது.இலங்கையில் மட்டுமே சிங்கள மக்கள் இருக்கின்றார்கள் என்பதும் சிங்கள மக்களின் பலமாகும்.
இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமக்களாக இருப்பதும,; அதே வேளை இந்திய தென்பகுதி மாநிலங்களில் ஒன்று தமிழ்மக்கள் வாழும் மாநிலமாகவும்,அம்மாநிலம் தமிழர்களால் ஆட்சி செய்யப்படுவதும் இந்திய அரசுக்கு இலங்கையை கையாள்வதற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
தமிழக மக்களிடம் தமிழக தீவிர அரசியல் போக்குடைய அரசியல்வாதிகளால் அடிக்கடி சொல்லப்படும் „மத்திய அரசு எமது மாநிலத்தை ஒதுக்குமானால் நாங்கள் பிரிந்து போய் தனிநாட்டை அமைப்பது மட்டுந்தான் ஒரே வழி என்ற கோட்பாட்டை நிறுத்திப் பிரச்சாரம் செய்வதுகூட இந்திய மத்திய அரசிற்கு சாதகமானதே.ஏனெனில் தனிநாடாக தமிழகம் பிரிந்துவிட்டால் இலங்கையின் வடக்க கிழக்கு அதனுடன் இணைந்துவிடலாம் என்ற அச்சத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்திய அரசின் நோக்கமாகும்.
இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் எந்த மாற்றமுமே ஏற்படுவதில்லை. எவ்வாறு வெளிநாடுகளைக் கையாள வேண்டுமென்பதும்,அதிலும் குறிப்பாக இலங்கையை எவ்விதம் கையாள வேண்டுமென்பதில் மாற்றம் எதுவுமே செய்யாத அடிப்படைக் கோட்பாட்டு விதியாகவே இருந்து வருகின்றது.
எல்லா நாடுகளிலும் இந்தியா தனக்கான தூதுவர்களை நியமித்து வைத்திருந்தாலும், இலங்கையில் நியமிக்கபபட்ட தூதுவரின் இந்தியாவுக்கான பணி அதிகமானதே.
சென்ற காலங்களைவிட இந்தியா தனது வியூகத்திற்குள் இலங்கையைக் கொண்டு வந்துள்ளது என்பது தெளிவாகவே புரிகின்றது. இலங்கையின் வடபகுதியின் பிரசித்திபெற்ற மிகப்பெரும் நகரமான யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத்தூதரகம் இருப்பதும்,அத்தூதரகத் தூதுவராக ஒரு தமிழரை நியமித்து இருப்பதும், அண்மையில் அவர் மாவீரர் தினத்தன்று காந்தள் மலரென்ற கார்த்திகைப் பூவை அணிந்து கொண்டார் என்பதை தமிழ் மக்கள் பூரிப்புடன் பார்த்த போதும் இத்தகு பூரிப்பு நிலையை தமிழ்மக்கள் தொடர்ச்சியாக தமது மனநிலையில் கொண்டிருத்தலை இந்தியா தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது.தூதுவரின் சட்டையில் கார்த்திகைப் பூ இருந்தமையும் தந்திரமேயாகும்.விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாக தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் கார்த்திகைப் பூவைச் சட்டையில் அணிந்தமை ஒரு நாடகமாகும்.
இந்திய உளவு நிறுவனமான றோ இலங்கையில் செய்யும் உளவு வேலைகளை விபரிக்கும் போது நிகழ்காலச் சம்பவங்களையும் சொல்லிச் செல்வது உதாரணம் காட்டுவதற்கேயாகும்.
இக்கட்டுரையின் அண்மைய தொடர்களில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களுக்கு அடிகோலியது இந்தியாவே எனக் குறிப்பிட்டிருந்தேன்.
இப்பொழது இப்பகுதியில் தமிழக மக்களின் பிரிவினைவாதப் போக்கை இந்திய மத்திய அரசு தனது அணுகுமுறைக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.
இந்தியாவிற்கு மிக அண்மையில் இலங்கையிருப்பதும்,தமிழ்மக்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளும், இந்தியாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் தமிழ்நாடும்,பாக்குநீரிணை, மன்னார் கடலினால் பிரிக்கப்பட்ட போதும் பூகோள ரீதியில் அண்மித்த நீர்பரப்புகளேயாகும்.
இந்த அண்மித்தல் என்பது இணைந்திருந்த நிலப்பரப்பை கடல்கோளினால் பிரிக்கப்பட்டது என்பதை பூகோளவவிற்பவியலின் வரலாறு சொல்லியிருக்கின்றது.
இதனால் இலங்கையில் உள்ள தமிழர்களும் தமிழக தமிழர்களும்,தமிழக அரசியல்வாதிகளும் ,இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் சொல்லுகின்ற’தொப்புள்கொடி உறவு’ என்பதும்கூட இந்திய அரசிற்கு சாதகமானதே.இலங்கைத் தமிழர்களுக்கு அது பாதகமானதே.
உலக நாடுகள் எவ்வாறு தத்தமது தூதரகங்கள் மூலம் உளவு வேலைகளை தத்தமது நாட்டின் உளவு நிறுவனங்களின் உதவியுடன் உளவு வேலைகளைச் செய்கின்றனவோ, அது போலவே இந்தியாவின் இந்தியத் தூதரகமும் தனது உளவு நிறுவனமான றோ மூலமாக இலங்கைக்குள் நிலைகொண்டு தொடர்ச்சியாகவே உளவு வேலைகளைச் செய்து வருகின்றது.
இலங்கையின் சிறுபான்மையினமான தமிழர்களை போராட வைக்க வேண்டுமென்றால் சிங்கள அரசிய்வாதிகளை தூண்டிவிடுதல் வேண்டும்,தமிழர்கள் மீது கோபப்பட வைக்க வேண்டும்.
சிங்கள அரசியல்வாதிகளை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிட வேண்டுமென்றால் தமிழரின் நிலைநோக்கி சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்.சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டுமென்றால் அதற்கு இனவாத ரீதியாக பேசக்கூடிய சிங்கள அரசியல்வாதிகள் தேவை.
இத்தகு சிங்கள இனவாத அரசியல் வாதிகள் தமிழ்மக்களின் வாழ்வியலை உற்றுநோக்கிய போது,தமிழர்களே பிரித்தானியர் ஆட்சி காலத்திலம் சரி, அவர்கள் இலங்கையைவிட்டுப் போனதன் பின்னரும் சரி சிங்களப் பகுதிகள் உட்பட அரச திணைக்களங்களிலாகட்டும் தனியார் நிறுவனங்களிலாகாட்டும் அதிகாரிகளாகவும் பெரிய பதவிகளிலும் தமிழர்கள் இருப்பதை அவதானித்தனர்.
சிறுபான்மை இனத்தவர் அதிகாரிகளாக இருக்க பெரும்பான்மையான சிங்களவர்கள் அவர்களுக்கு கீழ் சிறிய பதவிகளில் இருக்கலாமா என்ற எண்ணம் அவர்களைச் சிந்திக்க வைக்க, அன்றே இலங்கையில் பெரும் வர்த்தகங்களை தமதாக்கிக் கொண்டிருந்த செட்டிமார்களும், மலையாளிகளும் இன்னும் தமிழகத் தமிழர்களும் தமது வர்த்தக நோக்கங்களுக்காக அது சார்ந்த அமைச்சகர்களுடனும் அதிகாரிகளுடனும் தொடர்புகளை பேணி வந்ததால், அவர்களுடனான சந்திப்புகளின் போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அமைச்சகர்களிடத்திலும் அதிகாரிகளிடத்திலும் „எல்லா இடத்திலும் வடக்கு கிழக்குத் தமிழரகள்;தான் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழர்கள்தான் அனைத்துப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்; „ என்பதை கதையோடு கதையாக சொல்லி வைப்பதற்கு அவர்கள் இந்தியத் தூதரகத்தால் அறிவுறுத்தப்பட்டார்கள் என்பதுடன் இந்தியாவின் உளவுப் பிரிவும் அதற்கு உறுதுணையாக நின்றது.
இன்னும் குறிப்பாக இந்தியச் செட்டிமார்களுக்கும் மலையாளிகளுக்கும் வடக்கு கிழக்குத் தமிழர்கள் மீது குறிப்பாக குடாநாட்டுத் தமிழர்கள் மீது எப்பொழுதும் வன்மம் கலந்த காழ்ப்பணர்வு இருந்து கொண்டேயிருந்தது.
இந்தியாவிலிருந்து இயறக்குமதி வணிகத்தையும்,மொத்த வியாபார நிலையங்கள், சில்லறை வியாபார நிலையங்கள் ஊடாக இலங்கை மக்களிடமிருந்து பொருளீட்டிய இந்திய வணிகர்கள்,இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் உள்நாட்டு வணிகத்துறையை தமதாக்கிக் கொள்வதை விரும்பவில்லை.
இன்னும் செட்டிமார்களுக்கும் மலையாளிகளுக்கும் வடக்கு கிழக்குத் தமிழர்களுக்குள் யாழ்ப்பாணத் தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது. இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் இனக்கலவரங்கள் யாவும் சிங்கள மக்களால் மேற்கொள்ளப்பட்டன என்றிருக்கும் போது அதற்கும் காரணம் இந்தியாதான் எனச் சொல்வதை அவர்களால் சீரணிக்க முடியாது.இந்தியா மீதும் தமிழகத்தின் மீதும் இலங்கைத் தமிழர்கள் கொண்டிருந்த மிக அதீதமான
பாசத்தின் நிமித்தமாக தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்குவதும், நமக்கு இந்தியாவும் தமிழகத் தமிழர்களும் இருக்கிறார்கள் என்று அயல் வீட்டுக்காரனான சிங்கள மக்களை விரோதியாக எண்ணியமையும் தமிழகத் தமிழர்களைக் கொண்டும் இந்தியாவைக் கொண்டும் இலங்கை அரசை பயப்படுத்தலாம் என்ற தவறான சிந்தனையும் அதன் பலாபலனுமே இலங்கைத் தமிழனின் இன்றைய நிலைக்குக் காரணம்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்து வீடு வீடாகத் துணி விற்கும் சில்லறை வியாபாரிகள், போத்தல் கழுவி விற்கும் வியபாரிகள் இவர்களுடன் தமிழகத்திலிருந்து வந்து தென்னை மரங்களில் கள்ளிறக்கி வியாபாரம் செய்த தொழிலாளர்களும் அவர்களையறியாமலும் அறிந்தும் றோ உளவு நிறுவனத்தின் ஒற்றர்களாக வேலை செய்தார்கள்.
பொதுவாக உளவு நிறுவனங்கள் அரசமட்டத்திலும் ஒரு நாட்டின் நிர்வாகக் கட்டமைப்புகளிலும் மட்டுமே உளவு பார்க்கும் என்பதற்கப்பால் பொதுமக்கள் அரசு சார்ந்தும் தமது வாழ்வியல் சார்ந்தும் என்னென்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக்கூட உளவு நிறுவனங்கள் தமது ஒற்றர்கள் மூலமாக அறிந்து கொள்ளும்.
பிச்சைக்காரர்களையும் உளவு நிறுவனங்கள் பயன்படுத்தும்.இயல்பான பிச்சைக்காரர்களுடன் பிச்சைக்கார வேசம் போட்ட ஒற்றர்களும் பேருந்து நிலையங்களிலும்,கோவில்களிலும் இன்னும் நகரங்களின் முக்கிய பகுதிகளில் மக்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதை அவதானிப்பார்கள்.
அதிகமாக அரசியல் பேசும் இடமாக இருப்பது பேருந்துக்கள் வந்து போகும் பேருந்துநிலையச் சந்திப்புகளேயாகும். பல ஊர்களிலுமிருந்து வரும் பயணிகள் தாம் அரசினால் அனுபவித்து வரும் சிரமங்களை இங்குதான் ஒருவரிடத்தில் ஒருவர் பகிர்ந்து கொள்வார்கள்.முந்தைய பகுதிகளில் இதனைக் குறிப்பிட்டிருந்தேன்.இயல்பாக தகவல்களைச் செய்திகளைச் சொல்பவர்கள்,அதைச் சொல்பவர்கள் அறியாமலே சேகரிப்பவர்கள், அதனை ஒற்றர்களுக்குச் சொல்பவர்கள், ஒற்றர்கள் அதனை உளவு நிறுவன அதிகாரிகளுக்குச் சொல்பவர்களாக உளவு நிறுவனங்கள் தமது வேலைத்திட்டத்தை கட்டம் கட்டமாக பிரித்து வைத்திருக்கும்.
இனக்கலவரங்கள் ஏற்பட்ட காலங்களிலெல்லாம் தமிழக தீவரபோக்கு அரசியல்வாதிகள் இலங்கை அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினார்கள்.இத்தகு கண்டனங்கள் இலங்கை அரசையும்,சிங்கள அரசியல்வாதிகளையம் சிங்கள மக்களையும் தமிழகத் தமிழர்கள் மீதுமட்டுமல்ல இலங்கைத் தமிழர்கள் மீதும் கோபம் கொள்ள வைத்தது.
இனக்கலவரங்களின் போது தமிழக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக இருந்த சி.என்.அண்ணாத்துரை அவர்கள் „ சீறும் சிங்களத்திற்கு அபாய அறிவிப்பு’ என்ற நூலை வெளியிட்டிருந்தார்.
இந்த நூலின் தலைப்பில் காணப்பட்ட அத்தனை சொற்களும் சிங்கள மக்களை சீண்டிவிடும் சொற்களேயென்றாலும் „ அபாய அறிவிப்பு „ என்பது சிங்கள மக்களின் சுயமரியாதையை கேலிக்கூத்தாக்கிய சொல்லாகும்.
(தொடரும்)