மலையகமும், கழிவுகள் தொடர்பான முகாமைத்துவமும்…. தவமணிதேவி
இந்து சமுத்திரத்தின் முத்தெனக் கூறப்படும் இலங்கைத் தீவின் மத்தியப் பிரதேசமான எழில் கொஞ்சும் மலையகமானது அனைத்து நாட்டவரும் கண்டு வியக்கும் இயற்கை அரண்கள் பல நிறைந்த சுற்றுலாத்தளமாக காணப்படுகின்றது. இலங்கைப் பொருளாதாரத்தின் அதிகப்படியான வருமானம் சுற்றுலாத்துறையின் மூலமாகவே கிடைக்கப்பெறுகின்றது.
மலையகத்தில் மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்கள் உள்ளடக்கப்படுகின்றன. பாய் விரித்தாற் போல் கிடக்கும் பசுமையே மலையகத்தின் மிடுக்கான தோற்றத்திற்கு காரணம் என்று கூறலாம். மலையகத்தில் அதிகப்படியாக தேயிலைப் பயிர்ச் செய்கையே பிரதானமாக காணப்படுகின்றது. அத்துடன் தெங்கு, இறப்பர், மிளகு, கறுவா போன்ற வாசனைப் பொருட்களும், மரக்கறி வகைகளும் இப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன.
இயற்கை அன்னையின் கொடையான எழில்மிகு மலையகத்தில் கழிவு முகாமைத்துவம் பற்றி பேசும் போது சற்று சிந்திக்க கூடிய கூடிய விடயமாக கருதப்படுகின்றது. தற்போது மலையகத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுவதும் கழிவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான விடயமாகும்.
மலையகத்தை பொறுத்தவரை அநேகமாக தொடர் குடியிருப்புகளே காணப்படுகின்றன. இச்சூழலில் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே தமது வாழ்க்கைப் பயணத்தை மக்கள் கொண்டுச்செல்கின்றனர். இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டில் ஒரு குடும்பம் வாழ்வதென்பது இலகுவான விடயம் அல்ல. இவ்வாறான நிலைமைகளில் தத்தமது வீட்டில் சேரும் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான போதியளவு இடவசதி, மற்றும் விழிப்புணர்வு மலையக மக்களிடையே குறைவாகவே காணப்படுகின்றது.
மலையகத்தில் கழிவு முகாமைத்துவம்
கழிவுப்பொருட்களை சேகரிக்கும் முறைகள் நாடுகளுக்கிடையே | வேறுபடுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் பிரதேசங்களுக்கிடையே ஒவ்வொரு விதிமுறைகள் பேணப்படுகின்றன. மலையகத்திலும் நகர்ப்புறங்களில் பிரதேச சபை அல்லது நகர சபையினூடாக கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் தோட்டப்புறங்களில் கழிவுகள் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது என நோக்கும் போது இதில் பெருமளவு தோட்ட நிருவாகத்தின் தலையீடு காணப்படுகின்றது.
மலையகத்தில் வாழ்பவர்கள் தமது வீட்டுக் கழிவுகளை பொதுவான ஒரு இடத்தில் போடுகின்றனர். இது சுற்றாடல் மாசடைவதற்கு பாரிய பிரச்சினையாக கருதப்படுகின்றது. பாதைகள், சாலையோரங்கள், மரத்தடிகள், குளக்கரைகள் போன்ற இடங்களில் வீசப்படுவதனால் சுற்றாடல் மாசடைகின்றது. மனிதனின் உடல் நலம், சுற்றுச் சூழலின் அழகியல் தன்மை என்பவற்றிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே இவ்வாறான இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தவிர்ப்பதற்கு தோட்ட நிருவாகத்தினால் பல்வேறு உத்திகள் கையாளப்பட்ட போதிலும் அவை அனைத்தும் சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது எனலாம். ஏனெனில் கழிவுப்பொருள் நிருவகித்தல் தொடர்பான சரியான விழிப்புணர்வு இவர்களிடையே இன்மையாகும்.
கழிவுப் பொருள் முகாமைத்துவம்
பிரதானமாக கழிவுப் பொருட்கள் உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள் என்று 2 வகைகளில் காணப்படுகின்றன. உக்கும் கழிவுக் சேதனப் பசளைத் தயாரிப்பிற்கும், உக்காத கழிவுகள் மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகைக் கழிவிற்கும் அதற்கேற்ற பொதுவான முறைகள் கையாளப்படுகின்றன. கழிவுப் பொருள் முகாமைத்துவம் 3 பிரதான கொள்கைகளைக் கொண்டுள்ளது.
1. Reduce – பாவனையைக் குறைப்பது.
2. Reuse – மீள்பயன்பாடு
3. Recycle – மீள்சுழற்சி
என்பனவாகும். இதன் நோக்கமானது, கழிவுப் பொருளிலிருந்து உச்ச அளவுப் பயன்பாட்டை அடைவது, மற்றும் குறைந்தளவிலான குப்பைகளை உருவாக்குவது ஆகும்.
கழிவுப்பொருள் நிருவாகத்தைப் பொறுத்த வரையில் கழிவுப்பொருட்களைஉற்பத்தி செய்பவர் அதனை அகற்றுவதற்கான செலவினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
கழிவுப் பொருள் மற்றும் கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை பொறுத்தவரையில் கல்வி மற்றும் விழிப்புணர்வு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் இது தற்போது உலகளவிலான பிரச்சினையாக மாறியுள்ள ஒன்றாகும். சுற்றுச்சூழல் மாசடைதல் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பொக்கிசமாக விளங்கும் இயற்கை வளங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. வளி மாசடைதல், நச்சுப் பொருட்கள் குவிதல், காடுகள் அழிக்கப்படுதல், நிலம் மற்றும், நீர் மாசடைதல் ஓசோன் படையில் மாற்றம் ஏற்படுதல், உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுதல் போன்றனவும் கழிவு முகாமைத்துவம் சரியான முறையில் மேற்கொள்ளப்படாததால் நிகழ்கின்றன என்றும் கூறலாம்.
புவியின் பல்லுயிர் தன்மை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால சந்ததியினரின் எதிர்காலம் என்பனவும் இக்கழிவு முகாமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது எனலாம்.
எனவே கழிவு முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமான ஒன்றாகும். பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்களே கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான வழிகளை மேற்கொள்வதற்கான புதிய யுக்திகளை கையாள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம். கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தமது வீட்டுக் கழிவுகளை முறையாக அகற்றுவதில் உள்ள நன்மைகளை எடுத்துக் கூற வேண்டும். இதனால் எமது எதிர்கால சமூகம் பாதுகாக்கப்படுகின்றது. இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவது குறைக்கப்படுகின்றது. எனவே கழிவுகளை முறையாக நிருவாகம் செய்து எதிர்கால மலையகத்திற்கு மேலும் அழகு சேர்க்க கை கொடுப்போம்.
முருகையா தவமணிதேவி,
வட்டகொட