கதைகள்

“ஆகாயப் பந்தல்” … தொடர் நாவல் …. அங்கம் – 02 ….. ஏலையா க.முருகதாசன்.

“ஆகாயப் பந்தல்” … தொடர் நாவல் …. அங்கம் – 02 ….. ஏலையா க.முருகதாசன்.

தனது பெற்றோர் மதுசாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கூட்டிக் கொண்டுவருமாறு சொன்னதை சரவணன் மதுசாவிடம் சொல்ல அவள் தனது தாய் தகப்பனிடம் கேட்க வேண்டுமென்று சொல்கிறாள்.

நீங்கள் தயங்க வேண்டாம் நானே கேட்கிறன் என்கிறான்.ஒரு நாள் மதுசாவும் தாய்:தகப்பனும் வீட்டிலிருந்த நேரம் சரவணன் மதுசாவின் கன்டிக்கு தொடர்பு கொண்டு (கைத்தொலைபேசிக்கு) எடுத்து உங்கடை அப்பா அம்மா இருந்தால் அவர்களில் யாரிடமாவது குடுங்கள் என்கிறான்.

தாயும் தகப்பனும் மதுசாவுக்கு இருபக்கத்திலும் இருந்த போதும்,அப்பா! சரவணன் உங்களோடை பேச வேண்டுமாம் இந்தாருங்கள் எனத் தனது கன்டியைக் (கைத்தொலைபேசியைக்)குடுக்கிறாள்.

மகளிடமிரந்து கன்டியை (கைத்தொலைபேசியை)வாங்கிய மதுசாவின் தகப்பன் காதில் வைச்சு சொல்லுங்கள் சரவணன் என்கிறார்.மறுமுனையில் சரவணன் சொல்லச் சொல் ம் ஆ சரி ஓகே எப்ப என்ற வார்த்தைகளை மட்டுமே சரவணனுக்குப் பதிலாகச் சொல்கிறார்.

சரவணன் என்ன கேட்கிறான்,தனது கணவன் எதுக்கு ம் ஆ சரி ஓகே எப்ப என்று சொல்கிறார் என்று புரியாமல் கணவனைப் பார்த்த சகுந்தலா திரும்பி மகளைப் பார்த்து என்ன என்பது போல கண்களால் கேட்க கொஞ்சம் பொறுங்கோ அப்பா கதைச்சு முடிச்சதற்குப் பிறகு சொல்கிறன் என தாயின் காதுக்குள் சொல்கிறாள் மதுசா.

ஓ பிரச்சினை இல்லை கூட்டிக் கொண்டு போங்கள் என்று சரவணனுடன் பேசி முடிச்ச மதுசாவின் தகப்பன் வேலானந்தன் உங்களோடையும் கதைக்க வேணுமாம் என்று மனைவியிடம் கன்டியைக் (கைத்தொலைபேசியைக்)குடுக்கிறார்.

கணவனிடமிருந்து கன்டியை(கைத்தொலைபேசியை) வாங்கியவள் ஒருமுறை மகளைப் பார்த்துவிட்டு கன்டியைக் (கைத்தொலைபேசியைக் )காதில் வைக்கிறாள்.

மறுமுனையில் சரவணன் வணக்கம் என்று சொல்லியிருக்க வேண்டும் சகுந்தலாவும் வணக்கம் என்றவள்,எப்படி இருக்கிறீர்கள் என்று சுகம் விசாரிச்சுவிட்டு நீங்கள் வந்த அன்று நாங்கள் ஒரு பிழை விட்டிட்டம் உங்கடை அப்பா அம்மாவுக்கு பலகாரம் ஏதாவது தந்துவிட மறந்திட்டம் மன்னிக்கவம் இன்னொருமுறை நீங்கள் வந்தால் கட்டாயம் தந்துவிடுவம் மன்னிக்கவும் என்று மறுபடியம் மன்னிப்புக் கேட்கிறாள் சகுந்தலா.

இதுக்குப் போய் மன்னிப்புக் கேட்கிறீர்களா,அது பிரச்சினையே இல்லை மாவினி என்றவன்,அன்ரி நாங்கள் உருவாக்கிய மொழியே வாயிலை வருது மன்னிச்சுடுங்கோ என்கிறான்.

அது பரவாயில்லை மாவினி என்றே கூப்பிடுங்கோ என்றவள் மதுசாவை உங்கடை வீட்டுக்கு நீங்கள் கூட்டிக் கொண்டு போவியளோ இல்லாட்டி அவள் தானாக வர வேண்டுமா எனச் சகுந்தலா கேட்டதும், மாவினி நானே வந்து காரிலை கூட்டிக் கொண்டு போகிறன் என்று சொல்கிறான்.

மாவினி என்று சரவணன் சொன்னதும் மீண்டும் சகுந்தலா திகைக்கிறாள்.தானும் தங்கச்சியாரும் சேர்ந்து புதிய மொழியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று சரவணன் சொன்னதை சகுந்தலாவால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

பூமியில் இருக்கும் அறிஞர்களுக்கு ஏற்படாத சிந்தனை இவனுக்கும் தங்கச்சியாருக்கும் எப்படி ஏற்பட்டது என்று சகுந்தலா சிந்திக்கத் தொடங்கினாள்.

முதன்முதலாக தங்கள் வீட்டுக்கு அவன் வந்து போன அன்றே அவனின் நடவடிக்கைகள் சகுந்தலாவை யோசிக்க வைத்தன.

உளவியல் பட்டதாரியான சகுந்தலாவை பலவாறாக யோசிக்க வைத்தது சரவணனின் நடவடிக்கைகள்.

தனது மகளை அவனுடன் பழக வேண்டாம் என்று அவளால் சொல்ல முடியவில்லை.அந்தக் காலத்திலேயே தானும் நானும் எவ்வளவோ கட்டுப்பாடுகளிருந்தும்,கண்ணிலை எண்ணையைவிட்டுக் காத்திருப்பது போல தாய் தகப்பன் மட்டுமல்ல அண்ணண் தம்பி மாமன் மச்சான் பெரியப்பா சித்தப்பா போதாக்குறைக்கு ஒழுங்கையாலை போறவை வாறவை என எல்லாரையும் உச்சிப் போட்டு செக்கல் பொழுதுகளிலும் கோவில் திருவிழாக்களின் போதும் இருட்:டின் மறைவுகளில் சந்தித்து சொண்டால் சொண்டை இழுத்து கட்டி அணைச்சு முத்தம் கொடுத்ததை தனது கணவன் ஞாபகப்படுத்தி இந்தக் காலத்தில் இப்படித்தானிருக்கும் மதுசா சரவணனைக் காதலிக்கவில்லைத்தானே யோசிக்காமலிருங்கள் என மகளின் நட்பைப் பற்றி விளங்கப்படுத்தி என்னையும் அது சரிதான் என சம்மதிக்க வைக்கிறார் என யோசித்தவள் மகள் சரவணன் வீட்டுக்குப் போகும் போது ஏதாவது பலகாரம் செய்து கொடுக்க வேணும் எனத் தீர்மானிக்கிறாள்.

ஒரு சனிக்கிழமை மதுசாவை தனது வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போவதற்காக சரவணன் மதுசாவின் வீட்டுக்கு வந்திருந்தான்.

மதுசாவின் தாயார் சரவணன் வீட்டுக்கு கொடுத்து விடுவதற்காக பூந்தி லட்டு,உழுந்து வடை,ரவை லட்டு என எல்லாவற்றையும் செய்து அவற்றை சுத்தமான அழகான எவர்சில்வர் பெட்டிகளில் போட்டு ஆயத்தமாக வைச்சிருந்தாள் மதுசாவின் தாய் சகுந்தலா.

மதுசாவிடம், சொன்ன நேரத்துக்கு வந்த சரவணனன் மா என்று மாவினி என்று சகுந்தலாவின் தாயை விளிக்க எத்தனிக்கையில் தன்னைச் சமாளித்துக் கொண்டு அன்ரி எப்படி இருக்கிறியள் அங்கிள் எங்கை என்று கேட்கிறான்.

அவரும் அறைக்குள் இருந்து வணக்கம் குட் மோகன் என்று வந்து கொண்டே சொல்லிக் கொண்டு அவனுக்குக் கைலாகு கொடுக்கிறான்.

இன்றைய இளந்தலைமுறையினரின் விருப்பு வெறுப்புகளை உணர்ந்து பெற்றோர் நடக்க வேண்டுமென்பதை உணர்ந்தவளாகவும் இருந்த உளவியல் பட்டதாரியான சகுந்தலா அதே வேளை சரவணனை நோட்டம் விடுவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

என்னதான் முற்போக்குச் சிந்தனை இருந்தாலும்,பெண்களின் உணர்வுகளுக்கு அவர்களின் சுதந்திரமான எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் அவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்களும்,மேடைகளில் பேசுபவர்களும்,அதற்கான வலுவான நூல்களை வெளியிடுபவர்களில் அவர்களுக்கு பொம்பிளைப்பிள்ளைகள் இருந்தால் அவர்களும் பொம்பிளைப் பிள்ளைகளை கவனத்துடன் கண்காணிப்பார்கள்.அதற்கு உளவியல் பட்டதாரியான சகுந்தலாவும் விதிவிலக்கல்ல.

சரவணனுடன் தனது மகள் நட்பு ரீதியாகப் பழகினாலும் மகளை எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்ல வேணும் என்று நினைத்தவள் மதுசா சரவணனன் வீட்டுக்குக் கொண்டு போகவென வாங்கிவைச்சாயே அந்த மஞ்சள் ரோஜாப்பூக்களை எடுத்துக் கொண்டு போக மறந்துவிடாதே என்றவளிடம்,அம்மா நல்ல வேளை ஞாபகப்படுத்தினியள் என்று சொல்லிக் கொண்டே பூங்கொத்தை எடுக்கப் போனவளின் பின்னால் போன தாய்,மகளின் காதருகில் மதுசா எந்தச் சூழ்நிலையிலும் சரவணனுக்கும் உனக்குமிடையிலிருக்கும் பிரண்ட்சிப்பை கடந்து வேறொரு உறவுக்குள் போயிடாதே என்கிறாள்.

ஓம் என்பது போல மதுசா தலையை ஒப்புக்கு ஆட்டினாலும் அதில் உறுதியான முடிவு தெரியவில்லை.தாயுடன் கூடத்துக்கு வந்த மதுசுhவின் கையில் மஞ்சள்நிற ரோஜாப்பூங்கொத்தைக் கண்ட சரவணனின் கண்கள் மகிழ்ச்சியில் அகல விரிய அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் மஞ்சள் ரோஜாப்பூக்கள் என்றால் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைவார்கள் இதற்காகவே மதுசாவுக்கு எங்கடை வீட்டிலை பெரிய வரவேற்பு இருக்குது என்று சிரிக்கிறான்.

வெளிர்மஞ்சள் நிறச் சேர்ட்டும் வெள்ளைநிறக் காற்சட்டையுடன் நின்ற சரவணனைப் பார்த்த தாய் தனது மகளும் வெள்ளை போடர் கொண்ட வெளிர்மஞ்சள்நிற சீலை உடுத்திருப்பதைக் கண்டு திகைக்கிறாள்.

சரவணனும் தனது மகளும் பேசிக் கதைச்சுத்தான் இப்படி உடுக்கினமோ என் சந்தேகப்பட்டாளும்,சில வேளைகளில் காதலன் காதலிகள் மட்டுமல்ல கணவன் மனைவிகூட அவர்களையறியாமலே ஒரே நிறத்தில் உடைகள் உடுத்துவது உண்டு என்பதை பலமுறை கண்டுணர்ந்தவள் என்பதால் மதுசாவின் தாய் அதைப் பெரிது படுத்தாமலே இருந்தாள்.

மதுசா உடுத்திருந்த சீலையில் ஆங்காங்கே மஞ்சள் ரோஜாப்பூக்களின் உருவங்களும் இருந்தன.

சரவணன் உங்களிடம் ஒரு கேள்வி, மாமிக்கு மாவினி என்று நீங்களும் உங்கடை தங்கச்சியும் சேர்ந்து புதுமொழிச் சொல்லைக் கண்டுபிடிச்சியள் அதுமாதிரி மாமாவுக்கும் புதுச்சொல் இல்லையா என்று திடீரென்று மதுசாவின் தாய் கேட்டதும்,இருக்குது அன்ரி மாமாவுக்கு மாவினன் என்று ஒரு புதுச்சொல்லை உருவாக்கியிருக்கிறோம் என்கிறான் சரவணன்.

மதுசாவின் சீலையைக் கவனிச்ச சரவணன் ஆகா இண்டைக்கு எங்கடை வீட்டிலை மதுசாவுக்கு அரசகுமாரிக்குரிய வரவேற்புத்தான்.இந்தச் சாரியிலை அட்டகாசமாக இருக்கிறார் என்று சரவணன் சொல்ல அருகருகே நின்று சரவணனையும் மகளையும் பார்த்த மதுசாவின் தாயும் தகப்பனும் திகைச்சாலும்,ஆனால் அவர்களின் முகத்தில் பூரிப்பு ரேகைகளும் தென்படவே தெரிந்தன.

இருவரும் ஒன்றாகப் படிக்கும் மாணவர்ளாகத் தெரியவில்லை.அப்பொழுது அந்த நிமிடந்தான் திருமணம் முடித்து வந்தவர்களாக,பனிதெளித்து குளிர்ந்து சிலிர்த்து நின்ற பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடிகளாக நின்றார்கள்.

பலகாரங்களை வைச்சுக் கொடுத்த கூடையையும் ரோஜாப் பூங்கொத்தையும் எடுத்துக் கொண்டு சரவணனும் மதுசாவும்,மதுசாவின் பெற்றோரிடம் விடைபெற்றுச் செல்கின்றனர்.

வீட்டின் வெளிக் கதவைத் திறந்து வெளியே காலடி எடுத்து வைச்ச சரவணன் திடீரென்று திரும்பிப் பார்த்து மாவினன் மாவினி விடர்சேகன் என ஜேர்மன் மொழியில் சொல்லி விடைபெற்றுச் செல்கிறான்.

பொகும் நகரத்தின் முக்கிய தெருக்களைக் கடந்து கிராமப்புறமாக இருப்பக்கமும் வயல்களும் வயல்களைக் கடந்தும் காடுகளையும் கடந்து, பொகும் கிராமமொன்றில் உள்ள ஒரு வீட்:டின் முன்னால் கார் நிற்கவும்,வீட்டின் கதவைத் திறந்து சரவணனின் தங்கை வந்து காரடியில் நிற்க,கார்க் கதவைத் திறந்து மஞ்சள் ரோஜாப்பூக்களை கைகளில் எந்திப் பிடித்தபடி வெளிர்மஞ்சள் நிறச் சீலையில் ஒய்யாராமாக இறங்கிய அழகிய மதுசாவைக் கண்ட சரவணனின்: தங்கை சாரிணி ,மதுசாவின் அழகைப் பார்த்து ஜேர்மன் மொழியில் Schönheit aus dem Himmel,wir heißen dich Willkommen (தேவலோகத்து அழகியே வருக) என வரவேற்றவள் உள்ளை வாங்க என மதுசாவின் கையை ஆதரவாகப் பிடித்து வீட்டுக்குள் அழைத்தச் செல்கிறாள்.

மதுசாவின் கையில் சாரிணியின் கைபட்டதும் சுகமான மின்சார அதிர்வு உடலில் பரவியது போல மதுசா சிலிர்க்கிறாள்.நன்றி கலர்ந்த பார்வையுடன் சாரிணியின் கண்களைப் பார்த்த மதுசா வியப்படைகிறாள்.

முதன்முதலாக தங்களுடைய வீட்டுக்குச் சரவணன் வந்த போது அவனுடைய கண்களைப் பார்த்து வியப்படைந்தது போல இன்று அவனின் தங்கையின் கண்களும் அவளைத் வியப்படைய வைத்தது.

(தொடரும்)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.