“தோல்வியுற்ற தலைவர்” என இரா.சம்பந்தனை நிந்திப்பது நியாயமா? …. நியூசிலாந்து சிற்சபேசன்.
திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா சம்பந்தன் அவர்களுடைய மறைவு சொல்லிக்கொள்ளக்கூடிய அதிர்வுகளைத் தமிழ் பொதுவெளியில் ஏற்படுத்தவில்லை. அன்னாருடைய பூதவுடல் அக்கினியில் சங்கமாக முன்னரே, அவருடைய மறைவு குறித்த பிரக்ஞை காணாமல்போய்விட்டது.
ஏன் இந்த நிலை? என்ற கேள்வியை எளிதில் கடந்துபோக முடியவில்லை.
தன்னந்தனியனாகவும் தன்னிச்சைப்படியுமே இரா சம்பந்தன் இயங்கிவராகும். அதனால், ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியலை முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தியவர்.
சமூகத்தின் கூட்டுவலிகளில் கரிசனை கொண்டவரல்ல. மரபுகளிலே நம்பிக்கை கொண்டிருந்தவருமல்ல. வரம்புமீறல்களிலே உச்சம்தொட்டவர்.
சிங்கக்கொடியைத் தூக்குவது, சுதந்திரதினக்கொண்டாட்டம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும், வலிசுமந்த மரபுகளை அனாயாசமாக உதறித்தள்ளியவர். திருமலை நடராஜா உள்ளிட்ட எண்ணிலடங்காதோரின் உயிர்த்தியாகத்தை அர்த்தமற்றதாக்கியவர்.
இத்தகையதொரு 91 வயதுப் பெரியவரின் அரசியலை, நாலுவரிகளில், நறுக்கென்று சொல்லிவிடலாம்.
சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தோற்றார்.
தமிழ் மக்களிடம் தோற்றார்.
சொந்தக் கட்சியிடம் தோற்றார்.
ஈற்றில், தானும் தோற்றார்.
இவ்வாறு சொல்வதனாலே, பெரியவர் சம்பந்தனைக் குற்றவாளி ஆக்குவதாகப் பொருள் கொள்ள வேண்டியதில்லை.
மக்களாட்சி முறையில், மக்களுடைய பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்கின்றனர். மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்த ஒருவரே, அந்த மக்களுடைய தலைவராகப் பரிணமிக்கின்றார்.
1960களில் திருகோணமலையில் பெயர்சொல்லக்கூடிய சட்டத்தரணியாக வலம்வந்தவர். குடும்பப்பின்னணி, செழிப்பான வருமானம் என்பவை அன்னாரை மேட்டுக்குடிமகனாக்கிச் சீராட்டின. மேட்டுக்குடிச் சமூகத்திலே, பெரும்பான்மைச் சமூக அரச, பொலிஸ், இராணுவ அதிகாரிகளுடன் தோழமையில் திளைத்து, ரம்மியமான மாலைப்பொழுதுகளில் இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.
அவ்வாறாக, வாழ்வின் உன்னதங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தவரை, வலிந்து அரசியலுக்கு அழைத்துவந்தவர்களிலே பெரியவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் முக்கியமானவராகச் சொல்லப்படுகின்றது.
தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்ட அழுத்தங்களினாலேயே, பெரியவர் சம்பந்தன் அரசியலில் கால்பதித்தவராகும். சுயவிருப்பில் அரசியலுக்கு வந்தவரல்லர்.
1977 பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில் வெற்றி பெற்றார்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்தே, தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றது. தனிநாட்டுக் கோரிக்கையில் பெரியவர் சம்பந்தன் நம்பிக்கை கொண்டவரல்ல. இருந்தாலும்கூட, கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு அடக்கி வாசித்தார். தன்னுடைய நம்பிக்கைகளைப் பவுத்திரப்படுத்திக்கொண்டார். “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்” காத்திருந்தார். வாய்ப்புக்கிடைத்போது, “பிளவுபடாத இலங்கைக்குள், பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்பதை மந்திரமாகவே உச்சரித்தார்.
பெரியவர் சம்பந்தனுடைய உலகம் மிகவும் சிறியது. அவருடைய உச்சந்தலையிலிருந்து தொடங்குகின்ற உலகம், உள்ளங்காலுடன் முடிந்துவிடுகின்றது. அதனைச் சுயநலம் என்று வெளிப்படையாகவும் சொல்லலாம். ஒரு மனிதர், தன்னுடைய நலனில் மட்டுமே கவனம்கொண்டிருப்பது தவறில்லையே.
ஆனால், அத்தகையதொரு சுயநல இயல்பைத் தூக்கலாகக் கொண்ட ஒருவர், அர்ப்பணிப்பு மிக்க மக்கள் சேவைக்கு உரியவரா என்பதே இங்கு எழவேண்டிய கேள்வியாகும். அவரை வலிந்து அரசியலுக்கு கொண்டுவந்த “உயர்ந்த” தலைவர்கள் என்போர், அவரது இயல்பைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே வரலாற்றுத் தவறின் ஆரம்பமாகிவிட்டது.
1989 மற்றும் 1994 பாராளுமன்றத் தேர்தலிலே திருகோணமலையில் தோல்வியடைந்தார்.
1997ல் அ. தங்கதுரை கொல்லப்பட்டபோது பாராளுமன்ற அங்கத்துவம் வசப்பட்டது.
2000ம் ஆண்டு தேர்தலிலே மீண்டும் தோல்வியடைந்தார்.
அதன்பின்னர், 2001லிருந்து பாராளுமன்றத் தேர்தல்களிலே வெற்றி பெற்றார்.
ஆக, 1977 வட்டுக்கோட்டை தீர்மானம் ஏற்படுத்திய அலையிலும், அதன்பின்னர் தமிழ் தேசிய அலையிலும் பாராளுமன்றம் சென்றவராகும்.
அந்தவகையிலே, தனித்துவமான மக்கள் ஆதரவினால் பெரியவர் சம்பந்தன் தேர்தல்களிலே வெற்றிபெற்றவருமல்ல. மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவருமல்ல.
மக்களிடமிருந்து எவ்வளவுதூரம் விலகி இருந்தார் என்பதற்கான சான்றுகளை தேடி அலைய வேண்டியதில்லை.
அரசியல்கைதிகள் விடயத்திலே திறப்பு தன்னிடமில்லை என்று சொன்ன தொனியும், இராணுவ நடவடிக்கைகளினால் வலிந்து இடம்பெயர்ந்த தையிட்டி மக்களிடம் “என்ன காரணத்துக்காக உங்கள் வீடுகளைவிட்டு வந்தீர்கள்” என்ற கேள்வியும் “ஒருபானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்” போன்றவையாகும்.
யாழ்ப்பாணத்திலே அன்னாருக்கு அஞ்சலிசெலுத்த வந்திருந்த பெண்கள் குழுவொன்று, பூதவுடலுக்கு அருகே நின்று “குரூப்போட்டோ” எடுத்துக்கொண்டதாக, ஓய்வுநிலை மூத்த அரசஅதிகாரியொருவர் வேதனையோடு அங்கலாய்த்துக்கொண்டார்.
மேற்படி சம்பவத்தைக் கேள்வியுற்றபோது, வாழும்போது நெருங்கமுடியாதவரை, இறந்த பின்னரேனும் மக்கள் நெருங்க எத்தனித்தனரோ என்னும் குரூரமான எண்ணம் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.
அரசியலுக்கு வந்தபின்னர் சமயோசிதமாகக் காய்களை நகர்த்தினார். தன்னுடைய இருப்பை மட்டுமே பேணிக்கொண்டார்.
அதிலே, மக்கள் நலன் இருக்கவில்லை என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், மக்களுடைய நாடித்துடிப்பில் அக்கறை கொண்டவராக தன்னை என்றுமே அடையாளப்படுத்தியவரல்ல.
ஆக, தலைவர் என தமிழ் சமூகம் கொண்டாடியதற்கு, பெரியவர் சம்பந்தன் எவ்வாறு பொறுப்பாளியாகலாம்?
தமிழ் தேசிய அரசியலின் தலைமைக்கு பெரியவர் சம்பந்தனைக் கொண்டுவந்து சேர்த்ததில், விடுதலைவேண்டிய அமைப்புக்களின் பங்கு முக்கியமாகச் சொல்லப்படுகின்றது.
ஆக, தானுண்டு – தன்னுடைய குடும்பம், தொழில் என தேமேயென இருந்தவரை, முதலில் பாராளுமன்ற அரசியலுக்கு வலிந்து கொண்டுவந்து சேர்த்தார்கள். “பெருந்தலைவர்” ரேஞ்சுக்கு “படம்” காட்ட “அத்திவாரக்கிடங்கு” வெட்டிவிட்டார்கள். 2001க்குப் பின்னர் கண்ணைமூடிக்கொண்டு வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். இவற்றையெல்லாம் செய்தவர்களை விட்டுவிட்டு, “தோல்வியுற்ற தலைவர்” என பெரியவர் சம்பந்தனை நிந்திப்பது எந்தவகையிலே நியாயமாகும்….!
நியூசிலாந்து சிற்சபேசன்.