முக்கிய இராஜதந்திர நாடு தலையீடு; சஜித்தின் வெற்றி உறுதியானதா?… சு.நிஷாந்தன்
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் பல இராஜதந்திர நாடுகள் தேர்தல் விடயத்தில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையின் அரசியலில் கடந்த 7 தசாப்தங்களாக பிரதான இராஜதந்திர பங்காளியாக இந்தியா உள்ளது. இந்தியாவின் நேரடி தலையீடுகளில்தான் இலங்கையின் பூகோள அரசியல் எப்போதும் தீர்மானிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இலங்கை எடுக்கும் சந்தர்ப்பங்களில் கடுமையான சர்வதேச சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீனாவுக்கு சார்பான நிலைப்பாட்டில் இயங்கிய போது இலங்கை சர்வதேச அரங்கில் தனிமைப்படும் அபாயத்தை எட்டியிருந்தது.
இதனால் இலங்கையை ஆளும் தலைமைகள் இந்தியாவின் நண்பனமாக இருக்க வேண்டியது எழுதப்படாத ஒரு சட்டம் என்பதுடன், அது பூகோள அரசியலில் இலங்கையின் இருப்பை தீர்மானிக்கும் காரணியாகவும் உள்ளது.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் இலங்கை உள்ளது. இலங்கையில் சீனா உட்பட எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் இந்தியா விரும்பாது. அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பையும் கருத்திற் கொண்டது.
இதனால் இலங்கையில் ஆளும் மற்றும் ஆள போகும் தலைமைகள் மீது இந்தியாவின் கரிசனை பல தசாப்தங்களாக தொடர்கிறது.
1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் இலங்கை அரசியலில் இன்னமும் ஒரு தீர்மானமிக்க திருத்தச்சட்டமாக உள்ளதுடன், அது இந்தியாவின் செல்வாக்கை நேரடியாக இலங்கை அரசியல் பரப்பில் செலுத்தும் காரணியாகவும் உள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவதை இந்தியா விரும்புகிறது. ஆனால், அது ராஜபக்சர்களின் தயவு இன்றி அல்லது அவர்களுடனான கூட்டணி இன்றி.
இதற்கு ரணில் விக்ரமசிங்க தரப்பு மறுப்பை தெரிவித்துள்ளதான தகவல்கள் கடந்த காலத்தில் வெளியாகியிருந்த பின்புலத்திலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைநகர் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டதுடன், சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ரணில் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு செவிகொடுக்காது பயணிப்பதால் மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ள தலைவராக கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இந்தியா தமது ஆதரவை வழங்க தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இது ரணில் விக்ரமசிங்கவின் எதிர்கால அரசியல் பயணத்துக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. 13ஆவது திருத்தச்சட்டம் உட்பட சில அரசியல் விவகாரங்கள் இந்தியா சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்தியாவின் ஆதரவு உள்ள வேட்பாளர்கள் இலங்கையில் வெற்றிபெறுவது இலகுவான விடயம் என்பது கடந்தகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. எனவே, ரணிலின் வியூகம் வெற்றிபெற வேண்டும் என்றால் இந்தியாவின் பக்கம் நகர வேண்டும்.
இதேவேளை, சஜித் – ரணில் தரப்பை இணைக்கும் பல முயற்சிகளும் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுவும் வெற்றியளிக்கவில்லை. ராஜபக்சர்களுடன் கைகோர்த்துள்ள ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியாவிடம் சஜித் தரப்பு விளக்கியுள்ளதாகவும் அது சாத்தியப்படாத விடயம் என நேரடியாக தெரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
சு.நிஷாந்தன்