“பாடல் தந்த பரிசு”… சிறுகதை …. சங்கர சுப்பிரமணியன்.
காதலி கவிதா என்றும் சிரித்துப்பேசுபவள்
இன்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு என்னை நெருங்காமல் உம்மென்று தூரமாக நின்று கொண்டிருந்தாள். காரணம் இரண்டு தினங்களுக்கு முன் வருவதாக கூறி நெல்லை சந்திப்பிள்ளையார் கோவிலில் காக்கவைத்து விட்டேன்.
தாமத்திக்கச் செய்து ஒன்றும் சொல்லாமல் போகாமல் இருந்தால் கோபப்படலாம். ஆனால் நான் மன்னிப்பு கேட்டதோடு
போகமுடியாமல் ஆனதற்கு காரணத்தையும் சொல்லிவிட்டேன். ஆனால் இன்னும் கோபம் குறையாமல் முரண்டு பிடிக்கிறாள். அதைத் தாங்கிக் கொள்ளமுடியாத நான் அவளை எப்படியாவது சமாளித்து என்னுடன் சிரித்து பேச வைத்துவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
அன்றொரு நாள் அவள் என்னிடம்
சொன்னதை நினைத்துப் பார்த்தேன். நான் கோபமாகவோ அல்லது கவலையாகோ இருக்கும்போது இனிமையான திரைப்படப்
பாடலைக் கேட்டால் கோபமோ கவலையோ எதுவாயிருந்தாலும் அது என்னை விட்டு ஓடிப் போய்விடும் என்று அவள் சொன்னதை நினைத்தேன். என் பாடலுக்கு கழுதையே ஓடி வரும் என்பதால் துணிந்து பாட ஆரம்பித்தேன்.
செல்லமாக அவள் என்னையும் நான் அவளையும் கழுதை என்று சொல்லிக் கொள்வது வாடிக்கைதான். அந்த ஒரு துணிச்சலே என்னை பாட வைத்தது. என்ன இது கழுதை என்றெல்லாமா கொஞ்சுவார்கள் என்று நினைக்காதீர்கள். காதலித்தவர்களுக்கு மட்டுமே அந்த சொல்லிலிருக்கும் அன்பு புரியும்.
பாட ஆரம்பித்தேன்.
“சித்திரமே…சித்திரமே… சித்திரமே
சித்திரமே சித்திரமே சிரிக்க கூடாதா
சிறிதுநேரம் அருகில் நீயும் இருக்க கூடாதா
சித்திரமே சித்திரமே சிரிக்க கூடாதா
சிறிதுநேரம் அருகில் நீயும் இருக்க கூடாதா”
என்று நான் பாடியதுதான் தாமதம் அவள் முகத்தில் தாண்டவமாடிய கடுகடுப்பு மறைந்தது. கார்முகிலிலில் இருந்து வெளிப்படும் வெண்ணிலவைப் போன்று செவ்விதழ்கள் அகன்று வெண்பற்கள்
தோன்றின. ஓடிவந்து என் கைகளைப் பற்றியபடியே என் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.
இதுதான் தகுந்த நேரம் என்று காத்திருந்த நான் பாடலைத் தொடர்ந்தேன்.
“சொல்லுக்கடங்காமல் மலரும் தோகை உன் கண்களிலே
இரு நெல்லின் மணிகளைப் போல் எனது நிழலைக் காணுகின்றேன்”
என்று நான் பாட, உடனே என்னைவிட நன்றாக பாடக்கூடிய அவளும்,
“காணும் இடத்திலெல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க
காணும் இடத்திலெல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க
கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் என்ன விந்தை
கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் என்ன விந்தை”
என்று பாடியபடி என்னைப் பார்த்தாள்.
“அப்படியா? அப்படியென்றால் என்னை எப்போது வழிபடப் போகிறாய்?” என்றேன்.
“என்னடா இது புதிதாய் வழிபாடு அது இது என்கிறாய்? வழிபாடு செய்ய நீ என்ன கடவுளா?” என்றாள்.
“ நீதானே இப்போது பாடினாய். காணுமிடமெல்லாம் நான் இருக்கிறேன் என்று. இறைவன்தானே எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பான்?”
“அதற்கு?”
“இறைவனுக்கு வழிபாடு செய்வதைப்போல் எனக்கும் வழிபாடு செய்யலாம் அல்லவா?”
“ஆளப்பாரு, ரொம்பத்தான் ஆசை. வழிபாடு செய்யணுமாமுல்ல வழிபாடு” என்று சிணுங்கினாள்.
“அது சரி, காணும் இடங்களில் எல்லாம் நான் இருக்கிறபோது ஒருநாள் வராமல் போனதற்கான காரணத்தைக் கூறியும் கோபப்படலாமா? என்றேன்.
“அதற்கு என்ன செய்யவேண்டும?”
“ஒன்னுமில்லாததுக்கு முகத்தை தூக்கிவச்சுகிட்டு இருந்தல்ல. ஒரு சாரி சொல்லக் கூடாதா?” என்று நான் கெஞ்சியதும்,
“மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்” என்று பாடியபடி
பொருள் பொதிந்த பார்வையோடு என்னைப் பார்த்தாள்.
அவளின் அந்த பார்வையின் பொருளுணர்ந்து அவளை நெருங்கிய நான்
தடாலென கட்டிலில் இருந்து விழுந்தேன். அந்த கட்டில் பர்மா தேக்கில் செய்தது என்று அதன் பெருமையை என் அம்மாவுக்கு சீதனமாக கொடுத்த தாத்தா பீற்றிக்கொள்வார் என்று அப்பா பலமுறை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
தாத்தா பெருமையடித்ததிலும் நியாயம் உள்ளது. யானயேற்றம் குதிரையேற்றம் போன்ற பயிற்சியில்லாமல் அவற்றின் மேல் ஏறமுடியாது அல்லவா? அதுபோல்தான் இந்த கட்டிலிலும் அவ்வளவு எளிதில் ஏறிவிட முடியாது. ஏனென்றால் கட்டில் அவ்வளவு உயரம்.
அவ்வளவு உயரமான கட்டிலில் இருந்து
விழுந்த நான் அலறிய சத்தம் கேட்டு பக்கத்து அறையிலிருந்த என் அம்மாவும் அப்பாவும் பதறியடித்து ஓடி வந்தார்கள்.
என் அம்மா அப்பாவைப் பார்த்து,
“வயசுப்புள்ள ராத்திரில கண்ட நேரத்துக்கு வரான். காத்து கருப்பு புடுச்சிருக்கும். காலைல முப்பாத்தம்மன் கோவிலிக்கு கூட்டிக்கிட்டு போய் மந்திரிச்சு தாயத்து கட்டணும்” கவலையோடு பேசிக்கொண்டது காதில் விழுந்தது.
அதுக்கு அப்பா, “யாருடா இவ கூறுகெட்டவளா இருக்கா? நைட் சிப்ட்ல வேலைக்கு போயிட்டு வரவன் எப்படி நேரத்தோட வருவான். முதல்ல அவனுக்கு ஒரு கால்கட்ட போடணும். வருகிறவள் அவன பாத்துக்குவா?” என்றார்.
அப்பாதான் சரியா பேசுறாரு. அம்மா என்னன்னா மந்திரிக்கணும் தாயத்துக்கட்டணும்னு சொல்லிக்கிட்டுருக்கா. ஏற்கனவே உள்ளூர் வெளியூர்னு கோவிலுக்கு கூட்டிக கிட்டுபோய் கையில கலர்கலரா எனக்கு கயிறை கட்டி விட்டிருக்கா?
வேலையில கையிலருக்கும் கணக்கிலடங்கா கயிறுகளை பார்த்து பச்சகலரு சிங்குசான் சிவப்பு கலரு சிங்குசான், சிங்குசான் சிங்குசான் என்று சொல்லி நக்கலடிக்கிறாங்க. போதாக்குறைக்கு அக்கா பையன் முருகேசனுக்கு வானவில்லின் நிறம் ஏழு என்பதை என் அக்கா என் கையில் கட்டியிருக்கும் கயிறுகளின் நிறத்தை
வைத்துதான் சொல்லிக்கொடுக்கிறாள்.
யார் யாரோ வத்தலும் தொத்தலுமா இருப்பவனங்கள்ளாம் காதலிக்கிறானுங்க.
ஆனா எனக்கு என் கையிலிருக்கும் கயிற்றின் நிறங்களைப் பார்த்ததும் ஒரு பெண்கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டேங்குது. அவங்கள சொல்லி ஒரு குற்றமுமில்ல. இந்த காலத்துக்கு பொண்ணுங்களெல்லாம் ரொம்பவும் நவநாகரிகமாகல்லா இருக்காங்க.
இப்படி பலவற்றை நினைத்தவன் முதலில் நாளைக்கு நான் டாக்டர பார்க்கணும். விழுந்ததில் முதுகில் அடிபட்டு விண்விண் என்று வலிக்கிறது என்று எண்ணியபடியே எழுந்தேன்.
-சங்கர சுப்பிரமணியன்.