பிரான்சில் இடதுசாரிகளின் வெற்றி; தொங்கு பாராளமன்றும்- அரசியல் முட்டுக்கட்டையும்!….ஐங்கரன் விக்கினேஸ்வரா
(மொத்தமுள்ள 577 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு 289 இடங்களில் வெற்றி பெறுவது கட்டாயமாகிறது. இவ்வகையில் இந்த அரசியல் முட்டுக்கட்டையை நீக்க தொங்கு பாராளமன்றம் அமைக்க சாத்தியமும் உண்டு)
இன்னும் சில நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் , பிரான்சில் எதிர்பார்க்கப்படாத அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல ஊடகங்கள் பிரான்ஸ் கலவர பூமி ஆகி இருக்கிறது என பெரிது படுத்தி கூறினாலும், பாரிஸ் இன்னமும் அமைதியாகவே உள்ளது.
பிரான்ஸ் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத தேர்தல் முடிவுகள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை, இதெல்லாம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான பிரான்சில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே.
இடதுசாரிகளின் வளர்ச்சிக்கான முன்மொழிவு:
ஜீன் லூக் மெலன்சொனின் (Jean-Luc Mélenchon) இடதுசாரி கூட்டணி தேர்தல் கால முன்மொழிவுகள் மக்களின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்கும் என அறிவித்துள்ளது.
577 உறுப்பினர்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதில் அதிபர் இம்மானுவேலின் மையவாத கூட்டணி, ஜீன் லூக் மெலன்சொனின் இடதுசாரி கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றாலும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் முட்டுக்கட்டை நிலை தோன்றியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்ட போதும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தற்போதய பிரதமர் இம்மானுவேல் மக்ரோனின் மையவாத கட்சியின் தோல்விக்கு, 14 ஆண்டு கால ஆட்சியில் பணவீக்கம் தீவிரமாக அதிகரித்துள்ளமையே காரணமாகும் என கூறப்படுகிறது.
அதேவேளை பிரான்ஸ் நாட்டு வெளியுறவுக் கொள்கையில் 80 சதவீத மக்கள் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் கொடுக்க ஆதரவாக உள்ள நிலையில் மக்ரோன் அதற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். அதேபோல நேட்டோ படைகளை உக்ரைனுக்கு அனுப்பி ரஷ்யாவுடன் போரை நடத்த மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்ற அபி்ப்பிராயமும் மக்களிடத்தில் உள்ளது.
மேலும் பிரான்ஸ் விவசாயிகளுக்கான மானியங்களை வெட்டியது, உணவுப் பொருட்கள் கட்டுக்கடங்காத விலை உயர்வு ஆகியவற்றால் உள் நாட்டுப் பொருளாதாரம் மக்ரோனின் கட்சி ஆட்சியில் எந்த முன்னேற்றமும் பெறவில்லை. இவை மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இடதுசாரிகளின் மறு சீரமைப்புத் திட்டம் ?
இந்நிலையில் 3லட்சத்து 80ஆயிரம் யூரோக்களுக்கு மேல் வருமானம் பெரும் அனைத்து செல்வந்தர்களும் அதிகவீத வரி விதிக்க இடதுசாரிகள் கூட்டணி முன்மொழிவை வைத்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வரிவருவாயில் சமூக மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும் இக் கூட்டணி, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது, விலைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, ஓய்வூதிய வயதைக் குறைப்பது, பசுமை மாற்றம், பொதுத் துறைகளுக்கான முதலீடுகளை அதிகரிப்பது ஆகியவற்றை முன் மொழிந்துள்ளது.
அத்துடன் பிரான்சில் பொருளாதார சமத்துவமின்மையை சரி செய்வதற்கும், செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கும் ஒரு வழியாக இந்த நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களை வெற்றி பெற்றிருந்தாலும் யாரும் பெரும்பான்மை பெறாத நிலையில் ஜனாதிபதி மக்ரோன் இடது சாரிகள் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்பதற்காக அந்நாட்டு பிரதமர் கேப்ரியலை இடைக்கால பிரதமராக நீடிக்க அழுத்தம் கொடுத்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பாரிஸ் அரசியல் மாற்றம்:
வலதுசாரி கொள்கை உடைய மரைன் லீ பென்னின் (Marine Le Pen) தேசிய பேரணி கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் முதல் கட்டத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி கட்சியே முன்னிலை பெற்றது.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்குப் பின்னர் இடதுசாரி கூட்டணி 182 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் சென்ட்ரிஸ்ட் கட்சி 168 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலது சாரி கட்சி 143 இடங்களைப் பெற்று மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இடது சாரிகளுடன் கூட்டணி வைத்து அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதிய அரசை அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மொத்தமுள்ள 577 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு 289 இடங்களில் வெற்றி பெறுவது கட்டாயமாகிறது. இவ்வகையில் இந்த அரசியல் முட்டுக்கட்டையை நீக்க தொங்கு பாராளமன்றம் அமைக்க சாத்தியமும் உண்டு.
பிரதமர் பதவிக்கு கடும் போட்டி:
பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல், தனது பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில வாரங்களில் புதிய பிரதமர் பதவி ஏற்பார். அப்படி அவர் விலகினால்
அதிபர் மக்ரோன் தனது கொள்கைகளுக்கு எதிரான புதிய பிரதமருடன் பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகுவார்.
இடது சாரி கூட்டணி கட்சித் தலைவர்களான , ஜீன் லக் மெலென்சாண் , ஒலிவர் ஃபேர் மற்றும் மரைன் டாண் டெலியர் ஆகிய மூவரும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதால், பிரதமர் பதவிக்கு உண்மையிலேயே கடும் போட்டி நிலவுகிறது.
இத்தேர்தலுக்கு முன்பாக பிரான்ஸ் உள்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் இமானுவேல் மக்ரோன் கட்சி குறைவான உறுப்பினர்களை பெற்றது. இதையடுத்தே நடப்பு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, இத் தேர்தல் நடாத்தப்பட்டது.
நேட்டோ உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர்:
இதற்கிடையே, தற்போதைய பிரதமர் கேப்ரியேல் அட்டல் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
நேட்டோ உச்சிமாநாட்டிற்காக வாஷிங்டனுக்குச் சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என இன்னமும் குறிப்பிடவில்லை.
மேலும் புதிய அரசு அமையும் வரை புதிய பிரதமர் குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் பிரான்ஸில் ஒலிம்பிக் தொடங்க உள்ளது. இவ்வேளையில் பிரான்ஸில் அரசியல் நிலை ஸ்திரமற்று உள்ளது.
இந்நிலையில்,தேர்தல் முடிவுகள் பிரான்ஸையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரீஸ் நகரம் எங்கும் வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்தன. கடந்த ஒரு வார காலம், பிரான்ஸ் தெருக்களில் வன்முறைகளும், கலவரங்களும், போராட்டங்களில், கட்டுக்கடங்காமல் வெடித்தன எனவும் சில ஊடகங்கள் தெரிவித்தன.
ஆயிரக்கணக்கான வலதுசாரி எதிர்ப்பாளர்களும் இடதுசாரிக் கட்சியினரும் பாரிஸின் தெருக்களில் வெள்ளம் போல் புகுந்தனர்.
அதிகரித்து வரும் வன்முறையை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். போராட்டக் காரர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக, எதிர்ப்பாளர்களும் புகை குண்டுகளை வீசினர். இதனால் வன்முறை கட்டுக்கடங்காமல் போனது எனவும் சில சுயாதீன ஊடகங்கள் தெரிவித்தன.