கதைகள்

“உதிரக்கோடு” …. சிறுகதை – 75 …. அண்டனூர் சுரா.

ஜஸ்டிஸ் சிரில் ரெட்க்ளிப் அரவது அறையில் தனியே வீற்றிருந்தார். அவர் முன்னே இந்திய வரலாற்று நூல்கள் விரவிக்கிடந்தன. இந்துஸ்தான் அதன் பரந்து விரிந்த எல்லை, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய நூல்கள் அதிகம் இருந்தன. பாபரின் சுயசரிதை பாமர்நாமா, பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹுமாயின் நாமா, அக்பரின் ஆட்சிப்பகுதியை விவரிக்கும் அப்துல் ஃபஸல் எழுதிய அக்பர்நாமா நூல்களும் அதன் மொழிபெயர்ப்புகளும் விரித்து மேசையின் மீது கவிழ்க்கப்பட்டிருந்தன.

அறையின் மையத்தில் மற்றொரு மேசை இருந்தது. அது சதுர வடிவிலானது. அதன் பரப்பை முழுமையாக அடைத்து இந்துஸ்தானின் நிலவரைப்படம் விரிக்கப்பட்டிருந்தது. நர்மதை நதி்க்கு வடக்கு நிலப்பகுதிகளே இந்துஸ்தான். அதற்கான ஆதாரத்தை அவர் பல்வேறு நூல்களில் அடிக்கோடிட்டிருந்தார். இந்துஸ்தான் என்பதைத்தான் இந்தியத் தலைவர்கள் வட இந்தியா என்று சொல்லிக்கொள்வதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார். மேசையில் விரிக்கப்பட்டிருந்த நிலவரைப்படம் 1:8,300,000 மைல் என்கிற அளவுக்கோளுடன் வரையப்பட்டிருந்தது. பிரிட்டிஸ் அரசாங்கம் இந்தியாவில் கால்வைப்பதற்கு முன்பாக வரையப்பட்ட அக்பர் காலத்து வரைபடம் அது.

வரைபடத்தைக் குவி லென்ஸ் கொண்டு பார்த்தார் ரெட்க்ளிப். வட இந்தியா பரந்து விரிந்து வடகிழக்கு எல்லைப்பகுதி கையேந்தி பிச்சை கேட்பதைப் போலவும், வடமேற்கு அள்ளிமுடியாத சிகை காற்றில் அளாவிப் பறப்பதைப் போலவும் இருந்தது. தீபகற்பம், தீவு, வளைகுடா, விரிகுடா, கடல், பெருங்கடல், ஜலசந்தி, குன்றுகள், மலைகள், பீடபூமி, சமவெளி,….. அப்பப்பா! இவ்வளவையும் ஒருங்கே பெற்ற இந்தியாவை நினைத்ததும் அவருடைய இமைகள் நெற்றிக்கு ஏறின. பிரிட்டிஸ் சாம்ராஜ்ஜியத்தின்கீழ் எத்தனையோ காலனி நாடுகள் உள்ளன. இப்படியொரு நாட்டை அடிமைப்படுத்தியதைப் பெருமையாக நினைத்தார் ரெட்க்ளிப். இந்நாடு தன் கையை விட்டு போகப்போவதை நினைக்கையில் ஏமாற்றம் முகத்தில் அறைந்தது.

வரைபடத்திலிருந்த மாகாணங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வந்தார் ரெட்க்ளிப். அவருடைய குறுகுறுப்பு பார்வை பஞ்சாப் மாகாணத்தின்மீது குவிந்தது. பஞ்சாப் மாகாணம் இந்தியப் பெண்ணின் உயிர்முடிச்சு முகுளம் போலத் தெரிந்தது. அதை அவர் வைத்தக்கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

ரெட்க்ளிப் பிரபல வழக்கறிஞர். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின்கீழ் இயங்கும் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். அவர் இந்திய நிலவரைப் படத்தை ஒரு தடயத்தைப் பார்ப்பதைப் போல பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய பார்வை பஞ்சாப் மீதும் அதற்குள்

ஓடும் சிந்துவின் கிளை நதியான ரவியாற்றின் மீதும் ஓடிக்கொண்டிருந்தது. அவர் கையிலிருந்த ஒரு நீளக்குச்சியின் உதவியால் ஆற்றின் தடத்தைக் கடந்தவராக இருந்தார். இந்திய நதிகள் பெண் பெயரில் அழைக்கப்பட ரவி மட்டும் ஏன் ஆண் பெயரில் அழைக்கப்படுகிறது, அதற்கான காரணத்தைத் தேடும்முனைப்பில் இறங்கினார். கிழக்கு நோக்கி பாயும் நதிகள் பெண் பெயரிட்டும், மேற்கு நோக்கி பாயும் நதிகள் ஆண் பெயரிட்டும் அழைக்கப்படுவதைத் தெரிந்துக்கொண்டதும் அவர் ஒரு கணம் வியப்பின் ஆழத்திற்குச் சென்றார்.

அவரது பார்வை ரவியாற்றின் வளைவுகளில் நெழிந்து, சுழிந்து அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. ஓரிடத்தில் அவரது மொத்தப் பார்வையும் குவிந்தது. அதுதான் லாகூர். பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் அது. முகலாயர்களின் நந்தவனம் என அழைக்கப்படும் அந்நகரம் அக்பரின் பேரரசு காலத்தில் வாலாகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது தலையாகவும் இருந்திருக்கிறது. இந்து, முஸ்லீம், சீக்கிய மதங்களின் சங்கமமாகவும் பிரிட்டிஸ் சாம்ராஜ்ஜியத்திற்குச் சிம்மச்சொப்பனமாகவும் இருந்த லாகூர் நகரத்தை அவர் வைத்தக்கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

லாகூர் நகரத்திலிருந்து அவருடைய பார்வை நகரவில்லை. அந்நகரத்தைப் பார்ப்பதன் மூலம் அவர் பஞ்சாப் வாழ்மக்களையும் உடன்பிறப்புகளாகப் பழகி வரும் இந்து, முஸ்லீம், சீக்கிய மதத்தினரையும் பார்த்தார். அவரது பார்வையில் ஏழு மில்லியன் வாழ்மக்களும் அவர்களின் கபடமற்ற வாழ்க்கையும் மகிழ்ச்சியும் தெரிந்தது.

“மிஸ்டர் ரெட்க்ளிப்..” வெளியிலிருந்து யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

“யாரது…?”

“உங்களுக்குத் தந்தி வந்திருக்கிறது”

“யாரிடமிருந்து?”

“மவுன்ட் பேட்டன்..”

வரைபடத்திலிருந்து பார்வையை எடுத்த அவர் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்தார். தந்தியை வாங்கி பிரித்துப் படித்தார்.

“மிஸ்டர் ரெட்க்ளிப் அவர்களுக்கு, 1948 ஜுன் 6 ஆம் தேதி நாம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய தேசியக் காங்கிரஸ் நமக்கு காலக்கெடு நிர்ணயித்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்தக் காலக்கெடு தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. நாம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நாள், 1947 ஆகஸ்ட் 15. வரலாற்று ஆவணங்களைப் படித்துக்கொண்டிருக்காமல் உங்கள் மனசாட்சியின்படி இந்தியா பாகிஸ்தான் எல்லையை வகுப்பதில் முழுகவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். காலஅவகாசம் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன…..”

படித்துமுடித்ததும் முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்ட உணர்வில் அவர் திகைத்தார். அவருக்கு வியர்த்துக்கொட்டியது. அவசரமாக அறைக்குள் நுழைந்தார். அறையைச் சுற்றிலும் விரைவிக்கிடந்த நூல்களை எடுத்து ஒரு மூலையில் அடுக்கினார்.

உள்கோட்டும் கழுத்தில் டையும் அணிந்துக்கொண்டு எப்பொழுதும் நீதிபதிக்குரிய பகட்டுடன் இருக்கும் ரெட்க்ளிப் அதற்குப்பிறகு மழையில் நனைந்த கோழியைப் போல குறுகிப்போனார். அவரது மனம் கனகனத்தது. எத்தனையோ வழக்குகளுக்கு மிகச்சரியான தீர்ப்புகளை வழங்கி முன்மாதிரியான நீதிபதி எனப் பெயர்பெற்ற ரெட்க்ளிப் இரு நாடுகளுக்கும் எல்லைகளை வகுத்துக்கொடுத்து சரியான தீர்ப்பை வழங்கமுடியுமா என்கிற பயம் அவரை உலுக்கியெடுத்தது. அவருக்குப் பசி தெரியவில்லை. தாகத்தை உணரமுடியவில்லை. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தாலும் அவருக்கு வியர்க்கவே செய்தது. கைக்குட்டையால் அடிக்கடி முகத்தைத் துடைத்துக்கொண்டார். அவரையும் அறியாமல் அவருடைய கண்கள் கலங்கின. அவரது மனம் இறுக்கம் கண்டது. தேன்கூட்டை கலைக்கப்போகிறேன் என்கிற குற்றவுணர்வு மனதிற்குள் குறுகுறுத்தது.

தன்மீது ஏற்றப்பட்டிருக்கும் இந்த அசாதாரண பணியிலிருந்து விலகி விடலாமா, என்றுகூட நினைத்தார். உடல்நிலையும் வயதும் அப்படியொரு முடிவினை எடுக்க அவரை நிர்ப்பந்தித்தது. அப்படியொரு முடிவுக்கு வந்துவிட்டால் வைஸ்ராய் மவுன்ட் பேட்டன் உடனான சிநேகிதம் அறுந்து விடுமோ? பிரிட்டிஷ் அரசாங்கம் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைப்பதைப் போலாகி விடுமோ? மனசாட்சி மார்புக் கூட்டைக் குடைந்தது. பஞ்சாப் மாகாணத்தை மட்டும் அவர் பூதக்கண்ணாடி வழியே தனித்து பார்த்தார். பஞ்சாப் இந்திய வரைபடத்தில் ஒரு மலையின் மீது பூனை படுத்துக்கிடப்பதைப் போலிருந்தது.

லாகூர் நகரம் யாருக்கு, என்கிற கேள்வி அவரையும் அறியாமல் எழுந்தது. இதய அறுவைச்சிகிச்சை செய்யப்போகிற மருத்துவரின் மனநிலையில் அவர் இருந்தார். நிமிடத்திற்கொரு முறை கண்களைத் திறந்து இந்திய வரைபடத்தைப் பார்ப்பதும் பிறகு கண்களை மூடிக்கொள்வதுமாக இருந்தார். அரைமணிக்கொரு முறை புகைப்பிடித்தார். அவ்வப்போது ஒயின் அருந்தினார். அவரால் சட்டென எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை.

கடந்த வாரம் கூட்டிய எல்லை கமிசனை மறுபடியும் கூட்டி இரு நாடுகளுக்கான எல்லையை வரையறை செய்யலாமா என்று நினைத்தார். அந்தக் கூட்டத்தில் நடந்தேறிய போர்க்குரல், கதறல், கெஞ்சல், மிரட்டல்,.. அவரைத் திகிலூட்டியது.

“லாகூர் எங்களுக்கே. லாகூர் இந்தியாவின் சொத்து.”

“பாகிஸ்தானின் இதயம் லாகூர். லாகூர் எங்களுக்கே வேண்டும்.”

ஒரே வரிசையில் அமர்ந்துக்கொண்டு உனக்கு, எனக்கு என அடித்துக்கொண்டதை அவர் மறுபடியும் எதிர்கொள்ள அவர் விரும்பவில்லை. நேற்று வரைக்கும் நாடு என்றவர்கள் நாம் என்று ஒரு கோட்டில் நின்றவர்கள் நான், எனக்கு. என்று அடித்துக்கொண்டதை நினைக்கையில் அவருக்குத் தலை சுற்றியது. அவர்களை மறுபடியும் எதிர்கொள்ள தன்னால் முடியுமா, என்கிற கேள்வி அவரிடம் எழுந்தது. பதவியை ராஜினாமா செய்துவிட்டு லண்டன் நகரத்திற்கு ஓடிவிடலாமா, என்றுக்கூட நினைத்தார். பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது அவர் செய்த சத்தியப்பிரமாணம் குறுக்கே வந்து நின்றது.

வங்காளம் பாகிஸ்தானுக்கு! பஞ்சாப் இந்தியாவிற்கு! என்று உத்தேசக் கணக்கைத் தொடங்கினார் ரெட்க்ளிப். தொண்ணூறு சதவீதம் செயல்திட்டத்தை முடித்துவிட்ட திருப்தி மனதை நிறைத்தது. இத்திட்டத்தினை மவுன்ட் பேட்டனிடம் ஆலோசித்து அதை எல்லைக்கமிசன் உறுப்பினர்களிடம் ஒப்புதல்பெற நினைத்தார். அதை நினைக்க அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதைக் கொண்டாடும் விதமாக அவர் இரண்டு மிடறுகள் ஒயின் அருந்தினார்.

அவரை ஆட்கொண்டிருந்த மகிழ்ச்சி விடிந்ததும் நீர்க்குமிழியாகிப் போனது. தினசரிகள் கொண்டுவந்திருந்த செய்திகள் அவருக்குள் புளியைக் கரைத்தது. “வங்காளம் கிழக்கு மேற்கு என்று தானாகப் பிரிந்து கல்கத்தாவில் இந்துக்களும் டாக்காவில் இஸ்லாமியர்களும் சுதந்திரத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்…” இச்செய்தியைப் படித்ததும் அவருடைய முகம் களையிழந்து வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது.

கர்சன் பிரபு செய்திருந்த வரலாற்றுப் பிழையால் வங்கம் தன் போக்கில் சுயசரிதை எழுதிக்கொண்டிருப்பதாக நினைத்தார். கர்சன் பிரித்த வங்காளத்தையொட்டியே வடகிழக்கு பகுதியைப் பிரிக்கத் தொடங்கினார் ரெட்க்ளிப். கல்கத்தா இந்தியாவிற்கு! டாக்கா பாகிஸ்தானிற்கு! இதைப் பிரிக்க அவருக்கு அரைநாள்கூட தேவைப்பட்டிருக்கவில்லை. செயல்திட்டத்தின் பாதியை நிறைவேற்றிவிட்ட ஆத்மதிருப்தி அவரை ஆட்கொண்டது.

வங்காளத்தை இரண்டாகப் பிரித்ததைப் போல அவரால் பஞ்சாப் மாகாணத்தைப் பிரிக்க முடியவில்லை. அதன் அழகு, அமைதி, ஒற்றுமை, வரலாற்றுச் சுவடுகள் அவர் முன்னே கைக்கட்டி கண்ணீர் சிந்தி நின்றது.

‘கிர்ரிங்…. கிர்ரிங்….’

வெளியிலிருந்து அழைப்பு மணி. ரெட்க்ளிப் மெல்ல எழுந்து கதவைத் திறந்தார். வெளியே இருவர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் தலையில் குல்லா இருந்தது. இவர்கள் பாகிஸ்தான் பிரதிநிதிகள் என்று அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. மார்பில் கைவைத்து குனிந்து நிமிர்ந்தபடி வணக்கம் வைத்தார்கள். பதிலுக்கு ரெட்க்ளிப்பிடமிருந்து வணக்கம். இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். மவுன்ட் பேட்டன் பிரபு நியமித்த எல்லை கமிசன் உறுப்பினர்கள். அவர்கள் தீன் முகமது, முகமது முனீர்.

“உள்ளே வாருங்கள். வந்த விசயம்?”

“முகமது அலி ஜின்னா உங்களிடம் இந்தக் கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு வரச்சொன்னார்” என்றவாறு மனுவை ரெட்க்ளிப் முன் நீட்டினார் தீன் முகமது. மனுவைப் பிரித்து வாசித்தார் ரெட்க்ளிப். அவருடைய நெற்றிச்சுருக்கங்கள் ஏறி இறங்கின.

“கூடவே வாய்மொழியாகவும் கோரிக்கையை வலியுறுத்தச் சொன்னார்.”

“சொல்லுங்கள்.”

“லாகூர் எங்களுக்கே வேணும்”

“மத அடிப்படையாகக்கொண்டு பிரிவினை கோருகிறீர்கள். லாகூரில் பெரும்பான்மையான மக்கள் சீக்கியர்கள், இந்துக்கள். அப்படியிருக்க நீங்கள் எப்படி லாகூர் நகரத்தின்மீது உரிமைக்கொண்டாட முடியும்…?”

“அப்படியானால் கல்கத்தாவை எங்களுக்குக் கொடுங்கள்”

“இக்கோரிக்கை நியாயமானது. கல்கத்தாவை கேட்கும் நீங்கள் மொத்தமாக வங்கம் மாகாணம் வேணும் என்றல்லவா கேட்டிருக்க வேணும். நீங்கள் பெரும்பான்மையாக இஸ்லாம் மக்கள் வாழும் பகுதியை அல்லவா கேட்டுவிட்டீர்கள்.”

தீன் முகமது சட்டென எழுந்தார். அவருடைய கண்கள் சிவந்துப்போயிருந்தது. “மிஸ்டர் ரெட்க்ளிப், நீங்கள் மவுன்ட் பேட்டன் போலவே பேசுகிறீர்கள்.”

“எப்படி?”

“இந்துகளுக்குச் சாதகமாக.”

ரெட்க்ளிப் தீன் முகமதுவை ஏற ,இறங்கப் பார்த்தார். மெல்லியதாகச் சிரித்தார். “இதை மெஹர் சந்த் மஹாஜன், தேஜா சிங்கிடம் சொல்லுங்களேன்.”

“அவர்களிடம் இதை ஏன் சொல்லவேணும்?”

“அவர்கள் உங்களைப் போல இந்திய தேசத்திற்கான எல்லைக் கமிசன் உறுப்பினர்கள். அவர்கள் சற்றுமுன் வந்தார்கள். ஒரு கோரிக்கை மனுவை நீட்டினார்கள். நீங்கள் சொன்ன அதே புளித்துப்போன வாசகத்தைத்தான் அவர்களும் சொன்னார்கள்.”

“என்ன சொன்னார்கள்?”

“நான் பாகிஸ்தானியர்களுக்குச் சாதகமாகச் செயல்படுகிறேனாம்.”

“இல்லையில்லை. நீங்கள் இந்துகளுக்குத்தான் சாதகமாகச் செயல்படுகிறீர்கள்.”

“இதைதான் அவர்களிடம் சொல்லுங்கள் என்கிறேன்.”

“ரெட்க்ளிப், நீ்ங்கள் சமயோசிதமாக பேசுகிறீர்கள். உங்களின் முடிவுகள் எங்களுக்குப் பாதகமாக இருக்குமேயானால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றவாறு தீன் முகமது, முகமது முனீர் இருவரும் எழுந்து அறையைவிட்டு வெளியேறினார்கள்.

நடந்துமுடிந்த சம்பவங்களை நினைக்க ரெட்க்ளிப்பிற்கு இரத்தஅழுத்தம் ஏறிஇறங்கியது. உதடுகளைப் பற்களால் வருடிக்கொண்டார். கண்களை மூடி கால்களை ஆட்டியபடி ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்திருந்தவர் மறுபடியும் வடமேற்கு எல்லையைப் பார்க்கத் தொடங்கினார்.

லாகூர் நகரம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருந்தது. அவரால் சட்டென முடிவெடுக்க முடியவில்லை. மனதிற்குள் ‘திக், திக்’ என்றிருந்தது எல்லைப் பதற்றம். இதயம் ‘திடும், திடும்’ என்று துடித்துக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் தலைசாய்க்க வேண்டும் போன்றிருந்தது. நாற்காலியில் உட்கார்ந்தவாறு தலைசாய்த்து கால்களை நீட்டி மெல்ல கண்களை மூடினார்.

எங்கும் போர்க்குரல். அப்பாவி மக்களின் கதறல், துகில் உரிப்பு, இரத்தம் சிந்துதல், கற்பழிப்பு, குடிசைகளுக்குத் தீ வைப்பு. எங்கும் மரண ஓலம். திடுக்கென விழித்தார் ரெட்க்ளிப். அவருடைய ஆடை வியர்வையில் நனைந்துபோயிருந்தது. மனதிற்குள் சடசடப்பு. எத்தகையச்

சம்பவம் நிகழக்கூடாது என்று நினைத்தாரோ அது கனவாக வந்துபோனதை நினைக்கையில் மனதிற்கு அசூசையாக இருந்தது. அதற்குப்பிறகு அவருக்குத் தூக்கம் வரவில்லை.

“க்ரிங்க்…… க்ரிங்க்…..” தொலைபேசியின் ரீங்காரம். எடுத்து காதில் வைத்தார்.

“நான் மவுன்ட் பேட்டன் பேசுறேன். லாகூர் பரிதாப நிலைமையிலிருக்கிறது.”

“அங்கே என்ன நடக்கிறது, வைஸ்ராய்?”

“இரண்டு தரப்பினரும் லாகூரை ஆக்கிரமிக்கிறார்கள். ஒரே கலவரம்.”

“நான் என்ன செய்ய வேண்டும்?”

“லாகூரை யாரோ ஒரு தரப்புக்குக் கொடுத்துவிடுங்கள்.”

“யாருக்கு?”

“அதை உங்கள் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன்.”

தொடர்பு துண்டித்துக்கொண்டது.

பஞ்சாப் மாகாணமும் அதற்குட்பட்ட லாகூர் நகரமும் அவர்முன் பூதாகரமாக எழுந்துநின்றது. லாகூர் இந்தியாவிற்கே….லாகூர் இந்தியாவிற்கே…..என்றவாறு அவரது மனக்குரல் கூக்குரலிட்டன. அவரது சட்டைப்பையில் கோர்த்திருந்த சிவப்பு மை பேனாவை எடுத்தார் ரெட்க்ளிப். பஞ்சாப் மாகாணத்தின்மீது மெல்லிய கோடு வரைந்தார். லாகூரை நெருங்க நெருங்க அவரது கை நடுங்கத்தொடங்கியது. மனதிற்குள் குறுகுறுப்பு. அவருக்குள் யாரோ பேசுவதைப் போலிருந்தது.

“ஒரு கூட்டைச் சிதைக்கும் பாவத்தைச் செய்திருக்கிறது பாகிஸ்தான். அதனால் அதன்கூடு மேலும் சிதையவே செய்யும். அதற்கு ஒதுக்கப்படும் நகரத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேணாம். லாகூர் அவர்களிடமே இருந்திட்டுப் போகட்டும்…”

ரெட்க்ளிப் கையிலிருந்த பேனா வரைபடத்தில் பஞ்சாப்பிற்கு குறுக்கே வேகமாக முன்னேறியது. அவர் வரைந்தகோடு லாகூர் அமிர்தசரஸ் சாலையைத்தாண்டி வாகாவைக் கடந்து வளைந்து நெளிந்துச் சென்றது. லாகூர் கொஞ்சம்கொஞ்சமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையத் தொடங்கியது. பஞ்சாபிகள் சொந்தம் பந்தம் உடைமை கற்புகளை இழந்து அகதிகளாக எதிரெதிர் எல்லைக்குள் நுழைந்ததைப் போல.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.