கட்டுரைகள்

உண்மை சம்பவம்… இந்தியாவின் கோபம், ராஜீவ் காந்தியின் கொலை அல்ல!… ச.வி.கிருபாகரன் பிரான்ஸ்

மௌனம் என்பது மோசமான தவறான விளக்கத்திற்கு வழிவகுக்கிறது.
— கிரேக் புரூஸ் ரீகாசெல், ஆஸ்திரேலிய ஏ.பி.சி. பொது ஒளிபரப்பாளர்.

(இது எனது வழமையான கட்டுரையாக காணப்பட்டாலும், இக் கட்டுரையில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள் யாவும் என்னுடன் சம்பந்தப்பட்ட முக்கிய உண்மை சம்பவம் என்பதை இங்கு கூறி கொள்ள விரும்புகிறேன்.)

இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் படுகொலை – 21 மே 1991 அன்று, இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் விளைவாக நிகழ்ந்தது. ராஜீவ் காந்தி மற்றும் கொலையாளி உட்பட 15 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 43 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலை புலிகள் – த.ஈ.வி.பு, கொலை செய்தார்களென ஏன் குற்றம் சாட்டப்பட்டார்கள்? அப்படியானால் ராஜீவ் காந்தியின் கொலைக்கான காரணங்கள் என்ன? த.ஈ.வி.புகளை இந்தியா பழிவாங்கியதுண்டா? இல்லையானால் ஏன்? ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர், த.ஈ.வி.பு.கள் ஏன் இந்தியாவில் வேறு தாக்குதல்களை செய்யவில்லை? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது, தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு, ராஜீவ் காந்தியின் கொலையால் தான் இந்தியா த.ஈ.வி.புகள் மீது மிகவும் ஆந்திரம் கொண்டுள்ளது, போன்று நூற்று கணக்கான கதைக்கள் உண்டு. இவற்றில் எது உண்மை எது பொய் எது மிகைபடுத்ப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் இங்கு நான் எழுதுவது என்னுடன் சம்பந்தப்பட்ட உண்மை கதை. சில காரணங்களுக்கு இங்கு பெயர்களை குறிப்பிடுவதை தவிர்த்து கொள்கிறேன்.

விடயத்திற்கு வருகிறேன். த.ஈ.வி.புகளை, 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின்னர், இவர்கள் மீதான தடையை, இந்தியா 1992ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி – இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் விதிகளின் கீழ், ‘சட்டவிரோத அமைப்பு’ என த.ஈ.வி.பு.கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை, 2019ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி புதுப்பிக்கப்பட்டது. தற்பொழுது, மேலும் ஐந்தாண்டுகளுக்கு தடை கடந்த மே மாதம் நீடிக்கப்பட்ட பொழுது, இந்தியவின் உள்துறை அமைச;சு, தடையை நீடிப்பதற்கு பின்வரும் காரணங்களை அறிவித்துள்ளது.

சுருக்கமாக கூறுவதனால் – தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பு நிறுவனங்கள், இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் புலிகளுக்கான ஆதரவு தளத்தை மேம்படுத்துகின்றன எனவும், இவை இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதிக்குமென கூறப்பட்டுள்ளது.

வெறுப்பு உணர்வை ….

அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் அனுதாபிகள், 2009ம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு, இந்திய அரசையே பொறுப்பு என்றும், எதையும் சரிபார்க்காமல், ஆராயமல் கூறிவருவதாகவும், அத்துடன் தமிழர்களிடையே இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து பரப்பி வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்திய மத்திய அரசு மற்றும் இந்திய அரசியலமைப்பு மீது தமிழ் மக்களிடையே வெறுப்பு உணர்வை வளர்க்க வழி வகுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இங்கு மறைக்கப்பட்டுள்ள சரித்திரங்களை பின்னோக்காது, சில விடயங்களை தொடர்ந்து எழுத முடியாது. 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் திரு. பிரேமதாச (ஐக்கிய தேசிய கட்சி) 50.43% வாக்குகளைப் பெற்று, 1989 ஜனவரி 2 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 1987ம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கான இலங்கை-இந்தியா ஒப்பந்தத்திற்கு திரு பிரேமதாசா வெளிப்படையாக எதிரானவர்.

இவ் வேளையில், இந்திய அமைதி காக்கும் படை என்று அழைக்கப்படும் ஐ.பி.கே.எப். வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு கொண்டிருந்த காலப்பகுதி.
இதேவேளை, தென்னிலங்கையில் ஜே.வி.பி என்ற சிங்கள பௌத்த தீவிரவாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக – இலங்கை-இந்திய ஒப்பந்தம், இந்திய அமைதிகாக்கும் படை போன்று பல விடயங்களை எதிர்த்து, பொதுச் சொத்துக்களை அழித்தும், அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை படுகொலை செய்வதனால் தெற்கு வாழ் மக்கள் மிகவும் பீதி கொண்டிருந்தனர்.

பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம், மற்றும் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி, கண்டியில் அவர் தனது பதவியேற்பு நிகழ்வில ஆற்றிய உரையில், த.ஈ.வி.பு.கள் மற்றும் ஜே.வி.பி ஆகிய இருவரையும், ஜனநாயக செயற்பாட்டில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். த.ஈ.வி.பு.கள், ஜே.வி.பி ஆகிய இருவரும், ஆக்கபூர்வமான தீர்வுகளை எட்டுவதற்கு, தான் எந்தகலந்துரையாடலுக்கும் தயாராக இருப்பதாகத் அறிவித்தார்.

1989ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி அன்று, தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, பிரேமதாச நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் ஒருதலைப்பட்சமாக தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். ஜனாதிபதியின் வற்புறுத்தலுடன் இந்திய இராணுவமும் தனது படைகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் என்றும் அறிவித்தது.

இவ் சந்தர்பத்தில், த.ஈ.வி.பு.கள் ஜனாதிபதி பிரேமதாசவிற்கு ஒரு பகிரங்கக் கடிதத்துடன் பதிலளித்தனர். அதில் அவர்கள் இந்திய இராணுவம் வெளியேறும் வரை தங்கள் தரப்பில் போர்நிறுத்தம் இருக்காது என்று அறிவித்திருந்தார்கள்.

சிறிலங்காஅரசாங்கம் சார்பில், பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன, த.ஈ.வி.பு.களின் தலைமையை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஏப்ரல் 15 ஆம் தேதி லண்டனில் உள்ள த.ஈ.வி.பு.களின் தலைமையகம், ஜனாதிபதிக்கு தொலைநகல் மூலம் பதிலளித்தது. தாம் அழைப்பை ஏற்று உரையாடலுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நம்புகிறோம் என அறிவித்திருந்தார்கள்.

இந்திய இராணுவம்

1989 ஏப்ரலில், கொழும்பின் புறநகர் பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில், இந்திய இராணுவத்தை, இந்தியா மூன்று மாதங்களில் முற்றாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற அவசரக் கோரிக்கையை பிரேமதாசா விட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, இந்திய உயர் ஸ்தானிகர் மூலம், இலங்கையில் இருந்து, இந்தியா சமதானப் படையென கூறப்படும் இராணுவத்தை – ஐ.பி.கே.எப். திரும்பப் பெறுதல் / நீக்குதல் செயல்முறையை விரைவுபடுத்துமாறு பிரதமர் ராஜீவ் காந்திக்கு பிரேமதாசவிற்கு எழுதிய கடிதங்கள் த.ஈ.வி.பு.களின் நம்பிக்கையை பெற்றது.

ஏப்ரல் 89 முதல் யூன் 90 வரையிலான 14 மாத காலப்பகுதியில், பிரேமதாச அரசாங்கத்திற்கும் த.ஈ.வி.பு.களிற்கும் இடையில் சில பேச்சுவார்த்தைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நிலைகளில் வேறு வேறு ஆளுமைகளுடன் நடந்தன. ஜனதிபதி பிரேமதாசவே முழு செயல்முறையையும் ஒழுங்கமைத்து ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்தார்.

இவ் நிலையில் 1989 இறுதியில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திரு வி.பி. சிங் நிர்வாகம், இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்தது.

த.ஈ.வி.பு.களின் ஆரம்ப கோரிக்கைகளில் ஒன்று, இந்தியா இராணுவத்திற்கு எதிராக போரிடுவதற்கு ஜனதிபதி பிரேமதாசவிடமிருந்து இராணுவ உபகரணங்களை வழங்குமாறு கேட்டிருந்தனர்.

மூன்றாவது சுற்றுப் பேச்சுக்களுக்காக கொழும்பில் த.ஈ.வி.பு.களின் முக்கியஸ்தகர்களுடன் ஜனாதிபதி பிரேமதாசா வழக்கமாக நடத்தும் உயர்மட்டக் கலந்துரையாடல்களில் த.ஈ.வி.பு.களின் ஆயுத வேண்டுகோளும் ஆராயப்பட்டுள்ளது.

அரச தரப்பில், ஆயுத பரிமாற்றம் போன்ற விடயங்கள் – ஜனாதிபதி பிரேமதாசா, திரு எசி எஸ் ஹமீட், திரு ரஞ்சன் விஜேரத்ன போன்றவர்களுடன் மாத்திரமே, கலந்துரையாடல் நடைபெற்றதாக நம்பப்பபடுகிறது. பிரேமதாச இந்தியா இராணுவத்தை, இலங்கையிலிருந்து விரட்டியடிப்பதாக சபதம் செய்த காரணத்தினால், இந்தியா இராணுவத்தை தோற்கடிப்பதற்கா த.ஈ.வி.பு.ககளுக்கு ஆயுதங்களை வழங்கினார்.

த.ஈ.வி.பு.களின் கட்சி

ஜனதிபதி பிரேமதாசாவின் வேண்டுகோளுக்கு இணங்க, த.ஈ.வி.பு.கள் – “விடுதலை புலிகள் மக்கள் முன்னணி” (The People’s Front of Liberation Tigers – PFLT) என்ற ஒரு அரசியல் கட்சியை 1990ல் பதிவு செய்தனர். இக் கட்சியின் பெயரில், ‘தமிழ் ஈழம்’ என்ற சொற்பதம் உள்ளடக்கப்படாமல், அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ் வேளையில் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்குதல், மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்து புதிய தேர்தல்களை நடத்துதல் ஆகிய இரு விடயங்களை த.ஈ.வி.பு.களினால் முன்னொழியப்பட்டது.

ஆனால், மாகாண சபை தேர்தலிலை நடத்தினால், த.ஈ.வி.பு.கள் தேர்தலில் நின்று வடக்கு கிழக்கு மாகாணசபையை கைப்பற்றி விடுவார்கள் என்ற பயம், ஜனதிபதி பிரேமதாசவிற்கு அவரது அரசாங்கம் அத்துடன் தெற்கின் சிங்கள பௌத்த மக்களிற்கு ஏற்பட்டுள்ளது.

இவற்றை ஜனதிபதி பிரேமதாசவின் இயலாமை, அல்லது விருப்பமின்மையால், த.ஈ.வி.பு.களிற்கும் ஜனதிபதி பிரேமதாசவிற்கு இருந்து வந்த உறவுகளில் முறிவுகள் சிறிது சிறிதாக ஆரம்பமாகியது. இவ்வேளையில் இந்திய இராணுவத்தின் கடைசி சிப்பாய்கள் 1990ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி அன்று சிறிலங்காவிலிருந்து முற்றகா வெளியேறினார்கள்.

த.ஈ.வி.பு.களின் அனுபவத்தில், பார்வையில், பிரேமதாசாவினால் ஒப்புக் கொள்ளப்பட்ட அரசியல் விடயங்களை, அதாவது வடக்கு கிழக்கு வாழ் மக்கள் சுமுகமாக வாழ்வதற்கு தமிழர்களுக்கு பிரதேச சுயாட்சியை உள்ளடக்கிய சலுகைகளை முன் வைக்க மறுத்ததன் மூலம், ஜனதிபதி பிரேமதாசவும் அவரது அரசாங்கமும் த.ஈ.வி.பு.களதும் வடக்கு கிழக்கு வாழ் மக்களது நம்பிக்கையை இழந்ததை தொடர்ந்து போர் மீண்டும் வடக்கு கிழக்கில் ஆரம்பமாகியது.

உண்மை சம்பவம்

2008ம் ஆண்டு யூன் மாதம், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபையில் நான் கலந்து கொள்ளும் வேளையில், எனது கை தொலைபேசிக்கு பாரிஸிலிருந்து ஓர் குறிப்பிட்ட இலக்கத்திலிருந்து ஓர் அழைப்பு மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்ததது.

பொதுவாக எனக்கு தெரியாத தொலைபேசி இலக்கத்தின் அழைப்பை, நான் பொருட்படுத்துவதும் இல்லை, அழைப்பதும் இல்லை. ஆனால் இவ் அழைப்பு மீண்டும் வந்த காரணத்தினால், இரண்டாம் நாள் அவ் தொலை பேசி அழைப்பை ஏற்று கொண்டேன்.

அவ் தொலைபேசி அழைப்பில் அழைத்தவர் தன்னை எனக்கு அறிமுகம் செய்து கொண்டார். அவ் வேளையில், இந்த அழைப்பையும் வழமை போல் அலட்சியம் பண்ணியிருக்க வேண்டுமென்ற சிந்தனை எனக்கு உதயமாகியது. காரணம் அவ் அழைப்பு, பாரிஸில் உள்ள இந்தியன் தூதுவரலாயத்திலிருந்து ஓர் உத்தியோகத்தர் என்னை அழைத்திருந்தார்.

அவர் என்னை மிகவும் அவசரமாக சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். இப்பொழுது அவருடன் கதைத்ததும், அவரை சந்திக்க ஏற்று கொள்வதால் உள்ள கஸ்டங்கள் விபரிதங்களை நான்கு அறிந்த காரணத்தினால், தற்பொழுது ஜெனிவாவில் உள்ளேன், பாரிஸ் வந்ததும் அவரை தொடர்பு கொள்வதாக கூறி நிலைமையை சமளித்தேன்.

அன்று உடனடியாக எனது தோழர்களிற்கும் உரியவர்களிற்கும் நடந்த விடயத்தை கூறிவிட்டேன். இல்லையேல் இதனது விபரீதம் என்ன என்பதை யாவரும் அறிவார்கள். இவ் வேண்டுகோளிற்கு எனது தோழர்கள் உரியவர்களிடமிருந்து, இரண்டாம் நாள் பதில் கிடைத்தது. இதனால் சர்ச்சைகள் இல்லாது, என்னால் மேற்கொண்டு விடயங்கள் கையாழ முடிந்தது.

சில நாட்களின் பின்னர் பாரிஸ் வந்ததும், என்னை அழைத்தவரை தொடர்பு கொண்டேன். அவரும் தன்னை சந்திக்கும் திகதி, நேரத்தை எனக்கு தெரியப்படுத்தினர். அவர் கூறிய திகதி நேரத்திற்கு சென்றேன். அவர் என்னை வரவேற்று, என்னுடன் பல விடயங்களை சம்பதிக்க தொடங்கினார். அப்பொழுது தான் எனக்கு விளங்கியது, இவர் ஓரு சில்லறை ஆளாக நிட்சயம் இருக்க முடியாது என்பது.

த.ஈ.வி.பு.களுடன் தொடர்பு இல்லை…

இவ் வேளையில், பாரிஸில் இவர்கள் என்னிடம் என்ன கதைக்க போகிறார்கள் என்பதை அறிவதற்கு, ஐரோப்பா வாழ் தமிர் சிலர் பாரிஸில் நின்றார்கள். தொடர்ந்து கதைக்கும் பொழுது, என்னை அழைத்தவர், நாங்கள் ஒரு விடயத்தை உங்களிடம் சொல்லவுள்ளோம், இதை நீங்கள் த.ஈ.வி.பு.களிடம் கூறவேண்டும் என்றார்.

அதற்கு நான் ஓர் மனித உரிமை செயற்பாட்டாளர், த.ஈ.வி.பு.களிற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இல்லையென கூறியதும், அவர் நல்ல அழகான சிரிப்புடன், பறவாயில்லை, நான் சொல்வதை அவர்களிடம் கூறுங்களென மீண்டும் கூறினார். அவர்கள் நிட்சயம், எமது முழு சரித்திரம் சாத்திரங்களை அறிந்திருப்பார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். நான் அவர் சொல்லும் விடயத்தை கேட்க விரும்பாதவர் போல், அமைதியாக கேட்டு கொண்டிருந்ததேன்.

அவர் 2008ம் ஆண்டு யூன் மாதம் என்னிடம் கூறியதாவது : “தற்பொழுது த.ஈ.வி.பு.கள் எங்களை (இந்தியாவை) தங்கள் விடயத்தில் தலையிடுமாறு எமக்கு பல விதங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். நீங்கள் அவர்களிற்கு கூறவேண்டிய விடயம் என்னவெனில், நாங்கள் (இந்தியா) த.ஈ.வி.பு.களிற்கு உதவிக்கு நிட்சயம் முன்வர மாட்டோம் என்பதே தகவலேன கூறினார். அதனை தொடர்ந்து அவர் கூறிய காரணத்தை யாவரும் இன்றும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அவர் தொடர்ந்து கூறியதாவது, “த.ஈ.வி.பு.கள் ஜனதிபதி பிரேமதாசாவினுடனான பேச்சுவார்த்தை வேளையில், பிரேமதாசவை முற்று முழுதாக நம்பி, அவர்கள் எமக்கு எதிராக செய்தவற்றை நாம் எப்படி மறக்க முடியும்?” என்று கூறி முடித்ததும், இதையும் த.ஈ.வி.பு.களிடம் கூறுங்களென வேண்டி கொண்டார்.

இப்படியான வேண்டுகோளை இவர்கள் வேறு நாடுகளில், வேறு யார் மூலமாகவும், முன் வைத்தர்களோ என்பது பற்றி எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனால் இவை என்னிடம் த.ஈ.வி.பு.களுக்கு கூறுமாறு 2008ம் ஆண்டு யூன் மாதம் கூறப்பட்ட விடயங்கள்.

நான் அவரை சந்தித்ததும், பின்னர் வெளியில் வந்து, பாரிஸில் அவ்வேளையில் வீதி ஓரங்களில் இருந்த ஒரு பொது தொலைபேசி அறையிலிருந்து (Cabin), உரியவர்களிற்கு விடயத்தை கூறினேன். அத்துடன் பாரிஸில் நின்ற ஐரோப்பா வாழ் தமிர்களிற்கும் நடந்தவற்றை கூறினேன்.

ரணில் ஒப்பந்தந்தை எதிர்த்தவர்

இதனுடைய சாரம் என்னவெனில், பௌத்த சிங்கள அரசுகள், தமிழர்களிற்கு என்ன உதவி செய்வதற்கு முன்வந்தாலும், அங்கு தமிழர்களை ஒரம் கட்டுவதற்கான ஓர் நீண்ட கால திட்டம் இருக்கும் என்பதே உண்மை. இன்றைய ஜனதிபதி விக்கிரமசிங்கா, அன்றைய ஜனதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்தில் அமைச்சாராக கடமையாற்றியது மட்டுமல்லாது, ரணிலும் அவ்வேளையில் இலங்கை இந்தியா ஒப்பந்தந்தை முழு மூச்சாக எதிர்த்தவர் என்பது இங்கு குறிப்பிட தக்கது.

சிங்கள பௌத்த அரசுகளின் திட்டங்கள் யாவும், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் இந்தியாவுடன் ஓர் நல்லுறவை பேணாது கண்காணிப்பதே. அரசாங்கம் மட்டுமல்லாமல், அவர்களுடன் இணைந்து பயணிக்கும் அத்தனை தமிழர்களும், விசேடமாக அரசியல் வாதிகளும், இவற்றை அடிப்படையாக கொண்டே காய்களை நகர்த்துகின்றனர்.

இதன் அடிப்படையிலே, தமிழ் நாட்டில் அண்மையில் இறந்த சாந்தன் எனும் டி சுதந்திரராஜாவின் வித்துடலை, சிறிலங்கா கொண்டு வருவதற்கும், அதை தகனம் செயவதற்கும் ஜனதிபதி ரணில் விக்கிரமாசிங்க கொடுத்த அனுமதியும், அதை முன்னின்று நடாத்திய இவரது தமிழ் அரசியல்வாதிகளும்.

அடுத்து, தமிழ் நாட்டில் பல தசாப்தங்காளக வாழும் தமிழ் அகதிகளிற்கு, சிறிலங்கா கடவுச் சீட்டு கொடுப்பதற்கு ரணில் முன்வந்துள்ள போன்ற செயல்களை, நாம் நல்ல ஊதரணங்களாக கொள்ளலாம்.

அன்று ஜனதிபதி பிரேமதாசவின் உறவும், அவரிடம் ஆயுதங்கள் வாங்கி இந்திய இராணுவத்துடனான யுத்தமும், இந்தியாவுடன் ஓர் நல்லுறவை தேட முடியாதளவிற்கு, சிங்கள பௌத்த அரசு நன்றாக திட்டமிட்டு, சதுரங்கம் அடியுள்ளது என்பதே உண்மை.

இறுதியாக கூறுவதனால், த.ஈ.வி.பு.கள் மீது இந்தியா கொண்டுள்ள ஆத்திரம் ஆவேசம் கோபம் என்பவை, பெரும்பான்மையானவர்கள் கதைப்பது போல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதிற்கு மேலாக, ஜனதிபதி பிரேமதாசவுடனான உறவும், அவர் கொடுத்த இராணுவ தளபடங்களுமே, வடக்கு கிழக்கு வாழ் மக்களை இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதே உண்மை. லெஸ்டர் டெல் றேய் அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளரும் ஆசிரியரும் கூறியதாவது – “தவறான விளக்கம் மனித பாவங்களில் மிகவும் கொடியது”. (முற்றும்)

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

Loading

2 Comments

  1. I listened to many interviews on RG case! After Adv.Thuraisamy& Trichy Velusamy interviews, I understood RG ordered RP/SLP to send back Israeli mossad agents from Colombo! So Mossad & SLP:RP & SS CS MC/LC/INC MA/INC etc well planned & used fmr TELO joined LTTE/OKS & gave money to do the killing! But nothing happened to arrest masterminds in Delhi too! God punish real masterminds in this case soon & Interpol shd be engaged by Bjp Leaders: Modiji Amitsaji,Rajnath Singji& Annamalaiji soon!
    LTTE started the war with IPKF & Sufferings of Tamils were huge! They came to help us! But JRJ/ RP/RW turned the IPKF against Tamils & our Sufferings continue even now in 2024! No Elections of NPC/ EPCso far too,denying our HR Democracy & Dignity as well as Indo-Lanka pact-1987 13+! I am in touch with USA India UK EU Norway(& Canada Japan Australia S.KOREA UNSC UNHRC UNSG)RU/ China too regarding “Shan-Nalliah plan 28.2.2023” soon!
    1.Full Autonomy to All Provinces!
    2.Dignity Safety HR Equality Freedom Justice Progress Harmony Happiness to All Citizens!
    3.Justice by ICC ICJ arrest orders to Genocide masters by Judge Elancheliyan! Lifeterms to all! Removal of Civilrights! Recover stolen money 200Billion usd to repay China Debt-trap loan soon from GR/MR/ RW regime!
    4.Also Dignity Safety Security integrity of India due to China Break India into 34 pieces according to China Daily article to expand Communist World soon! In God We Trust! Om Nama Shivaya!

  2. ” அன்று ஜனதிபதி பிரேமதாசவின் உறவும், அவரிடம் ஆயுதங்கள் வாங்கி இந்திய இராணுவத்துடனான யுத்தமும், இந்தியாவுடன் ஓர் நல்லுறவை தேட முடியாதளவிற்கு, சிங்கள பௌத்த அரசு நன்றாக திட்டமிட்டு, சதுரங்கம் ஆடியுள்ளது என்பதே உண்மை. ” என்று சொல்கிறீர்கள்.
    அந்த சதுரங்க ஆட்டத்தையடுத்துத்தானே பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தினவும், ஜனாதிபதி பிரேமதாசவும் தற்கொலை குண்டுதாரிகளினால் கொல்லப்பட்டனர். இதுபற்றியும் நீங்கள் எழுதியிருக்கலாம்.
    முருகபூபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.