சொல்லித்தான் ஆகவேண்டும்!…. சொல்-12…. “தமிழ்த் தேசியத்தை எவரும் குத்தகைக்கு எடுக்கத் தேவையில்லை”…… தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
ஒரு சமூகத்தின் அரசியல் செல்நெறி என்பது அச்சமுகத்தைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கி விடவேண்டும். சமூகம் என்பதற்குள் அச்சமூகத்தின் மொழி – கலை இலக்கியங்கள் – பண்பாடு – கல்வி – ஆன்மீக நெறி – நிலம் – சூழல் பாதுகாப்பு – பொருளாதார அடித்தளம் என்று அத்தனையும் அடங்கும்.
கடந்த 75 வருட காலமாகத் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ என அழைக்கப்படும் இலங்கைத் தமிழர் தரப்பு அதாவது இலங்கையின் வடக்குக் கிழக்கு வாழ் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் செல்நெறி அச்சமுகத்தைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கி விட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கான பதில் ‘இல்லை’ என்றேயாகிறது.
‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் அதனை உச்சரித்துக் கொண்டு அதன் போர்வையில் தமிழர்களுடைய அரசியலில் எல்லாவிதமான அழிவுகளும் அரங்கேறியுள்ளன.
1949 இல் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றதும் 1972 வரை தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸும் ஒன்றுக்கொன்று சேறடிக்கும் அரசியல்தான் ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் படிமுறை அடைவு என்பது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துத் தீர்மானிப்பதாக இருந்தது. மக்களும் அந்த மயக்கத்தில்தான் வைக்கப்பட்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சிக்கு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அதிக எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்களை வழங்குவதுதான் தமிழ்த் தேசியத்தின் வெற்றி என்பதாகக் கற்பிக்கப்பட்டது.
1972 இல் இருந்து 1976 வரை தமிழர்களுடைய அரசியலில் ஒரு நிலைமாறு ஏற்பட்டது என்பது உண்மைதான். தமிழ்க் காங்கிரசும் தமிழரசுக் கட்சியும் ஐக்கியப்பட்டு தமிழர் கூட்டணியாகிப் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பரிணமித்தமை – 1976 இல் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ் ஈழத் தனிநாட்டுத் தீர்மானம் – பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே தமிழ் இளைஞர்களால் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் -மிதவாத அரசியல் குறைந்து தீவிரவாத அரசியல் என்று அந்த நிலைமாறு கால மாற்றங்களை அடையாளப்படுத்தலாம்.
அந்த மாற்றங்களுக்கான காரணங்கள் நியாயமானவையாக இருந்தாலும்கூட அந்த மாற்றங்களால் விளைந்த ஒட்டுமொத்த இறுதி விளைவுகள் என்ன?
கருத்து முரண்பாடுகளைக் காரணமாக வைத்துத் தமிழ் மக்களிடையே இருந்த பல ஆளுமைகள் படுகொலை செய்யப்பட்டமை -இயக்க மோதல்களால் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள் -தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய இயக்கங்களை ஒழித்துக் கட்டி இராணுவ மேலாண்மையைப் பெற்றமை -இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏகப் பிரதிநிதித்துவம் என்று தொடர்ந்த அந்த மாற்றங்கள் எல்லாமே எதிர்மறையான விளைவுகளையே அறுவடையாகத் தந்து ஈற்றில் 2009 இல் முள்ளிவாய்க்கால் பேரழிவைத்தான் அனுபவமாக தந்தன.
இடையில் 1983இல் இலங்கையின் இனப் பிரச்சினையில் ஏற்பட்ட இந்தியத் தலையீடும் அதன் நீட்சியாக 1987இல் கைச்சாத்தான இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தமும் இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் ‘இடைத்தங்கல்’ ஆக அமைந்தபோதும் அதனைத் தந்திரோபாயமாகப் பயன்படுத்த தமிழர் தரப்பு தவறிவிட்டது என்பதையும் அதற்கு முழுக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் என்பதையும் வரலாறு இன்று எண்பித்து நிற்கிறது.
2009 யுத்தமுடிவுக்குப் பின்னரான தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மைக் குறி சுட்டுக் கொண்டு இயங்குகின்ற கட்சிகளினதும் அக்கட்சிகளின் தலைவர்களினதும் செயற்பாடுகளைப் பார்த்தால் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ எனும் கணக்கில்தான் எல்லாமே நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னுமின்னும் படுகுழியை நோக்கியே தமக்குத் தெரியாமல் ‘தமிழ்த் தேசியத் தலைவர்கள்’ என்று கூறப்படும் இந்தப் ‘போலி’த் தமிழ்த் தேசியத் தலைவர்களை நம்பிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு இப்போது ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’என்னும் விடயம் சந்திக்கு வந்து அல்லது சந்தைக்கு வந்து தமிழ்த் தேசியவாதிகள் என்று குறிசுட்டுக் கொண்டவர்களிடையேயும் சண்டையை மூட்டிவிட்டிருக்கிறது.
‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ விடயத்தை முன்னெடுக்கும் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ எனுமொரு புதிய அமைப்பு இப்போது புதிய கண்டுபிடிப்பொன்றையும் செய்துள்ளது. அது என்னவெனில், ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயத்தை ஆதரிக்காதவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் (துரோகிகள்) என்று முத்திரை குத்துவது.
இவையெல்லாமே ‘தமிழ்த் தேசியம்’ எனும் பெயரைச் சொல்லித்தான் நடைபெறுகின்றன.
தமிழ்த் தேசியம் எனும் சொல்லாடல் இப்போது மிகவும் மலினப்படுத்தப்பட்டதாகிவிட்டது.
‘தமிழ்த் தேசியப் பரப்பு’ – ‘தமிழ்த் தேசியக் கட்சி’ – ‘தமிழ்த் தேசியப் பற்றாளர்’ – ‘தமிழ்த் தேசியத்துரோகி’ – ‘தமிழ்த் தேசிய நீக்கம்’ என்று பார்க்குமிடமெல்லாம்-கேட்குமிடமெல்லாம் ‘தமிழ் தேசியம்’ தான்.
காலம் முழுவதும் தமிழ் மக்களை வஞ்சித்து அரசியல் செய்தவர்களையெல்லாம் இரவோடு இரவாகப் புனிதராக மாற்றும் ‘இரசவாதம்’ இந்தத் ‘தமிழ்த் தேசியம்’ என்ற வார்த்தைக்கு உண்டு.
அதேபோல காலம் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்துச் செயல்பட்டவர்களைச் சடுதியாகத் ‘தமிழ்த் தேசியத் துரோகி’ எனப் பட்டம் வழங்குவதும் இந்தத் ‘தமிழ்த் தேசியம்’ எனும் வார்த்தையைச் சொல்லித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
‘தமிழ்த் தேசியவாதி'(?) களே தயவு செய்து தமிழ்த் தேசியத்தைத் தன் போக்கில் விடுங்கள். அது வாழும். நீங்கள் எவரும் அதனைக் ‘குத்தகைக்கு’ எடுக்கத் தேவையில்லை.
தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்