ஊழல்கள் அற்ற ஆட்சி இலங்கையில் மலர வேண்டும்; மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு…. சு.நிஷாந்தன்
இலங்கை தீவானது ஆசியாவில் சகல வளங்களையும் கொண்ட ஒரு அழகிய தீவு.
1970ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜப்பான் உட்பட பல நாடுகளுக்கு இலங்கை கடன்களை வழங்கியுள்ளதாக வரலாறுகள் உள்ளன.
1977ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவால் இலங்கையில் திறந்த பொருளாதார முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியதுடன், ஏற்றுமதி இறக்குமதியை மையமாக கொண்ட பொருளாதாரமொன்று உருவானது.
1977ஆம் ஆண்டுக்கு முன்பும் இறக்குமதிகள் இருந்த போதிலும் அவற்றுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மூடிய பொருளாதார கொள்கைகளால் கடுமையான நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்டதன் விளைவாகவே ஜே.ஆரின் பொருளாதாரக் கொள்கை மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்தது.
சர்வதேச நிறுவனங்களின் வருகை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் பொறுப்பு அரச நிறுவனங்கள் மற்றும் துறைசார் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டதால் கொடுக்கல் வாங்கலில் பல்வேறு வகையில் ஊழல் – மோசடிகளும் உருவாகின.
உள்ளூர் சந்தைக்கு சர்வதேச பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுபாடுகளற்ற அனுமதிகள் வழங்குவதற்காக கடந்த நான்கு தசாப்தங்களாக பல்வேறு வகையில் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக அரசியல் மேடைகளில் எதிர்க்கட்சிகள் முழங்குவதை அவதானிக்கிறோம்.
கடந்த 2005ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடையில் பாரிய அளவில் ஊழல் – மோசடிகள் இலங்கையின் அனைத்து துறைகளிலும் இடம்பெற்றிருந்தாக அக்காலகட்டத்தில் எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது.
ஊழலில் மிஸ்டர் 10% என்ற பெயரொன்று முன்னாள் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெருந்தொருக்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண பாதைகளை அமைக்கும் பணிகளில் பாரிய அளவில் ஊழல் – மோடிகள் இடம்பெற்றிருந்தன.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் மிக் விமானக் கொள்வனவில் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி இடம்பெற்றிருந்தாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் பசில் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதயங் வீரதுங்க உட்பட மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் முக்கிய பதவிகளில் இருந்தவர்களும் ஊழல் – மோசடிகளுக்காக சிறைக்கும் சென்றிருந்தனர்.
2015ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றருந்தது
ஒரு பில்லியனுக்கும் (இலங்கை ரூபாய்) அதிகமான மோசடி இதில் இடம்பெற்றதாக குற்றச்சாடுகள் முன்வைக்கப்பட்டதுடன், அப்போதைய நீதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது பதவிகளை துறக்கும் நிலையும் உருவானது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக மஹிந்த ராஜபக்ச தரப்பு நாட்டு மக்களுக்கு கருத்துகளை வெளிப்படுத்தியது.
என்றாலும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இதற்கும் தொடர்பில்லையென அறிக்கை சமர்ப்பிக்க்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனி மோசடி தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்டன.
சீனிக்கான வரி குறைப்பின் ஊடாக 50ஆயிரம் கோடி வரை ஊழல் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
சமகாலத்தில் மருந்து மோசடியில் ஈடுபட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறையில் உள்ளார்.
1977ஆம் ஆண்டுக்கு பின்னரான இலங்கையின் வரலாறு பாரிய ஊழல் – மோசடிகள் மலிந்ததாக உள்ளது. ஆனால், ஊழலில் ஈடுபடும் அமைச்சர்களும், அரச அதிகாரிகளும், பிரபல வர்த்தகர்களுக்கும் எதிராக பாரிய தண்டனைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை வைத்து அவர்கள் தப்பிவிடுகின்றனர். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஊழலுக்கு எதிராக உள்ள கடுமையான சட்டங்கள் போன்று இலங்கை சட்டங்கள் கடுமையாக இல்லை.
அதேபோன்று ஊழல் மோசடிகளில் ஈடுபடும் முக்கிய புள்ளிகளை காப்பாற்றுபவர்களாக ஆளும் அரசாங்கங்களில் உள்ள சக்தி வாய்ந்த நபர்கள் இருக்கின்றனர்.
பல பில்லியன் டொலர்களை மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் வெளிநாடுகளில் பதுக்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல கட்சிகள் கடந்த காலத்தில் பரவலான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஆனால், இன்று ஜனாதிபதியாக இருப்பவர் ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்க.
ராஜபக்சர்கள் செய்த ஊழல் குறித்து எந்தவொரு நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை என்பதுடன், அவர்களை பாதுகாக்கும் நபராக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆகவே, ஊழல் – மோசடிகளற்ற ஓர் ஆட்சியையே இலங்கை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் காரணமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மிகவும் கவனம் பெற்றதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரையும் தூக்கியெறிய வேண்டுமென்ற மனநிலையிலேயே மக்கள் உள்ளனர். 2022ஆம் ஆண்டு இலங்கைத் தீவு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது.
எங்கு பார்த்தாலும் மக்கள் பல நாட்கள் நீண்ட வரிசையில் இருந்தே தமது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் நிலை காணப்பட்டது.
இந்த நிலைமைக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட கடந்த 1977ஆம் ஆண்டுமுதல் ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் பொறுப்பாகும். முறையற்ற பொருளாதார கொள்கைகள், பாரிய அளவில் வெளிநாட்டு கடன்களை பெற்றமை, உள்நாட்டு உற்பத்தியை பெருக்காமை, முறையான தொழில்வாய்ப்புகளை உருவாக்காமை, கடுமையான இனவாத அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியமை மற்றும் பாரிய ஊழல் – மோசடிகளாலேயே நாடு இத்தகைய மோசமான நெருக்கடிகளை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இலங்கை அரசியலில் தீர்மானமிக்க தேர்தல்களாக அமைய உள்ளன. ஊழல் மலிந்த ஆட்சியாளர்கள் தொடர்பில் கடந்த காலத்தைவிட மக்கள் பாரிய விழிப்புணர்வை பெற்றுள்ளனர்.
2022ஆம் ஆண்டு நாடு முழுவதும் வெடித்த மக்கள் போராட்டங்கள் மக்களுக்கு பல பாடங்களை கற்றுத் தந்துள்ளன.
எனவே, ஊழல் – மோசடிகளற்ற ஆட்சியை நிறுவ இலங்கை மக்கள் உறுதிபூண்டுள்ள இந்தத் தருணத்தில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் எதிர்காலத்தையும், இன நல்லிணக்கத்தையும், சகோதாரத்துவத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் தீர்மானிக்கும் தேர்தலாகவும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
சு.நிஷாந்தன்